மனதில் ஹைகூ-ஹைக்கூக்கள்- இரா. இரவி- ஒரு பார்வை - பொன். குமார்

ஹைக்கூ தொடக்கத்தில் மூத்த படைப்பார்களால் எழுதப்பட்டது எனினும் பின்னர் இளைஞர்களிடையே ஒரு பாதிப்பை எற்படுத்தியது. பெரும் வரவேற்பை பெற்றது. அவர்களில் ஒருவர் இரா. இரவி. ஹைக்கூ பல படைப்பாளருக்கு பேச்சு எனில், இரவிக்கு மூச்சு. மூச்சைப் போல் ஹைக்கூவிலும் இடைவிடாது இயங்கி வருகிறார். அவர் உள்ளத்தில், இதயத்தில் விழிகளில் எப்போதுமே ஹைக்கூ உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொகுப்பின் தலைப்பையும் அவ்வாறே கவனத்துடன் வைத்துள்ளார். வைத்தும் வருகிறார். தற்போதைய தொகுப்பின் பெயர் ' மனதில் ஹைக்கூ'. ஹைக்கூ வில் அதிகம் இயங்கியவரும், எழுதியவரும், தொகுப்பு வெளியிட்டவரும் இவரே என உறுதியாகக்கூற முடியும். குறுஞ்செய்திகளில் எப்போதாவது காணப்பட்டாலும் இதழ்களில் ஹைக்கூக்கள் வெளியானாலும் இணைய தளம் இரவிக்கு நல்ல களம். பக்க பலம்.இணையதளத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டவரும் அதில் வெற்றிக் கண்டவரும் இரா.இரவியே ஆவார். இணையதளம் மூலம் தன் ஹைக்கூக்களை மக்களிடையே கொண்டு சென்று ஏராளமான வாசகர்களைப் பெற்றுள்ளார். ஹைக்கூவைப் பரப்புவதுடன் தன் புகழையும் பரப்பி வருகிறார். ஹைக்கூ எழுதுவதற்கு பல காரணங்கள் இருக்கும். கவிஞர்கள் ஹைக்கூ எழுத எங்கும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. சமூகமே ஒரு ஹைக்கூ தொழிற்சாலையாக, ஒரு கிடங்காக உள்ளது. எல்லா நிலையிலும் பிரச்சனை, அனைத்துத்துறைகளிலும் ஊழல், சுற்று சூழலுக்குக்குக் கேடு, அன்றாடம் நிகழும் அரசியல் அநியாயம், உறவுகள், இயற்கை என ஹைக்கூவை எழுதச் சொல்கின்றன. எழுதத் தூண்டுகின்றன. எழுத உந்துகின்றன. உள்ளத்தில் அலையாய் உணர்வுகளை எழுப்பிக்கொண்டேயுள்ளன. நிகழ்வுகள், செய்திகள் என ஒவ்வொரு கணமும் ஹைக்கூவை படைப்பாளியிடத்தில் எழுப்புகின்றன. இரா. இரவி எந்த கணத்தையும் தவற விட்டவர் அல்ல. ஆயத்த ஆடைப் போல ஆயத்தமாகவே உள்ளன இரவியின் ஹைக்கூக்கள். கோடாரியை கூர் தீட்டுகையில் வருந்தியது கைப்பிடி என்பது மரம் வெட்டுதலுக்கு எதிரானது. சுற்றுச் சூழலைப் பேசுகிறது. கைப்பிடி வருந்துவதை விட கையில் பிடித்திருப்பவரே வருந்த வேண்டும். இரா. இரவியின் வருத்தம் வெளிப்பட்டுள்ளது. சமூக நலனுக்கான எல்லா நிலையிலும் வருத்தப்பட்டுள்ளார். மேடுகளைத் தகர்த்து பள்ளம் நிரப்பும் சமத்துவம் பொதுவுடைமை மூலம் எளிமையாக பொதுவுடைமைத் தத்துவத்தைக் கூறியுள்ளார். உரைநடையில் உள்ளதை ஒரு ஹைக்கூவாய்த் தந்துள்ளார். தொலைக்காட்சி ஒரு தொற்று நோய் போல மிக வேகமாக பரவி எல்லோரையும் தொற்றிக் கொண்டது. எல்லா வீடுகளிலும் தொற்றிக் கொண்டுள்ளது. நன்மை என்பதை விட தீமையே மிகுதி. தொலைக்காட்சி மக்களை பாதித்ததை விட கவிஞரை வெகுவாகவே பாதித்துள்ளது. தொலைக்காட்சியைக் குறித்து அதன் தொல்லைகள் குறித்து ஏராளமாக எழுதியவர் இரா. இரவி. இத்தொகுப்பிலும் உள்ளன. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தொ(ல்) லைக் காட்சிகள் என்பது ஓர் எடுத்துக்காட்டு. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது தொலைக்காட்சிக்கு மட்டும் அல்ல ஹைக்கூவிற்கும் பொருந்தும். மனிதருக்கும் பொருந்தும். ஹைக்கூவின் தோற்றம் ஜப்பான். ஜப்பானிய ஹைக்கூவிற்கு தனியான இலக்கணம் உண்டு. தமிழில் தன் அடையாளத்தோடு தமிழின் தனித்தன்மையோடு எழுதப்பட்டு வருகிறது. தமிழுக்கு என்றும் இலக்கணங்கள் உண்டு. மூன்று வரி முக்கியம் எனினும் முதலிரண்டடி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு மூன்றாமடி ஒரு திருப்புமுனையாக ஒரு மின்னல் வெட்டாக ஒரு புதிய செய்தியைக்கூற வேண்டும். அவ்வாறு கூறப்படும் போது அது புதிராகவோ விடுகதையாகவோ அமைந்து விடக் கூடாது. ஹைக்கூவைப் பற்றியான கைக்கூக்களை இரவி எழுதியுள்ளார். இணைத்துள்ளார். ஹைக்கூவிற்கான இலக்கணமாய் அனைத்தும் அமைந்துள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாய் ஹைக்கூவை வியக்கிறார். வியக்கச்செய்கிறார். கருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஹைக்கூ என்னும் ஒரு ஹைக்கக் குறித்து பேசினாலும் ஹைக்கூவிற்கான குணத்தையும் மீறி விடுதையாகவே விளங்குகிறது. விடுகதையைக் கையாண்டு ஹைக்கூவாக்கும் வித்தையை, சாமார்த்தியத்தை நன்கு அறிந்துள்ளார். குஞ்சுகள் மிதித்து கோழிகள் காயம் முதியோர் இல்லம் ஒரு பழமொழியை புதுமொழியாக மாற்றி ஹைக்கூவாக்கியுள்ளார். கோழிகளைக் காயப்படுத்திய குஞ்சுகளைச் சாடியுள்ளார். சோதிடம், காதல், டாஸ்மாக ஆகிய பாடுபொருள்களை வைத்து பல ஹைக்கூக்களை உருவாக்கியுள்ளார். ஒரு பொருளை மையமாக்கி பலவற்றை எழுதுவதும் ஒரு கலையே. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாய் சொல்லியுள்ளார். மூன்றாமடியே பொருளைப் புலப்படுத்துகிறது. வாசிப்பவனுக்கு ஒரு சலிப்பை உண்டாக்கும் ஆபத்தும் உள்ளது. எனினும் முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகும் தொடர்ந்து காமராஜர், பாரதியார். பாரதிதாசனார். கண்ணதாசனார் போன்றோரையும் ஹைக்கூடவில் அடக்கியுள்ளார். ஒவ்வொருவர் குறித்தும் பல. சான்றுக்காக ஒவ்வொருவர் குறித்தும் ஒவ்வொன்று. நாட்டுக்காக உழைத்தவர் வீட்டுக்காக உழைக்காதவர் காமராஜர். பண்மொழிப்புலவர் பண்டைத்தமிழை உயர்த்தியவர் மகாகவி. பாரதியை மதித்தவர் பாரதம் செலுத்தியவர் புரட்சிக்கவிஞர் நிரந்தமானவன் அழிவதில்லை நிதர்சனமான உண்மை கவியரசு ஒவ்வொரு ஹைக்கூவின் மூன்றாமடியை நீக்கி விட்டு வாசித்து பார்த்தால் புதுக்கவிதையை வாசித்தது போலிருக்கும் அல்லது கவியரங்கில் பாடப்பட்டது போலிருக்கும். ஹைக்கூ ஆழமானது. அழுத்த மானது. அதன் எல்லை பரந்தது. ஹைக்கூவிற்கான பாடு பொருளும் விரவியுள்ளது. இரா. இரவியின் ஹைக்கூவில் பாடுபொருள்கள் பல பதியப்பட்டுள்ளது. உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார். தொகுப்பை வாசித்து முடித்தவுடன் ஒரு ஹைக்கூத் தோப்புக்குள் சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. பொக்ரான் சோதனை சந்திராயன் பெருமை தீண்டாமை சிறுமை. கூடிவாழும் பறவைகள் மோதி வாழும் மனிதர்கள் யார் உயர்திணை?. அன்றே ஆண்களுக்கு கை சிலம்பு பெண்களுக்கு கால் சிலம்பு. கருவறை கல்லறை இடைவெளி மட்டுமல்ல வாழ்க்கை. தனியார் பெருகியதால் தவிப்பில் உள்ளது அஞ்சலபெட்டி. ஹைக்கூவை ஒரு கருவியாகக் கொண்டு சமூகத்தில் புரையோடியுள்ள பிரச்சனைகளைத் தீர்க்க முனைபவராக திகழ்கிறார் இரா. இரவி, மூடநம்பிக்கை தவிர்க்க வேண்டும்,பகுத்தறியும் தன்மை வேண்டும்,சமத்துவம் வேண்டும் போன்ற சிந்தனைகளையே ஹைக்கூகளில் காண முடிகிறது. ஹைக்கூ மூலம் ஒரு புதுமை செய்ய வேண்டும் என எண்ணுகிறார். புரட்சிச் செய்ய வேண்டும் என விரும்புகிறார். நிறைய எழுதுவது வணக்கத்திற்குரியது. இரவியின் மனதில் ' ஹைக்கூக்கள் உள்ளது' தெரிகிறது. மற்றவர் மனதில் ஹைக்கூக்களாக பதிய வேண்டும். வாழ்த்துக்கள். பொன். குமார் புதிய உறவு மார்ச் 2011

கருத்துகள்