படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

பொன் குமார் சேலம் ! அப்பா குறித்த கவிதைகள் 01 இறக்கும் போது என் அப்பாவின் வயது என்பத்திரண்டு. எனக்கு ஐம்பத்தொன்பது. இறக்கும் வரை என்னைத் திட்டுவார். திட்டுக்குப் பின்னால் அன்பிருக்கும் அக்கறையிருக்கும். 02 அப்பா... இறந்த இறுதிக் கணத்தில் மூடிய கண்களிலிருந்து கண்ணீர் கசிந்ததே காரணம் என்ன?. 03 அப்பா... சின்ன வலியைக் கூட தாங்க முடியாமல் சொல்லி கலங்குவீரே மின்மயானத்தில் சிதைக்கு தீ மூட்டிய போது எப்படி தாங்கிக் கொண்டீர்..? 04 அப்பா... உங்கள் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் சொன்னார்கள் அப்போதுதான் எங்கள் உயிர் பிரிந்தது. 05 அப்பா.. உங்களுக்கு நல்ல சாவு ஒரு நாளில் இறந்து விட்டார் என்கின்றனர் உற்றார், உறவினர், ஊரார். எங்களுக்கு அல்லவா பல நாள் வேதனை. 06 அப்பா... நான் உங்களை அப்பா என்றே அழைப்பேன் என் பிள்ளைகள் டாடி என்றழைத்ததால் டாடி என்றே நீங்களும் அழைத்தீர்கள் ஆம் இறுதி காலத்தில் நீங்களும் ஒரு குழந்தையாகவே இருந்தீர்கள். அப்பா என நான் அழைக்க அப்பா நீங்கள் இல்லை. 07 இறப்புச் சான்றிதழாக இன்று கையில் எண்பத்திரண்டு வருடங்கள் இருந்த அப்பா. 08 நாங்கள் வசிக்க ஒவ்வொரு செங்கல்லாக சேகரித்து வீடு கட்டி வைத்தீர் ஒவ்வொரு செங்கல்லிலும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறீர். 09 அப்பா உங்கள் உடலுக்கு தீ மூட்டிய போது மெல்ல எரிந்து சாம்பலானோம். 10 அப்பா எரிந்து கொண்டிருப்பது உங்கள் உடம்பு மட்டும்தான் உள்ளம் இருப்பது எங்களுடன்தான். 11 அப்பா பள்ளியில் நீங்கள் படித்தது குறைவு கற்று தந்த பாடம் அதிகம். 12 அப்பா நீங்கள் நாத்திகவாதியும் அல்ல ஆத்திகவாதியும் அல்ல ஓர் எதார்த்தவாதி. 13 அப்பாவின் இறப்பிற்கு பிறகே உயிர் பெற்றது அப்பா எழுதி வைத்த உயில். 14 பள்ளிச் செல்லும் போதிருந்த பண்புகளை கல்லூரி செல்லும் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது அப்பாக்களின் தவறு. 15 அப்பாக்களான பிறகே அப்பாக்களுக்குப் புரிகிறது அப்பாக்களின் அருமை. 16 உழைத்தால் உயர்வு என்பர். அப்பா உங்களின் உழைப்பே எங்கள் உயர்வு. 17 தன் தேவைகளை குறைத்துக் கொண்டார் பிள்ளைகளின் தேவையை அறிந்து பூர்த்தி செய்த அப்பா. 18 மரணத்திலும் வாழக் கற்றுக் கொடுத்தார் வாழ்க்கை முழுவதும் வாழக் கற்று கொடுத்த தந்தை. 19 நான் அப்பா ஆனாலும் என் அப்பாவாக என்னால் ஆக முடியவில்லை. 20 அவரவர்க்கு அவரவர் அப்பாவை பிடிக்கலாம் பிடிக்காமலும் இருக்கலாம் எனக்கு எப்போதுமே பிடித்தமானவர் என் அப்பா. 21 பேர் சொல்லத்தான் பிள்ளை என்பார்கள். உங்கள் பெயரை ஒரு நாளும் சொன்னதில்லை அப்பா. 22 என் பெயரை ஊரில் சொன்ன போது எவரும் கண்டுகொள்ளவில்லை உங்கள் பெயரைச் சொன்னவுடன் உயர்கிறது கேட்டவர்களின் புருவம். 23 இறந்த பிறகும் எல்லா இடங்களுக்கும் வருகிறார் உயிருடன் இருந்த போது உடன் வந்த அப்பா. 24 நான் ஆண்டவனை வணங்கியதில்லை அப்பா உங்களை வணங்குகிறேன். 25 வாழ்க்கை எது என்பதை வார்த்தையில் கூறாமல் வாழ்க்கை எதுவென்று வாழ்ந்து காட்டியவர் அப்பா. 26 ஒரு நாட்டை நிர்வகிக்க அமைச்சர்கள் பலர் இருப்பர். வீட்டை பொறுத்தவரை அப்பாவே அமைச்சர். 27 என் பிள்ளைகளுக்கு நல்ல தாத்தாவாக இருந்திருக்கிறார் எனக்கு எப்போதும் நல்ல அப்பாவாக இருந்தவர். 28 தந்தை சொல்மிக்க மந்திரமில்லை. தந்தையை மிஞ்சிய மனிதருமில்லை. 29 அப்பாவின் இறுதி யாத்திரையில் தொடங்குகிறது பிள்ளைகளின் வாழ்க்கை. 30 அப்பா ஓர் ஆலமரம் நிழலிலேயே பிள்ளைகள் இருக்க விரும்புவர். 31 அப்பா நான் ஒரு சைக்கிள் கேட்டேன் நடந்தே சென்று வாங்கி வந்தது இன்றும் நினைவிருக்கிறது. 32 குழந்தைகள் அப்பா என்று அழைத்த போதிலும் அப்பாவை அப்பா என்று அழைக்கும் போது நானுமொரு குழந்தை. 33 அப்பாக்களை பிடிக்காத பிள்ளைகள் உண்டு பிள்ளைகளை பிடிக்காத அப்பாக்கள் இல்லை. 34 அதிகம் படிக்காதவர் அப்பா. ஆனால் நல்ல ஆசிரியர். 35 உருவத்தில் வேறுபட்டாலும் உள்ளத்தில் ஒரே மாதிரிதான் அப்பாக்கள். 36 கடன் வாங்கி செலவிற்கு பணம் தந்த போதும் அன்பையும் சேர்த்தே தருபவர் அப்பா. 37 அதிகம் பேசாமல் அனைத்தையும் செயலிலேயே காட்டும் ஆச்சரியம் அப்பா. 38 கேட்டாலும் கொடுக்காது தெய்வம் கேட்காகமலே குறிப்புணர்ந்து கொடுப்பவர் அப்பா. 39 திருவள்ளுவர் கூறியது போல் ஒரு கடமையாக பிள்ளைகளுக்குச் செய்வதில்லை அப்பாக்கள். 40 பிள்ளைகள் நிமிர்ந்து வாழ பல இடங்களில் குனிந்து வாழ்ந்தவர் அப்பா. 41 அப்பா ஓர் இடிதாங்கி பிள்ளைகளுக்காக எல்லாவற்றையும் தாங்கிக் கொள்வார். 42 பிள்ளைகளின் ஆசைகளை மட்டுமே தன் ஆசையாகக் கொண்ட தன்னலமற்றவர் அப்பா. 43 அணுவளவும் அன்பை வெளியில் காட்டத் தெரியாத அப்பாவி அப்பா. 44 பிள்ளைகளின் வெற்றிக்குப் பின்னால் அமைதியாக இருக்கும் அற்புதம் அப்பா. 45 அப்பா அழதாவர் அல்ல அழத் தெரியாதவர் அல்ல அடுத்தவருக்குத் தெரியாமல் அழத்தெரிந்தவர் குறிப்பாக பிள்ளைகளுக்கு. 46 முகத்தில் முறுக்கிய மீசை வைத்திருந்தாலும் மனத்தளவில் ஒரு குழந்தையே அப்பா. 47 வலியையும் வேதனையையும் ஒருபோதும் வெளிப்படுத்த விரும்பாதவர் அப்பா. 48 அப்பா மரியாதைக்குரியவர் என்றாலும் மகள் மகன்களிடம் மரியாதையை எதிர்பாராத மாமனிதர். 49 அப்பா என்பவருக்குள் அம்மாவும் இருக்கிறார் ஆசிரியரும் இருக்கிறார். 50 காலம் முழுவதும் பிள்ளைகளின் முன்னேற்றத்திலேயே இருக்கிறது அப்பாக்களின் கவனம். 51 எப்படி வாழ வேண்டுமென்று அறிவுறுத்தாமல் எப்படி வாழ வேண்டுமென்று வாழ்ந்து காட்டியவர் அப்பா. 52 பிள்ளைகள் வாழ ஏற்றதானது அப்பாக்களாலான இவ்வுலகு. 53 பிள்ளைகளின் வளர்ச்சியில் தன்னையே கண்டு தனக்குள்ளேயே மகிழ்கிறார்கள் அப்பாக்கள். 54 பிள்ளைகள் படித்து பட்டம் பெற வேண்டுமென்றே கடன் வாங்கியாவது செலவு செய்தவர் படிக்காத அப்பா கடன்காரன் என்னும் பட்டம் பெற்றார். 55 பிள்ளை அப்பாவை வில்லனாக பார்ப்பதுண்டு. ஒரு போதும் அப்படி பார்ப்பதில்லை அப்பா. 56 ஒரு போதும் தன்னை வெளியில் காட்டிக்கொள்ளாத ஆணிவேர் அப்பா. 57 பிள்ளைகள் பேரும் புகழோடும் வாழும் போது பார்த்து மகிழ உயிருடன் இல்லை பாடுபட்ட அப்பா. 58 அப்பாவின் பெயரைச் சொன்னாலே அடையாளம் காணப்படுகிறேன் அடுத்தவர்களால் நான். 59 நான் நகல் அசல் அப்பா. 60 குலசாமியைக் கும்பிடுகிறோம் கூடவே இருந்த குலசாமி அப்பா. 61 உதடுகளால் பேசியதை விட உள்ளத்தால் அதிகம் பேசியவர் அப்பா. 62 அப்பா என்பது சொல் அல்ல வரலாறு. 63 வித்திட்டவர் விட்டுவிடுவதில்லை பிள்ளைகளை அப்பா. 64 அப்பாவின் இறுதி மரியதைக்கு அழைக்கப்பட்ட உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து பிணமென்று சொல்லி விடாதீர். 65 அப்பா ஒரு நடமாடும் ஏ. டி. எம். ஆனால் பணம் இல்லையென்று பதில் அளித்ததேயில்லை. 66 அப்பா அதிகம் உறங்கி பார்த்ததில்லை. இறந்த பின்புதான் இப்படி படுத்துக் கிடக்கிறார். 67 கவனித்தபடியேயுள்ளது அப்பா இல்லாத சாய்வு நாற்காலி. 68 சுமைதாங்கிக் கல் சொல்ல கேள்வி பட்டிருக்கிறோம் அப்பா நீங்கள் நாங்கள் கண்ட நடமாடும் சுமை தாங்கிக் கல். 69 வயது கூடுகையில் வெளிப்படுகிறார் எனக்குள்ளிருக்கும் அப்பா. 70 பிள்ளைகளை உயர்த்திக் காட்டுவதில் அஸ்திவாரம் அப்பா. 71 என் அப்பாவிற்கும் என் அப்பாவின் அப்பாவிற்கும் உள்ள இடைவெளியும் எனக்கும் என் அப்பாவிற்கும் உள்ள இடைவெளியும் ஒன்றல்ல. இடைவெளிகள் வேறுபட்டாலும் ' அப்பா' க்கள் வேறல்ல. 72 பிள்ளைக்காக பெற்ற கடனை பிள்ளைகள் மீது சிறிதும் சுமத்தாதவர் அப்பா. 73 பிள்ளைகளுக்கு போதுமான உடைகள் வாங்கித் தந்த அப்பாவிற்கு போதுமானதாக இருந்தன இரண்டே செட் உடைகள். 74 பிள்ளைகளை வழியனுப்பி விட்டு பின்னால் நின்று பார்த்து பெருமைப்படுபவர் அப்பா. 75 அவ்வவ்போது ஆறுதலளிக்கிறது என் பிள்ளைகளிடம் காணும் என் அப்பாவின் சாயல். 76 அப்பா இல்லாத போதும் வீட்டுக்குள்ளே வீசிக்கொண்டே இருக்கிறது அப்பா வாசம். 77 அப்பா மரணம் அடைவதில்லை. பிள்ளைகளாக பிறப்பெடுக்கிறார்கள். *

கருத்துகள்