படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா.இரவி !

முகத்தில் தெளித்த சாரல்- வெ. இறையன்பு- ஒரு பார்வை - பொன். குமார் பாரதி ஒரு பெரும் படைப்பாளி. தமிழ் இலக்கிய உலகம் போற்றும் இலக்கியச் செல்வம். ஒரு பன்முக படைப்பாளி.மரபாலேயே கட்டு பட்டிருந்த தமிழ் இலக்கிய உலகின் சாளரத்தைத் திறந்து வைத்தவர். பதுக் கவிதைக்கு ஒரு புதிய தடம் பதித்தார். சிறு கதைக்கும் ஒரு தொடக்கம் ஆனார். ஹைக்கூவிற்கும் அடித் தளமிட்டார். ஒரு முன்னோடியாக விளங்கினார். ஹைக்கூவைத் தமிழுக்கு முதன் முதலில் அறி முகம் செய்தவர் பாரதி. ஆண்டு 1916.மாதம் அக்டோபர். தேதி 18. 'ஜப்பானிய கவிதை' என்னும் தலைப்பில் சுதேசிமித்திரன் இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அந்த ஒரு கட்டுரையில் இரண்டு ஜப்பானிய ஹைக்கூக்களை இறக்குமதி செய்திருந்தார். அவை பருவ மழையின் புழையொலி கேட்பீர் இங்கென் கிழச் செவிகளே -பூஸோன் போ ஸாஹோ தீப் பட்டெரிந்து விழு மலரின் அமைதி யென்ன -ஹோகூஷி 1916ஆம் ஆண்டுக்குப் பின் 50 ஆண்டுகளுக்குப் பின் 1966 ஆம் ஆண்டு எழுத்தாளர் சுஜாதா சில ஹைக்கூக்களை மொழி பெயர்த்துத் தந்தார். இரண்டாண்டு இடை வெளியில் 1968 ஆம் ஆண்டு பத்து ஹைக்கூக்களை மொழி பெயர்த்துத் தந்தார் கவிஞர் சி. மணி. 1969 இல் நாவலாசிரியர் சந்திர லேகா சிலவற்றை மொழி பெயர்த்து கணையாழி இதழில் வெளியானது. கவிஞர் தமிழ் நாடன் 1974 ஆம் ஆண்டு ஜபபானிய ஹைக்கூ வடிவங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். ஹைக்கூ தமிழகத்தில் வேரூன்றி வளர்ந்தது. ஹைக்கூவை ஆர்வத்துடன் வளர்த்தவர்ளும் உண்டு. கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் ஈரோடு தமிழன்பன் என மூத்த படைப்பாளிகளும் ஹைக்கூ வளர்ச்சியில் முக்கிய பங்குக் கொண்டவர்கள் ஆவர். ஹைக்கூவிற்கு எதிர்ப்பும் உண்டு. தமிழக ஹைக்கூவின் காலம் ஒரு நூற்றாண்டை எட்டிய நிலையிலும் ஹைக்கூ குறித்த புரிதல்கள் குறைவாகவே உள்ளன. ஹைக்கூ குறித்த ஞானமும் போதாமையாகவே உள்ளது.ஹைக்கூ பற்றிய ஒரு தெளிவு தேவைப் படுகிறது. இந் நிலையில் ஒரு தேவையாக வெளி வந்துள்ளது எழுத்தாளர் இறையன்புவின்' முகத்தில் தெளித்த சாரல் '. இறையன்புவே ஹைகூ பிரதிபலிப்பு கட்டுரைகள்" என்று அடையாளப் படுத்தியுள்ளார். இறையன்பு ஹைக்கூ படைக்க வில்லை எனினும் வாசித்த, வசீகரித்த ஹைக்கூவை மையப்படுத்தி கட்டுரைகளை எழுதியுள்ளார். ஹைக்கூக்கள் தனக்குள் ஏற்படுத்திய அனுபவத்தை, தாக்கத்தை கட்டுரையாக்கித் தந்துள்ளார். ஹைக்கூவை ஆழ்ந்து உள் வாங்கியுள்ளதையும் அவரது படிப்பாற்றலையும் அறிய முடிகிறது. அவரின் வாழ்பனுபவமும் நன்கு கை கொடுத்துள்ளது வசந்தம் கழிகிறது பறவைகள் கத்துகின்றன - கணணீர் மீன்களின் விழிகளில் ஹைக்கூவின் முதல்வன் என்னும் ஜப்பானிய கவிஞன் பாஷோ படைத்த ஹைக்கூவை வைத்தே முதல் கட்டுரை அமைந்துள்ளது. 'ஹைகூ என்பதற்குக் கிழிஞ்சல் என்று பொருள்' என்று ஒரு புதிய பொருள் கூறியுள்ளார். வசந்தம் போவதற்காக பறவைகள் வருந்துகின்றன என்பதாக ஹைக்கூ இருந்தாலும் இறையன்புவின் பார்வை மாறுபடுகிறது. வசந்தம் இருக்கும் இடம் தேடிச் செல்லும் ஆற்றல் கொண்டவை பறவைகள் என்கிறார். பறவைகளுக்கும் மீன்களுக்கும் உள்ள தொடர்பையும் விளக்கியுள்ளார். பாஷோவின் ஹைக்கூ மூலம் வசந்த காலமாக இருந்த நண்பர்கள் பிரிந்து செல்வதை உருவகமாகக் காண முடிகிறது என்று உரித்துக் காட்டியுள்ளார். கட்டுரையின் முடிவில் மரணம் ஒரே ஒரு நொடியில் நிகழ்வது அதற்காக மற்ற நொடிகளை ஏன் நொடிக்கச் செய்ய வேணடும்) என்று வினா எழுப்பி மனிதர்களைச் சிந்திக்கச்செய்திறார். ஒரு ஹைக்கூத் தொடர்பான சிந்தனை இறையன்புவிடம் பலவாறாக பயணித்த விதம் ரசிக்கச் செய்கிறது. வியக்கச் செய்கிறது. ஆழமான இலையுதிரில் இன்னும் பட்டாம் பூச்சியாக வில்லை இந்தப் புழு ஓர் இயற்கையின் பதிவாக ஹைக்கூ உள்ளது. வெளிப் படையான ஒரு நிகழ்வை உள்ளடக்கியுள்ளது. ஒரு கூட்டுப் புழு பட்டாம் பூச்சியாக பரிமாணம் கொள்வதற்குள் அது படும் துயரத்தை விளக்கியுள்ளார். சிந்தனை எல்லாமே கவிதை ஆவதில்லை என்பது போல் புழுக்கள் அனைத்துமே பட்டுப் பூச்சி ஆவதில்லை என்கிறார். கவிஞரின் புழு நேயம் வெளிப் பட்டுள்ளது. மிளகுக் கொட்டையில் சிறகுகளைச் சேர் தட்டான் பூச்சி உன் கையில் என்று பாஷோ இலக்கணத்திற்குட்பட்ட ஒரு கருத்தை ஹைக்கூவாக மாற்றியதை ' இதுதான் ஹைக்கூவின் நோக்கம்' என்று உணர்த்தியுள்ளார். " வன்முறை, அகிம்சை, குரூரம், பரபரப்பு ஆகியன ஒரு போதும் ஹைகூ சூழலுக்கு ஏற்றதாக இருந்ததில்லை" என்பது ஹைக்கூவின் குணாம்சத்தைக் குறிப்பிடுவதாக உள்ளது. கவிஞரின் குணமும் வெளிப்பட்டுள்ளது. பூமியின் பரப்பில் எங்கு நின்று பார்த்தாலும் வானில் நிலவும் சூரியனும் பொதுவாகவே தெரியும். நிலா எல்லா மனிதர்களையும் பார்த்துக் கொண்டுள்ளது. எல்லா மனிதர்களுடன் பேசிய படியே உள்ளது. மனிதர்கள் தனித் தனி தீவாக இருந்தாலும் தனித் தனியாக வாழ்ந்தாலும் நிலா ஒரு பாலமாவே விளங்குகிறது. தீவுக்குத் தீவு பாலமாக நிலவு மனிதர்களுக்கும் நிலவுக்குமான உறவைக் காட்டுகிறது. நிலா மட்டுமல்ல வானம், சூரியன், நட்சத்திரங்கள், காற்று அனைத்துமே பொதுதான் என்று அமுத்தமாக கூறியுளளார். மனிதர்களே தீவுகளாக மாறி விட்டனர் என்று ஒரு மென்மையான விமரிசனத்தையும் வைத்துள்ளார். மனிதர்கள் தீவுகளிலிருந்து வெளிப் பட்டு சுதந்திரமாக நிலாவையும் நட்சத்திரங்களையும் ரசிக்கக் கோரியுள்ளார். நிலவின் மூலம் நாம் தகவல் தரவாம் ஆனால் நிலாவே ஒரு தகவல்கள் தான் எழுத்தாளர் இறையன்பு ஒரு புதுத்தகவல் தந்துள்ளார். நிலா மனிதர்களுக்கு எதையாவது கூறிக் கொண்டேயுள்ளது என்கிறார். ' இரவில் நிலவும் இரவல் இசையும்' கட்டுரையில் முழு நிலவை ரசிக்கத் தூண்டியுள்ளார். ரசிப்புத் தன்மை மனிதர்களுக்கு மட்டுமே உள்ள சிறப்பு குணம். மனித வாழ்வு மகிழ்வுடன் தொடர ரசிப்புத் தன்மைத் தேவை. எழுத்தாளர் இறையன்புவின் ரசிப்புத் தன்மைக்குச் சான்றுகளாகவே முகத்தில் தெளித்த சாரல் உள்ளது. சுத்தம் சோறு போடும் என்பது பழ மொழி. அசுத்தம் சோறு போடும் என்கிறது ஒரு ஹைக்கூ. சுத்தம் அனைவருக்குமே சோறு போடும் என்கிறார் இறையன்பு. அசுத்தம் சோறு போடும் துப்புரவுத் தொழிலாளி ஒரு தமிழ் ஹைக்கூ இது. இந்த ஹைக்கூவை வைத்துத் தன் சிந்தனைச் சிறகுகளை விரித்துச் செல்கிறார். ஆயினும் தங்கத்தில் செம்பு கலந்து நகையாவது போல் மனிதர்கள் முற்றிலும் துாய்மையானவர்களாக இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார். ஹைக்கூ என்றால் விடுகதை அல்ல, சிலேடை அல்ல, புனைவு அல்ல என்று தெரிவித்து முடிவில் ஓர் உணர்வு இலக்கியம் என்கிறார். மற்றொன்றில் ' ஹைக்கூ என்பது மனப் பாங்கு' என்கிறார். ஹைக்கூ என்பது நிகழ்வு, காட்சிப் படுத்துதல் என்னும் கவிஞர் தமிழ் நாடனின் கூற்றுக்கு மாற்றான ஒரு கருத்தைத் முன் வைத்துள்ளார். உணர்வு இலக்கியம் என்று தன் உணர்வைத் தெரிவித்து ஹைக்கூவின் தரத்தை உயர்த்தியுள்ளார். இந்த தமிழ் ஹைக்கூ எழுதியவர் எவர் என்று குறிப்பிடவில்லை. தேடிச் சென்ற கள்ளிச் செடிப் புதரில் குட்டிகளுக்குப் பாலுாட்டும் நாய் மின்னொளி சீனி வாசன் எழுதியது என்று தெரிவித்தே ஹைக்கூத் தொடர்பான விசயங்களைப் பகிர்ந்துள்ளார். ஜப்பானிய ஹைக்கூவை மட்டும் பேசாமல் தமிழ் ஹைக்கூவையும் உள் வாங்கி எழுதி இருப்பது தமிழ் ஹைக்கூக்களின் மீதான மதிப்பீட்டையும் காட்டுகிறது. பாரதியைப் போல் கவிஞர் இறையன்புவும் ஒரு பன் முகத்தாளர். பாரதி ஹைக்கூவை அறிமுகம் செய்தவர் எனில் இறையன்பு ஹைக்கூவை ஆழ்ந்து நோக்கியுள்ளார். அகல்ந்து கவனித்துள்ளார். எங்கே மனிதர்கள் இருக்கின்றனரோ அங்கே ஈக்களையும், காண்போம் புத்தர்களையும் தான் இஸ்ஸா இயற்றிய ஹைக்கூவை முன் வைத்து எழுதப் பட்டதில் " மேலோட்டமாகப் பார்த்தால் மிகச் சாதாரணமானது இந்த ஹைகூ. ஆழ்ந்து கவனித்தால் மிகவும் நுட்பமானது " என்று கூறியவர் மனிதர்கள் எதையும் ஆழ்ந்து கவனிப்பதில்லை என்று குறை கூறியுள்ளார். 'உன்னையே நீ அறிவாய்' என்று ஒரு சொற்றொடர் உண்டு, மனிதர்கள் தம்மைத் தாமே அறிந்து கொள்ளும் போதே அவன் திறமையை உலகறியச் செய்ய முடியும். இறையன்பு" நமக்குள் ஒளிந்திருக்கும் புத்தரைக் கண்டு பிடிக்க முனைவோம்" என்று ஒரு தேடலுக்கு வழி வகுந்துள்ளார். சுய பரி சோதனைக்கு துாண்டி உள்ளார். ஹைக்கூவை முதலில் மொழி பெயர்த்தவர் பாரதி, பாரதிக்குப் பிறகு பலர் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர். இன்றும் மொழி பெயர்த்து வருகின்றனர். இறையன்பு அவர்களும் மொழி பெயர்த்துள்ளார். இத் தொகுப்பிலும் சில மொழி பெயர்ப்புகள் உள்ளன. Hearing it's narme I looked at it a new this flowering weed (Teiji) என்று ஆங்கிலத்தில் உள்ள ஹைக்கூவின் மொழி பெயர்ப்பு பெயரைக் கேட்டதும் புதிதாகப் பார்த்தேன் பூக்கும் இந்தப் புல்லை ஆங்கிலத்தில் Weed என்பதன் நேரடி மொழி பெயர்ப்புகளை என்று இருந்தாலும் அதைப் புல் என்றே பெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பு என்று வரும் போது வார்த்தைக்கு வார்த்தை பெயர்க்கக் கூடாது. நேரடியாக மொழி பெயர்க்கக் கூடாது. அதன் பெருளை, அதன் அர்த்தத்தை பெயர்க்க வேண்டும். இறையன்பு ஒரு நல்ல மொழி பெயர்ப்பாளர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் ஒரு மொழி பெயர்ப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார். எலும்பு இல்லாத கோழி, முட்கள் இல்லாத ரோஜா, விதை இல்லாத திராட்சை என செயற்கையானவற்றை மனிதன் கண்டு பிடித்தது வெற்றி என்று ஒரு புறம் கொண்டாடப் பட்டாலும் மறு புறம் இயற்கைக்கு முரணாக உள்ளது கவலை அளிக்கவே செய்கிறது. இயற்கையின் இயல்புத் தன்மைகளை இல்லாமால் செய்ததற்காக இக் கட்டுரையில் வருந்தியுள்ளார். இயற்கை மீதான பிரியத்தை வெளிப் படுத்தியுள்ளார். இயற்கை தேவை என்கிறார். சதுாங்கம் ஓர் அறிவு ஜூவியமான விளையாட்டு. சதுரங்கத்தைப் பாடு பொருளாக்கி பல கவிதைகளும் உண்டு. கறுப்பு இனத்திற்கும் வெள்ளை இனததிற்கும் குறியீடாக்கி ஒரு கவிதை எழுதப் பட்டுள்ளது. சதுரங்கத்தில் மிக முக்கியமானது காய் நகரத்துதல், வெற்றிப் பெற வாய்ப்பில்லாத போது கலைத்து விடுதலையும் ஒரு நகர்வு என்று ஒரு கவிதை உண்டு. ராஜாக்கள் எதுவுமற்றவர்கள் என்றும் ஒரு கவிதை உண்டு. பெட்டிக்கு வந்த பிறகு எல்லோருமே சமம் சதுரங்கத் காய்கள் கவிஞர் இஸாவின் ஹைக்கூ இது. இருக்கும் இடத்தில் இருந்தாலே பலம் என்னும் உண்மையைக் காய்கள் உணர்த்துதின்றன என்கிறார். வாழ்க்கைத் தத்துவமும் சதுரங்கத்தில் அடங்கி உள்ளன என்கிறார். ஹைக்கூவைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஜென்னைப் புரிந்து கொள்ள வேண்டும் ஜென்னைப் புரிந்து கொண்டால் வாழ்க்கைப் புரிந்து விடும். காரணம் ஜென்னின் அடிப் படையிலேயே ஹைக்கூ உருவாகிறது. எழுதப் படுகிறது. பழுத்த மஞ்சள் இலைகள் மரத்திலிருந்து உதிர்ந்த உணர்வுகள் கோஜி எழுதிய ஹைக்கூ இறையன்புவிற்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. வாழ்க்கை மிகுந்த நம்பிக்கையைச் சார்ந்தது ஞானி எண்ணுகிறான் உதிர்ந்த இலைகளும் உதிக்கின்ற துளிர்களும் வேறு வேறல்ல ஒரு ஞானியின் நிலையில் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார். நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளார். இலை உதிர்வுகயைும் துளிர்களையும் ஒரே மனப் பன்மையுடன் பார்க்க வேண்டும் என்கிறார். ' மரத்துப் போக வில்லை மரங்கள்' கட்டுரையில் இலை உதிர்வை மரத்தின் கர்ப்பம் என்பதும் இதே சிந்தனையின் அடிப் படையிலேயே அமைந்துள்ளது. 'மரணம் மலர்ச்சி ' ( உதயத்திலும் அழகு அந்தி ) என்று மரணம் குறித்த அச்சத்தைப் போக்கியுள்ளார். மரணத்தை மகிழ்ச்சியுடன் எதிர் கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தை ஊட்டியுள்ளார். கீழே செல்லச் செல்ல மேலே போகிறது வால் ஒரு திமிங்கிலம் பூஸனின் ஹைக்கூ இது. இங்கு திமிங்கலம் ஒரு குறியீடாக உள்ளது. தலை இருக்க வேண்டிய இடத்தில் வால் இருக்கக் கூடாது என்கிறார். தலை இருக்கும் போது வால் ஆடக் கூடாது. தலைகளை விட இங்கு வால்களே ஆட்டிக் கொண்டுள்ளன. ஆட்டிக் கொண்டும் உள்ளன. தலைமையை ஏற்றுக் கொள்ளலாம் வால்மையைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளார். தலைமைப் போல வால்மை என்னும் ஒரு புதிய சொல்லை உருவாக் கியுள்ளார். ஒரு படைப்பாளி புதிய சொற்களையும் உருவாக்க வேண்டும் என்பதற்கும் எடுத்துக் காட்டாக இறையன்பு விளங்குகிறார். மகா கவி பாரதி பொது உடைமை என்னும் சொல்லை உருவாக்கினார். 'முகத்தில் தெளித்த சாரல்' என்னும் இத் தொகுப்பு ஹைக்கூ உலகிற்குக் கிடைத்த மிக முக்கியமானது. ஹைக்கூவாளர்களுக்குக் கிடைத்த கொடை எனலாம். ஹைக்கூவையே வாசித்தவர்களுக்கு ஹைக்கூ, பற்றி வாசித்தவர்களுக்கு இத் தொகுப்பு ஒரு புதிய அனுபவத்தை உண்டாக்கும். ஹைக்கூ குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்தியுள்ளது. ஹைக்கூ பற்றிய ஒரு தெளிவைத் தருகிறது. ஒரு ஹைக்கூவை எப்படி அணுக வேண்டும், எவ்வாறு உள் வாங்க வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறது. ஹைக்கூக் குறித்த விளக்கங்களையும் தந்துள்ளார். ஹைக்கூ என்பது ஒரு கவிஞனால் உருவாக்கப் பட்டாலும் அது வாசகனிடத்திலேயும் தொடர்ந்து பயணிக்கும். இறையன்பு ஒரு படைப்பாளி என்பதால் ஹைக்கூவை மேலும் வாசகரிடத்தில் பயணிக்கச் செய்கிறார். ஒரு ஹைக்கூவை முன் வைத்து பல ஹைக்கூக்களை உருவாக்கச் செய்துள்ளார். ஹைக்கூவிற்கான சிந்தனையைக் கிளறியுள்ளார் 'ஹைகூ பிரதிபலிப்பு கட்டுரைகள் ' என்று அடையாளப் படுத்தப் பட்டாலும் கவிதை நடையிலேயே கட்டுரைகள் அமைத்துள்ளார். இறையன்புவின் மொழி வாசகர்களை கை கோர்த்து அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு கட்டுரைக்கான தலைப்பும் தனித் தன்மையுடன் கவிதைத் தனத்துடன் உள்ளது ஒரு சிறப்பு. மனத்தையும் வருடிக் கொடுக்கிறது. ஹைக்கூவையும் ஹைக்கூவிறகு முன்னதான ஜென்னையும் வாசித்து தனக்குள் ஒரு தீர்மானம் கொண்டவராக உள்ளார் என்பதும் தெளிவாகிறது. ஜப்பான் ஹைக்கூ மட்டுமின்றி தமிழ் ஹைக்கூவையும் தேர்வு செய்து இருப்பது இறையன்புவின் பாகுபாடற்ற தன்மையைக் காட்டுகிறது. இறையன்பு ஒரு ஹைக்கூ ஆதரவாளராக இருந்து கொண்டு ஹைக்கூ எழுதுபவர்களையும் வளர்த்து விடுவதில் பெருந் தன்மையாளர். இறையன்புவால் வளர்க்கப் பட்ட ஒரு ஹைக்கூவாளர் இரா. ரவி. " தி. லீலா வதி, அப்துல் ரகுமான், தமிழன்பன், சுஜாதா ஆகியோார் வரிசையில் ஹைகூ கவிதைக்கு அரணும் அழகும் சேர்த்து வருபவர் இறையன்பு" என்று முனைவர் இரா. மோகன் எழுத்தாளர் இறையன்பு குறித்து கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ( தொகுப்பு :கவிதைக் களஞ்சியம்) கவிஞர் இறையன்பு ஹைக்கூ குறித்த புரிதலை ஏற்படுத்தியதுடன் வாழ்க்கைப் பற்றிய ஒரு புரிதலையும் ஏற்படுத்தியுள்ளார். ' முகத்தில் தெளித்த சாரல்' வாசக ' மனத்தில் தெளித்த சாரல்' ஆக சில்லிடச் செய்கிறது. சிந்தையைக் கவர்கிறது. பொன். குமார் 21/15 புது திருச்சிக் கிளை வடக்குத் தெரு லைன் மேடு சேலம் 636006 9003344742

கருத்துகள்