ினம் ஒரு புத்தகம் அச்சம் தவிர் இறையன்பு

தினம் ஒரு புத்தகம் அச்சம் தவிர் இறையன்பு துர்கா பப்ளிகேஷன்ஸ் புத்தக கண்காட்சியில் என் மாணவர்கள் வாசிப்பதற்காக வாங்கப்பட்ட புத்தகம். எவ்வாறு தேர்வை அணுகுவது? என்பதை பள்ளி குழந்தைகளுக்கு தோளில் கைபோட்டு தோழமையோடு சொல்ல விரும்பி எழுதப்பட்ட நூல் இது. படிப்பை திருவிழாவாக்க, பரீட்சையை பட்டாடையாக்க, மதிப்பெண்களை மத்தாப்பாக மாற்ற, மாணவர்களை ஆயத்தப்படுத்த ஆசைப்பட்டதன் விளைவே இந்நூல் என்ற ஆசிரியரின் முன்னுரையோடு தொடங்குகிறது. நூலிலிருந்து சில டிப்ஸ் பள்ளிக்கூடங்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யாமல் வாழ்வுக்காக தயார் செய்வது தான் சரியான முறை. பெற்றோர்களும் இதை மனதில் வைத்துக்கொண்டு தேர்வைக் காட்டி பயமுறுத்துவதைத் தவிர்த்துவிட்டு அதை ஆக்கபூர்வமான அதிர்வலைகளுடன் அச்சமின்றி அணுகுவதற்கு பயிற்றுவிக்க வேண்டும். கல்வியின் நோக்கமே பயமின்றி வாழ்வதுதான். அறியாமை அனைத்தையும் பார்த்து நம்மை அச்சப்பட வைக்கும். பயம் இன்றி வாழப் பழக்கும் கல்வியையே பயத்துடன் அணுகுவது தவறான முறை மட்டுமல்ல, மூலத்திற்கே மோசடி செய்யும் முறை. குழந்தைகள் அட்டகாசம் செய்யும்பொழுது இரு, இரு உன்னை பள்ளிக்கூடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கிறேன் அப்போது தான் புத்தி வரும் என்றும், உங்கள் டீச்சரிடம் சொல்கிறேன் என்றும், பயமுறுத்துவதனாலேயே குழந்தைகளிடம் பள்ளி என்றாலே பயமும், படிப்பு என்றாலே பதட்டமும் ஏற்படுகிறது. விழிப்புணர்வு உள்ளவர்கள் படிப்பு பற்றி பயப்படாமல் பரவசப்பட தொடங்குகிறார்கள். முயற்சி இருப்பவர்கள் பூகம்பம் நடக்கும்போதும் பூகோளப்புத்தகத்தை புரட்டும் திறமையை பெற்றுவிடுவார்கள். பொய் எப்போதும் வெல்வதில்லை. நான்கு மாணவர்கள் தேர்வுக்கு முதல் நாள் திரைப்படம் சென்று தாமதமாக வந்து தூங்கினார்கள். இதனால் காலையில் எழ முடியாமல் தேர்வுக்கு செல்லவில்லை. பேராசிரியரிடம் அவர்கள் தாமதமாக சென்று போலி சமாதானம் சொன்னார்கள். நாங்கள் தேர்வுக்கு வரும் பொழுது எங்கள் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது எனவே உரிய நேரத்தில் வர முடியவில்லை என்றனர். பேராசிரியர் நான்கு பேரையும் தனித்தனி அறையில் அமரச்செய்து வினாத்தாளை வழங்கினார். இரண்டே இரண்டு கேள்விகள் முதல் கேள்வி பாடத்திலிருந்து எளிமையான கேள்வி பத்து மதிப்பெண்கள் இரண்டாவது கேள்வி உங்கள் காரின் எந்த டயர் பஞ்சர் ஆனது? 90 மதிப்பெண்கள். நான்கு பேரும் தேர்ச்சி பெறாமல் போனார்கள். குறுக்குவழிகள் நேர் வழிகளை விட எப்போதும் நீளமானவை. கல்வி என்பது சுத்தியலால் உடைக்க வேண்டிய நிகழ்வல்ல. அன்பினால் திறக்க வேண்டிய ரசவாதம். இப்புத்தகம், தேர்வு என்பது நம்மை மதிப்பெண்களுக்காக பரிசோதிக்கிற முயற்சி மட்டுமல்ல, ஒருவகையில் ஆளுமையை அறிந்துகொள்ள பயன்படும் களம் என்பதை மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. தேர்வு நெருங்கும் இந்நேரத்தில் ஒவ்வொரு மாணவரும் வாசிக்கவேண்டிய நூல் இது. ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கவேண்டிய நூல் இது. தேர்வுக்கான திறவுகோல் அச்சம் தவிர்த்து வாசிப்போம் தேர்வுகளை வாழ்க்கையை நேசிப்போம். தோழமையுடன் சீனி. சந்திரசேகரன்

கருத்துகள்