தந்தை பெரியார் ! கவிஞர் இரா. இரவி

தந்தை பெரியார் ! கவிஞர் இரா. இரவி தந்தை பெரியார் ஒருவர் தான், “நான் சொல்கிறேன் என்பதற்காக, எதையும் ஏற்றுக்கொள்ளாதே, உன் பகுத்தறிவைக் கேட்டுப் பார், சரி என்று பட்டால் ஏற்றுக் கொள், தவறு என்று பட்டால் ஏற்காதே, விட்டுவிடு”என்று சொன்னவர். மற்ற தலைவர்கள் எல்லாம், ‘நான் சொல்கிறேன், அப்படியே அதை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று தான் சொன்னார்கள். ‘பகுத்தறிவை ஊட்டும் பணிக்கு வேறு யாரும் முன்வராததால் நான் செய்கிறேன். இந்த சமுதாயம் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சமதர்மச் சமுதாயமாக மாறி விட்டால் எனக்கு வேலை இல்லை. சமத்துவச் சமுதாயம் மலரும் வரை எனக்கு ஓய்வில்லை’ என்றவர் பெரியார். பெரியார் இல்லத்தில் திரு.வி.க. அவர்கள் தங்கிய போது, காலையில் பெரியார், திரு.வி.க.-விடம் திருநீறு கொண்டு வந்து கொடுத்தார். திரு.வி.க அவர்கள் வியப்புடன் ‘நீங்களே கொண்டு வந்து விட்டீர்களே, நீங்கள் நாத்திகர் ஆயிற்றே’ என்றார். அதற்குப் பெரியார் சொன்னார், “இன்று நீங்கள் என்னுடைய விருந்தாளி, உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது என் கடமை” என்றார். மாற்றுக்கருத்து உள்ளவர்களையும் மதிக்கும் பண்பாளர் பெரியார். ஒருமுறை வள்ளலார் இடத்திற்குப் பெரியார் சென்றார். உள்ளே சென்ற போது ஒரு அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் நின்று விட்டார். உடன் வந்தவர்கள், ‘என்ன நின்று விட்டீர்கள்?’ என்று கேட்டனர். ‘புலால் உண்பவர்கள், இந்த எல்லை தாண்டி உள்ளே வர வேண்டாம் என்று இருக்கிறது, எனக்குப் புலால் உண்ணும் பழக்கம் உண்டு. எனவே இந்த எல்லை தாண்டி வரமாட்டேன்’ என்று சொல்லி நின்று விட்டதாகக் கூறினார். உடன் வந்தவர்கள், ‘இந்த விதிமுறை உங்களுக்குப் பொருந்தாது. உங்களுக்கு விதிவிலக்கு உண்டு. உள்ளே வருக!’ என்றனர். ஒரு இடத்திற்கு வந்துவிட்டால், அந்த இடத்தில் வகுத்துள்ள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, அவைகளை மதித்து நடக்க வேண்டும் என்று கூறி உள்ளே வர மறுத்து, வந்த வழி திரும்பினார். விதிமுறைகளை மதிக்கும் பண்பாளர் பெரியார். ஒரு முறை அவர் மீது ஒரு செருப்பு வந்து விழுந்தது. கோபம் கொள்ளாமல் இன்னொரு செருப்பும் வரட்டும், இரண்டும் வந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். தமிழ்மொழியின் மீது பற்று இருக்க வேண்டும். ஆனால் வெறி இருக்கக் கூடாது என்றார். மனதில் பட்டதை துணிவுடன் எடுத்துச் சொல்லும் ஆற்றல் மிக்கவர். யாருக்காகவும் பயந்து, ஒளித்து, மறைத்து என்றும் பேசியதே இல்லை. பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் நடத்திய போது கூட கோவிலில் இருக்கும் எந்த பிள்ளையாரையும் எடுத்து வந்து உடைத்தது இல்லை. தன் சொந்தப் பணம் கொடுத்து பிள்ளையார் சிலை வாங்கி வரச் சொல்லி அதையே உடைத்து போராட்டம் நடத்தியவர். தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி இருவரும் இரண்டு துருவங்களாக இருந்த போதும் இறுதி வரை நல்ல நண்பர்களாக இருந்தவர்கள். பெரியார் நாத்திகர், ராஜாஜி ஆத்திகர். கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் நட்பு நீடித்தது. ராஜாஜி அவர்கள் இறந்த போது மயானம் வரை சென்று கண்கலங்கி அழுதவர் பெரியார். பெரியாரின் தந்தை, பெரியார் இளைஞராக இருந்த போது பொறுப்பில்லாமல் இருக்கிறார் என்று, தன் சொத்துக்களை பழனி முருகனுக்கு என்று உயில் எழுதி வைக்க; பெரியார், ராஜாஜியிடம் ஆலோசனை கேட்ட போது ராஜாஜி சொன்னார் : கவலை வேண்டாம், பழனியில் இருப்பது முருகனே இல்லை, தண்டாயுதபாணி தான். பழனியில் ஒரு இடம் வாங்கி முருகன் கோவில் கட்டி நீங்களே அந்த கோவிலுக்கு தர்மகர்த்தா ஆகி விடுங்கள், சொத்துக்கள் உங்கள் வசமே இருக்கும் என்று ஆலோசனை வழங்கினார். அன்று தொடங்கிய அவர்களின் தூய நட்பு இறுதி மூச்சு உள்ளவரை தொடர்ந்தது. பெண்களுக்காக குரல் கொடுத்தவர் பெரியார். பெண்கள் மாநாட்டில் தான் ‘பெரியார்’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. ‘பிள்ளை பெறும் இயந்திரமா? பெண்கள்’ என்று கேட்டவர் பெரியார். பெண்களுக்கு கல்வி, வேலை தர வேண்டும் என்று முழங்கியவர் பெரியார். பெண்கள், ஆண்களைப் போல் முடி வெட்டிக் கொள்ள வேண்டும், ஆடை அணிய வேண்டும் என்று சொன்னவர் பெரியார். பெண்கள் பொன் நகை அணியாதீர்கள், பட்டுச்சேலைகள் உடுத்தாதீர்கள் என்றார். இளம் விதவைகள் மறுமணம் புரிய வேண்டும் என்றார். கேரள மாநிலம் வைக்கத்தில் ஆலய பிரவேசம் நடத்தியவர் பெரியார். ஒரு தெருவில் நாய், ஆடு, மாடு செல்லலாம், மனிதன் செல்லக் கூடாதா? என கேள்விகள் கேட்டவர் பெரியார். பெரியார் திருக்குறளை மிகவும் மதித்தார், பாராட்டினார். புராணம், இதிகாசங்கள் விரும்பாத பெரியார், வாழ்வியல் கருத்துக்கள் நிறைந்த திருக்குறளை நேசித்தார். திருக்குறள் மாநாடு நடத்தினார். ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் திருக்குறள் என்று அறிவிப்பு செய்தார். பலரும் திருக்குறள் வாங்கி இல்லத்தில் வைத்து படித்து வந்தனர். சமரசங்களுக்கு இடமின்றி, கொண்ட கொள்கையில் என்றும் உறுதியாக நின்றவர் பெரியார். ஆடம்பரத்தை விரும்பாமல் எளிமையை கடைபிடித்தார். தொடர்வண்டிகளில் முதல் வகுப்பை விரும்பாமல் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தவர். சிக்கனமாக இருந்தவர். தொண்டர்கள் தந்த பணத்தை ஆடம்பரமாக செலவுகள் செய்யாமல் சேமித்து அறக்கட்டளை நிறுவி கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் பெரியார். புலால் உணவு, பிரியாணி போன்றவற்றை இறுதி வரை விரும்பி உண்டு வந்தார். அவருடைய எழுத்து, பேச்சு, இரண்டும் பகுத்தறிவை கற்பிக்கும் விதமாகவே இருந்தது. சமுதாய சீர்திருத்த சிற்பியாகவே விளங்கினார். மதுவிலக்கை முழுமையாக ஆதரித்தவர் பெரியார். கள்ளுக்கடை மறியல் போராட்டங்கள் நடத்தியவர். எந்து ஒரு போராட்டம் என்றாலும் மனைவி, சகோதரி என பெண்களையும் முதன்முதலாக பங்குபெற வைத்தவர் பெரியார். பெரியார், ஒரு மேடையில் பேசிக் கொண்டிருந்த போது ஒருவர், நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே, உங்கள் முன் கடவுள் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார். கடவுள் உண்டு என்று சொல்லும் சாமியாரிடம், கடவுள் இல்லை என்று சொன்னால் உடன் சாமியாருக்கே கோபம் வந்து விடும், ஆனால் பெரியார் கோபம் எதுவும் கொள்ளாமல் மிகவும் அமைதியாக, கடவுள் என் முன் வந்து நிற்கட்டும், நான் கடவுள் உண்டு, கடவுள் உண்டவே உண்டு’ என்று சொல்லி விடுகிறேன் என்றார். மாற்றுக்கருத்து உள்ளவர்களையும் மதிக்கும் பண்பாளர் பெரியார். ஆடு, மாடு, பறவை என மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை. ஆனால் மனிதனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு உண்டு. அதனை முறையாகப் பயன்படுத்துங்கள் என்று கோரிக்கை வைத்து, பலர் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க காரணமாக அமைந்தவர் பெரியார். குடும்பக்கட்டுப்பாடு பற்றி இன்று பேசுகிறோம், ஆனால் இது பற்றிய விழிப்புணர்வை அன்றே மக்கள் மனங்களில் விதைத்தவர் பெரியார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, பதவி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் பெரியார். இட ஒதுக்கீடு கொள்கைக்காக அரசியல் சட்டம் திருத்திடக் காரணமாக இருந்தவர். பெரியார் மட்டும் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றால் தமிழகம் இந்த அளவிற்கு முன்னேறி இருக்காது. தமிழகத்தில் பல முன்னேற்றங்கள் நிகழக் காரணமாக இருந்தவர் பெரியார். கல்வி வள்ளல் காமராசர் கதராடை அணிந்த கருப்புச் சட்டைக்காரராகவே வாழ்ந்தார். பெரியாரின் கொள்கைகளை முதல்வராக இருந்த போது நிறைவேற்றி கல்விப்புரட்சிக்கு வித்திட்டார். பெரியார் கண்ட கனவுகளை எல்லாம் காமராசர் நனவாக்கினார். அறிஞர் அண்ணா அவர்களும் ‘இந்த ஆட்சியே பெரியாருக்கு காணிக்கை’ என்று சொல்லிப் பெரியாரின் கொள்கைகளுக்கு எல்லாம் சட்ட வடிவம் தந்தார், திட்டங்கள் தீட்டினார், நிறைவேற்றினார். தந்தை பெரியார், யார் முதல்வராக இருந்த போதும் அவர்களை ஆதரித்து தட்டிக்கொடுத்து கொள்கைகளை நிறைவேற்றிட வழி வகுத்தார். வாக்குக் கேட்கும் அரசியலை வெறுத்தார். அதனால் தான் அவர் வாக்கு கேட்கும் அரசிய்லுக்கு வரவே இல்லை. தமது கட்சி எந்தத் தேர்லிலும் போட்டியிடாது என்று அறிவித்து, அதைக் கடைசி வரை கடைப்பிடித்துத் தேர்தலில் நிற்காமல் இருந்தார். பெரியாரிடம் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வேண்டினார்கள். இலண்டன், ஜப்பான் என்று பெயர் சொன்னார். உடனே பெயர் வைக்க சொன்னவர்கள், ‘ஊர்ப் பெயர், நாட்டின் பெயர் வைக்கிறீர்களே?’ என்றனர். உடன் அவர், ‘நீங்கள் மட்டும் பழனி, திருப்பதி என்று ஊர் பெயர் வைக்கிறீர்களே, அது சரியென்றால் இதுவும் சரி’ என்றார். நடிகவேள் எம்.ஆர். ராதாவிற்கு உந்து சக்தியாக இருந்தவர் பெரியார். இவருடைய கருத்துக்களையே தமது நாடகங்களிலும், திரைப்படங்களிலும் சொல்லி வந்தார். செவாலியே சிவாஜி கணேசனுக்கு அவரது நாடகம் பார்த்து விட்டு ‘சிவாஜி’ என்ற பட்டம் தந்தவர் பெரியார். கணேசன் என்ற பெயர் சிவாஜி கணேசன் என்று மாறுவதற்குக் காரணம் பெரியார். ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்று சொல்லி மனிதநேயத்தை மனிதனுக்கு கற்பித்தவர் பெரியார். எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? எதனால்?’ என்று கேள்விகள் கேட்கும் ஆற்றலை வளர்த்து விட்டவர் பெரியார். இந்தக் கேள்விகள் கேட்கப்பட்ட காரணத்தால் தான் விஞ்ஞான வளர்ச்சி, முன்னேற்றம் எல்லாம் நிகழ்ந்தன. தந்தை பெரியார், திரைப்படத்தை விரும்பவில்லை. தொலைநோக்குச் சிந்தனையாளரான் இவர்திரைப்படத்தைத் தமிழர்களைப் பிடித்த நோய் என்றார். உண்மை தான். பெரிய திரை, சின்னத்திரை என்று இன்று சமுதாயத்தைச் சீரழித்து வருகின்றன. பெரியார் இன்று இருந்திருந்தால், தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்தச் சொல்லிப் போராடியிருப்பார் என்பது உண்மை. இன்று தொடர்களில் வரும் கதாநாயகன் அனைவருக்கும் இரண்டு மனைவிகள். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற தமிழ்ப் பண்பாட்டை சிதைத்து வருகின்றனர். ஒரு பெண் இப்படியும் இருப்பாளா? என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவிற்குப் பெண்ணைக் கொலைகாரியாக, கொடுமைக்காரியாக சித்திரித்து வருகின்றனர். நல்ல ஊடகத்தில் கெட்டதையே திரும்பத் திரும்பக் காட்டி வருகின்றனர். சதித்திட்டம் தீட்டுதல், கொலை செய்தல், வன்முறை என தொடர்களில் காட்டி வருகின்றனர். பெண்களை போகப்பொருளாகவும் போட்டிப்போட்டுச் சித்தரித்து வருகின்றனர். விளம்பரங்களில் ஐஸ் கொடுத்தால் மனைவியை விட்டுக் கொடுப்பது போலவும், வாசனை திரவியம் தடவினால் பெண்கள் தேடி வருவது போலவும், பெண்கலை மிக மிகக் கேவலமாக காட்டி வருகின்றனர். இன்று தந்தை பெரியார் பிறந்த நாள். இன்றிலிருந்தாவது ஒரு முடிவுக்கு வருவோம். பெண்களைக் கேவலமாக, போகப்பொருளாகச் சித்திரிக்கும் விளம்பரங்களைத் தடை செய்யவும். தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கும் தொடர்களை நிறுத்தவும் குரல் கொடுக்கும் பெரியாரின் கொள்கையான சமத்துவ சமதர்மச் சமுதாயம் அமைந்திட பகுத்தறிவை நன்கு பயன்படுத்திடுவோம். எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ எனக் கேள்விகள் கேட்டிடுவோம். ***** 2 கருத்துகள்

கருத்துகள்