திருக்குறள் விடு தூது ! நூல் ஆசிரியர் : செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !

திருக்குறள் விடு தூது ! நூல் ஆசிரியர் : செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ! அமிழ்தம் பதிப்பகம், பக்கங்கள் 88 விலை : ரூ.40 A4 மாதவ் குடியிருப்பு, 5, டாக்டர் தாமசு சாலை, தியாகராய நகர், சென்னை-17. •••••• திருக்குறள் விடு தூது என்னும் இந்நூலின் முதற்பகுதி 149 கண்ணிகளை உடையது. ‘உள்ளத்தில் ஓர் இடத்தை ஓர்’ 26 கண்ணிகள், இரண்டாவதாம் தொண்டாற்றுப் படை 166 அடிகளைக் கொண்ட அகவல் நடையது அது. பல வருடங்களுக்கு முன்பு தமிழறிஞர் இளங்குமரனார் அவர்களால் வடிக்கப்பட்ட மரபுக்கவிதை நூல், இளங்குமரனார் முதலில் கவிஞர், பிறகு தான் கட்டுரையாளர். அவருடைய கட்டுரைகளிலும் கவித்துவம் மிளிரும். பதச்சோறாக சில கவிதைகளை இங்கே காணலாம். தேனே! திருமறையே! தெய்வத் திருக்குறளே! வானே! வளமே! வரப்பேறே! வண்டமிழே! முந்தைச் தமிழ்ச் சான்றோர் முன்னு கருத்தெல்லாம் ‘சிந்தா’ என வழங்கும் ஈடில்லாச் செம்பொருளே! பல்லாண்டு பல்லாண்டு பன்னூலும் பார்த்துழன்று நல்லான்ற வாழ்வு நயங்கண்டறியாரும் தொட்ட இடத்தெல்லாம் தூய வளங்கண்டு கட்டித் தமிழ்பாகாய்க் கைமேல் பெறுதற்கு உலகப் பொதுமறையான திருக்குறள் பற்றி 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழறிஞர் இளங்குமரனார் திருக்குறளின் சிறப்பை மரபுக் கவிதைகள் மூலம் எடுத்தியம்பி மகுடம் சூட்டி உள்ளார். திருக்குறளை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தவர் இளங்குமரனார். மதுரை மணியம்மை பள்ளியில் மாதாமாதம் ஞாயிறு மாலையில் தமிழ் இலக்கியங்கள் குறித்து இளங்குமரனார் உரையாற்றுவார். புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி. வரதராசன் அவர்கள் தான் இவ்விழாவை ஏற்பாடு செய்வார். பல பேராசிரியர்களும் அறிஞர்களும் தவறாமல் வந்து கேட்டு மகிழ்வர். நானும் தொடர்ந்து சென்று கேட்பதுண்டு. திருக்குறள் குறித்து அவரது உரையைக் கேட்டு மகிழ்ந்ததுண்டு. இந்நூலில் திருக்குறள் சிறப்பை, வனப்பை, பெருமையை, வளமையை கவிதைகளாக வடித்து இருப்பது தமிழ் விருந்தாக உள்ளது. நூலின் ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் அரிய சொற்களுக்கான எளிய விளக்கமும் இருப்பதால். கவிதைகளை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது. தமிழ்த்தொண்டர் மீ.சு. இளமுருகு பொற்செல்வி அவர்களிடம் ஒரு தொண்டரை ஒரு தொண்டர் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது தொண்டராற்றுப் படை. அதிலிருந்து ஒரு கவிதை இதோ! முன்வைப்பு தொண்டில் களித்தும்பும் தூயர். சுவைப்பாகு கண்டில் கனிந்த கனிவாளர் – கொண்டல் இளமுருகு பொற்செல்வி ஏந்தல்மேல் சொல்லும் உளமுருகாற்றுப்படையிவ் ஆற்று, வண்டமிழ்க் கொண்ட! வாய்மொழி புலவ! கொண்டறக் கொள்கைகள் கொழுந்தமிழ வாழ்வ! எண்ணுவ தமிழே; இயற்றுவ தமிழே! பண்ணுவ தமிழே; பயிற்றுவ தமிழே! தமிழ்க் கா.சு. என வழங்கப்பட்ட கா. சுப்பிரமணியனார் பெயரால் ஒரு நினைவுக்குழுவினை நிறுவி பக்கத்து ஊர்களை மட்டுமன்றி நாடளாவிய அளவில் பைந்தமிழப் பற்றாளர்களை எல்லாம் வயப்படுத்திய தமிழ்த்தொண்டர் மீ.சு. இளமுருகு பொற்செல்வி அவர்களை பாராட்டும் விதமாக மரபுக்கவிதை எழுதி வாழ்த்திப் பாராட்டி உள்ளார் தமிழறிஞர் இளங்குமரனார். தமிழுக்காக தொண்டு செய்பவர்களை வாழும் காலத்திலேயே பாராட்டி மகிழ்ந்த உயர்ந்த உள்ளம் பெற்றவர் இளங்குமரனார். வெண்ணிலா விளையாட்டு என்பது நிலவும் கடலும் கொண்ட நேயமும், ஊடலும், நிறைவும் விளம்புவது அது. கடலால் அழியுண்ட ஏடுகள் பற்றியும் விண்ணகச் செலவு குறித்தும் விரியக் கூறுவது 186 அடி அகவல் அது. நூலின் மூன்றாம் பகுதியில் வெண்ணிலா பற்றிய மிகச்சிறப்பான கவிதைகளை வடித்துள்ளார். படித்துப் பாருங்கள் இதோ! வெண்ணிலா விளையாட்டு திங்களே கேள் திங்களே கேட்க! திங்களே கேட்க! பொங்கி நீ வளர்ந்து முழுமதி யாகிக் கதிராம் அன்பைக் கடலில் பொழிதலால் விதிப்படி உன்னைக் கடலினை மணந்த பதியெனச் சொல்வர் ; பால்மதி உன்றன் முகத்தினைக் காண முத்துத் தலைவி மிகமிக முயன்று மீதெழல் காணாய்! காணாக் குறையால் கவலை மிகவே பேணா துடலைப் புரட்டுதல் பாராய்! வயிற்றி லடித்து வானகம் நோக்கி வானில் உள்ள நிலவை கடலில் உள்ள முத்துத்தலைவி காணத் துடிப்பதாக கற்பனை செய்து நிலவு, கடல் என ஒப்பீடு செய்து வடித்துள்ள மரபுக் கவிதை அகவல் வகைக் கவிதையாக உள்ளது. நூலின் நான்காம் பகுதியில் குரங்கு சொல்லிய கதை கவிதையாக உள்ளது. குற்றாலச் செலவு பற்றியது. இயற்கை வனப்பும். அதனை மாந்தர் படுத்தும் பாடும் ஆகியவற்றைக் கூறுவது 224 அடி அகவல் நடையது. கவிதை இதோ! குரங்கு சொல்லிய கதை இயற்கையே இறைவன் சீர்பெறு நிலத்தில் சிற்சில இடங்கள் ஏற்பெறு வனப்பை இயற்கையில் உற்றுக் காண்போர்த் தடுத்துக் களிப்பினை ஊட்டும் ஊணினை மறக்கும் உளத்தினை ஆக்கும் இப்படி குரங்கு ஓடுதல், தாவுதல் என்று குரங்கின் சேட்டைகள் பற்றியும், குரங்கின் குரப்புரையும் ஒரு சிலர் குரங்கைப் பிடித்து வைத்து காலில் சங்கிலி மாட்டி, குரங்கிடம் குரங்குச் சேட்டைப் புரிந்திடும் சேட்டை மனிதர்கள் பற்றியும் பாடி உள்ளார். மொத்தத்தில் 4 பகுதிகளாகக் கொண்ட இந்த கவிதை நூலில் மரபுக் கவிதை விருந்து படைத்துள்ளார். மரபை விரும்பும் அனைவரும் படைக்க வேண்டிய சிறந்த நூல் திருக்குறள் விடு தூது.

கருத்துகள்