மத்தாப்புக் குச்சிகள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மாலதி இராமலிங்கம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

மத்தாப்புக் குச்சிகள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மாலதி இராமலிங்கம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி ****** மத்தாப்புக் குச்சிகள் என்ற பெயரில் ஹைக்கூ கவிதை மின்னல் பொறிகள் வழங்கி உள்ளார் கவிதாயினி மாலதி இராமலிங்கம். எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் இலக்கிய ஆர்வலர். பொதிகை மின்னல் நூல்கள் போட்டியில் பரிசு வென்றவர். திருவாரூர் புலவர் இர. சண்முகவடிவேல், வில்லிசை வேந்தர் புலவர் பி. பட்டாபிராமன், மேனாள் கூடுதல் தலைமைப் பொறியாளர் சீனி. வரதராஜன் ஆகியோரின் அணிந்துரைகள் வரவேற்பு தோரணங்களாக அமைந்துள்ளன. காற்றை மருந்தாக்கும் வித்தைக்காரன் இசைக்கலைஞன்! முதல் ஹைக்கூவே முத்தாய்ப்பாக உள்ளது. புல்லாங்குழல் இசைக்கலைஞனுக்கும் பொருந்தும். எல்லா இசையமைப்பாளர்-களுக்கும் பொருந்தும். இசையால் நோய்கள் குணமாவதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன, மௌனமே போர்க்களமாகிறது சில நேரங்களில்! உண்மை தான். நமக்கு மிகவும் வேண்டியவர்கள், நண்பர்கள் தவறு செய்துவிட்டால் குற்றம் இழைத்து விட்டால் உடன் திட்டி விடாமல் மௌனம் காத்தாலே அதுவே அவர்களுக்கு பெரிய தண்டனையாகக் கருதி செய்த தவறை எண்ணி வருந்துவார்கள். சொற்களை விட மௌனத்திற்கு வலிமை அதிகம். அதனை உணர்த்திடும் ஹைக்கூ நன்று. வானம் விட்ட நீர் அம்புகள் மழை! இயற்கை ரசிகர்களால் தான் நல்ல கவிதை படைக்க முடியும். மழையை நன்கு ரசித்து உள்ளார். மழையை உற்றுநோக்கினால் மேலிருந்து அம்புகள் வருவது போன்றே தோன்றும். அதனை உணர்ந்து வடித்த கவிதை நன்று. நீர் அம்புகள் புதிய சொல்லாட்சி! விளைய வேண்டிய பூமி விற்பனையாகிறது விதைக்க வழியின்றி! இன்றைக்கு உழவர்கள் அனைவருமே வறுமையில் தான் வாடுகிறார்கள். உரிய வசதிகள் இன்றி விதைக்க வழி இல்லாத காரணத்தால் விளையும் நிலத்தையும் விற்றுவிடும் அவலம் தொடர்கதையாகி வருகின்றது. ஒரு நாட்டில் உழவன் வளமாக வாழ்ந்தால் தான் நாடு நலமாக வளமாக வாழும்! முண்டியடித்துக் கொண்டு முன்னேறாத இடம் மயானம்! உண்மை தான். மயானம் செல்ல யாரும் முண்டியடிப்பதில்லை. ஆனால் கொரோனா இரண்டாம் அலையின் போது பிணங்கள் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நின்ற காட்சி வழக்கத்திற்கு மாறாக நடைபெற்ற நிகழ்வுகளையும் நினைவூட்டியது இந்த ஹைக்கூ. உயிருள்ள வரை உடலில் ஊர் சுற்றும் உதிரம்! குருதி, இரத்தம், உதிரம் இந்த வடிவில் யாரும் சிந்திக்கவில்லை. உண்மை தான். உடலில் உயிர் உள்ளவரை ஊர் சுற்றும். மூச்சு நின்றதும் இரத்தஓட்டமும் அடங்கி விடும். பழமையிலும் அழகு பாட்டியின் தண்டட்டி! ரசித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும் பாட்டியின் தண்டட்டி அழகு தான். கலையம்சத்துடன் மிகவும் அழகாக இருக்கும். இதுபோன்ற தண்டட்டி இன்றுள்ள பாட்டிகள் அணிவதில்லை. அவ்வளவு அழகாக செய்து கொடுத்த பொற்கொல்லர்களும் இன்று இல்லை. வழக்கொழிந்துவிட்ட கலைப்பொருள். பாட்டியின் தண்டட்டியை வீட்டில் இருந்தால் பத்திரப்படுத்தி வைப்பது வருங்கால சமுதாயத்திற்கு காட்டலாம். மச்சங்களும் வடுக்களும் மாற்றுச் சான்றிதழில் முக்கிய அடையாளங்கள்! காயம்பட்டு வலியோடு அடிபட்டு ஏற்பட்ட தழும்புகள் தான் நமக்கு கல்வி சான்றிதழில் அடையாளத்திற்கு பயன்படுகின்றன. வடுக்களும் நமக்கு ஒருவகையில் உதவுகின்றன. அழியாத மச்சமும் உதவுகின்றன என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று. சபல எண்ணத்தில் சன்மானம் ஆகிறது தன்மானம்!மனதில் உறுதி வேண்டும். மனம் ஒரு குரங்கு என்றார்கள். அதனை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சபலத்தின் காரணமாக சஞ்சலப்பட்ட பல பெரிய மனிதர்கள் தன்மானமிழந்த நிகழ்வுகளை நினைவூட்டியது இந்த ஹைக்கூ. எப்போதும் என் கையில் வெண்புறா புத்தகம்! புத்தகத்திற்கு பலரும் பலவித உவமைகள் கூறி உள்ளனர். ஆனால் வெண்புறா என உவமை கூறியது நூலாசிரியர் கவிதாயினி மாலதி இராமலிங்கம் அவர்கள் மட்டும். நல்ல கற்பனை, புதிய சொல்லாட்சி, பாராட்டுகள். போதி மரங்களின் கிளைகள் நூலகங்கள்! புத்தருக்கு ஞானம் வந்தது போதி மரத்தடியில் என்பார்கள். அதுபோல நூலகம் சென்றால் எல்லோருக்கும் ஞானம் வரும், அறிவு வரும், ஆற்றல் வரும், பொறுமை வரும், பெருமை வரும் என்பது உண்மையே! மொத்தத்தில் மத்தாப்புக் குச்சிகள் பார்த்து மகிழும் குழந்தையென இந்த நூல் ஹைக்கூ கவிதைகள் படித்து வாசகர் மனதில் மகிழ்ச்சி பிறக்கும் என்பது உண்மை. பாராட்டுகள்.

கருத்துகள்