செல்ஃபி தருணம்! நூல் ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜா! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

<
செல்ஃபி தருணம்! நூல் ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜா! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : கந்தகப்பூக்கள் பதிப்பகம், 2/2440 F, 20, கவிதா நகர், சுக்கம்மாள் கோவில் பின்புறம், சிவகாசி. பக்கங்கள் : 80. விலை : ரூ.80. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ****** நீல நிலா இதழ் ஆசிரியர். தன் பெயரோடு நீல நிலாவை சேர்த்துக் கொண்ட செண்பகராஜன் தொடர்ந்து இயங்கி வருபவர். விடுமுறை தினங்களில் விருப்பத்துடன் இலக்கிய நிகழ்வுகளில் பங்கு பெறுபவர். ஹைக்கூ நூற்றாண்டு விழா நடத்தியவர். செல்ஃபி தருணம் என்ற பெயரில் பல்சுவை விருந்து வடித்துள்ளார். பாராட்டுகள். செல்ஃபி என்ற ஆங்கிலச் சொல்லிற்குப் பதிலாக ‘தன்படம் தருணம்’ என்று வைத்து இருந்தாலும் சிறப்பாகவே இருந்திருக்கும். கந்தகப்பூக்கள் கவிஞர் ஸ்ரீபதி, கலைமாமணி குறிஞ்சிச் செவ்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் இருவரும் அணிந்துரை நல்கி சிறப்பித்துள்ளனர். பயணங்கள்! என்னுடைய பயணங்கள் ஏதாவது ஒரு அனுபவத்தை எப்போதும் கற்றுக்கொடுக்கின்றன! முடிவில்லாப் பயணம் என்றேனும் முடிவுற்றால் அந்த நாள் நான் நோயுற்றிருக்கலாம்! அல்லது போயிருக்கலாம்! நூலாசிரியர் ஒவ்வொரு ஆலைகளுக்கும் பயணப்பட்டு அங்குள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சி தரும் அலுவலர் என்பதால் எப்போதும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார். நலமாக இருந்தால் தினமும் பயணம் தான். உடல் நலம் குன்றினாலும், உயிர் போனாலும் மட்டுமே பயணம் நிற்கும் என்று முதல் கவிதையிலேயே முத்தாய்ப்பாக எழுதி உள்ளார். பாராட்டுகள். பயணம் பல அனுபவங்களைத் தருவது உண்மையே. செல்ஃபீ தருணம் (அம்முவிற்கு) தலைவலிக்கு / தைலமிட்டு நீவி விட்ட உன் / விரல்களின் ஸ்பரிசம் / ஆயிரம் வயலன்களை வாசிக்கச் செய்து / சுகராகம் மீட்டியது / இதயத்தில்! கவிதைக்கு கற்பனை அழகு, உண்மை. தலைவி தைலம் தடவி விட்ட நிகழ்வை ஆயிரம் வயலின் இசைத்த சுகராகத்தோடு ஒப்பிட்டது சிறப்போ சிறப்பு. கவி உலகில் நவீனப் பாதையை அமைத்தவனே! இன்று உன் பேரன்கள் பலர் ஹைக்கூவை உவகையுடன் வளர்த்தெடுத்து / நீ சென்ற பாதையை நீள் உருவாக்கம் செய்துள்ள / இனிய செய்தியை இனிப்புடனே தமிழ் ஹைக்கூ நூற்றாண்டில் பகிர்கின்றேன் நான் உனக்கு / கீழ்க்காணும் என் ஹைக்கூ உடன் நூறாவது வயதில் அடியெடுத்து வைத்தது பாரதி பிரசவித்த தமிழின் செல்ல ஹைக்கூ குழந்தை! மகாகவி பாரதியாரைப் பாடாத கவிஞர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லோரும் பாடி விடுகின்றனர். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்திட்ட பாரதி சிறப்பித்த கவிதையை நூலில் சேர்த்துள்ளார். இரண்டு நிமிடங்களில் / வானில் கலந்து விட்டாய் இந்த நீல நிலாவோ / அமாவாசையாய் மாறி விட்டதே நான் படைக்கும் / படைப்புகளை விட என்னைப் படைத்த / நீ தான் / காலம் கடந்த படைப்பாளன் / அல்லவா? நூலாசிரியர் அம்மா இறந்ததும் கவி வடித்தது மட்டுமன்றி ஒவ்வொரு ஆண்டு நினைவு தினத்திலும் கவிதை எழுதி பத்திரப்படுத்தி நூலாக்கி இருப்பது சிறப்பு. அம்மா நேசம் பாசம் அளப்பரியது. அளவிட முடியாதது. முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! உன் பிரிவு என்னும் / கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் என்னை / உன் நினைவுகள் / ‘கலங்கரை விளக்காய்’ வழிகாட்டி / கரை சேர்க்கும் என்ற / நம்பிக்கையில்! அம்மா பற்றிய நினைவுகள் கலங்கரை விளக்கென திசைகாட்டி வழிகாட்டும் என்று குறிப்பிட்டது நன்று. நான்காம் ஆண்டு நினைவஞ்சலி வரை வருடாவருடம் எழுதி நூலில் சேர்த்துள்ளார் அம்மா நேசர். ஒரு ஆங்கிலக் கவிதையையும் அழகுதமிழில் சிறப்பாக மொழிபெயர்த்து வழங்கி உள்ளார். அவரது இருமொழி புலமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. காரல்மார்க்ஸ் 200 தாடிக்கே இலக்கணம் / கற்றுக்கொடுத்த சீர்மிகு சிந்தனையாளன் இவர்! / மூலதனம் என்னும் அருமையான / அறிவுப் பெட்டகத்தை / சமூகத்திற்கு மூளைதானமாக வழங்கிய / முற்போக்கு எழுத்தாளன் இவர்! காரல்மார்க்ஸ் 200 ஆண்டை முன்னிட்டு கவியரங்கில் வாசித்த நீண்ட நெடிய கவிதை நன்று. ‘மூளைதானம்’ மூலதனம் நல்ல சொல்லாட்சி. அறிவுதானம் என்பதை மூளைதானம் என்று குறிப்பிட்டது சிறப்பு. முற்றிலும் பொருந்தும். மானுடத்தின் முகவரி தாய்மையின் பிறப்பிடம் விடுமுறை அறியா கோதாவரி லிமரைக்கூ வடிவிலும் கவிதை வடித்துள்ளார். முதல் வரி இறுதி எழுத்தும் மூன்றாம் வரி இறுதி எழுத்தும் ஒன்றி வரும் இயைபு துளிப்பா நன்று. மோனைக்கூ புரிந்து கொள்ள முடியாத புதுமைப்பாடம் புத்துயிர்ப்பான முதுமை! மோனைத் துளிப்பா வரிகளின் முதல் எழுத்துக்கள் ஒன்றி வரும் வகைப்பா. நான்கு வரி எழுதிடும் நானிலு தன்முனைக் கவிதை நன்று. அனாதையாய் நூலகம் ஆரவாரமாய் மதுக்கடை இணையத்திற்குள் புதைந்து இறுகும் சமூகம்! உண்மை தான்! நேற்று முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறக்கப்பட்டன. ஆனால் வாசர்கள் பெருமளவில் வரவில்லை. ஆனால் மதுக்கடையிலோ கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகின்றது. வேதனை தரும் நாட்டு நடப்பை கவிதையில் வடித்தது சிறப்பு. ஹைபுன், ரென்கா வரிசையாக மூன்று ஹைக்கூ என்று ஹைக்கூவின் வாரிசுக் கவிதை வடிவங்களிலும் கவிதை எழுதி இருப்பது நூலாசிரியரின் கவியாற்றலை புலப்படுத்துவதாக உள்ளது. நேற்றைத் தேடி அலைகிறார்கள் இன்றை மறந்தபடி நாளை எதைத் தேடும்! புத்தரின் போதனையை ஹைக்கூவாக வடித்துள்ளார். கடந்தகாலம் பற்றிய கவலைகளையும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகளையும் விட்டுவிட்டு இந்த நிமிடத்தில் நிகழ்காலத்தில் வாழப் பழகினால் வாழ்க்கை சிறக்கும். செல்ஃபி தருணம் நூல் படித்த தருணம் மகிழ்வான தருணமானது -- .

கருத்துகள்