உதிராப் பூக்கள் ! (கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி ! நூல் மதிப்புரை :கலைமாமமணி ஏர்வாடியார் ஆசிரியர் “கவிதை உறவு” - மனிதநேய இலக்கியத் திங்களிதழ்

 





உதிராப் பூக்கள் !


(கவிஞர் இரா.இரவியின் தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்)


தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி !


நூல் மதிப்புரை :கலைமாமமணி ஏர்வாடியார் ஆசிரியர் “கவிதை உறவு” - மனிதநேய இலக்கியத் திங்களிதழ்

420-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600 040.


நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. பேச : 044-24342810. பக்கங்கள்:64 விலை:ரூ70.



*****

      கவிஞர் ஆத்மார்த்தி சிறந்த கவிஞர் மட்டுமல்ல, நல்ல ரசிகரும் கூட. அதுவும் சக கவிஞர்களின் கவிதைகளைத் தாம் ரசித்து மகிழ்வதோடு, பாராட்டுகிற பேருள்ளமும் பெருந்தன்மையும் கொண்டவர். அவருடைய பாராட்டைப் பெற்றதிலும் அவராலேயே தம் ஹைக்கூ கவிதைகளில் சிறந்தவையாக 100 தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் இரவி கொடுத்து வைத்தவர் என்றே சொல்லத் தோன்றுகிறது. தொகுப்புரையிலும் ஆத்மார்த்தியின் அன்பு தெரிகிறது.

மூன்று வரிகள் இருப்பது மட்டுமல்ல, ஹைக்கூ மூன்றாவது வரியில் முடிச்சு அவிழ வேண்டும். மேலே இரண்டு வரிகள் போட்ட புதிரை மூன்றாவது வரி விடுவிக்கும் அல்லது கேள்விக்கு பதில் கிடைக்கும்.

ஹைக்கூ என்றதும் கவிஞர் அமுதபாரதியைத் தொடர்ந்து மித்ரா, முருகேஷ் என்று பலர் நினைவுக்கு வருவர். கூடவே இரா. இரவியும் இருப்பார். சிறந்த படைப்பாளராகவும், படிப்பாளராகவும் திகழ்கிற பண்பாளரான இரவி, விரும்பிய வண்ணமும், வேண்டிய வண்ணமும் இந்நூல் விளைந்துள்ளது.

கவிஞர் மு. முருகேஷ் தம் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இரா. இரவி தமிழ் ஹைக்கூவில் தவிர்க்க முடியாத ஒரு பெயராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து இரா. இரவியின் ஹைக்கூக்களை ஏற்கனவே நிறைய படித்திருக்கும் நமக்கு, அவற்றுள் தேர்ந்த சிலவற்றைப் பார்க்கிறபோது மீண்டும் மனம் சிலிர்க்கிறது. நினைத்து இன்புறுவது என்பது இன்பத்தின் உச்சம். அந்த அனுபவத்தை இந்த நூல் நமக்குத் தருகிறது.

கவிஞர் ஆத்மார்த்தியின் தேர்வும், ரசனையும் கிட்டத்தட்ட முன்பே சுவைத்த நம் ரசனையோடு ஒத்துப்போவது கூடுதல் சிறப்பு.

 “பொம்மை உடைந்தபோது

      மனசும் உடைந்தது

      குழந்தைக்கு”

என்றதும் ரவியின் ஞாபகம் வந்துவிடும். இதுதான் அவரது வெற்றி.

இதைப்போலவே,

“உடன் வந்தாலும்

      உண்மையில்லை

      நிழல்”

என்பது நிஜம். முதன்முறை வெளிவந்தபோதே பாராட்டைப் பெற்ற வரிகள். நூலைத் திறந்ததும்

“மழை நின்ற பின்னும்

      மழை

      மரத்திலிருந்து”

என்ற வரிகளைப் படிக்கிறபோதே நாம் நனைந்திருக்கிற நினைவைப் பெறுவோம்.

மழையோடு தொடர்பாக மற்றுமோர் கவிதை,

“மழையில் நனைந்தும்

      வண்ணம் மாறவில்லை

      வண்ணத்துப் பூச்சி”.

நமக்கெல்லாம் கடவுள் என்பது தாய்க்கு மட்டுமே மிகப் பொருத்தம். ஏனெனில், தாயிடம் மட்டுமே கருவறை உள்ளது. அடடா என்று கூற வைக்கும் வரிகள்.

“கருவறை உள்ள

      நடமாடும் கடவுள்

      தாய்”.

      “ரசிப்பதில் தவறில்லை,

            பறிப்பதில் தவறு

            மலர்கள்”.

பூக்களே புலம்புவதை இவ்வரிகளில் பார்க்கிறோம். இயல்பான சில நடைமுறைகள் இன்றைய நம்மிடம் இருப்பதைப் பல ஹைக்கூக்களில் காண்கிறோம்.

“உலகெல்லாம் உறவு

      பக்கத்து வீடு பகை

      மனிதன்”

உண்மை தானே.

“புதிய வீடு

      வரவில்லை உறக்கம்

      வாங்கிய கடன்”.

இது கடன் வாங்கி வீடு கட்டியவர்களின் நிலை.

“அடுக்கு மாடிகள்

      நெருக்க வீடுகள்

      தூர மனங்கள்”.

ஒன்றாக இருக்கிற அடுக்கக மக்கள் ஒன்றி இருப்பதில்லை. அடுத்த வீட்டில் யாரென்றே அறியாத வாழ்க்கை என்று அடுக்கக வாழ்க்கை குறித்து அலுத்துக் கொள்கிறார் இரா. இரவி.

இப்படி ஆயிரம் காரணங்கள். இந்த அடுக்கக வாழ்க்கைகள் பயன்படுத்த முடியாத அல்லது தவறாகப் பயன்படுத்தப்படுகிற பல விஷயங்களில் ஒன்றாக இந்தியா சுதந்திரம் இருக்கிறதோ என்கிற ஆதங்கம் இரா. இரவிக்கும் இருப்பதால்,

“சுதந்திரம்

      நாய் பெற்ற

      தெங்கம்பழம்”

என்று எழுதத் தோன்றி இருக்கிறது.

      அடுத்து

      “குடும்ப அட்டைகளின்

      வண்ணங்கள் தான் மாறுகின்றன,

      வாழ்க்கை அப்படியே”

என்று அட்டைதாரர்களுக்காகத் தன் அங்கலாய்ப்பை வெளிப்படுத்தியுள்ள ஹைக்கூவிலும் உண்மை இருக்கிறது.

கனிந்த முகம், இனிய பண்புகள், அழகு மொழி யாவும் இரவி வாங்கி வந்துள்ள வரங்கள்.

முகம் மலர,

      அகம் மலரும்

      இன்முகம்

என்ற அவரது ஹைக்கூவுக்கு நூலின் வடிவமைப்பாளர் திரு. ராம்குமாருக்கு கவிஞரின் படமே பொருத்தமாகத் தோன்றியிருக்க வேண்டும். இரவியின் படத்தோடு அந்த ஹைக்கூ வெளிவந்துள்ளது சிறப்பு. சின்னச் சின்னதாய இதழ் விரித்த வண்ண மலர்களின் தொகுப்பாய், வாசித்த பின்னரும் வாசம் நெஞ்சிலாய். அற்புதம்




கருத்துகள்