பாவேந்தரைப் போற்றுவோம் ! கவிஞர் இரா .இரவி !

பாவேந்தரைப் போற்றுவோம் !  கவிஞர் இரா .இரவி !

கனகசபை இலக்குமி அம்மாள் ஈன்றெடுத்த 
கவிதைக்கடல் கருத்துக் களஞ்சியம் !

புதுவையில் பிறந்த புதுமைப் பாவலர் 
பாடல் கதை திரைக்கதை வசனம் வடித்தவர் !

பெரியாரின் பகுத்தறிவுக்கு கருத்துக்களை 
பாடலில் புகுத்தி பகுத்தறிவை ஊட்டியவர் !

பேரறிஞர் அண்ணா அவர்களிடமிருந்து  விழாவில் 
புரட்சிக்கவிஞர் என்ற பட்டத்தை பெற்றவர் !

பிசிராந்தியார் என்ற நாடக நூலிற்கு 
பாரத சாகித்ய அகாதெமி பரிசுப் பெற்றவர் !

கிறுக்கன் கிண்டல்காரன் என்ற பெயர்களில் 
கன்னித்தமிழ்ப்  படைப்புகள் படைத்து எழுதியவர் !

புதியதோர் உலகம் செய்வோம்  என்று பாடி 
புதியதோர் உலகத்தை பாடலால் காட்டியவர் !

தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடி 
தமிழ்ப்பற்றை மனங்களில் விதைத்தவர் !

இருண்டவீடு காவியம் படைத்துக் காட்டியவர்   
இருளை மன இருளை பாடலால் அகற்றியவர் !

இளைஞர் இலக்கியம் கவிதை நூல் வடித்து 
இளைஞர்களை இலக்கியத்திற்கு ஈர்த்தவர் !

எதிர்பாராத முத்தம் கவிதை நூல் வடித்து 
எல்லாக்காதலர்கள் கரங்களில் தவழ வைத்தவர் !

கண்ணகி புரட்சிக் காவியம்  நூல் வடித்து 
கண்ணகி பற்றி உலகிற்கு உரைத்தவர் !

எண்பத்தி நான்கு நூல்கள் வடித்தவர் 
எண்ணிலடங்காத வாசகர்களைப் பெற்றவர் !

பாவேந்தரின் படைப்புகள் தமிழக அரசால் 
பாரே படித்திட நாட்டுடைமையாக்கப் பட்டது !

சகலகலா வல்லவராக வாழ்ந்துக் காட்டியவர் 
சகலரும் விரும்பிடும் பாடல்கள் யாத்தவர் ! 

புவியில் பாவேந்தருக்கு நிகர் பாவேந்தர் மட்டுமே 
புரட்சிக்கவிஞர்  பாவேந்தரைப் போற்றுவோம் ! 


பாவேந்தர் !    கவிஞர் இரா .இரவி !

பாவேந்தர் பட்டத்திற்கு முற்றிலும் 
பொருத்தமானவர் பாரதி தாசன் !

கனக சுப்புரத்தினம் என்ற பெயரை 
குரு பாரதிக்காக பாரதிதாசனாக மாற்றியவர்!

குடும்பக்கட்டுப்பாடு பற்றி அன்றே
குமுகத்திற்குச் சொன்ன முதல் கவிஞர் !

பகுத்தறிவுப் பகலவன் கருத்துக்களை 
பாடலில் வடித்த போர்முரசு  !

புதுவையின் பெருமைகளில் ஒன்றானவர் 
புரட்சிப் பாடல்கள் வடித்த சித்தர் !

குடும்பவிளக்கு  இயற்றி வைத்து 
குடும்பங்களை ஒளிர விட்டவர் !

புரட்சிக்கு கவிஞர் படத்திற்கு 
பொருத்தமானவர் நமது பாவேந்தர் !


பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார் ! கவிஞர் இரா .இரவி !
புரட்சிக் கவிஞர் என்றால் பாரதிதாசன் !
பாரதிதாசன் என்றால் புரட்சிக்கவிஞர்!
தந்தை பெரியாரின் புரட்சிக்கருத்துக்களை
தனது பாடல்களில் வடித்துக் காட்டியவர்!
தமிழ் ஆசிரியராகப் பணியினைத் தொடங்கியவர்!
தமிழ் ஆசு கவியாக வாழ்வில் உயர்ந்தவர்!
கொள்கையில் குன்றாக என்றும் நின்றவர்!
குணத்தில் அன்பின் சிகரமாகத் திகழ்ந்தவர்!
கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை பாரதிக்காக
பாரதிதாசன் என்று மாற்றிய உண்மைச் சீடர்!
பாரதிதாசன் ஆத்திசூடி அழகாக வடித்தவர்!
பாரினில் அனைவரும் விரும்பிடும் பாடல் படைத்தவர்!
பாடல்களால் பரவசம் படிப்பவர்களுக்குத் தந்தவர்!
பார் போற்றும் பாடல்கள் புனைந்தவர்!
பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்தவர்!
பகுத்து உணர பாடலால் உணர்த்தியவர்!
தமிழ் இன உணர்வை கவிதையில் ஊட்டியவர்!
தமிழுக்காக குரல் தந்த புதுவைக் குயில் அவர்!
‘இருண்ட வீடு’ தந்து ‘குடும்ப விளக்கு’ ஏற்றி
‘எதிர்பாராத முத்தம்’ தந்து ‘அழகின் சிரிப்பு’க் கண்டவர்!
‘தமிழச்சியின் கத்தி’யை ‘பாண்டியன் பரிசாக’த் தந்தவர்!
‘குயில்’ ‘இசையமுது’ ‘குறிஞ்சித் திட்டு’ வடித்தவர்!
‘பெண்கள் விடுதலை’யை ‘பிசிராந்தையார்’க்கு யாத்தவர்!
படைப்பால் ‘தமிழ் இயக்கம்’ கண்ட பாவலர்!
புதுவையில் பிறந்திட்ட புதுமைக் கவிஞர்!
பிரஞ்சு படித்த போதும் தமிழை நேசித்தவர்!
பண்டிதர்களிடம் தமிழைக் கற்றவர்!
பைந்தமிழை அமுதமென்று புகழ்ந்தவர்!
பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு
பல்வேறு பொருள்களில் பாடிய பாவலர்!
கவிதை கதை வசனம் கட்டுரை என
கணக்கிலடங்காத படைப்புகள் படைத்தவர்!
சகலகலா வல்லவராக வாழ்ந்து சிறந்தவர்!
சரித்தியம் படைத்து கவிஉலகில் உயர்ந்தவர்!
குடும்பக்கட்டுப்பாடு பேசுகிறோம் இன்று
குடும்பக்கட்டுப்பாடு பற்றி அன்றே பாடியவர்!
தமிழின் அருமை பெருமை உணர்த்தியவர்!
தமிழருக்கு மானமும் அறிவும் கற்பித்தவர்!
பாரதிதாசன் கவிதைகள் படித்தால் போதும்
பைந்தமிழ்ச் சொற்கள் யாவும் தெரியும்!
தமிழ் எனும் கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்!
தமிழ் முத்துமாலை தொடுத்து வழங்கியவர்!
கவிதையின் சுவையை பாமரருக்கும் உணர்த்தியவர்!
கவிதையில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர்!
புதுவையின் பெருமைகளில் ஒன்றாக மாறியவர்!
புதுமைகள் படைப்புகளில் புகுத்தி வென்றவர்!
சொற்களைச் சுவைபட பாட்டில் யாத்தவர்!
சுந்தரத்தமிழை சொக்கிடும் வண்ணம் தந்தவர்!
பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார்!
பாரதிதாசன் தான் அந்த ஒருவர்!

புரட்சிக்கவிஞர் ! கவிஞர் இரா .இரவி !
புதுவையின் புதுமை
பகுத்தறிவின் செழுமை
புரட்சிக்கவிஞர் !
குடும்பவிளக்கு ஏற்றிய
கவிதைச் சுடர்
புரட்சிக்கவிஞர் !
அன்றே உரைத்தவர்
அளவான குடும்பம்
புரட்சிக் கவிஞர் !
பெரியாரின் போர் முரசு
பார் போற்றும் பா அரசு
புரட்சிக் கவிஞர் !
தமிழை நேசித்தவர்
தன்னுயிருக்கும் மேலாக
புரட்சிக் கவிஞர் !
மகாகவி பாரதியை மதித்தவர்
மட்டற்ற கவிகளை வடித்தவர்
புரட்சிக் கவிஞர் !
சங்கநாதம் முழங்கியவர்
சங்கத்தமிழ் வளர்த்தவர்
புரட்சிக் கவிஞர் !
கனக சுப்பு ரத்தினம்
கவிதைகள் யாவும் ரத்தினம்
புரட்சிக் கவிஞர் !
சூழ்ச்சிகள் கழித்து
எழுச்சிகள் விதைத்தவர்
புரட்சிக் கவிஞர் !
அஞ்சாத சிங்கம்
பாடல்கள் தங்கம்
புரட்சிக் கவிஞர்


--

கருத்துகள்