இருக்கேனுங்க சாமீய்! நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.



http://www.tamilauthors.com/04/515.html  

இருக்கேனுங்க சாமீய்!
நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.  

அன்னை இராசேசுவரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 600 011.  பக்கங்கள் : 80, விலை : ரூ.80.
******
இருக்கேனுங்க சாமீய் ... நூலின் பெயரே சிந்திக்க வைத்தது. கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்களின் புதுக்கவிதை தொகுப்பு நூல் இது. மிகவும் சிறிய கவிதைகள், எல்லா கவிதைகளுக்கு தலைப்பும் தந்து உள்ளார். சிந்தனைச் சிதறல்களாக கவிதைகள் உள்ளன. உள்ளத்தில் உள்ளது கவிதை, ஊற்று எடுப்பது கவிதை என மனதில் பட்டதை புதுக்கவிதைகளாக வடித்துள்ளார், பாராட்டுக்கள்.
கவிஞர் கன்னிக்கோவில் இராஜாவின் கைவண்ணத்தில் வடிவமைத்து அன்னை ராசேசுவரி பதிப்பகம் மிக நேர்த்தியாக அச்சிட்டு வெளியிட்டுள்ள நூல். அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன.
‘எளிமையின் பலத்தோடு வாழ்வைச் சுமக்கும் கவிதைகள் என்று தலைப்பிட்டு அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளார் கவிஞர் மு.முருகேசு. ‘விளிம்பு நிலை சொற்களின் சீரியமிகு கவிதைகள் என்று தலைப்பிட்டு அணிந்துரை வழங்கி மகிழ்ந்துள்ளார். கவிஞர் கன்னிக்கோயில் இராசா.
 அணிந்துரையின் தலைப்புகளை நூலின் கவிதையின் கருத்தை எடுத்து இயம்புவதாக உள்ளன. கவிதைகள் படிக்கும் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எளிமையாக இருப்பது சிறப்பு.
இந்நூலை திருநங்கைகளுக்கு காணிக்கையாக்கி இருப்பது கூடுதல் சிறப்பு. கவிஞர் பா. உதயக்கண்ணன் அவர்களின் பதிப்புரை நன்று. நூலாசிரியர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய உலகில் இயங்கி வருபவர். ஹைக்கூ கவிஞரின் புதுக்கவிதை நூல் இது.
காதல்!
வார்த்தையில் / நடந்த / யுத்தத்தில்
      வழக்காடுகிறது / காதல்!
இன்றைய இளைய தலைமுறையினர் காதல் இணையுடன் பேசக்கூடாதவற்றை எல்லாம் அதிகம் பேசி நல்ல காதல் முறியுமளவுக்கு முற்றி விடுகின்றது. அதனை மிக அழகாக உணர்த்தி உள்ளார்.
வியாபாரம்!
வெந்தயம் சக்கரைக்கு நல்லது என்றனர் பலர்
      கொஞ்சம் வித் அவுட் சுகர் செய்யுங்கள் என்றனர் சிலர்
      போலி வார்த்தைக்கு மதிப்பு இல்லை
      என்றபடி நடக்கிறான் தவசி
      பல வீடு மாறியபின் / குடித்தனம் மனம் மாறி மாறி
      வெந்தயம் ஏவாரம் செய்தபடியே!
சர்க்கரை நோய் இன்று பெருகி விட்டது. நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் சர்க்கரை அளவு உனக்கு எவ்வளவு என்பதையே விசாரித்துக் கொள்கின்றனர். சர்க்கரை அளவு குறைக்க பலரும் பலவிதமாக  அறிவுரை சொல்லி வருகிறார்கள். அவற்றை உற்றுநோக்கி வடித்த கவிதை நன்று.
வாழ்க்கை!
தொலைந்த வாழ்க்கையை / எண்ணி
      அழுவதில்லை / சந்தோசப்படுகின்றன
      செல்!
ஒரு நாள் தான் வாழ்க்கை என்ற போதும் செல்கள் சோகத்தில் சோர்ந்து விடாமல் மிக மகிழ்ச்சியாகப் பறப்பதை காட்சிப்படுத்தி தன்னம்பிக்கை விதை விதைத்துள்ளார். பாராட்டுக்கள்.
கம்பனிடம்
காதல் கவிதை திருத்தி வாங்க!
      கம்பனிடம் சென்றிருந்தேன் / பின்பு ஒரு நாள்
      வர சொன்னான் / மறுபடியும் போனபோது
      போன் பண்ணச் சொன்னான் / போன்
      பண்ணிய போது / சுவிட்ச் ஆப் வந்தது!
      மீண்டும் வீட்டுக்கே போகும் போது /
      பார்க்காமலேயே நிராகரித்தான் /
      ஏரியா கரண்ட கட் என
      திருத்தாமலே அலைபாய்கிறது!
      காதல் கவிதை!
பிரபலமான கவிஞர்களிடம் வளரும் கவிஞர்கள் அணிந்துரை கேட்டால் உடன் வழங்கி விடுவதில்லை. பந்தா செய்வார்கள் அலைய விடுவார்கள். அந்த மனநிலையை அப்படியே கவிதையாக்கி பிரபல கவிஞருக்கு கம்பன் என்று பெயர் சூட்டி வடித்த விதம் நன்று.
நிலம்!
மழை நின்ற பின் / நிலத்தை உழுபவர்களை
      அதற்கு முன் / தரிசாக போடுவார்கள்
      எனது கவிதை உழுவதற்கு முன்
      தரிசாக மனதைப் போட்டுள்ளேன்.
      உழுதுபின் / விதைப்பு / பின் அறுவடை
      எப்படியும் ஒரு காலம் வரும் /
      இப்போது தரிசாக உள்ளது நிலம்!
நூலாசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் அவர்கள்
பா உழுதவன் என்ற ஹைக்கூ நூல் எழுதியவர். அதனால் உழவையும் கவிதையையும் ஒப்பிட்டு வடித்த கவிதை நன்று. இந்த நூலில் கவிதை விளைச்சல் நன்கு விளைந்து உள்ளது. வாசகர்கள் அறுவடை செய்து கொள்ளலாம்.
தினமாய்!
அணியும் உடையை வைத்து கணக்கிடுகிறீர்கள்
      பேசும் மொழியை வைத்து / கணக்குப் போடுகிறீர்கள்
      ஒரு கோவணம் போதும் வாழ /
      பசியின்றி இருந்தால் / சித்தர்கள் வாக்கு
      ஒலிக்கிறது பசியான பொழுதுகளில் தினமாய்!
புறத்தோற்றத்தை உலகம் மதிப்பீடு செய்கின்றது. அகத்தோற்றம் ஆராய்வதில்லை. ஆங்கிலம் பேசினால் அறிவாளி என்று தவறான கற்பிதங்கள் சமுதாயத்தில் உள்ளன. இப்படி போலியான மதிப்பீடுகளைத் தவிர்த்திடுங்கள் என்று சொல்லி விட்டு  பசியினைப் பற்றி முரண்சுவையில் முத்தாய்ப்பாக முடித்துள்ளார்.
நூலின் தலைப்பிலான, ‘இருக்கேனுங்க சாமீய்!... என்ற கடைசிக் கவிதையில், உழைப்பாளி, முதலாளி உழைப்புச் சுரண்டலையும் உழைப்பாளிக்கு உரிய மதிப்பு கிராமங்களில் வழங்கப்படுவதில்லை என்ற ஆதங்கத்தையும் நன்கு பதிவு செய்துள்ளார்.சிறிய வேண்டுகோள்  வருங்காலங்களில் ஆங்கிலச்  சொற்கள்  தவிர்த்து எழுதுங்கள் .
மொத்தத்தில் சந்தித்த, சிந்தித்த சின்னச் சின்ன தகவல்களை புதுக்கவிதைகளாக்கி புதுக்கவிதை விருந்து வைத்துள்ளார்.
.

கருத்துகள்