எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால் இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும் கவிஞர் இரா .இரவி !




மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவர்ன் அவர்கள் தந்த தலைப்பு



எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால்
இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்


கவிஞர் இரா .இரவி !


******
தமிழ்நாட்டில்தான் தமிழேப் படிக்காமல்
தாராளமாக பட்டம் வாங்கிடும் அவல நிலை!

ஆரம்பக்கல்வி தமிழில் வேண்டும் என்றோம்
ஆங்கிலவழிக் கல்வியே நடந்து வருகின்றது!

அரசுப் பள்ளிகளில் வாழ்ந்திட்ட தமிழ்வழிக் கல்விக்கும்
அரசே மூடுவிழா நடத்தி ஆங்கிலவழிக் கல்வி வந்தது !

இந்நிலை இப்படியே தொடர விட்டால்
எப்படி உலகின் முதல்மொழி உலகில் நிலைக்கும் !

தமிழருக்கே தமிழின் மீது பற்று இல்லை
தமிழன் ஆங்கில மோகத்தில் அலைகிறான்

ஆங்கிலம் என்பது ஒருமொழி அவ்வளவு தான்
அறிவை வளர்க்க ஆங்கிலம் உதவுவதில்லை!

தாய்மொழியாம் தமிழில் சிந்தித்தால் மாணவன்
தரணி போற்றிடும் புகழினைப் போற்றிடுவான்!

கரும்பு தின்ன கூலி கேட்பார்களா? யாரும்
கன்னித்தமிழ் படிக்க பணம் தர வேண்டுமா?

மாமனிதர் அப்துல் கலாமின் ஆரம்பக்கல்வி தமிழ்
மயில்சாமி அண்ணாத்துரையின் ஆரம்பக்கல்வி தமிழ்!

இசுரோ சிவனின் ஆரம்பக்கல்வி அற்புதத் தமிழ்
இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுகள் வேண்டும்!

ஆரம்பக்கல்வியை ஆங்கிலத்தில் படிப்பது என்பது
அனைவரிடமும் தொற்றுநோயாகப் பரவி விட்டது!

ஆங்கிலேயனை விரட்டி விட்டோம் இந்தியா விட்டு
ஆங்கிலத்தை விரட்ட முடியாமல் தவிக்கின்றோம்!

முதல் மொழியாம் தமிழை முதலில் படியுங்கள்
மற்ற மொழிகளை எல்லாம் அப்புறம் படியுங்கள்!

தமிழகத்திலேயே தமிழை மதிக்காவிட்டால்
தரணியில் வேறு எங்கு மதிப்பார்கள் தமிழை!

தமிழ்மொழி மொழி மட்டுமல்ல காக்கும் அமுதம்
தரணிக்கே மூத்த மொழி நம் தமிழ் மொழி!

கருத்துகள்