ஹைக்கூ 500 ... நூல் விமர்சனம் : கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் !





ஹைக்கூ 500 ...

நூல் விமர்சனம் : கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் !
95, இரண்டாவது முதன்மைச்சாலை, போரூர் தோட்டம்-2,
சென்னை-95.   



நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

நூல் வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கம் : 132, விலை : ரூ. 100


******

            இன்று ஹைக்கூ தமிழில் பரவலாக எழுதப்பட்டுக் கற்றவர்கள் முதல் எல்லோர் உள்ளங்களையும் கவரும் சிறப்பைப்பெற்றுள்ளது. ஹைக்கூவைத் சார்ந்த பிறவகைக் கவிதைகளும் வெளிவருகின்றன. இவ்வெள்ளப்பெருக்கில் தூண்டில் போட்டால்தரமான ஹைக்கூக் கவிதைகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை தான், இவ்வகைக் கவிதைகளை எழுதுவோரை ஊக்கப்படுத்தினால்குற்றமில்லை என்கிற கருத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது.

      ‘ஹைக்கூ 500’ எழுதியுள்ள கவிஞர் ரவி, ஹைக்கூ உலகிலேயே சுற்றுலா வந்து கொண்டிருப்பவர். அவருடைய இந்நூல்,படங்களுக்கு எழுதப்பட்ட ஹைக்கூக்களைக் கொண்டிருக்கிறது. கவிதைகள் நுண்மையன, படங்கள் படிவமயன, சொற்களால்ஆகிய கவிதைகள் அவற்றைக் கடக்கும்போது சிறகு விரித்து உயர்ந்து விடுகின்றன. ஏற்கெனவே வரையப்பட்டுள்ள படத்திற்குள்ஹைக்கூ வரும்போது ஹைக்கூ மிஞ்சுமா? படம் மிஞ்சுமா? என்னும் கவலை எழவே செய்யும்.

படங்கள் ஒருவகையில் கவிதையை வரம்புக்குள் கொண்டுவர எத்தனிப்பதால் கவிதை தருகிற உணர்வு, உண்மை, கற்பனை,அனுபவ எல்லைகளைச் சுருக்கிவிடும் நிலை ஏற்பட்டுக் கலை தோல்வி கண்டு விடும். எனவே, படங்களுக்குள் கவிதைஎழுதுவதோ, கவிதைகளுக்குள் படங்கள் வரைவதோ, நன்கு கருதிப் பார்த்துச் செய்யப்பட வேண்டும். ஓவியங்கள் கூட,கோடுகளைக் கடந்து, வடிவம் இழந்த நிலையில் முழுமையை நோக்கி விரியும் போது அம்முயற்சி கலையின் உச்சத்தைத்தொடுகிறது என்று சொல்லலாம்.

கவிதைகளில் சொந்த அனுபவங்களை பாடுவதுபோல், பிறர் சொன்ன வகையில் பாடும்போது, அக்கவிதையில் விவரங்களும்கவிதை நியமங்களும் இருக்கலாம்.  உயர் உண்மையின் ஒளிவீச்சு மங்கலாகத் தான் இருக்க முடியும்.

‘ஹைக்கூ 500’ நூலில் இரவியின் முயற்சி தோற்றுப் போகவில்லை, ஒன்றிரண்டு ஹைக்கூக்களில் அசல் ஹைக்கூவின்சாயல் நன்கு தென்படுவதைக் கண்டேன்.

அசைக்காதே காலை
      கொலு சொலியில்
      கூடல் தடைபடும் வண்டுகளுக்கு!

இக்கவிதையில் நம் சங்கக் கவிதையின் சாயலும் நன்கு வெளிப்பட்டிருக்கிறது.

தலைவியைப் பிரிவுக்குப் பிறகு காணத் தேரில் திரும்பி வரும் காதலன், வழியில் ஆண்மானும், அதன் துணையானபெண்மானும் கூடிக் காதல் இழைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். தேரில் கட்டப்பட்டுள்ள மணியின் ஓசை, அம்மான்களின்இன்ப உறவுக்கு இடையூறு செய்து விடுமோ என்று கருதி, ஒலிக்காதபடி தேரின் மணியைக் கட்டி வைக்கும்படி பாகனிடம்சொல்கிறான். இக்கவிதையில் மையஇழையில் இரவியின் கவிதையை இணைத்துப் பார்க்க முடியும்.

இந்த ஹைக்கூவைப் படித்த போது, என் நினைவில் சிய்யோ நீ / (1703-1775) என்னும் பெண் கவிஞரின் ஹைக்கூ பளிச்சிட்டது.

காலை நேரத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க இவர் கிணற்றருகே சென்ற போது, ‘காலைக்கீர்த்தி (Morning Delight)என்று சொல்லப்படும் கொடி, தண்ணீர் இறைக்கப் பயன்படும் வாளியைக் கைப்பற்றிப் படர்ந்திருந்தது. கொடியைக் கழற்றி வாளியைஎடுக்க மனம் வரவில்லை கவிஞருக்கு. இரக்கம் ததும்பிய உள்ளம், தண்ணீர்த் தேவைக்கு என்ன செய்தது! அண்டை வீட்டாரிடம்தண்ணீர்ப்பிச்சை கேட்டது!

                “A Morning Glory having taken
                the well bucket, I begged for water”

இங்கு சிய்யோ ரீயின் உணர்வு, காலைக்கீர்த்தி, தண்ணீர்வாளி, காலை நேரம், எல்லாமாகப் படிமவளத்தோடு ஒரு ஹைக்கூவைநமக்குத் தந்துள்ளன.

‘இலை கருகாமல்
காக்கும்
கல்லின் ஈரம்’

இரவியின் தரமான ஹைக்கூவாக எனக்குத் தென்பட்ட மற்றொரு கவிதை இது. இங்கு ர.சு.  நல்லபெருமாள் என்பவர்எழுதியுள்ள கல்லுக்குள் ஈரம் என்ற சிறந்த புதினத்தை நினைத்துக் கொள்கிறேன். கல்மனம், உருகும் காட்சி இக்கவிதை! மழை தந்தஈரமா? மனம் தந்த ஈரமா? எப்படியோ கல் தன்மேல் விழுந்த இலையைக் கருகாமல் காக்கிறதாம். மரணம், அந்த இலையைத்தொடலாம், ஆனால் சுட முடியாது.

இத்தகைய நுட்பமும், அழகும், உணர்வும் உள்ள ஹைக்கூக்களை எழுத இரவியால் முடியும். ஒதுக்க வேண்டியவற்றைஒதுக்கித் தள்ளிவிட்டு, வெற்று மதிப்பீடுகளுக்கு உள்ளத்தைப் பலிகொடுத்து விடாமல் உண்மையான ஹைக்கூவை நோக்கி இரவிபயணம் தொடர  வாழ்த்துகிறேன்.



ஈரோடு தமிழன்பன்



கருத்துகள்