ஞாயிறு, 4 நவம்பர், 2018

சிந்தனைக்கு வித்திடும் ஒளித்துளிப்பாக்கள் புதுவைத் தமிழ்நெஞ்சன் செயலர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம் அமைப்புச் செயலர், புதுச்சேரி படைப்பாளர் இயக்கம்


சிந்தனைக்கு வித்திடும் ஒளித்துளிப்பாக்கள்

புதுவைத் தமிழ்நெஞ்சன்
செயலர், புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம்
அமைப்புச் செயலர், புதுச்சேரி படைப்பாளர் இயக்கம்

******

பன்னெடுங்காலத்திற்கு முன் சீன நாட்டில் நண்பர் இருவர் இருந்தனர். அதில் ஒருவர்,  யாழ் வகை ( ஹார்ப் ) இசைக்கருவியை மீட்டுவதில் வல்லவர். மற்றவர் அவரின் இசையைக் கேட்டு மகிழ்வதில் சிறந்தவர்.

ஒரு மலையைக் குறித்துப் பாடினாலோ அல்லது யாழை இசைத்தாலோ “எனக்கு முன் மலையே வந்து நிற்கிறது, அதிலே அருவி ஊற்றெடுக்கிறது, மரங்கள் தலையாட்டுகிறது, உன் இசையைக் கேட்டு மலைத்தேன்” என்பார்.

நீரைக் குறித்து யாழிசை ஒலித்தால் “ஆகா! நீரோட்டமே ஓடுகிறது, நுரைப்பூவைச் சூடிக்கொண்டு அலைப்பெண் ஆர்ப்பரிக்கிறாள்” என்று வியப்பார்.

இப்படியாய்... நண்பரின் இசைக்கு உயிரோட்டமானவர் உடல்நலக்குறைவால் இறந்து போனார். இதனைத் தாங்க முடியாத இசைஞன், யாழ்  நரம்பை அறுத்துப் போட்டான். இசையின் உயிரின்பம் அதனை மீட்டுபவரிடமில்லை. அதனைச் சுவைக்கின்ற மனம் கொண்டவரிடமே இருக்கிறது .

இப்படியானதுதான் துளிப்பா. எழுதுபவனிடம் தொடங்கி அது படிப்பவனிடம் முழுமை அடைகிறது. இசையில் மயங்கிக் கை தட்டும் போது அது மதிக்கப்படுகிறது. அதுபோல துளிப்பா, படைத்தவனை விட படிப்பவனிடமே  போற்றப்படுகிறது.

பணம் என்பது, நம்மிடம் எப்படிப் பயன்பட்டது, பயன்படுகிறது என்பதைப் பொறுத்தே அதனின் மதிப்பு அளவிடப்படுகிறது அதுபோல் தான் துளிப்பாவும்.

மதுரை என்றால் மீனாட்சி என்பார். எனக்கு நினைவுக்கு வருபவர்

இரா. மோகன் ஐயாவும், இரா. இரவியும் தான். இவர்கள் இலக்கியத் தடத்தை எங்கும் பதிக்கின்ற இருவர்.  ஒருவருள் ஒருவர் மனத்துள் புதைந்திருப்பர். பிரிக்க முடியாதது எதுகையும், மோனையும். சேர்ந்தே இருப்பது தமிழும், இனிமையும் போல இரா. மோகனும்  இரா.இரவியும் என்றால் மிகையில்லை.

இரவி என்றால் பரிதி. ஆனால் காற்று போன்றவர். தென்றலாய், கொண்டலாய், வாடையாய், புயலாய், சூறாவளியாய் மாறுவார் சூழலுக்கு ஏற்ப.  அவருள் இருக்கின்ற ஆற்றலை, பரிதி ஆற்றலைப் போல அளவிட முடியாது.

மொழிப்பற்றும், இன உணர்வும், உரிமை வேட்கையும் மிகக் கொண்டவர் .மாந்தநேயம் என்பதைவிட உயிர் நேயம் மிக்கவர். தக்கவர். அறிவன்பர், பகுத்தறிவாளர், தூயவர், பண்பாளர், நேர்மையர், நல்வினையாளர், துளிப்பாச் செம்மல் இரா.இரவி.

 ஐக்கூ முதல்வன் பாசோ என்பதைப்போல துளிப்பா முதல்வன்  இரா. இரவி தான். புதுவைத் தமிழ்நெஞ்சனும், கன்னிக்கோயில் இராசாவும் தொகுத்தளித்த “துளிப்பா தேனடை” என்ற நூலில் இதுநாள் வரை வந்த துளிப்பா நூல் பட்டியல்களை பதிவிட்டோம்.  அதில் ஆய்வேடு, பரிசு பெற்ற விளத்தம் இப்படித் துளிப்பா தொடர்பாக அனைத்துச் செய்திகளையும் ஆண்டிற்கு ஆண்டு சேர்த்து ஐந்து பதிப்புகள் வெளிவந்துள்ளது. இந்த நூலே துளிப்பா தொடர்பான அனைத்து செய்திகளையும் கொண்ட முதல் நூல். இதில் நூல் பட்டியலில் அதிக துளிப்பா நூல் வெளியிட்டவர் துளிப்பாச் சுடர் இரா. இரவி என்று இருக்கிறது.

எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டோடு தொய்வின்றி தொடர்வினை ஆற்றுகின்ற செயல் மறவர் இரவி. அலைபோல ஓயாதவர். ‘கொடுத்துச் சிவந்த கைகள்’ என்பார்கள்  இரா . இரவி எழுதிச் சிவந்த கைகளை உடையவர்.

துளிப்பாவில் எளிமையே வலிமை என்பது நூறு விழுக்காடு உண்மையாகும். இவரின் துளிப்பாவிற்கு உரையோ, அணிந்துரையோ தேவையில்லை. ஒளிவுமறைவின்றி உள்ளதை உள்ளபடி, உணர்ந்தபடி சொல்லிவிடும் சிந்தனை ஆற்றல் பெற்ற, துளிப்பா அருவி இரவி.

ஆடுகிறார், பாடுகிறார், நடிக்கிறார், பேசுகிறார், எழுதுகிறார் இப்படி எத்துறை ஆனாலும் அத்துறையில் முத்திரை பதிக்கின்ற வித்தகராய் இருக்கின்றார் இரவி . ஒளிப்படத்திற்குத் துளிப்பாப் போட்டி அறிவித்தவுடன் முதன்முதலில் எழுதியவர் இவர்தான். எந்தத் தலைப்பு என்றாலும், படம் என்றாலும், உடனே மனச்சுனையிலிருந்து  பா ஊற்றெடுத்து தாகம் தீர்க்க ஓடிவரும். நம்மை நாடி வரும். தேடிவரும்.

மெட்டுக்குப் பாட்டு எழுதுவதைப் போல ஒளிப்படத்திற்கு துளிப்பா எழுதித் தொகுப்பாக்கி இருக்கிறார். போட்டி வைத்த எனக்கே பரிசு தந்திருக்கிறார் அணிந்துரை எழுதச்சொல்லி...இரா.இரவியின் பாட்டிற்கு ஏன் அணிந்துரை?  அவரைப்போலவே அதுவும் எதையும் மறைத்து வைக்காமல் முகில் மூடா முழுமதியாய் நம்மை தன் வயப்படுத்துகிறது. அருவி போல நம் மனத்தில் விழுகிறது இவரின் துளிப்பா.

காளமேகப் புலவர், “உம்” என்று தொடங்கி  “அம்” என்று சொல்லி  முடிப்பதற்குள் பாவியற்றித் தந்திடுவாராம். அப்படி எந்தத் தலைப்பு ,எந்த ஓவியத்திற்கு ஒளிப்படத்திற்கு என்று சொன்னாலும் முதல் தவணையாக 5 துளிப்பாவை பதிவிட்டுவிடுவார். ஆம் துளிப்பா காளமேகம் இரவி.

துளிப்பா நூற்றாண்டிற்காக ஒளிப்படத் துளிப்பாப் போட்டி ஒன்றை முகநூலில் பதிவிட்டேன். நாளும் ஒரு ஒளிப்படம். நிறைய பேர் கலந்து கொண்டனர். ஆனால் எல்லா படத்திற்கும் துளிப்பா எழுதியவர் இரவி மட்டும்தான்.

அரிய, எனக்குப் பிடித்த ஒளிப்படங்களை எல்லாம் அதில் பதிவிட்டிருந்தேன். ஒவ்வொரு படத்திற்கும் அதில் பின்னூட்டத்தில் ஒன்று தானே எழுத வேண்டும் இரவி மட்டும் ஏன் ஒன்றுக்கு மேற்பட்டு எழுதுகின்றார் என்றெல்லாம் கேட்டிருந்தனர்.

சிந்தனையைத் தூண்டுவதே துளிப்பா. அப்படியானால் இரவிக்கு நிறைய சிந்தனை தோன்றி இருக்கின்றது. ஊற்று போல சுரக்கின்றது .அதைத் தடை செய்ய விரும்பாமல் விட்டதினால் இன்று ஒளிப்பூக்கள் என்கிற துளிப்பா நூலானது கருவாகி, உருவாகி பெருமை சேர்க்கிறது. அது என்ன துளிப்பாவில் ஒளிப்பா?

ஐக்கா என்பது ஓவியத் துளிப்பா. ஓவியம் வரைந்து அதற்காக எழுதப்படும் துளிப்பாவாகும். அப்படியெனில் ஒளிப்படத்திற்குத் துளிப்பா எழுதினால் அது ஒளித் துளிப்பா தானே! இந்த  ஒளித் துளிப்பாக்களில், ஒளி நகைத்துளிப்பாவும் இருக்கிறது.

ஒளித் துளிப்பா,
      ஒளி நகைத் துளிப்பா,
            ஒளி இயைபுத் துளிப்பா,
            ஒளி  உரைத் துளிப்பா,
            ஒளி நகை உரைத் துளிப்பா,
      ஒளி நகை இயைபுத் துளிப்பா
என்று வகைப்படுத்தலாம்.

“துளிப்பாவோடு ஒளிப்படமும்
      பளீரென மின்னிடில்
      ஒளித்துளிப்பா வாகுமே!”

மற்ற வகையிலும் இவர்  துளிப்பாவை எழுதலாம். இந்த ஐந்து பாடலில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் கூட எழுதி இருக்கலாம்.

நான் பணி செய்த அரசு மருந்தகத்தில் ஊதியம் பெற காசாளரிடம் கையொப்பம் போட்டுவிட்டுக் கையை நீட்டினேன். “பீச்சக்கையை (இடது) நீட்டாதே! சோத்துக் (வலது)  கையை நீட்டு“  என்றார். “இரண்டு கையும் என் கைகள்தானே!” என்றேன். “நான் பீச்சக்கையில் கொடுக்க மாட்டேன்” என்றார். ” நான் சோத்துக்கையில் வாங்க மாட்டேன்” என்றேன். அவர் மிசை மீது ஊதியப் பணத்தை வைத்து விட்டார். நான் பீச்சக்கையில் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். நம் உடலில் இருக்கும் கைகளிலே இப்படி வேறுபடுத்திக் கூறுபோடும் இந்த அறியாமையை அழகாய்ச் சொல்கிறார் சிந்தனைப் பாவலர்  இரவி .

வலது கால், இடது கால்
            வேண்டாம் வேற்றுமை
            இரண்டும் நம் காலே!

இப்படி அணிந்துரை எழுதிக் கொண்டிருக்கையில் பெண் அழைப்பிற்காக மணமகளை வரவேற்று,

” மணமகளே! மருமகளே! வா! வா!
      உன் வலது காலை எடுத்து வைத்து வா! வா!”
என்று பாடல் ஒலித்தது.

நிப்பானில் மாணவர்களுக்குப் பள்ளியில் இரண்டு கைகளாலும் எழுதக் கற்பிக்கின்றனர். ஆனால் நாம் மட்டும் தான் இப்படி வலது, இடது என்று இடையூறு செய்து கொண்டிருக்கிறோம்,

தேசத்திற்குச் சோறு போட்ட
       உழவனை
            கண்டுகொள்ளவில்லை தேசம்

உழவனின் கண்ணீர் கூட காய்ந்து போனது. வயலில் தண்ணீர் இன்றி நிலம் வெடித்ததுபோல.. உழுதுண்டு வாழ்பவன் அழுதுண்டு சாவதா? உழுநிலத்தைக் கரம்பாக்கிப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மீத்தேன், நியூட்ரினோ, ஐட்ரோகார்பன் எடுக்க நடுவணரசு கரவாகவும், சூழ்ச்சியாகவும் திட்டமிட்டுச் சட்டம் இயற்றுகிறது. அட்சயப் பாத்திரம் திருவோடானது உழவனின் தற்கொலை என்று நமக்குச் சுட்டுகிறார் தலையில் குட்டுகிறார்.

தமிழ் நிலத்தைப் பாலையாக்கவும், ஈழத்தில் சிங்கள குடியேற்றம் போல வடநாட்டான்கள் 80 இலக்கம் பேர்கள் இந்த நான்கு ஆண்டுக்குள் குடியேறி இருக்கின்றனர்.

கேரளாவில் குடியுரிமை சான்று கேட்டால் 15 ஆண்டுகள் கேட்கின்றனர். தமிழகத்தில் வந்து இறங்கிய உடனே குடியுரிமை கிடைத்து விடுகிறது.

தமிழ் நாட்டின் ஒரு பகுதியில் செளகார்பேட்டை இருந்தது. இன்று செளகார்பேட்டையாய் தமிழ்நாடு மாறிப்போனது. அதனால்தான் சாதி சொல்லி, மதம் சொல்லி, இந்து என்று தமிழனைப் பிரித்து ஆரிய நரிகள் உள் நுழைந்து  இராசா வேடம் போட்டு ஊளையிடுகின்றன.

பீட்டாவால் வந்தது
            குளிர்பானங்களுக்கு
      ஆப்பு

என்று நம் இளநீர், நுங்கு, மோர், நீராகாரம், வெள்ளரிப்பிஞ்சு, பனஞ்சாறு என தமிழகக் குளிர்குடிப்புகளுக்கு மீட்பு தருகிறார். நம் உயிருக்குக் காப்பு செய்கிறார்.தடைசெய்யப்பட்ட தொழிற்சாலைகள், மற்ற மாநிலங்கள் எதிர்த்தத் திட்டங்களை, தமிழ் நிலத்தில் கொண்டுவந்து ,மண்ணை ,நீரை, காற்றை மாசுபடுத்துகின்றன. தோல் தொழிற்சாலை, இறால் பண்ணை, கூடங்குளம், ஸ்டெர்லைட், சாயத் தொழிற்சாலை இப்படியாக....

குளிர் குடிப்புகள் என்ற பெயரால் நஞ்சை நம் பிஞ்சுகளுக்கு வாங்கித் தருகிறோம் .குளிர் குடிப்பு என்பது தவணை முறை தற்கொலையாகும். உடல்நலத்திற்குக் கேடு பயக்கும் வேதியியல் பொருட்களைச் சேர்த்து சுவையும், மணமும் ஊட்டி கூத்தி, கூத்தன்களை நடிக்கவிட்டு  நம்மை ஏய்த்து மாய்க்கின்றனர். நடிக்கின்ற யாரும் அந்தக் குளிர்குடிப்பைக் குடிப்பதில்லை.அயலகக் குளிர்குடிப்பான பெப்சி, பேண்டா, கொக்கோ கோலா, ஸ்பிரிட் எதிராகப் போர்க்குரல் எழுப்புகிறார் துளிப்பாப் புயல் இரவி.

ஊடல் தகர்த்து
            காதலரை  இணைக்கும்
            குடை

என்கிறார். உண்மை என்ன என்றால் காதலியைப் போல மழையும் இனிமையானதுதான். ஊடல் மிகும் முன் கூடல் வந்துவிட வேண்டும் அதுதான் காதலின்பம். குடை காதல் வள்ளல் ஆகும் .

தமிழ் மொழி மறந்து, அயல் மொழி கற்று, தமிழன் என்பதை மறந்து இந்தியனாய், திராவிடனாய்  ஆட்சியில், அதிகாரத்தில், பிற இனத்தவர். தமிழகத்தில் தமிழன் இரண்டாம் தர குடிமகன். ஆனால் எந்தவிதமான இனமான உணர்வும் இன்றி விழிமூடி ஆழ்துயிலில் இருக்கும் தமிழனை,

தமிழன் போலவே
      தூங்கியது போதும்
            விழித்திடு அணிலே!

என்கிறார் இனமானப் பாவலரான துளிப்பாக் கதிர் இரவி.

பறக்க மறந்த கறிக்கோழியாய் நம்மை ஆக்கி வைத்திருக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.  கூழ் குடித்தோம். உப்பில் பல் தேய்த்தோம். “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” ஒளவையை மறந்ததினால் இன்று பெப்சடொன்ட், கோல்கேட். சிறுதானியம் கலப்பு உணவு உண்டோம். சாமை, வரகு, குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா என்று “களிறு மாய்க்கும் கதிர் கழனி” என்று யானையே மறைக்கும் அளவு நெல் விளைந்திருந்த தமிழ்நிலத்தில் வரப்புயரமே ஆன  ஐ.ஆர் எட்டு நெல்.

வாழ்க வளமுடன் என்பது தவறு. வாழ்க நலமுடன் என்பதே உண்மை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா ? விறகடுப்பில், பானையில் சோறாக்கினால் அதன் சுவையும் வளி அடுப்புச் சமையலும் ஒன்றாகாது. உண்டால்தான் உண்மை புரியும். தெரியும்.

ஒவ்வொரு பாவகையும் தனக்குரிய இடத்தை இலக்கியத் தடத்தில் நிலைப்படுத்திக் கொள்ளும். அப்படித் தன் இடத்தை இந்திய துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே நல்ல  விளைச்சலை இத்துளிப்பா கண்டிருக்கிறது.

துளிப்பா உலகில் முடி சூடிய மன்னனாய், மதுரைக்கு மட்டும் அல்லாமல் இத்தமிழ் கூறும் நல்லுலகிலும் வலம் வருகிறார்.

அழகியலை மட்டும் பாடுவதற்கானது என்ற நிலையை மாற்றி மக்களுக்கானதாய் இத்துளிப்பாவைத் தன் வாளாய், வேலாய் ஏந்தி இருக்கிறார். நிகழ்காலச் சிக்கலைத் தன் துளிப்பாவின் மூலம் சொல்லி இருக்கிறார் துளிப்பாத் தென்றல் இரவி.

சாமுராய் வீரன் போல எதற்கும் அணியமாயிருக்கிறார். ஒரு கையில் அமைதிக்கான ஆலிவ் இலையையும், இன்னொரு கையில் துமுக்கியையும் ஏந்தி இருக்கும் வீரனைப் போலக் காட்சியளிக்கிறார் இரவி.

உரிய காலத்தில் இந்த ஞாலம் போற்றும் செயலைச் செய்து முடிக்கவேண்டும் என்கிற வினையாளர், நல் துணையாளர், தமிழ்ப் பணியாளர்.

பரிதி இல்லாமல் உலக உயிர்கள் இல்லை. அதுபோல இரவி இல்லாமல் துளிப்பா வரலாறில்லை. துளிப்பா வரலாற்றில் பத்தியல்ல, பக்கமல்ல அத்தியாயம் ஒன்றைத் தன்னிடத்தே தக்க வைத்துள்ளார்.

புதுச்சேரியில் மூவடி, மின்மினி, துளிப்பா நாளிதழ் இணைந்து நடத்திய துளிப்பா நூற்றாண்டு விழாவில் தன் துளிப்பா மூலம் அனைவரையும் தன்வயப்படுத்தியவர்.

புதுச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிப் பேரவையில் நாளும் மூன்று துளிப்பாவை 1200 மாணவிகளிடம் கு.அ.தமிழ்மொழி சொல்லி வந்தார். அதில் இரவியின் துளிப்பாவும் இருந்ததென்பது மகிழ்வளிக்கிறது.

தன் “ஹைக்கூ உலா” என்கிற நூல் மாணவர் பொதுநலத் தொண்டியக்கத்தின் துளிப்பா படைப்பாளர் விருதைப் பெற்றுள்ளது என்பது மகிழ்வான செய்தி.

இரவியின் சிந்தனைத் துளிப்பாக்கள் பெருவெள்ளமாகி, தமிழ்நிலம் மட்டுமின்றி, உலகெங்கும் ஓடுகிறது. நல்லோர் உறவை நாடுகிறது.தேடுகிறது. அதனால் தமிழ்நெஞ்சத்தில் இன்பம் கூடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது