இடைவெளி! கவிஞர் இரா. இரவி.



இடைவெளி!
கவிஞர் இரா. இரவி.
******
தலைமுறை இடைவெளி பெரிதாகி விட்டது
தலைவரை குடும்பத்தவரை மதிப்பதில்லை இப்போது !

மாதா பிதா குரு மதிப்பதில்லை இப்போது
மனம் போன போக்கில் இளையதலைமுறை !

காது கொடுத்து கருத்தைக் கேட்பதில்லை
கண்டபடி பேசிடும் இன்றைய இளையோர் !

பணத்தின் மதிப்பை அறியவில்லை இவர்கள்
பணத்தை தண்ணியாக செலவழித்து வருகின்றனர்!

இரவு பத்து மணிக்கெல்லாம் தூங்கிடுவோம் அன்று
இரவில் விழித்து பகலெல்லாம் தூங்குகின்றனர் இன்று !

தெருவிற்கு ஒரு தொலைபேசி இருந்தது அன்று
தனி நபருக்கு பல அலைபேசி ஆனது இன்று !

ஊதியம் குறைவென்றாலும் நிம்மதி இருந்தது அன்று
ஊதியம் மிகைஎன்றாலும் நிம்மதி இல்லை இன்று !

நவீனம் இல்லாவிட்டாலும் இன்பம் இருந்தது அன்று
நவீனம் இருந்தாலும் இன்பம் இல்லை இன்று !

பெற்றோரை நன்கு மதித்து வாழ்ந்தனர் அன்று
பெற்றோரை மதிப்பதே இல்லை இன்று !

அண்ணன் தம்பி உறவு அன்பானது அன்று
அண்ணன் தம்பி இன்றி தனியாளானது இன்று !

ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர் அன்று
ஒரேயறையில் அலைபேசி விளையாட்டு இன்று !

வானொலியில் பாட்டு கேட்டு மகிழ்ந்தனர் அன்று
வானொலி மறந்து தொலைக்காட்சித் தொல்லை இன்று !

நல்ல தமிழில் நாளும் பேசிவந்தனர் அன்று
நாவில் தமிங்கிலமே தவழ்கின்றது இன்று !
.

கருத்துகள்