வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்! கவிஞர் இரா. இரவி
வாழ்கிறார் திட்டங்களில் கலைஞர்!
கவிஞர் இராஇரவி
என் உயிரினும் மேலான உடன்பிறப்பே
என்று உச்சரித்து சகோதர உணர்வு தந்தவரே!

சமத்துவபுரம் சமைத்து சாதியை ஒழித்து
சகோதரத்துவம் வளர்த்த சமத்துவ சிந்தனையாளரே!

உழவர் சந்தை எனும் திட்டம் தொடங்கி
உழவர்களின் உள்ளம் மகிழ்ந்திட வைத்தவரே!

கைம்பெண் மறுவாழ்வு திட்டம் தொடங்கி
கைம்பெண் வாழ்வில் ஒளி வழங்கியவரே!

சங்கத்தமிழை சாமானியருக்கும் சமர்ப்பித்தவரே
சங்கநாதம் முழங்கி தமிழை வளர்த்தவரே!

உலகப்பொதுமறையான ஒப்பற்ற திருக்குறள்
உலகம் முழுவதும் பரவிட வழிவகுத்தவரே!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டுமென
அர்ச்சகர் பயிற்சி அளித்திட செய்தவரே!

கூட்டணிக்கு டில்லியே தேடிவர வைத்தவரே
கூட்டாட்சி முறைக்கு விதைகள் விதைத்தவரே!

கொண்ட கொள்கையின் குன்றென நின்றவரே
கொடுங்கோல் சிறைக்கும் அஞ்சாது எதிர்த்தவரே!

உதயசூரியன் சின்னத்திற்கு ஐந்துவிரல் காட்டியவரே
உண்மையில் ஐந்துமுறை முதல்வரானவ
ரே!

அரசியலுக்கு அழைத்து வந்தவர் பட்டுக்கோட்டை அழகிரி
அவர் நினைவாக மகனுக்கு பெயர் இட்டவரே!

பெரியாரின் கொள்கையையும் அண்ணாவின் கனவையும்
பெருமளவு நிறைவேற்றி வைத்த நிறைகுடமே!

இருக்கும்வரை உம்மைப்பற்ரி கவிதை எழுதவில்லை
ஏன் தெரியுமா? ஈழத்தமிழர் விசயத்தில் அழுத்தம் போதவில்லை!

அழுத்தமாக நெஞ்சில் பதிந்த வருத்தமே காரணம்
அது தவிர மற்ற எல்லாம் சிறப்புத்தான் உம் சாதனைகள்!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்