சிங்கப்பூர் தியாக இரமேசு அவர்களின் 50ஆம் ஆண்டு பொன்விழா மலர் நிகழ்வும் நெகிழ்வும் ! மலர் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.





சிங்கப்பூர் தியாக இரமேசு அவர்களின்
50ஆம் ஆண்டு பொன்விழா மலர்
நிகழ்வும் நெகிழ்வும் !

மலர் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 

வெளியீடு : நிவேதிதா பதிப்பகம், 
10/3, வெங்கடேசு நகர் பிரதான சாலை, விருகம்பாக்கம், சென்னை-92.  பேச : 89393 87276

******
நூலின் முகப்பு அட்டை, பின் அட்டை வண்ணப்படங்கள், உள்அச்சு, கட்டமைப்பு யாவும் மிக நன்று.  பதிப்பித்த நிவேதிதா பதிப்பகத்திற்கு முதல் பாராட்டு. இம்மலரை மிகச் சிறப்பாக தொகுத்திட்ட அருள்நிதி சரசுவதி எத்திராசு, கவிஞர் பா. திருமுருகன், கவிஞர் க. தங்கமணி ஆகியோருக்கு இரண்டாவது பாராட்டு.

நூலின் முகப்பு அட்டையில் பொன்விழா இணையர் வண்ணப்படமும் மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு பிடித்த குறள்களில் ஒன்றான

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
      உள்ளத் தனைய துயர்வு.       குறள் 595.

மிகப்பொருத்தமான திருக்குறளை அச்சிட்டது சிறப்பு.  பொன்விழா நாயகர் திரு. தியாக ரமேசு அவர்கள் முகநூல் நண்பர்.  தொடர்ந்து எழுதி வருபவர்.  நேரடியாக சந்தித்தது இல்லை.  அலைபேசியில் பேசி இருக்கிறோம்.  கவிஞர் ஏகலைவன் மூலம் அறிமுகமாகி அவர் பதிப்பித்து தியாக ரமேசு அவர்கள் எழுதிய ‘மகரந்தச்சேர்க்கை’ என்ற ஹைக்கூ நூலிற்கு நான் எழுதிய விமர்சனம் இம்மலரில் பக்கம் 138, 138ல் இடம் பெற்றுள்ளன.

  புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர் கவிதா சவகர் கட்டுரையும் நன்று.  சிங்கப்பூரின் பெருமைகளில் ஒன்றாகி விட்டவர் தியாக ரமேசு.  50 ஆண்டு வாழ்நாளில் அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தி உள்ளார் என்பதை பறைசாற்றும் விதமாக மலர் உள்ளது.  நண்பர்களும் உறவினர்களும் பொன்விழா நாயகருடன் நடந்த நிகழ்வுகளை நெகிழ்வோடு பதிவு செய்து உள்ளனர்.

      வாழும் காலத்திலேயே ஒரு படைப்பாளிக்கு சூட்டப்பட்ட வைர மகுடமாக இம்மலர் உள்ளது.

      முதல் பக்கத்திலேயே “தோழி மனைவியானால் வாழ்க்கை இதம் ; மனைவி தோழியானாளல் வாழ்க்கை சங்கீதம்” – தியாக இரமேசு. 

இந்த வைர வரிகளை இணையர்கள் அனைவரும் மனதில் கொண்டு வாழ்ந்தால் மணவிலக்கு என்ற இன்னல் வரவே வராது.  தாத்தா பாட்டி, அப்பா அம்மா, சகோதர சகோதரிகள் என குடும்பத்தாரின் புகைப்படங்கள் மட்டுமன்றி கவிமாலை இலக்கியக் குடும்பத்தின் படமும் இடம்பெற்றது சிறப்பு.

      பொன்விழா நாயகர் தியாக ரமேசு அவர்கள் அப்பாவின் வரலாற்றையும் அப்படியே எழுதி உள்ளார்.  தந்தைக்கு சிறந்த மகனாக உள்ளார்.  தந்தையின் ஆற்றலை உற்றுநோக்கி உணர்ந்து உள்ளார்.  தந்தை, கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர்.  ஆனால் குழந்தைகளை கடவுளை வணங்க வேண்டாம் என்று வற்புறுத்தியதில்லை என்பதையும் பதிவு செய்துள்ளார்.

      தமிழை ஆட்சிமொழியாக்கிய ‘சிங்கைச்சூரியன் தேசப்பிதா’ :
“லீ குவான் யூ” அவர்களுக்கு எழுதிய கவிதை நன்று. 

“இதயத்தை இச்சைக் கொள்ளச் செய்யும் பச்சைத் தீவின் மொத்த இயக்கத்துக்கு மிச்சமில்லாமல் சக்தியைத் தரும் எங்கள் சிங்கைச் சூரியன் புகழ் வாழிய பல்லாண்டு” – தியாக ரமேசு.

தமிழுக்குத் தாலாட்டு!
      தமிழே தமிழே 
      தேனாய் இனிக்கும் தமிழே
      மூச்சே பேச்சே முத்தமிழே 
      முந்திப்பிறந்த பழந்தமிழே!

தமிழ்ப்பற்றை பறைசாற்றும் விதமாக கவிதை உள்ளது. பாராட்டுக்கள். பொன்விழா நாயகரின் அம்மா : ஞானசவுந்தரி அவர்களின் பாசமடலும் நூலில் உள்ளது.  தாய்மாமா : நா. ஞானசூரியன் பாராட்டும் உள்ளது.  திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்தும் உள்ளது.  

கோவை அருகே உள்ள கோதவடியில் பிறந்து உலகப்புகழ் அடைந்துள்ள இனியவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் வாழ்த்தும் சிறப்பாக உள்ளது.  உலகத்தமிழ்ச் சங்கத்தின் கருத்தரங்கில் சந்தித்த இனிய நண்பர் புதுமைத்தேனீ மா. அன்பழகன் வாழ்த்துக் கவிதை நன்று. முகநூல் நண்பர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் வாழ்த்துரையும் சிறப்பு.

      ஈரோடு புத்தகத் திருவிழாவை மாநாடு போல நடத்தி அறிவொளி ஏற்றிவரும் இனிய நண்பர் த. சுடாலின் குணசேகரன் அவர்களின் பாராட்டும் உள்ளது.  ஈரோடு புத்தகத் திருவிழாவின் அறிவிப்பை சிங்கப்பூர் தமிழ் ஆர்வலருக்குச் சேர்க்கும் பணியினை செய்து வருபவர் தியாக ரமேசு என்று பாராட்டி உள்ளார்.  மாமனார் தொடங்கி பள்ளிக்கால நண்பர்கள் வரை பலரின் பாராட்டும் நூலில் உள்ளன.  இவற்றை ஆவணப்படுத்தி அருமையாக தொகுத்து பகுத்து வகுத்து மலராக்கிய தொகுப்பு ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.

      தியாக ரமேசு அவர்களின் பேரன் பேத்தி வரை இவரது ஆற்றலை, உழைப்பை உணரும் வண்ணம் ஆவணப்படுத்தி இருக்கிறீர்கள்.  பாராட்டுக்கள்!

      தமிழகத்திலிருந்து பிழைப்பிற்காக சிங்கப்பூர் சென்றவர் தியாக ரமேசு அவர்கள். தன் பிழைப்பு, தன் வருமானம். தன் குடும்பம் என்று சுருங்கி விடாமல் அதையும் தாண்டி தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் உழைத்த உழைப்பின் விளைவே இம்மலராகும். 

 கவிமாலை என்ற இலக்கிய அமைப்பில் இணைத்துக் கொண்டு கவிப்பணி தமிழ்ப்பணி செய்து வருவது சிறப்பு.  தமிழகம் மட்டுமன்றி சிங்கப்பூர் அறிஞர்களும் பாராட்டி இருப்பது சிறப்பு.  அன்புமகன் வந்திய தேவன், அன்பு மகள் அபிராமி பாராட்டும் உள்ளது.

      திரைகடல் ஓடி திரவியம் தேடியதோடு நின்று விடாமல் படைப்பின் மீது ஆர்வம் கொண்டு தொடர்ந்து எழுதியும் நூல்கள் வெளியிட்டும் இலக்கிய அமைப்புகளில் இணைத்துக்கொண்டு தமிழ்ப்பணி புரிவது சிறப்பு.  சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன் அவர்களின் பாராட்டும் மலரில் உள்ளது.  

பெரியார் விருது பெற்ற முதல் சிங்கப்பூர் பெண்மணி புசுபலதா கதிர்வேலு அவர்கள் நட்பை பேணிக் காப்பவர் என்று பாராட்டி உள்ளார்.
      புகழ்பெற்ற எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், அவரது சகோதரர் புகழ்பெற்ற பதிப்பாளர் ரவி தமிழ்வாணன், நீதிபதி மூ. புகழேந்தி, எழுத்தாளர் வாசுகி கண்ணப்பன், இனிய நண்பர் வாசகன் பதிப்பகம் கவிஞர் ஏகலைவன் என பலரின் கவிதையும் பாராட்டும் மலருக்கு அணி சேர்த்து உள்ளனர். 

 பொன்விழா நாயகரின் தங்கையின் மகள் ஆர்த்தி (எ) வைசாலியின் பாராட்டும் உள்ளது.  மொத்தத்தில் மலர், தியாக ரமேசு போல புகழ்பெற்று வாழ வேண்டும் என்ற ஊக்கத்தை வாசகர்களுக்கு உணர்த்திடும் உன்னதமாக உள்ளது.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்