படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

தமிழ் இந்து பத்திரிக்கையில் முனைவர் இறையன்பு அவர்கள் எழுதிவரும்'காற்றில் கரையாத நினைவுகள்'தொடரின் மூன்றாவது பகுதி:


http://tamil.thehindu.com/opinion/blogs/article23163840.ece
 

.50 ஆண்டுகளுக்கு முன்பு, எதிர்காலத்தில் தந்தியில்லாத தொலைபேசி புழக்கத்துக்கு வரும்; அதைப் போகும் இடமெல்லாம் எடுத்துச் செல்லலாம் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்தத் தொலைபேசியில் கணக்கு போடலாம், கணினி பார்க்கலாம், மின்னஞ்சல் அனுப்பலாம், பாட்டு கேட்கலாம், பாடம் படிக்கலாம், புகைப்படம் எடுக்கலாம், புத்தாண்டு வாழ்த்து அனுப்பலாம், குறுந்தகவல் தரலாம், குரலோசைத் தகவல் அனுப்பலாம், கைகுழல் விளக்காகப் பயன்படுத்தலாம், விழிப்பு மணி நேரம் குறிக்கலாம், சங்கேத வார்த்தையால் மூடி வைக்கலாம், அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும் அனுப்பலாம், திரைப்படம் பார்க்கலாம், முன்பதிவு செய்யலாம், விளையாடி மகிழலாம், பொருட்கள் தருவிக்கலாம், அரட்டை அடிக்கலாம்.. என்று யாராவது நம்மிடம் சொல்லியிருந்தால், அவரை புத்திசுவாதீனம் அற்றவர் என்று பட்டம் கட்டிப் பரிகசித்திருப்போம்.

அன்று சாதாரண தொலைபேசியே அரிதாக இருந்தது. பணக்காரர்கள் மட்டுமே வைத்திருக்கும் சாதனம் அது. திரைப்படங்களில் தென்படும் அதிசயக் கருவி. கதாநாயகன் தொலைபேசியில் பேசுவதுபோன்று சுவரொட்டிகள் முளைக்கும். தவறான அழைப்பால் ஆணுக்கும், பெண்ணுக்கும் அத்துமீறிய சிநேகம் ஏற்பட்டதுபோல திரைக்கதைகளும் உண்டு.

பல வீடுகளில் தொலைபேசியில் பேசுவதுபோல நிழற்படம் எடுத்து மாட்டுவதும் உண்டு. உயர்பதவியில் இருப்பவர்கள் தொலைபேசியில் பேசுவதுபோன்ற படத்தை செய்தித்தாள்கள் வெளியிடுவது உண்டு.

சாமானியர்கள் அவசரமாகப் பேசுவதற்கு அஞ்சலகத்துக்குச் செல்ல வேண்டும். எதிர்முனையில் இருப்பவருக்கும் சொந்தத் தொலைபேசி இருக்காது. இருப்பவர் வீட்டில் சொல்லி அழைக்க, மனு போட வேண்டும். அவரோ அலுத்துக்கொண்டே வரவழைப்பார். அந்நியர் வீட்டில் அத்தனை செய்தியையும் பேச முடியாது. லேசில் அழைப்பு கிடைக்காது. கிடைத்தாலும் தொடர்பு நீடிக்காது. பதிவுசெய்து காத்திருப்பவர் பட்டியல் நீளும்.

7-ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதைக் காதில் வைத்த தும் அத்தனை மகிழ்ச்சி. எங்கள் வகுப்பில் ஓரிருவர் வீட்டில் மட்டுமே தொலைபேசி இருந்தது. எங்காவது வாய்ப்பு கிடைத்தால் அந்த எண்ணுக்கு சுற்றி, என்ன பேசுவது என்று தெரியாமல் தவிப்போம். அன்று தொலைபேசி இணைப்பு கிடைப்பது அபூர்வம். நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்தால் விரைவில் அளிக்கப்படும்.

1990-ல் பணியாற் றும்போதுகூட வெளியூருக்குப் பேச வசதியின்றி இருந்தது. அவசரமாக நாகையில் இருந்து நன்னிலத்துக்கு பேச மின்னல் அழைப்பைப் பதிவு செய்ய வேண்டும். சமயத்தில் மின்னலோடு இடியும் வரும். தேர்தல் நேரத்தில் மட்டும் எங்கும் பேசும் வசதி அனுமதிக்கப்படும். மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே எப்போதும் பேசும் வசதி உண்டு.

பொதுமக்கள் பேச தனியார் தொலைபேசி இணைப்பகங்கள் முளைத்த காலமொன்று உண்டு. அங்கு சாவகாசமாகப் பேசுபவரை விரைந்து முடிக்கும்படி பின்னால் இருப்பவர் நச்சரிப்பார்கள். அது கைகலப்பில் முடிவதும் உண்டு.

வயதும் தொழில்நுட்பமும்

இன்று 2 வயது குழந்தைக்கே அலைபேசி விளையாட்டுப் பொருளாகிவிட்டது. அழும் குழந்தைகளுக்கு அலைபேசியே வாயடைக்க வைக்கும் மருந்து. அதைப் பயன்படுத்தும் விதங்களை, சின்னக் குழந்தைகள் பெரியவர்களைவிட வேகமாக கற்றுக்கொள்கின்றனர். காரணம், பழுதாவதைப் பற்றி அவர்கள் பயப்படுவதில்லை. தொழில்நுட்பத் தடை குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு ஏற்படுவது இயற்கை.

அலைபேசி அறிமுகமானபோது அந்தஸ்தின் அடையாளமாக இருந்தது. நட்சத்திரங்களும், பெரும் முதலாளிகளும் மட்டுமே வாங்கக்கூடிய விலை உயர்ந்த பொருளாக அது இருந்தது. செங்கல் அளவுக்குப் பெரிதாய் இருந்த அதை சிலர் காட்டும்பொருட்டு கைகளில் ஏந்தித் திரிவார்கள். ஒரு நிமிடம் பேச ஊர்ப்பட்ட காசு.

அன்று, திரை நடிகர்களிடம் மட்டும் இருந்த அலைபேசி இன்று திரையரங்கைப் பெருக்குகிறவர்களிடமும் இருக்கும் அளவு சகஜமாகியிருப்பது மிகப் பெரிய தகவல் புரட்சி. சில நேரங்களில் சமத்துவத்தை சாதுர்யமாக செய்துவிடுகிறது தொழில்நுட்பம். அன்று வீதிக்கொரு தொலைபேசிகூட இல்லாத நிலை. இன்று ஆளுக் கொரு அலைபேசி சாத்திய மாகியிருக்கிறது.

அலைபேசி வந்த பிறகு பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மலிவு விலையில் ஊர்தியை அமர்த்தி மாநகரத்தில் பயணம் செய்ய முடிகிறது. காத்திருக்கும் நேரத்தை அது கணிசமாகக் குறைத்திருக்கிறது. பேசி நேரத்தை வீணடிக்காமல் குறுஞ்செய்தி அனுப்பிக் காசையும், காலத்தையும் மிச்சம் பிடிக்க முடிகிறது. கணினி உதவியின்றி மின்னஞ்சலைப் பார்த்து உடனடியாக பதில் அனுப்ப முடிகிறது.

அன்றாடம் நம்மை எச்சரிக்க வேண்டிய நிகழ்வுகளை மணியடித்து தெரிவிக்க ஏற்பாடு செய்யலாம். வருகிற அழைப்பில் எது முக்கியம் என்பதை, எண்ணைப் பார்த்து முடிவுசெய்யலாம்.

பயணத்தின்போது அரிய தகவல்களை காணொலியாகக் காண முடிகிறது. ஒருவர் பேசுவதைப் பதிவுசெய்து பத்திரப்படுத்தலாம். யார் யார் பேசினார் என்பதை அறிந்துகொள்ளும் வசதி உண்டு. படித்த நண்பர்களின் தொலைந்த முகவரிகளைக் கண்டுபிடித்து, குழுவை அமைத்து, மறுபடியும் பள்ளிச் சிறார்களாய்ச் சிறகடிக்கலாம். ஒருவர் அளித்த செய்தியை அப்படியே இன்னொருவருக்கு அனுப்பி வைக்க முடியும்.

விபத்தின்போதும், பேரிடரின்போதும் நிவாரணப் பணிகளை நிறைவேற்ற முடிகிறது. இப்படி எத்தனையோ வகைகளில் உயிரைக் காப்பாற்றவும், உணர்வைப் பரிமாறவும் உதவும் ஒப்பற்ற சாதனமாக அதன் உயிர்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. சென்னைப் பெருவெள்ளத்தில் அலைபேசி ஆற்றிய பணி அபாரம்.

ரோஜா மெத்தையைத் தந்தாலும் அதற்கே ஒவ்வாமை வரும் வரை விடாத மனம் நம்முடையது. அபூர்வமாகத் தகவல் பரிமாற மட்டுமே தேவைப்பட்ட கருவி பொழுதுபோக்குச் சாதனமாகி, போதைப்பொருளாகவும் ஆகிவிட்டது. ஒருவரது கைப்பேசியை 2 நாட்கள் பிடுங்கிவைத்துவிட்டால் அவருக்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுவிடும்.

அதில் அவருக்கு வருகிற செய்திகளை 2 நாட்கள் தொடர்ந்து படித்தால் நமக்கு புத்திசுவாதீனம் பாதிக்கப்படும். அன்று தொலைபேசி மட்டும் பயன்பாட்டில் இருந்தபோது அத்தனை எண்களும் அத்துபடியாக இருந்தது. இன்று மனைவியின் எண்ணே மனப்பாடம் இல்லை.

அன்று காதலை வெளிப்படுத்துவது கடினமாக இருந்தது. கடிதம் எழுதி, ஒருவேளை, பெண்ணுடைய அப்பா வின் கையில் கிடைத்தால் என்னாகும் என்ற அச்சம். இன்று யாருக்கு வேண்டுமானாலும் எதையும் அனுப்பலாம் என்ற துணிச்சல். ‘சுயமி’ (செல்ஃபி) மோகம் சிலருக்கு அதிகம். எங்கு சென்றாலும் தங்களை விதவிதமாக ‘சுயமி’ எடுக்கும் நார்சிச மனப்பான்மை. உடனடியாக அதை முகநூலில் சேர்க்கும் அவசரம்.

அந்தஸ்தின் அடையாளமாக இருந்த அலைபேசி அடிமை சாசனமாகவும் ஆகிவிட்டது. சில நிறுவனங்க ளில் ஊழியர்கள் 23 மணி நேரமும் அதை விழிப்பில் வைத்திருக்க வேண்டும்.

எப்போது வேண்டுமானாலும் மேலாளரிடம் இருந்து அழைப்பு வரலாம்.

கதவைத் திறந்து வைத்தால் காற்றைவிட அதிகமாக கொசு வருவதுபோல, இரவு முழுவதும் வர்த்தக அழைப்புகளால் வாடுபவரும் உண்டு.

முன்பெல்லாம், ஓர் அழைப்பு வந்தால் வீடே தொலைபேசியைச் சுற்றி நிற்கும். இன்று மனைவியின் பேசியை கணவன் எடுப்பது அநாகரிகம். இணைக்க வந்த சாதனம் பிரிக்குமோ என்ற அச்சம். நேரத்தை சேமிக்க வந்த அலைபேசி இன்று உபரி நேரத்தையும் உறிஞ்சிக் கொள்கிறது.

- நினைவுகள் பரவும்..
.

கருத்துகள்