சல்லிக்கட்டு ! நூல் ஆசிரியர் : பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.





சல்லிக்கட்டு !
நூல் ஆசிரியர் : பாவலர்   புதுவைத் தமிழ்நெஞ்சன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.


வெளியீடு :
தமிழ்மொழிப் பதிப்பகம், 01, முருகன் கோவில் தெரு, சண்முகபுரம், புதுச்சேரி – 605 009. பேச : 94421 88915
பக்கம் : 32, விலை : ரூ. 25



******

நூலாசிரியர் கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் உணர்ச்சிப் பாவலர். மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி பட்டென உரைப்பவர். எழுதுபவர். தமிழின உணர்வு மிக்கவர். பகுத்தறிவாளர். புதுச்சேரியில் துளிப்பாவை ஹைக்கூவை முன்னெடுத்துச் செல்பவர். ஹைக்கூ நூற்றாண்டு விழாவை புதுவையில் கோலாகலமாக கொண்டாடி இந்த நூலை வெளியிட்டார்கள்.

நூலின் தலைப்பு ‘சல்லிக்கட்டு’. சல்லிக்கட்டு போராட்டத்தில் உலகம் வியக்கும் வண்ணம் வென்ற வரலாற்றை ஹைக்கூ கவிதைகளில் வடித்து இருப்பது சிறப்பு. நூலிலிருந்து சில கவிதைகள்.

தமிழினப் பண்பாட்டின்
நுழைவாயில்
வாடிவாசல்!

வாடிவாசல் வழி காளைகள் துள்ளிக் குதித்து வெளியே வரும் போது இளம்காளைகள் பாய்ந்து அடக்கும் வீரம் உலகில் எங்கும் காண முடியாது. வாடிவாசல் என்பது தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் என்பதை உணர்த்தி உள்ளார்.

விளையாட்டல்ல
சல்லிக்கட்டு
வரலாறு.

விளையாட்டு தானே என்று விளையாட்டாக தடையிட்டுப் பார்த்து வீறுகொண்டு தமிழர்கள் உலகம் முழுவதும் எழுந்தது கண்டு தடை, தவிடுபொடியானது. தமிழர்களின் வீர வரலாறு என்பது உண்மை.

நிலா முகத்தில்
சுருக்கங்கள்
குளத்தில் அலை!

இயற்கையைப்பற்றி ஹைக்கூ வடிப்பதில் சப்பானியக் கவிஞர்-களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல புதுவைக் கவிஞர்கள் என்பதை மெய்ப்பிக்கும் கவிதை குளத்தையும் நிலவையும் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

அம்பானி அதானிக்கு
வைப்பகக் கடன்
மக்கள் பணம் பறிப்பு!

தினந்தோறும் வரும் செய்திகள் என்னவென்றால் கோடிகள் கொள்ளையடித்து மோசடி செய்து வெளிநாடுகளுக்கு ஓட்டம். ஆனால் சாமான்ய மக்களை வங்கிகளின் வாசலில் நிறுத்தி பல உயிர்களைப் பலி வாங்கிய கொடூரத்தை நினைவூட்டி உள்ளார்.

காளைகளின் குளம்படியில்
நசுங்கிப் போனது
பீட்டா!

பீட்டா என்ற அமைப்பு உலகமகா கேடி அமைப்பு. விலங்குகள் காப்போம் என்ற போர்வையில் நமது காளை இனத்தை அழிக்க வந்த கைக்கூலிகள். தமிழகத்தை விட்டு ஓட ஓட விரட்டப்பட்டு விட்டனர். காரணம் உலகத்தமிழர்களின் ஒற்றுமைக் குரல்.

சுடும் வெயில்
கொடும் பனி
தொடரும் மாணவப் போர்!

ஆண், பெண் பேதமின்றி குடும்பம் குடும்பமாக மாணவர்கள், இளையோர் அனைவரும் அணிதிரண்டு சல்லிக்கட்டின் தடையினைத் தகர்த்தனர்.

வேலி போட்டும்
தாண்டிப் போகும்
மல்லிகை மணம்!

மல்லிகை என்றவுடன் நினைவிற்கு வந்தது மதுரை. இங்கு தான் தினந்தோறும் ஏற்றுமதி ஆகின்றது மணக்கும் மல்லிகை.

முகிலாடைக்குள்
முகம் மறைத்து
கண்ணாமூச்சி!

நூலாசிரியர் கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் இயற்கை ரசிகர். மலர்களையும் செடிகளையும் ரசித்து படம்பிடித்து முகநூலில் பதிவு செய்து வருபவர். வானத்தையும் ரசித்து ஹைக்கூ வடித்தது சிறப்பு.

தமிழினத்தை
ஒன்றிணைத்தது
தமிழ்!

உண்மை தான். உலகம் முழுவதும் வாழும் ஒப்பற்ற தமிழர்கள் ஒன்று திரண்டனர். உலகமே தமிழர்களின் ஒற்றுமையை ஆற்றலை வீரத்தை, தீரத்தைக் கண்டு வியந்தது. உலகின் முதல் மொழி தமிழ் உலகின் முதல் மனிதன் தமிழன். வீரத்தமிழன் என்பதை உலகம் உணர்த்திட உதவியது சல்லிக்கட்டு போராட்டம்.

மரப்பாச்சிக்கு
மாராப்புப் போட்டாள்
தமிழச்சி!

உண்மை தான். தமிழ்க்குழந்தைகளின் கையில் மரப்பாச்சி இருக்கும். ஆடையின்றி இருக்கும் அப்பொம்மைக்கு அடை அணிவித்து மகிழும் குழந்தை. அதனைக் காட்சிப்படுத்தியது சிறப்பு. தமிழ்ப் பண்பாட்டை உணர்த்தியது சிறப்பு.

கையடக்க சிறிய நூல் என்றாலும் தமிழ் உணர்வு, தமிழ் இன உணர்வு விதைக்கும் விதமாக ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார்.

நீண்ட நெடுங்காலமாக குடும்பமாக புதுவைத் தமிழ்நெஞ்சன் மட்டுமின்றி அவரது மனைவியும் அவரது புதல்வி தமிழ்மொழி அவரது சகோதரர் சீனு தமிழ்மணி என்று குடும்பம் முழுவதும் ஹைக்கூ படைப்பாளிகள். தொடர்ந்து நூல்கள் வழங்கி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இப்படி குடும்பமாக ஹைக்கூ எழுதுபவர்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு அடுத்தபடியாக தமிழ் இனஉணர்வுடன் வாழும் உணர்வாளர்கள் புதுவைத் தமிழர்கள். காரணம் பாவேந்தர் பாரதிதாசன் தந்த இன உணர்வு.

அருள்வடிவான கடவுளின்
கைகளில் இருக்கிறது
அறுவாள் வேல் சூலம்!

இறுதிக் கவிதையில் பகுத்தறிவு சிந்தனையும் விதைத்துள்ளர். அனபே வடிவான அருள்புரியும் கடவுளர்களின் கரங்களில் ஆயுதங்கள் எதற்கு? என்று கேட்டு சிந்திக்க வைத்துள்ளார்.

நூலின் இறுதியில் காளைமாடுகளின் 92 வகையின் பெயர்களை பதிவு செய்து இருப்பது மிகச் சிறப்பு. பாராட்டுக்கள்


.



கருத்துகள்