பெண்களின் பங்கு அரசியலில்வேண்டும் ! கவிஞர் இரா. இரவி !





தமிழ்ப் பட்டறை இலக்கியப்பேரவை ! சார்பில் 11.3.2018 அன்று நடந்த 
உலக மகளிர் தின சிறப்புக் கவியரங்கில் வாசித்த கவிதை !


பெண்களின் பங்கு அரசியலில்வேண்டும் ! 

கவிஞர் இரா. இரவி !

முப்பத்தி மூன்று சதவிகித இடஒதுக்கீடு பெண்களுக்கு
முதலில் நிறைவேற்றிட முன் வாருங்கள்!

பெண்களை நீங்கள் தீ தெய்வம் என்று சொல்லி
பல நாட்களாக ஏமாற்றியது போதும் !

பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லி
பல வருடங்களாக நீங்கள் ஏமாற்றியது போதும் !

மானே தேனே என்று மயக்கிய போதும்
மகளிருக்கான இட ஒதுக்கீட்டைத் தாருங்கள் !

மயிலே மயிலே என்றால் இறகு கிடைக்காது
மயிலைப் பிடித்து இறகைப் பறித்திட வேண்டும் !

இட ஒதுக்கீடு தர மறுத்தால் முடிவெடுங்கள்
இனி மகளிர் வாக்கு யாருக்குமில்லை என்று !

இந்தா ! இந்தா ! என்று ஏமாற்றி வருகின்றனர்
இனியும் பொறுக்க வேண்டாம் பொங்கி எழுக!

நியாயப்படிப் பார்த்தால் ஐம்பது சதவிகிதம் தரவேண்டும்
நாட்டில் முப்பத்தி மூன்று கூட தருவதில் தாமதம்!

ஆணாதிக்கம் சிந்தனை அகலவில்லை இன்னும்
ஆண்களுக்குப் புத்தி புகட்டிட அணி திரளுங்கள்!

விமானம் கூட ஓட்டுகின்றனர் பெண்கள்
விண்ணிலும் சாதனை நிகழ்த்துகின்றனர் பெண்கள்!

ஆணை விட பெண் எதிலும் சளைத்தவளல்ல
அனைத்துத் துறையிலும் சாதிப்பவள் பெண்!

ஆண்டாண்டு காலமாக அடிமைப்படுத்திய போதும்
ஆண் பெண் சமம் என்ற மனநிலை வேண்டும்!

வீட்டில் உள்ள பெண்களை மதித்திட வேண்டும்
வஞ்சியரின் எண்ணத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்!

இல்லத்தரசிக்கு உதவிட வேண்டும் ஆண்கள்
இன்முகத்துடன் பகிர்ந்திட வேண்டும் பணிகளை!

சமையல்காரர் கூட இல்லத்தில் வேலை செய்ய மாட்டார்
சமையல் அறையில் உதவிட வேண்டும் ஆண்கள்!

இருபாலருக்கும் பொதுவாக்குவோம் சமையலறையை
இனியாவது அகற்றிடுவோம் ஆணாதிக்கத்தை!

உயர் பதவியில் பெண் இருந்திட்ட போதும்
உப்பிட்டு சமைக்க வேண்டும் இல்லத்தில் !

ஏன் இந்த நிலை இப்படியே தொடர வேண்டுமா?
இல்லத்தில் ஆண்களும் சமையல் செய்திட வேண்டும்!

நான் சமைக்க வேண்டுமா? என்று கேட்காதீர்
நானும் சமைக்கிறேன் என்று பகிர்ந்து கொள்ளுங்கள்!

ரத்தத்தில் ஊறி விட்ட ஆணாதிக்கச் சிந்தனைகளை
ரத்து செய்து விட்டு மதியுங்கள் பெண்களை!

தொல்லையாகி விட்ட தொலைக்காட்சி தொடர்கள்
தவிர்த்திடுங்கள் பார்ப்பதை நிறுத்திடுங்கள்!

வன்மம் வளர்க்கும் தொடர்கள் வேண்டாம்
வேதனை தந்திடும் தொடர்கள் வேண்டாம்!

பழிக்குப்பழி வாங்கும் குரோதம் வேண்டாம்
பண்பாடு காத்திடுவோர் தொடர்களைத் தவிர்த்திடுங்கள்!

பொன்நகை மீதான ஆசையை ஒழியுங்கள்
புத்தன் போதித்ததை நினைவில் கொள்ளுங்கள்!

பெரியாரின் அறிவுரையை சிந்தையில் ஏற்றுங்கள்
பெண்ணாகப் பிறந்ததற்குப் பெருமை கொள்ளுங்கள்!

பட்டுப்புடவையின் மீதான் ஆசையை ஒழியுங்கள்
பட்டுப்பூச்சியின் வாழ்க்கை உங்கள் கைகளில்!

ஆண், பெண் பேதம் இனி வேண்டாம்
ஆண், பெண் சமத்துவம் நிலவிட வேண்டும்!

பெண்ணைப் போகப்பொருளாக கருதிட வேண்டாம்
பெண்ணை சக தோழியாக மதித்திட வேண்டும்!

பெண்ணை ஏளனமாக பார்த்திட வேண்டாம்
பெண்ணை உயர்வாக நினைத்திட வேண்டும்!

பெண் இன்றி ஆண் இல்லை என்பதால்
பெண்ணை மிகவும் பெருமையாகக் கருதிட வேண்டும்!

பெண்ணால் சிறப்பானது இந்த பிரபஞ்சம்
பெண்ணை மதித்திட வேண்டும் ஆண் நெஞ்சம்!

அரசியலில் மட்டுமல்ல இல்லத்திலும் இடமளிப்போம்
ஆண்கள் அனைவரும் பெண்களை மதித்திடுவோம்!
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்