வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்) நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




வாழ்க்கைச் சக்கரத்தில் ஆணென்ன? பெண்னென்ன? (நாவல்)

நூல் ஆசிரியர் : நவரஞ்சனி ஸ்ரீதர் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


மணிமேகலை பிரசுரம், சென்னை. 17
பக்கம் :152, விலை: ரூ.45
******
     முனைவர் நவரஞ்சனி ஸ்ரீதர் அவர்கள் எழுதியுள்ள   இந்த நாவலுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் அணிந்துரை நூலிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளது.

     அவரது அணிந்துரையில் இருந்து சிறு துளிகள்.

     “தனது திருமணத்திற்கு உதவிய மைத்துனி மேல் நட்பு கொள்ளும் ஒரு நாயகன், உறவுகள் சமூகத்தின் கொச்சைப்பார்வையை மீறி அந்த நட்பால் தன் லட்சியத்தில் வெற்றியும் அடைகிறான்.

     ஆண், பெண் நட்பு பற்றிய மேன்மையை மென்மையாக விளக்கி உள்ள நாவல்.  இந்த நாவல் வெளிவந்த வருடம் 2008.  நூல் ஆசிரியர் முனைவர் நவரஞ்சனி ஸ்ரீதர் அவர்கள் முகநூல் நண்பர். அவர் விமர்சனம் எழுதிட வேண்டி அனுப்பி வைத்தார். கவிதைகள் என்றால் உடனே விமர்சனம் எழுதி விடுவேன். நாவல் என்பதால் சற்று காலதாமதமாகி விட்டது.

     ஆண், பெண் நட்பை தவறாகப் பார்க்கும் சமுதாயத்தின் பார்வை இன்னும் மாறவில்லை என்பதே உண்மை. ஆனால் என்னுடைய முகநூலில் 5000 நண்பர்கள், பின்தொடர்வோர் 6700 – இதில் பல பெண்தோழிகளும் உண்டு.  அவர்களுடனான நட்பு நல்லமுறையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். 

எனக்கு அவர்களும் உதவுகின்றனர். அவர்களுக்கு நானும் உதவி வருகிறேன்.  நல்ல நாவல் நல்ல நடை. போரடிக்காமல் படிப்பதற்கு சுவையான நடை. இடையிடையெ ஆசிரியரின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்.

     நூல் ஆசிரியர் நாவல் ஆசிரியர் எழுத்தாளர் மட்டுமல்ல சென்னை வானொலி நிலையத்தில் புல்லாங்குழல் இசைக் கலைஞராகப் பணியாற்றி வருபவர்.  புல்லாங்குழல் இசை அனைவருக்கும் பிடிக்கும், இந்த நாவலும் எல்லா வாசகர்களுக்கும் பிடிக்கும்.
     தோழிக்கு இந்த நூலை காணிக்கை ஆக்கி உள்ளார். அதிலிருந்து சில வரிகள். 

 “என் எழுத்துத் தேருக்கு அச்சாணியாக விளங்கும் என் பெண் தோழமைக்கு இந்நூலை காணிக்கையாக சமர்ப்பிப்பதில் பெரும் உவகையும், என் நெஞ்சிலிருந்த மிகப்பெரிய மனபாரத்தை இறக்கி வைத்த மனநிம்மதியையும் ஒருசேர அடைகிறேன்.

     ஆசிரியர் என்னுரை என்ற முன்னுரையிலும், நாவல் முடிந்த பின் பின்னுரையிலும் ஆண் பெண் நட்பை கொச்சைப்படுத்தாமல் அங்கீகரிக்க முன்வர வேண்டும் என்ற ஆதங்கத்தை நன்கு விளக்கி உள்ளார். நாவலின் கருப்பொருளும் இது தான்.

     கணினியுகத்திலும் மக்கள் மனங்களில் இன்னும் மாற்றம் விளையவில்லை.  நாகரிகம் என்பது உடையில் இருந்தால் மட்டும் போதாது.  நாகரிகமற்ற கொச்சை எண்ணங்களுக்கு முடிவு கட்டும் விதமாக நாவல் படிக்கும் வாசகர்களை நெறிப்படுத்தும் விதமாக எழுதி உள்ளார்.  ஒரு எழுத்தாளர் கடமையும் இது தான்.

     நட்பு என்பது பொதுச்சொல்.  அது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.  நட்பின் மேன்மையை பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி உளளார்.

     “கோப்பெரும்சோழனும் பிசிராந்தையாரும் இன்றிருந்தால், நம்மைக் கண்டு வெட்கம் அடைந்து இருப்பார்.  கிருஷ்ணனும் குசேலரும் தம் தோழமைக்கு பூமாலை சூட்டிப் பாமாலை பாடி இருப்பார். தோழமைக்கு வந்தனங்களும் வாழத்துக்களும் சொல்லி மகிழ்ந்திடுவர்.

தோழமையே என்று சொல்லி தோழமைக்கும் மகுடமாக விளங்கியவர்களை பட்டியலிட்டு தோழமையின் சிறப்பை தோழமையுடன் எழுதி உள்ளார்.

இந்நூல் படிக்கும் வாசகர்களுக்கு கண்டிப்பாக மனமாற்றம் நிகழும் என்று அறுதியிட்டுச் செல்ல முடியும்.  ஆண்-ஆண் நட்பு போலவே, பெண்-பெண் நட்பு போலவே, ஆண்-பெண் நட்பும் இயல்பானது.  இதனைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு என்பது புரிந்து விடும்.  நல்ல  நட்பை அங்கீகரிக்கும் மனமாற்றத்தை இந்த நாவல் உண்டாக்கி விடுகின்றது.

மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தால் இல்லத்தில் பாடுவது இயல்பு. பாட்டுப்பாடிக் கொண்டே அகல்யா வேலைகள் செய்த விதத்தை நாவலில் எழுதி உள்ளார். நாவலைப் படிக்க ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு வருகின்றது.  நேரடியாக ஒரு நிகழ்வைக் காண்பது போன்ற உணர்வு வருகின்றது.  இது எழுத்தாளனின் வெற்றி.

சிலர் நாவல் என்ற பெயரில் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், புள்ளிவிபரங்களையும் நகைச்சுவை துணுக்குகளையும் எழுதி வரும் காலத்தில் ஆண்-பெண் நட்பு மதிக்கப்பட வேண்டும். அந்த நட்பில் பல நன்மைகள் கிடைக்கும், சாதனைகள் சாத்தியமாகும், வாழ்வில் உயரலாம் என்பதை மையக்கருத்தாக வைத்து நாவலை வடித்து உள்ளார்.

நாவலிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு :

“குருவால் பயிற்றுவிக்கப்படும் விஷயம், மாணவனால் சிறப்பாகச் செய்யப்படும் போது அது குருவுக்கு அதிக மனநிறைவை ஏற்படுத்தும்மகிழ்வை ஆசிரியர் உணர்த்தி உள்ளார்.

“பெண்களைத் தொடுவதில் அவனுக்கு ஒருவிதமான கூச்சம் இருந்தால், முடிந்தவரைப் பெண்களைத் தொடுவதைத் திட்டவட்டமாய்த் தவிர்த்து வந்தான் தமிழ்ப்பண்பாடு காக்கும் விதமாக எழுதி உள்ளார்.

“ஆண் மதிக்கப்படத்தக்கவன் என்று நடந்து கொள்வதன் மூலம், தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள் பெண்கள்.

நல்ல பண்புகளை உணர்த்தும் விதமாக பல வசனங்கள் நாவலில் உள்ளன. 

“ஆண்கள் வெளியில் மிகுந்த தைரியசாலிகளாகவும், உள்ளுக்குள் மனவலிமையற்றும் இருக்கிறார்கள்.  பெண்கள் வெளியில் மிகுந்த மனவலிமையற்வர்களாகவும், உள்ளுக்குள் மிகுந்த தைரியமாகவும் இருக்கிறார்கள்

பெரும்பாலான ஆண்கள், பெண்கள் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டி வெற்றி பெற்றுள்ளார் நூல் ஆசிரியர் முனைவர் நவரஞ்சனி ஸ்ரீதர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

கருத்துகள்