படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! முகநூலில் கவிஞர் செ.திராவிடமணி கூடலுார்!




படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
முகநூலில் கவிஞர் செ.திராவிடமணி கூடலுார்!

உள்ளதைச்சொல்லி நல்லதைச்செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்...........
----------------------------------------------------------------------------------

நேற்று (6.11.2017) சென்னையில் தினத்தந்தி நாளிதழின் பவளவிழா. விழாவில் சிறந்த இலக்கியத்திற்கான விருதினை பாரதப்பிரதமர் மோடி அவர்கள், நம் மதிப்பி்ற்குரிய டாக்டர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., புள்ளியில் துறை முதன்மைச் செயலர் அவர்களுக்கு, அவர் எழுதிய “இலக்கியத்தில் மேலாண்மை“ என்ற நுாலுக்காக வழங்கிச் சிறப்பித்த செய்தி உலகறியும்.
விருதுடன் தமக்கு கிடைத்த ரொக்கப்பரிசான ரூபாய் இரண்டு லட்சத்தையும் சென்னை மைலாப்பூரிலுள்ள ஆதி திராவிடர் நலத்துறையின் மாணவர் விடுதியில் தங்கிப்பயிலுகின்ற, வறுமையால் வாடும் கிராமப்புற ஏழை மாணவர்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கொடையாக வழங்கிவிட்டார்.

இச்செய்தியின் வழியே, அவரின் சிந்தையும் செயலும் ஒரே நேர்கோட்டில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதைத் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

திரு.இறையன்பு அவர்களுக்கு நினைவுப்பரிசாக நமது அன்பை மட்டுமே தான் வழங்கமுடியும் என்பதை நான் நன்கறிவேன். சில ஆண்டுகளுக்கு முன் தேனி என்.எஸ்.பொறியியல் கல்லுாரியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தபோது, நானும் சென்றிருந்தேன்.

அவர் உரை நிகழ்த்தி முடித்தபின், கல்லுாரி நிர்வாகம் அவருக்கு விலைமதிப்புமிக்க அழகான கலைப்பொருளை நினைவுப்பரிசாக வழங்கியது.

உடனே, அவர் தன்னோடு வந்திருந்த நண்பரும், மற்றுமொரு சிறப்பு விருந்தினருமான தற்போதைய திருநெல்வேலி வானொலி நிலைய இயக்குநர் அன்பு மாமா முனைவர் சுந்தர ஆவுடையப்பன் அவர்களிடம் காதில் ஏதோ சொன்னார்.

உடனே, முனைவர் அவர்கள் மைக் அருகே சென்று, “இனிய மாணவர்களே.. திரு. இறையன்பு அவர்கள் எந்த நிகழ்ச்சியிலும் பரிசாக எதையும் பெற விரும்புவதில்லை. அதனால், அவருக்கு வழங்கப்பட்ட இந்த நினைவுப்பரிசினை உங்களில் ஒருவருக்கு தர விரும்புகிறார்.

அதற்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், அவருடைய பேச்சின் சாரத்தை அழகாக விமர்சித்து எழுதிக்கொண்டு வரும் முதல் மாணவர் அல்லது மாணவிக்கு இந்தப்பரிசு வழங்கப்படும்” என்றார்.
ஒரு மாணவர் அந்தப் பரிசை பெற்றுக்கொண்டார்.

இதுதான் இறையன்பு.
இதுதான் முன்மாதிரி.
இதுதான் இரும்புத்தனமான உறுதிகொண்ட கொள்கை.

நாமும் முடிந்தவரை நல்ல வழிக்கான கொள்கைக்கோட்டை வரைந்து வாழ்வோம்.

நம் அனைவரின் சார்பிலும் டாக்டர்.வெ. இறையன்பு அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன். 🙏💖

கருத்துகள்