திருவள்ளுவ மாலை மூலமும் எளிய உரை விளக்கமும் ! நூல் ஆசிரியர் : புலவர் இராம. வேதநாயகம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

திருவள்ளுவ மாலை


மூலமும் எளிய உரை விளக்கமும் !

நூல் ஆசிரியர் : புலவர் இராம. வேதநாயகம் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை,
தியாகராய நகர், சென்னை – 600 017.
******
      நூல் ஆசிரியர் புலவர் இராம. வேதநாயகம் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வடமாதிமங்கலம் ஊரில் வாழ்ந்து வரும் தமிழ்க்குன்று எனலாம்.  தமிழுக்காக தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி. ‘திருவள்ளுவ மாலை மூலமும் எளிய உரை விளக்கமும்’ என்ற இந்த நூல் தமிழன்னைக்குச் சூட்டிய வைர மாலை எனலாம்.  திருக்குறளுக்குச் சூட்டிய வைர மகுடம் எனலாம்.

      உலகப்பொதுமறையான திருக்குறளின் அருமை பெருமையை அன்றே 55 தமிழ்ப்புலவர்கள் திருவள்ளுவ மாலைபாடி வைத்துள்ளனர்.  பலர் பாடிய பாடலின் தொகுப்பான திருவள்ளுவமாலை மூலப்பாடல்களையும், பொழிவு, கருத்து என்று மூன்று பிரிவுகளாக 55 பாடல்களுக்கும் எழுதி இருப்பது, சிறப்பு.

      புலவர் இராம. வேதநாயகம் எம்.ஏ.எம்.ஏ.எம்.எப். கற்றறிந்த புலவர் என்பதால் பாடல்களுக்கான கருத்துரையை மிக எளிமையாகவும், இனிமையாகவும், நுட்பமாகவும் எழுதி உள்ளார்.  நூலாசிரியர் கவிஞர் என்பதால் உரையை கவித்துவமாக உள்ளத்தில் நன்கு பதியும்படி எழுதி உள்ளார்.

      திருவள்ளுவ மாலை கேள்விப்பட்டு இருக்கிறேன்.  ஆனால் படித்தது இல்லை, நூலாசிரியரின் ஒரு நூலிற்கு அணிந்துரை எழுதி உள்ளேன்.  இந்நூலை வெளியிட்டவுடனேயே எனக்கு அனுப்பி வைத்து விட்டார்.  படித்துப் பார்த்து வியந்து போனேன். திருக்குறள் மீது எனக்கு அளவற்ற மதிப்பு உண்டு. இந்நூல் படித்து முடித்ததும் அந்த மதிப்பு இருமடங்காக உயர்ந்து விட்டது.

      திருவள்ளுவ மாலை 54 பாடல்கள் நூலில் இருந்தாலும் பதச்சோறாக ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு எழுதுகின்றேன்.

    "  55.    அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி
            குறுகத் தரித்த குறள் !   
                 ஔவையார் !

பொழிவு :  திருவள்ளுவரின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள் வெண்பாக்களும், கடுகை விட மிகவும் நுண்ணிய அணுவை, அதன் நடுவே துளை செய்து, ஏழு கடல்களின் நீரையும், அத்துளையுள் பெய்து, தன்னளவில் குறுகும் வண்ணம் தறித்து வைத்தால் அது போல்வன ஆகும்.

கருத்து :  கடுகோ சிறியது, கடுகை விட அணுவானது குறுகியது, சிறியது. அதனுள் அதன் நடுவே துளை போட்டு அத்துளையினுள் ஏழு கடல்களின் நீரையும் புகுத்திக் குறுகிய பின் எவ்வாறிருக்குமோ அது போலாம் திருக்குறள்.

      அணு தனிமத்தின் இயல்புகளைக் கொண்ட இயல்பான பொருள் ஒன்றின் மிகச்சிறிய அலகுப் பொருட்கூறு.  அணு என்பது மிகவும் சிறியது.  அளவில் மீட்டரின் 10 பில்லியனில் ஒரு பங்கு.  அதாவது ஆயிரங்கோடியில் ஒரு பங்கு.

      ஔவையார் என்ற பெயரில் ஏழு பேர் இருந்தார்கள் என்றறியப்-படுகிறது.  இதில் சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையாரே மேற்காண் குறள் வெண்பாவை யாத்ததாகக் குறிப்புள்ளது."

      ஒரே ஒரு பாடலை மட்டும் எழுதி உள்ளேன். மீதமுள்ள 54 பாடல்களையும் உரையையும் கருத்தையும் நூல் வாங்கிப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.  

அரங்கேற்ற மறுத்த திருக்குறளை அரங்கேற்ற உதவிய ஔவையார் தான் இந்தப் பாடலை எழுதி இருக்க வேண்டும் எனபது என் கருத்து. 

உண்மை தான். அரிய, பெரிய கருத்துக்களை ஏழு சீரில் அடக்கிய வல்லவர் திருவள்ளுவர்.  ஒவ்வொரு பாடலுக்கும் மிக  நுட்பமாகவும், திட்பமாகவும் எழுதி உள்ளார். எனக்கு மிகவும் பிடித்த கருத்துரை மட்டும் உங்கள் பார்வைக்கு.

பாடல் எண் 12 : எழுதியவர் : நாகன் தேவனார்.

கருத்து : தாமரை மலர்கள் நிறைந்துள்ள குளத்தில் ஒருவர் குளித்தால், வேறு குளத்தை நாட மாட்டார் என்பது போல திருக்குறளைப் படிப்பவர் வேறு நூலை நாட மாட்டார்.

      உண்மை தான். திருக்குறளில் சொல்லாத கருத்துக்களே இல்லை. அனைத்தையும் பாடியவர் நம் திருவள்ளுவர். உலக அளவில் தமிழர்களுக்கு பெருமையையும், புகழையும் தேடித் தந்தவர் திருவள்ளுவர். தமிழை அறியாதவரும் திருக்குறளை அறிந்து உள்ளனர்.

      புத்தன், இயேசு, காந்தி போன்ற அறவோரை உருவாக்கியது நம் திருக்குறள். மண் உலகிலேயே சொர்க்கம் கண்டு வாழ்வாங்கு வாழ்ந்திட வழி உரைத்தவர் திருவள்ளுவர்.  திருக்குறளின் சிறப்பை அன்றே உணர்ந்து பாடிய பாடல்கள் படிக்கப் படிக்க திருக்குறளின் மீதான மரியாதை மேலும் மேலும் உயர்ந்து வருகின்றது.

நூல் ஆசிரியர் புலவர் இராம. வேதநாயகம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஒரே ஒரு நூலில் பல தகவல்கள் உள்ளன.  திருவள்ளுவரின் வேறு பெயர்கள், திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள், திருக்குறள் உரையாசிரியர்கள் பட்டியல் திருவள்ளுவ மாலை மூலமும் உரை விளக்கமும் திருக்குறள் பற்றிய சுவையான தகவல்கள், கால வரிசையில் திருக்குறள் உரைகள் பிற என 7 தலைப்புகளில் தகவல் களஞ்சியமாக உள்ளது. 

 ஆய்வு மாணவர்களும், ஆசிரியர்களும் பேராசிரியர்களும் படிக்க வேண்டிய நூல்.  இன்னும் சில கருத்துரைகள் உங்கள் ரசனைக்கு.  
பாடல் எண் : 22,  எழுதியவர் : நொடித்தலை விருத்தண்டினார்.

கருத்து :  உலகத்துப் பொருள் அத்தனையும் திருவள்ளுவத்தில் அடங்கும். உலகின் விட்ட பொருள் ஏதேனும் இல்லை.  பெறுவதற்கு அரிதானவையே அறம், பொருள், இன்பம் மற்றும் வீடாம்.

பாடல் எண் : 35, பாடியவர் : மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்.

கருத்து : இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை. மாந்தர் இன்பத்திற்கான காரணங்களையும் துன்பத்திற்கான காரணங்களையும் ஆய்ந்து உணர வேண்டிய வள்ளுவர் வள்ளுவத்தை வாயாற வாழ்த்தாகப் படைத்தார்.

பாடல் எண் : 47, பாடியவர் : நப்பாலத்தனார்.

கருத்து : அறம், பொருள், இன்பம், சொல், குறட்பா ஆகியவற்றை அகல், திரி, நெய், நெருப்பு, தண்டு எனக் கொண்டு திருவள்ளுவர் மாந்தரின் அக இருளை ஓட்டினார்.

பாடல் எண் : 48, பாடியவர் : குலபதி நாயனர்
கருத்து :  திருக்குறளும், கதிரவனும் நிகராம். திருக்குறள் மாந்தரின் அக இருளை நீக்கும், கதிரவன் புற இருளை நீக்கும். 

திருக்குறளுக்கு உரை கண்ட பெண்மணிகளின் பட்டியல், திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் பிற நூலகளின் பட்டியல், திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகளின் பட்டியல், திருவள்ளுவர் சிலைகள் உள்ள இடங்கள், திருவள்ளுவர் கோயில் உள்ள இடங்கள், இந்நூல் தயாரிக்க உதவிய நூல்களின் பட்டியல்.  இப்படி படிக்கப் படிக்க பிரமிப்பு வந்தது. நூலாசிரியரின் கடின உழைப்பையும், ஆழ்ந்த எழுத்தையும் உணர முடிந்தது.

கருத்துகள்