வானவேடிக்கை ! கவிஞர் இரா. இரவி !

வானவேடிக்கை !   கவிஞர் இரா. இரவி !

வான வேடிக்கை விழிகளுக்கு அழகு தான்
வானில் விதவிதமான வண்ணங்களின் விளம்பரம்தான் !

பார்ப்பதற்கு பரவசம்தான் வானவேடிக்கை
பார்ப்போரின் உள்ளம் கொள்ளை போகும் தான் !

சிவகாசிச் சிறுவர்களின் உழைப்பும் உள்ளது
சிவகாசி மக்களின் வியர்வையும் உள்ளது !

கந்தகப் பொடியில் வெந்து தான் உருவாக்குகின்றனர்
கண்ணீர் வரும் வலிகளுடன் தான் உற்பத்தியாகின்றன !

படிப்பைப் பாதியில் விட்ட தொழிலாளிகள் உண்டு
பாமரர் முதல் படித்தவர்களும் தயாரிப்பில் உண்டு !

வெடிமருந்துகளுடனான அச்சமிகு வாழ்க்கை
வெடிவிபத்து எப்போதும் நேரலாம் உற்பத்தியில் !

உயிரைப் பணயம் வைத்துத் தான் தயாரிக்கின்றனர்
உயிர் பலி இல்லாத வருடமே இல்லை என்றானது !

சுவாச நோய்களும் சிலருக்கு வருவதுண்டு
வாசமற்ற வாழ்க்கை தான் வசமானது இன்று !

வண்ணங்கள் தெரிய வண்ணம் இழக்கின்றனர்
வண்ணம் வழங்குவோர் வாழ்வில் வண்ணம் இல்லை !

எட்டுமணி நேரம் உழைத்தால் தான் உண்ணமுடியும்
எட்டிப்பிடிக்கா முடியாத உயரத்தில் விலைவாசி !

வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் சிலருக்கு
வாழ்க்கையே போராட்டமாக சிவகாசி மக்களுக்கு !

குட்டி சப்பான் என்று பெயரெடுத்த காலமும் உண்டு
குதூகலமின்றி வரிகளால் வாடுகின்றனர் இன்று !

புதுப்புது வரிகளை ஆள்வோர் இட்டு வருகின்றனர்
பல வரிகள் கட்ட முடியாமல் மூடி வருகின்றனர் !

அடிக்கடி தொழிற்சாலையில் தீ விபத்தும் நடப்பதுண்டு
அங்கே வானவேடிக்கை தரையில் வேடிக்கையாவதுண்டு !

சீரும் சிறப்புமாக சிவகாசியில் தயாரித்திட்ட போதும்
சீனாவின் வானவேடிக்கை வந்து பயமுறுத்தியது !

கருத்துகள்