படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! கவிதை உறவு ஆசிரியர் ஏர்வாடியார் கவிதை !படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

கவிதை உறவு ஆசிரியர் ஏர்வாடியார் கவிதை !

இறந்த பின்னும்
வாழ்வதற்கு
என்ன செய்யலாம் ?
இருக்கும் பொது
பிறருக்காக
வாழ்ந்து காட்டலாம்.
சேர்த்த சொத்தின்
பயனைக்காண
என்ன செய்யலாம் ?
சார்ந்திருக்கும்
பிறர்க்குதவும்
பண்பை வளர்க்கலாம்.
நிலை உயர
நாமினிமேல்
என்ன செய்யலாம் ?
தலை உயரும்
நாள் இதனை
நாம் நினைக்கலாம்.
அடிமைகளாய்
வாழ்கிறோமே
என்ன செய்யலாம் ?
குடியுரிமைக்
கொடுவாளைக்
கையில் ஏந்தலாம்.
தமிழன் என்ற
பெருமை காண
என்ன செய்யலாம் ?
தமிழரெல்லாம்
தமக்குறவு
என்று வாழலாம்.
ஊழலற்ற
ஆட்சி காண
என்ன செய்யலாம் ?
நம்மை முதலில்
திருத்தி அந்த
நாளைத் தேடலாம்.
வெற்றிக்கான
வழிகளென்று
எதனைக் கொள்ளலாம் ?
வாழும் நல்ல
வாழ்க்கை தன்னை
வெற்றியாக்கலாம்.
எல்லை என்று
எதனை வாழ்வில்
வரையறுக்கலாம் ?
வானம் கூட
இல்லையென்று
மேலும் பறக்கலாம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்