கவியரசு கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !
கவியரசு கண்ணதாசன் !  கவிஞர் இரா .இரவி !


சங்க இலக்கியத்தை
சாமானியருக்குச் சமர்பித்தவர்
கவியரசு !

திருக்குறளின் நுட்பத்தை
திரைப்பாடலில் வடித்தவர்
கவியரசு !

நிரந்தரமானவன் அழிவில்லை
நிதர்சனமான உண்மை
கவியரசு!

பணத்தை மதிக்காதவர்
குணத்தை மதித்தவர்
கவியரசு!

தித்திக்கும் பாடல்களை
திகட்டாமல் தந்தவர்
கவியரசு !

நடிகர் திலகம் மக்கள் திலகம்
சிகரமடையக்  காரணமானவர்
கவியரசு !

காலத்தால் அழியாத
கல்வெட்டுக்கவி புனைந்தவர்
கவியரசு !

கொடிக்கட்டிப் பறந்த போதும்
செருக்கு இல்லாத எளியவர்
கவியரசு !

ரகசியம் இல்லாத
அதியசக் கவிஞர்
கவியரசு !

முற்றிலும் பொருத்தமானவர்
பட்டத்திற்கு பெருமை சேர்த்தவர்
கவியரசு !

கள்ளம் கபடமற்றவர்
குழந்தை மனம் படைத்தவர்
கவியரசு !

கண்ணே கலைமானே
கடைசியாகப் பாடியவர்
கவியரசு !


கவியரசு என்றால் கண்ணதாசன் !   கவிஞர் இரா .இரவி .

கவியரசு என்றால் கண்ணதாசன் !   
கண்ணதாசன் என்றால் கவியரசு !

"ஆறு மனமே ஆறு " பாடலின் மூலம் 
ஆறுதல் வழங்கிய கவியரசு நீ !

"வெற்றி பெற்ற மனிதரெல்லாம் " பாடலில் 
தோற்றவருக்குத் தெம்பு  தந்தவன் நீ !

"நான் மலரோடு தனியாக" பாடலில் 
நல்ல காதலை சுகமாக வடித்தவன் நீ !

"மலர்களைப்  போல் தங்கை" பாடலுக்கு 
மயங்காத உள்ளம் இல்லை உலகில் !

"போனால் போகட்டும் போடா "பாட்டில் 
புத்திப்புகட்டும் நிலையாமையைப் பாடினாய் !

"நான் சார்ந்த மதம் தாமதம் "என்று சொல்லி 
நீ தாமதத்தையும் நகைச்சுவையாக்கியவன்  !

சித்தர்கள்  பாடல்களை எளிமைப் படுத்தி   
சித்திரமாய் திரையில் தீட்டித் தந்தவன் நீ !

வாழ்வியல் கருத்துக்களை பாடல்களில் 
வற்றாத ஜீவ நதியாக  வார்த்தவன்  நீ !

காதலின் வேதனையை பாட்டில் 
கடவுளோடு ஒப்பிட்டுப் பாடியவன் நீ !

ஆங்கில  இலக்கியம் படிக்காத   நீ 
ஆங்கில  இலக்கியம் வென்றாய் பாட்டில் !

சங்க   இலக்கியத்தை  திரைப்பாடலில் வைத்தாய் 
சாமானியருக்கும் புரிந்திட பாடல் படைத்தாய் !

கம்ப இராமாயண கருத்துக்களையும் 
கனிச்சாறாக பாட்டில் பிழிந்தவன் நீ !

"படைப்பதனால் என் பெயர் இறைவன்" என்று 
படைத்தாய் இறவாத பாடல்களை நீ !

எந்த நிலையிலும் மரணமில்லை என்று பாடி 
இன்றும் எங்கள் மனங்களில் வாழ்கிறாய் நீ !

உனக்குப் பின் பாட்டெழுத யார் யாரோ வந்தனர் 
உன் இடத்தை யாருமே எட்ட வில்லை ! 

கவியரசு என்றால் கண்ணதாசன் !   
கண்ணதாசன் என்றால் கவியரசு !
-----------------------------------------------------பாடல்களில் வாழும் பாவலர் கண்ணதாசன் !
கவிஞர் இரா .இரவி !

காதல், தத்துவம், மகிழ்ச்சி, சோகம் அனைத்தும் பாடியவர்
கற்கண்டுப் பாடல்களை வெண்திரையில் தந்தவர் !

கடவுள் காதலித்து சாக வேண்டும் என்பதை
நண்பர் சௌந்தர்ராசனுக்காக வாட வேண்டுமென மாற்றியவர் !

அண்ணனிடம் கடன் கேட்டு மறுத்த நேரத்தில்
அண்ணன் என்னடா? தம்பி என்னடா? பாடல் வடித்தவர் !

சிறுகூடல்பட்டி என்ற ஊருக்குப் பெருமையை
பெரும்பாடல்களால் பெற்றுத் தந்தவர் !

முத்தையா படைத்த பாடல்கள் தமிழ்ச் சொத்தானது
சொத்தையான பாடலை என்றும் எழுதாதவர் !

எம்மதமும் சம்மதமென எல்லா மதத்திற்கும் எழுதியவர்
எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்று சொல்லியவர் !

பதறி விரைவாக மகிழுந்து ஓட்டிய ஓட்டுனரிடம்
பத்துநிமிடம் தாமதமாகப் போனால் பரவாயில்லை !

பூமியை விட்டு மிக விரைவாக என்னை
பத்து வருடங்கள் முந்தி போக வைத்திடாதே என்றவர் !

மாணவர் கவிதையை தான் வாசித்து அரங்கில்
மாணவருக்குப் பாராட்டை வாங்கித் தந்தவர் !

பாடாத பொருள் இல்லை எனும் அளவிற்கு
பல்வேறு பொருள்களில் பொருள்படப் பாடியவர் !

கவியரங்குகளில் கைதட்டல் கவிதைகள் வாசித்தவர்
கவிதைக்கு பெரும் மதிப்பை பெற்றுத் தந்தவர் !

ஏமாற்றத் தெரியாததால் அரசியலில் வெல்லவில்லை
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் உள்ளம் பெற்றவர் !

கல்வி வள்ளல் காமராசர் மதித்த கவிஞர்
கக்கன் வாழ் வேண்டுமென வாழ்த்திய கவிஞர் !

மக்கள் திலகமும், நடிகர் திலகமும் புகழ்பெறக் காரணமானவர்
மக்கள் மனதில் விட்டு நீங்காத பாடல்கள் வடித்தவர் !

காலார நடந்து சென்னை வீதியில் சிலை அருகே உறங்கிட
காவலருக்கு கையூட்டுத் தர பணமின்றி அலைந்தவர் !

பாட்டெழுதி அதே வீதியில் அய்ந்து சொந்த கார்கள்
பயணிக்க சொந்தப்படம் எடுத்து மகிழ்ந்தவர் !

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஊதியமென சம்பாதித்து
இந்தியாவைப் போல கடனும் பெற்றவன் என்றவர் !

ஒளிவுமறைவின்றி தன் வரலாறு வடித்தவர்
ஒப்பற்ற காந்தியடிகள் போல உண்மைகள் எழுதியவர் !

மகனுக்கு அறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டியவர்
மகன் மகள் கவிதை மட்டுமல்ல வரிகளையும் அடிக்காதவர் !

அதிகம் படிக்காவிட்டாலும் அதிகம் பாடியவர்
அதிகம் படித்தவர்களும் பார்த்து வியந்தவர் !

கொள்கைப் பாடல்கள் திரைப்படத்தில் எழுதியவர்
கொலைவெறிப் பாடல்களின் காலம் இது !

தமிழ் இக்கியங்களை பாடல்களில் வடித்தவர்
தமிழ்க்கொலை பாடல்களின் காலம் இது !

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
நிந்தன் அருமை இன்று உணர்கிறோம். !

கவியரசு என்றால் கண்ணதாசன், கண்ணதாசன் என்றால் கவியரசு

கவியரசு பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் !
----------------------------------------------------------------------------------------------
.கவியரசு கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
எட்டாத உயரம் உயரந்தவன் நீ !

கவியரசு பட்டத்திற்கு முற்றிலும்
குவலயத்தில் பொருத்தமானவன் நீ !

நான் நிரந்தரமானவன் என்று அறிவித்து
நிரந்தரமாக மக்கள் மனதில் நிலைத்தவன் நீ !

உன் பாடல் ஒலிக்காத வானொலி இல்லை உலகில்
உன் பாடல் ஒலிக்காத வானொலி வானொலியே இல்லை !

ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினரும்
அன்போடு ரசிக்கும் பாடல் உன் பாடல் !

எனக்குப் பிடித்த மதம் தாமதம் என்றுரைத்து
சினம் கொண்ட அவையைச் சிரிக்க வைத்தவன் நீ !

படைத்தவன் யார் ?என்பது முக்கியம் அல்ல
படைப்பைப் பாருங்கள் என்று அறிவுறுத்தியவன் நீ !

உனக்கு இணையான ஒரு கவிஞன்
உனக்கு அடுத்து யாருமில்லை என்பதே உண்மை !

உனக்கு நிகர் நீ மட்டுமே தான்
உன்னை விஞ்சிட எவருமில்லை உலகில் !

தொகைக் குறிப்பிடாதக் காசோலைத் தந்தபோதும்
தொகைக் குறிப்பிட ஆசைப் படாதவன் நீ !

பணத்திற்காக ஏங்கும இந்த உலகில்
பணத்திற்காக ஏங்காத நல்லவன் நீ !

செருக்கோடு இருந்த திரை உலகில் பலரின்
செருக்கை அகற்றிய கவிஞன் நீ !

கண்ணதாசனே உன் இயற்ப பெயர் முத்தையா
கற்கண்டென நீ வடித்த பாடல்கள் தமிழின் சொத்து ஐயா !

எங்கு நீ கற்றாய் இத்தனை வித்தை
இனிய பாடல்கள் பதிந்து மனதில் விதையாக !

காலத்தால் அழியாத கல்வெட்டு வரிகளை
காற்றினில் விதைத்த சகல கல வல்லவன் நீ !

நீ குடித்து விட்டு எழுதியதாக அறியாதவர்கள் உளறினர்
நீ குடித்து விட்டு எழுதவில்லைஅறிந்தோர் சொன்னார்கள் !

மகாத்மா காந்தியடிகளின் சத்திய சோதனைப் போல
மன வாசம் வீசும் ரகசியம் இல்லா வனவாசம் படைத்தாய் !

அத்திப் பூத்தது போல அதிசயமாகப் பூத்த கவிஞன்
அன்பில் குழந்தைப் போல உள்ளம் கொண்டவன் நீ !

வானில் இருந்து வந்த தேவ தூதன் நன் என்று சொல்லாதவன்
மண்ணில் இருந்து பிறந்து மண்மக்களுக்காக் பாடியவன் நீ !

மதுக் குடிக்க உரிமம் கேட்டு நீ விண்ணப்பித்த போது
மறுத்தார் கக்கன்ஜி தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக !

மது மட்டும் நீ குடிக்காமல் வாழ்ந்து இருந்தால்
மதுர கவி இன்னும் பல்லாயிரம் பாடி இருப்பாய் !

இயேசு காவியம் எழுதிய காலங்களில் நீ
மிகத் தூய்மையாக இருந்ததாகப் பேராயர் கூறினார் !

முன் பாதியில் உனக்கு இணையான நாத்திகன் இல்லை
பின் பாதியில் உனக்கு இணையான ஆத்திகன் இல்லை !

சிறு கூடல் பட்டி என்ற சிற்றூரில் பிறந்த நீ
சிகாகோ வரை புகழ் பலப் பெற்றாய் !

உன் பாடல் இல்லை என்று பொய் உரைத்தப் போதும்
உன் பாடல் தான் என்று அறுதியிட்டார் மக்கள் திலகம் !

உடலால் உலகை விட்டு மறைந்த போதும்
பாடலால் மக்கள் மனங்களில் வாழ்பவன் நீ !

உலகம் உள்ளவரை தமிழ் மொழி நிலைக்கும்
தமிழ் மொழி உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்
--------------------------------------------------------------
கவியரசர் கண்ணதாசன் ! கவிஞர் இரா .இரவி !  

சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்து
பெரும் கூடல் பாட்டு எழுதிய கவியரசர் !

முத்தையா அவர் எழுதிய பாடல்கள் எதுவும்
சொத்தையில்லை தமிழ் சொத்தானது !

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
எட்டாத கருத்துக்களை எட்டிட வைத்தவர் !

இராமனின் தந்தை தசரதனுக்கு மூன்று மனைவி !
கவிதையின் தந்தை கண்ணதாசனுக்கு மூன்று மனைவி !

பொன்னம்மா பார்வதி வள்ளியம்மை என்று
பெண்கள் மூவரின் நாயகன் கவியரசர் !

முடிசூடா மன்னராக திரை உலகில்
முத்தமிழில் திகழ்ந்தவர் கவியரசர் !

திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதுவதில்
தனி முத்திரை நன்கு பதித்தவர் கவியரசர் !

மயக்கமா கலக்கமா பாடலின் மூலம்
மக்களுக்கு தன்னம்பிக்கை விதைத்தவர் !

வந்த நாள் முதல் பாடலின் மூலம்
வந்த மனிதனின் மாற்றம் உணர்த்தியவர் !

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் பாடலின் மூலம்
குறுக்கு வழியின் தீமையை உணர்த்தியவர் !

தை பிறந்தால் வழி பிறக்கும் பாடலின் மூலம்
தவித்தவர்களுக்கு ஆறுதல் வழங்கியவர் !

ஆசையே அலை போலே பாடலின் மூலம்
ஆசையை அழித்திட அறிவுறுத்தியவர் !

பிறக்கும் போதும் அழுகின்றான் பாடலின் மூலம்
பிறந்த மனிதர்களுக்கு மகிழ்ச்சி தந்தவர் !

உள்ளதைச் சொல்வேன் பாடலின் மூலம்
உள்ளதைச் சொல்லி உள்ளத்தில் நின்றவர் !

அச்சம் என்பது மடமையடா பாடலின் மூலம்
அச்சம் அகற்றி வீரம் விதைத்தவர் !

போனால் போகட்டும் போடா பாடலின் மூலம்
போனவர்களுக்காக வருத்தாதே என்றவர் !

வீடு வரை உறவு பாடலின் மூலம்
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவர் ! 

சேரமான் காதலி என்ற உன்னத படைப்பிற்காக
சாகித்ய அகாதமி விருது பெற்றவர் !

குழந்தைக்காக வசனத்திற்காக தேசிய விருதை
குமுகாயம் போற்றிடப் பெற்றவர் கவியரசர் !

வணங்காமுடி என்ற புனைப்பெயரில் எழுதி
வணங்காமுடியாக வாழ்ந்தவர் கவியரசர் !

அர்த்தமுள்ள இந்துமதம் மட்டுமல்ல
இயேசு காவியமும் எழுதியவர் கவியரசர் !

முற் பாதியில் நாத்திகம் போதித்தவர்
பிற் பாதியில் ஆத்திகம் போதித்தவர் !

கவிதை கதை கட்டுரை நாடகம் அனைத்தும்
கணக்கின்றி வடித்த சகலகலாவல்லவர் !

கவியரசர் கண்ணதாசன் உடல் இல்லை !
கவியரசர் கண்ணதாசன் பாடல் உண்டு !

அழிவில்லை எனக்கு என்று சொன்னவர் !
அழியாத பாடல்கள் எழுதி நின்றவர் கவியரசர் !
---------------------------------
உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் ! 
கவிஞர் இரா .இரவி !
சிறு கூடல் பட்டியில் பிறந்த கண்ணதாசனே !
பெரும் பாடல் புலவனே ! கவியரசனே !
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
எட்டா உயரம் இலக்கியத்தில் அடைந்தவனே !
கவிதை கதை கட்டுரை வடித்தவனே !
கற்கண்டு எழுத்தில் சகல கலா வல்லவனே !
எந்த நாளும் எனக்கு அழிவில்லை என்றவனே !
எந்த நாளும் அழிவின்றி மக்கள் மனங்களில் நின்றவனே !
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்றவனே !
அந்த பறவை போலவே வாழ்ந்து காட்டியவனே !
அச்சம் என்பது மடமையடா என்றவனே !
அச்சம் இன்றி துணிவுடன் வாழ்ந்தவனே !
ஆறடி நிலமே சொந்தமடா என்றவனே !
அற்புத வாழ்வியல் தத்துவம் உரைத்தவனே !
உலகம் பிறந்தது எனக்காக என்றவனே !
உலகில் பிறந்து உணர்வில் கலந்தவனே !
வீடு வரை உறவு வீதி வரை மனைவி !
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவனே !
ஆசையே அலை போல என்றவனே !
ஆசையை அடக்க அறிவுறுத்தியவனே !
காலத்தைக் கடந்து நின்றவனே !
காலத்தால் அழியாத பாடல் படைத்தவனே !
கல்வெட்டு வரிகளை மனங்களில் பதித்தவனே !
கவிஞன் என்ற சொல்லிற்கு பெருமை சேர்த்தவனே !
உலகம் உள்ளவரை உன் பெயர் நிலைக்கும் !
உலகில் தமிழர் உள்ள வரை உன் பாடல் ஒலிக்கும் !

-- 
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
கருத்துகள்

பிரபலமான இடுகைகள்