முகநூலில் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தரராஜன்






முகநூலில் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தரராஜன் 




நமது வார மாத இதழ்களில் காலம் காலமாக உள்ள ஒரு பகுதி கேள்வி பதில் பகுதி. இதில் ரசனையோடு பதில் சொல்வதில் பலர் சமர்த்தர்கள் .குறிப்பாக குமுதம் அரசு பதில்கள்,சாவி பதில்கள், துக்ளக் சோ பதில்கள், போன்றவை பெயர் பெற்றவை. காலப்போக்கில் இவை இதழ்களில் ஒரு அங்கம் என்றாகி தங்கள் பெயரை அச்சில் காண விரும்புவோர்க்கு ஆறுதல் தரும் ஒன்றாகவும் ஆகிவிட்டன. மற்றபடி இதனால் பெரிய ஒரு சிறப்பை ஏற்படுத்த முடியவில்லை. நானும் இந்த பகுதியை காணும் போது பயணத்தில் பாலங்களைக் கடப்பது போல் கடந்து போய்விடுவேன். சில சமயங்களில் குறிப்பாக விமான பயணங்களில், பக்கவாட்டு மனித பொம்மைகள் நடுவில் நானும் ஒரு உயிர் பொம்மையாக அமர்ந்திருக்கும் தருணத்தில் தான் படிக்கும் எண்ணம் துடிக்கும். அப்போது எது கிடைத்தாலும் படித்துப் பார்ப்போம். _அப்படிப் படிப்பதும் மனதில் அடி ஆழத்தில் போய்விடும். நெடிய கார் பயணத்தில் பாட்டு கேட்பதும் இந்த வகையே.. இப்போதெல்லாம் டேப் ஐக்கொண்டு நாவல் வாசிப்பது சகஜமாகி விட்டது . இப்படி ஒரு பயணத்தில் ராணியில் வரும் திரு இறையன்பு அவர்களின் கேள்வி பதிலை வாசிக்க நேர்ந்தது. சம்பிரதாயமாக கேள்விக்கான பதிலாக இருக்கும் என்று கருதிய படியே தான் படித்தேன். என் கருத்து அப்படியே மாற ஆரம்பித்தது. பதில்களில் நான் முதிர்ந்த சிந்தனைகளையும், தெளிந்த உண்மைகளையும் காணத் தொடங்கினேன். இடக்கு முடக்கான கேள்விக்கு கூட நேர்த்தியான பதில் தந்து திருஇறையன்பு மிகச் சிறந்த சிந்தனையாளராக ஜொலிக்கிறார் . தொடர்ந்து வாசிக்கும் ஒரு பகுதியாக அது அமைந்து விட்டது. திரு இறையன்பு வை ஆட்சியாளர்கள் தான் சரியாக ப யன்படுத்துவதேயில்லை. அது என்ன சாபக்கேடோ தெரியவில்லை. அடுத்து நான் எந்த அரசியல் தலைவரை சந்திக்க நேர்ந்தாலும் ஏன் இந்த யானையை சாதாரண புல் வண்டி இழுக்க வே பயன்படுத்துகிறீர்கள் காஞ்சீபுரத்தில் மக்கள் பணியாற்றிய துபோல் பணியாற்ற விடமாட்டீர்களா என்று கேட்கத்தான் போகிறேன்.






கருத்துகள்