கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி !




கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !
 கவிஞர் இரா .இரவி !

ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு – ஓர் பார்வை !  பகுதி 1
கவிஞர் இரா. இரவி !

       ஏர்வாடியார் பன்முக ஆற்றலாளர்.  முதலில் கவிஞர்.  கவிதையின் மீது அளவற்ற காதல் கொண்டவர்.  அதனால் தான், தான் தொடங்கி இதழுக்கு கவிதை உறவு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.  பெயர் சூட்டியது மட்டுமன்றி கவிதைக்கு மட்டுமே முன்னுரிமை தந்து கவிதைகளை பிரசுரம் செய்து வருபவர். குடத்து விளக்காக  இருந்த என் போன்ற பல கவிஞர்களை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்து வருபவர். வளரும் கவிஞர்களின் வேடந்தாங்கலாக கவிதை உறவு இதழ் உள்ளது.

       கவிதை உறவு இதழில் ஆசிரியர் தலையங்கம், ஏழாம் பக்கம் கவிதை, மனத்தில் பதிந்தவர்கள், என் பக்கம், நூல் மதிப்பீடு இப்படி பல்வேறு பகுதிகளில் ஏர்வாடியார் எழுதி வந்தாலும், என்னை மிகவும் கவர்ந்திட்ட பகுதி நூல் மதிப்பீடு தான்.  காரணம் என்னுடைய பெரும்பாலான நூலிற்கு நூல் மதிப்பீடு எழுதி இருக்கிறார். அதனை படித்து மட்டற்ற  மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன்.  நான் அடைந்த மகிழ்ச்சியை, நூல் மதிப்பீடு பிரசுரம் செய்யப்பட்ட நூல் ஆசிரியர்கள், படைப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்பது உண்மை.  படைப்பாளிக்கு படைப்பைப் பாராட்டும் போது ஏற்படும் மகிழ்ச்சி, கோடி ரூபாய் தந்தாலும் வராது. 

       மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த மண் பற்று என்பது இருக்கும்.  இருக்க வேண்டும். திருநெல்வேலி அருகே உள்ள ஏர்வாடி என்ற ஊரில் பிறந்தவர் ஏர்வாடியார்.  இராமனாதபுரம் அருகே ஏர்வாடி என்ற ஊர் ஒன்று உண்டு.  ஏர்வாடி என்ற ஊரில் பிறந்து சிலர் புகழ் அடைந்து இருக்க்லாம்.  ஆனால் ஏர்வாடி என்ற ஊருக்கு புகழ் ஏர்வாடியார் அவர்களால் தான் வந்தது என்றால் மிகையன்று. 

 சென்னையில் இராதாகிருஷ்ணன் என்றால் சிலருக்கு தெரியாது.  ஆனால் ஏர்வாடியார் என்றால் எல்லோருக்கும் தெரியும். இவர் எந்தக்கட்சியிலும் சேராதவர்.  ஆனால் எல்லாக் கட்சியிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு.  காரணம் அவரது பண்பு.   நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர்.  நீதியரசர்கள் தொடங்கி உயர் அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் என்று பலரையும் நன்கு அறிந்து இருந்த போதும் நல்ல நட்பு இருந்த போதும் தனக்கென தன்னலமாக எதுவும் யாரிடமும் கேட்காத மாண்பாளர், நேர்மையாளர், செம்மையாக வாழ்பவர், திருக்குறள் போல வாழ்வாங்கு வாழ்ந்து வரும் தகைசால் ஆளுமையாளர்.

       புதுக்கவிதையின் தாத்தா கவிவேந்தர் மேத்தா அவர்களின் கண்ணீர் பூக்கள் கவிதை வெளிவரக் காரணமாக இருந்தவர் அவரது துணைவியார்.  தனது நகையை தந்து உதவி நூல் கொண்டு வந்தவர்.  அந்த நூல் வந்ததும் புகழ் பெற்று பல பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது.  அன்று அவர் உதவ மறுத்து இருந்தால் நூல் வந்து இருக்காது.

  அதுபோலவே இன்றைக்கும் பல படைப்பாளிகளுக்கு அவர்களது இல்லத்தரசி நகை தந்து உதவி வருகிறார்கள்.  வளரும் புதிய படைப்பாளர்களின் படைப்பை பதிப்பகங்கள் நூல் வெளியிட முன் வருவதில்லை.  பல புதிய வளரும் படைப்பாளிகள் மனைவியின் நகையால், சொந்தப் பணத்தால் தான் மிகவும் சிரமப்பட்டு நூல் வெளியிட்டு வருகிறார்கள்.  வெளியிட்ட நூல்களும் உடனடியாக விற்று, போட்ட பணம் வருவதும் இல்லை.  கொஞ்சம், கொஞசமாகவே வரும்.  மொத்தமாக சேர்வதும் இல்லை. 

 இப்படி மனவலியோடு இருக்கும் படைப்பாளிக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்கள் அனைவரும் படிக்கும் கவிதை உறவு இதழில் அதன் ஆசிரியர் ஏர்வாடியார் நூல் மதிப்பீடு எழுதினால் அதனைப் படிக்கும் படைப்பாளி அடையும் இன்பத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது.  உணர்ந்தவர்கள் அந்த உணர்வை நன்கு அறிவார்கள்.  வளமிக்க இதயத்திற்கு மருந்தாக அமையும். 

       ஏர்வாடியார் நல்ல பண்பாளர். அவர் நூல் மதிப்பீடு எழுதினால் நூலின் சிறப்புகளை எடுத்து இயம்புவதாகவே இருக்கும்.  நூலில் ஏதேனும் குறை இருந்தால் அதனை எழுத மாட்டார்கள்.  நிறையை மட்டுமே எழுதி பாராட்டுவார்கள்.  மற்ற பிரபல இதழ்கள் போல வேறு யாரிடமும் நூல் தந்து, எழுதி வாங்கி பிரசுரம் செய்வதில்லை.  கவிதை உறவில் நூல் மதிப்பீடு என்றால் இதழ் ஆசிரியர் ஏர்வாடியாரே நூல் முழுவதையும் படித்து விட்டு மிக நுட்பமாக விமர்சனம் எழுதுவார்கள்.  நுனிப்புல் மேய்வது போல அன்றி முழுவதும் ஆழ்ந்து படித்து எழுதுவார்கள்.

       அதனால் தான் கவிதை உறவில் நூல் மதிப்பீடு தாமதாமாக வந்தாலும் மிகத்தரமாக வரும்.  கவிதை உறவில் நூல் விமர்சனம் வந்தால் ISI முத்திரை பெறுவது போல. தரமில்லாத சில நூல்களும் அவருக்கு வருவது உண்டு.  தரமில்லை என்று எழுதி படைப்பாளியை காயப்படுத்த விரும்பாமல் நூல் மதிப்பீடு எழுதாமல் அவர் தவிர்த்து விடுவது அவரது உயர்ந்த பண்பிற்கு எடுத்துக்காட்டாகும்.

       வளர்ந்த எழுத்தாளர், வளரும் எழுத்தாளர், வளர வேண்டிய எழுத்தாளர் என்ற பாகுபாடு இன்றி எல்லோரது படைப்பையும் சமமாக மதிப்பீடு செய்து வருபவர் ஏர்வாடியார்.  தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் 120 நூல்களின் ஆசிரியர், இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் பிரபல எழுத்தாளர்.  இவர்கள் நூல் மட்டுமன்றி, முதல் நூல் வெளியிட்ட வளர வேண்டிய எழுத்தாளர் நூலையும் மதிப்பீடு பாகுபாடு இன்றி சமமாக மதித்து எழுதி வரும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் ஏர்வாடியார்.

       கலைமாமணி மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்று இருந்தாலும், பெற்ற விருதுகளை தலையில் ஏற்றிக் கொள்ளாத நல்ல மனிதர்.  அவருடைய எழுத்து தெளிந்த நீரோடை போல இருக்கும்.  படிக்கும் வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதமாக இருக்கும்.

       ஏர்வாடியாரிடம் யார் அணிந்துரை கேட்டாலும், தட்டாமல் தரும் நல்ல பழக்கம் உடையவர்.  இப்படி வழங்கிய அணிந்துரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்.  பல நூல்கள் வந்துள்ளன.  1996ஆம் ஆண்டில், வெளிவந்த அரிய நூல் ‘தோரணங்கள்’ நூலிற்கு தோரணமாக வழங்கிய அணிந்துரைகளின் அணிவகுப்பே தோரணங்கள் ஆகும்.

       என்னிடமும் சிலர் அணிந்துரை கேட்கிறார்கள்.  நூலைப் படித்து விட்டு அணிந்துரை வழங்கி வருகின்றேன்.  ஆனால் ஓர் அணிந்துரை எப்படி இருக்க வேண்டும்? அணிந்துரை தருபவர் எவ்வளவு அறிந்திருக்க வேண்டும்? என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக ‘தோரணங்கள்’ நூலின் ஆசிரியர் ஏர்வாடியார் தன்னுரையில் எழுதியதை பதச்சோறாக உங்கள் பார்வைக்கு இதோ!
       “அணிந்துரைக்கான நூலை மட்டுமல்ல ; அத்துறைத் தொடர்பான பல நூல்களையும் முன்னரே படித்துத் தெரிந்து தெளிந்து திறன் பெற்றிருக்க வேண்டும்.  அறுவைச் சிகிச்சைக்கு முன் உபகரணங்களையும், மருந்துகளையும், பிற அவசரத் தேவைகளையும் சேகரித்த பிறகே, உறுப்பையோ, உடலையோ திறந்து பார்ப்பது போல அணிந்துரை எழுத அவர் அமர்வதற்க்கு முன் அத்துறையில் அகலமான ஆழ்ந்த அறிவு இருக்கிறதென்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்”.

       மருத்துவ உவமை மிக நன்று. ஆம் இந்த இலக்கணத்தை கடைபிடித்து தான் ஏர்வாடியார் ஒவ்வொரு நூலிற்கும் அணிந்துரை என்றாலும் மதிப்புரை என்றாலும் கடைப்பிடித்து எழுதி வருகிறார்கள்.  எந்த நூலிற்கும், அவர் முழுவதும் படிக்காமல் மேலோட்டமாக அணிந்துரையோ, மதிப்புரையோ எழுதுவதில்லை என்பதை கொள்கையாகவே கடைப்பிடித்து வருபவர்.
       கலைமாமணி முதுபெரும் எழுத்தாளர் விக்கிரமன் அவர்களின் ‘காந்திமதியின் கணவன்’ என்ற நூலிற்கு வழங்கிய மதிப்புரையில் முடிப்பு என்பது முத்தாய்ப்பு.  எடுப்பு, தொடுப்பு. முடிப்பு மூன்றும் முக்கனிகளாக இனிக்கும்.  இதோ முடிப்பு, படித்துப் பாருங்கள்.

       “நல்ல நவீனத்திற்குரிய எல்லா அம்சங்களோடும், செறிவாய், மனதிற்கு நிறைவாய் வெளிவந்திருக்கிற இந்நூலைப் படித்ததில் பேரின்பம் எய்தியிருக்கிறா நான், எழுத்து சுவையில் இன்பம் பெற விழைபவர்களுக்கு இந்நவீனத்தைப் பரிந்துரைப்பேன்.   பயில்தோறும் பண்புடையாளர் தொடர்பென்று வள்ளுவன் கூறுவதற்கேற்ப சிறந்த மனிதர் எழுதிய, சிந்தையில் இனிக்கிற நூல் இது.  டாக்டர் விக்கிரமன் அவர்கள் வடித்துப் பரிமாறி இருக்கிற இவ்விருந்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என வரவேற்பதில் மகிழ்கிறேன்.

       டாக்டர் விக்கிரமன் அவர்கள் எழுதிய நவீனம் ‘காந்திமதியின் கணவன்’ என்ற நூல்.  1990 ஆம் ஆண்டு வெளிவந்தது.  அந்த நூலிற்கு அன்று எழுதிய மதிப்புரை 25 ஆண்டுகள் கழித்து இப்போது படித்தாலும் மூல நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் அற்புதமாக எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர் ஏர்வாடியார்.  காலத்தில் அழியாத கல்வெட்டு எழுத்துக்களை செதுக்கிய எழுத்து சித்தர் ஏர்வாடியார். நேர்மையாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப அவர்கள் மனம் திறந்து பாராட்டும் நேர்மையாளர் ஏர்வாடியார்.

       18.05.2000 அன்று கலைமாமணி ஏர்வாடியார் அவர்களின் 53-ஆவது பிறந்த நாளன்று வெளிவந்த நூல் “சில நந்தவனங்களில் நான்”.  இந்நூலும் மதிப்புரை அணிந்துரை தொகுப்பு நூல் தான்.  நூலின் பெயரே மிகவும் கவித்துவமாக சூட்டி உள்ளார்.

       திரு. சங்கர நாராயணன் என்பவரின் “நீலாம்பரி” என்ற கவிதை நூலிற்கு வழங்கிய அணிந்துரையில் கவிதைக்கு ஏர்வாடியார் தரும் விளக்கம் மிகவும் நுட்பமானது, திட்பமானது.

       “உள்ளதை உள்ளவாறு உரைப்பதற்கப்பால் உணர்ந்தவாறு உரைக்கிற, உணர்த்துகிற ஒப்பற்றதோர் கலையே கவிதைக்கலை.  இக்கலையில் கைதேர்ந்தவர்களை ‘கவிஞர்கள்’ என்று காலம் தன் கணக்கில் சேர்த்துக் கொள்கிறது.  தமிழ் மீது பற்று கொண்ட என் நண்பர் திரு. சங்கர நாராயணன் அவர்களை அவரது கவிதைகள் இக்கணக்கில் வரவு வைக்கின்றன்.”

       இந்த மதிப்புரைகளை படைப்பாளிகள் இன்று படித்தாலும் மனம் மகிழ்ச்சி அடைவார்கள் என்று உறுதி கூறலாம்.  அந்த அளவிற்கு ஏர்வாடியார் படைப்பாளிகளை பாராட்டுவதில் கஞ்சத்தனம் கடைப்பிடிப்பதில்லை. வள்ளலாகவே மனதாரப் பாராட்டி விடுவார்.  ஏர்வாடியார் தோற்றத்தில் மிக எளிமையாக இருந்தாலும் அவரது எழுத்து மிக்க வலிமையானது.  படைப்பாளிக்கு மகுடம் சூட்டுவதற்கு இணையாக மதிப்புரை நல்கிடும் மாண்பாளர் ஏர்வாடியார்.

       ‘நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லை என்றால், நான் தற்கொலை செய்து இருப்பேன்’ என்றார் காந்தியடிகள்.  மனிதனுக்கு நகைச்சுவை உணர்வு என்பது மிகவும் முக்கியம்.  அதனை வலியுறுத்தும் விதமாக ஏர்வாடியார் தந்த அணிந்துரையில் இருந்து சில வரிகள் இதோ!

       ‘சிரிப்பு வாங்கலையோ சிரிப்பு’ நூலாசிரியர் திரு. கைலாசம் அந்நூல் அணிந்துரை.

       “விலங்குகளிலிருந்து நம்மை வேறுபடுத்துகிற சில இயல்புகள் நகைச்சுவை உணர்வும் ஒன்று. மனிதர்களை சிரித்துப் பார்க்க முடியுமே தவிர விலங்குகள் சிரித்ததாய் வரலாறில்லை.  சிரிப்பைச் சிறந்த மருந்து என்கிறார்கள். சிரித்து வாழ்கிறவர்களுக்கும் சிறந்த ஆயுள் உண்டு.

       அன்று ஏர்வாடியார் எழுதிய அணிந்துரையை வழிமொழியும் விதமாக தமிழ்நாடு முழுவதும் நகைச்சுவை மன்றங்கள் தொடங்கி மக்களை சிரிக்க வைத்து நோய் நீக்கி வாழ்நாளை நீடித்து வருகிறார்கள்.  மதுரையில் மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் நகைச்சுவை மன்றம் தொடர்ந்து மாதாமாதம் நடத்துவதுடன் வருடம் ஒருமுறை ஆண்டு விழாவும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.  நானும் தவறாமல் சென்று சிரித்து வருகிறேன்.

       2004 ஆம் ஆண்டு வெளிவந்த நூல் ‘மலரோடு தென்றல்’ இந்நூலும் அணிந்துரை மதிப்புரைகளின் தொகுப்பு நூல் தான்.  இந்நூலில் ஏர்வாடியார் என்னுரையில் எழுதி உள்ள தொடக்கமே அணிந்துரை மதிப்புரை சிறப்பை எடுத்து இயம்புவதாக உள்ளது, பாருங்கள்.

       “கதை, கவிதை, கடிதம், கட்டுரை, நாடகம், உரைநடை, பயண இலக்கியரம் என்று எழுத்துக்கு இருக்கிற எத்தனையோ பரிமாணங்களைப் போல மதிப்பீடுகளும், அணிந்துரைகளும் கூட எழுத்தின் இன்னும் சில பரிமாணங்கள் என்றால் மிகையாகாது.  நல்ல நூலொன்றை மதிப்பீடு செய்வதற்கும் அணிந்துரை எழுதி அணி செய்வதற்கும் அந்நூல் தொடர்பான செய்திகளை அறிந்தவர்க்கே இயலும் என்பதால் அந்தந்த துறை சார்ந்த பெருமக்களிடம் தாமெழுதிய நூல்களைக் காட்டி அணிந்துரை பெறுவது வழக்கம்.  எழுத்தின் எல்லா வடிவங்களும் எனக்கு வருவதால், இந்த இனிய வாய்ப்பு அடிக்கடி கிடைக்கிறது”.

       ஆம், ஏர்வாடியார் சகலகலா வல்லவர்.  எழுத்தின் எல்லா வடிவமும் கைவரப் பெற்றவர்.  கொடி நாட்டியவர்.  சிகரம் தொட்டவர்.  எழுத்தில் இவர் தொடாத வடிவம் இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லா வடிவமும் தொட்டவர்.  அவ்வப்போது முகநூலில் ‘குறும்பா’ கவிதைகளும் தற்போது எழுதி வருகிறார்கள். அதனை முகநூல் நண்பர்கள் நான் உள்பட பலரும் படித்துவிட்டு பாராட்டி வருகின்றோம்.  ஏர்வாடியார் அவர்களுக்கு நூல் மதிப்பீடு என்பது மூளை  போன்றது.  மற்ற வடிவங்கள் மற்ற உறுப்புகள் போன்றது.  கணினி தொழில்நுட்பம் அறிந்த வல்லுனர்.

       ஏர்வாடியாரின் நூல் மதிப்புரை படித்து விட்டு நூல் வாங்கும் வாசகர்கள் இருக்கிறார்கள்.  சென்னை புத்தகத் திருவிழாவில் நூல் வாங்கச் செல்லும் நண்பர் என்னிடம் சொன்ன உண்மை இது.  ஏர்வாடியார் மதிப்புரை எழுதிய நூல்களை எழுதி வைத்துள்ளேன்.  அவற்றை வாங்கி வர திட்டமிட்டுள்ளேன்.  வாங்கி வந்து எனது இல்ல நூலகத்தில் சேர்க்க உள்ளேன் என்றார்.  ஏர்வாடியர்ர் எனது நூல்களான ‘ஆயிரம் ஹைக்கூ’, ‘புத்தகம் போற்றுதும்’ நூலிற்கும் மதிப்புரை எழுதி உள்ளார்கள் என்றேன் நண்பரிடம்.  எழுதி வைத்துள்ள பட்டியலில் உள்ளன என்றார்.  மனம் மகிழ்ந்தேன்.  வெளிட்ட வானதி பதிப்பகத்தாரும் மகிழ்வார்கள் .

       ‘அக்னிச்சாரல்’ என்ற நூலிற்கு வழங்கிய அணிந்துரையில் தொகுப்பில் கவிதையின் பெருமையை ரத்தினச் சுருக்கமாகவும் மனதில் பதியும்படியும் எழுதிய வைர வரிகள் இதோ!

       “மொழிக்கு மெருகூட்டுவது கவிதை, மனிதர்களுக்கு முறுக்கூட்டுவதும் கவிதை தான்.  உணர்ச்சிகளின் உள்ளீடாகவும், உணர்வுகளைச் சுண்டியிழுக்கிற உபகரணமாகவும் விளங்குவது கூடக் கவிதை தான். என்னவெல்லாம் இருக்கும் என்றால் கவிதையில் எல்லாமும் இருக்கும் எனலாம்”.

       “கவிதை மொழியின் மூத்த இலக்கிய வடிவம் முதலில் வந்ததும் கவிதை தான்.  கவிதை தவிர்க்க இயலாதது.  தலைசிறந்ததும் கூட.  கவிதை தானாக வருவது.  நெஞ்சில் தேனாக இனிப்பது. எந்த மொழியானாலும் கவிதை எப்போதும் இருப்பது, ஆனால் இது எப்போதும் வருவதில்லை”.

       கவிதையின் மேன்மையை இந்த அளவிற்க்கு இதுவரை யாரும் அறுதியிட்டு கூறவில்லை என்று உறுதி கூறலாம்.  அந்த அளவிற்கு கவிதை குறித்தான விளக்கத்துடன் நூலிற்கு மதிப்புரை எழுதுவது என்பது ஏர்வாடியாரின் வழக்கம், பழக்கம்.

       நெல்லையில் பிறந்து மதுரையில் வளர்ந்து, சென்னையில் சிறந்த இனிய நண்பர், திரைப்படப் பாடல் ஆசிரியர் நெல்லை ஜெயந்தா அவர்களின் நிலாவனம் என்ற நூலிற்கு ஏர்வாடியார் அவர்கள் நூல் மதிப்புரையில் உள்ள முடிப்பு வரிகள் காண்க.

       “கர்மவீரர் காமராசரைக் கவிதையில் பதிவு செய்யாத கவிஞரே இல்லை எனலாம்.  ஜெயந்தா தன் பங்கைச் செவ்வனே செய்துள்ளார். 

 ‘பள்ளிக்குப் போனவர்கள், பார்த்ததெல்லாம் மாணவர்களின் புத்தகப்பையை, இவர் தான் பார்த்தார் இரைப்பையை”. 

இதமான சுகமான வரிகள் என்பதோடு எழுச்சி மிக்க என்றும் பாராட்டத்தக்க அற்புதமான கவிதை வரிகளோடு நிலாவனத்தில் நடந்து வந்த அனுபவம்; யாருக்கும் நினைவில் நிற்கும்”.

       படிக்காத மேதை காமராசர் பெயரில், மதுரை பல்கலைக்கழகமே உள்ளது. ஏழை மாணவர்களின் பசியாற்றிய வள்ளலார்.  சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல் முதல்வர் காமராசர் பற்றி நெல்லை ஜெயந்தா அவர்கள் எழுதிய வைர வரிகளை பற்றிப் பிடித்து ஏர்வாடியார் அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை மதிப்பு மிக்க உரை.  இன்று இதனை இனிய நண்பர் நெல்லை ஜெயந்தா படித்தாலும் இன்னும் பல கவிதைகள் கல்வி வள்ளல் காமராசர் பற்றி எழுதத் தூண்டும் விதமாக இருக்கும், ஏர்வாடியாரின் எழுத்துக்கள்.  காமராசர் பற்றி நான் எழுதிய ஹைக்கூ நினைவிற்கு வந்தது.

       காமராசர் காலமானதல்ல
       காலமானது
       பொற்காலம்!

       சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் எந்த நூலாக இருந்தாலும் மதிப்புரை எழுதிடும் ஆற்றல் ஏர்வாடியாருக்கு உண்டு.  பன்முக ஆற்றலாளர் பல்துறை வித்தகர்.  அனுபவம் மிக்கவர்.  ஏர்வாடியார் எழுதிய நாடகங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்கின்றன.  கவிதைகள் பல்வேறு வானொலிகளில் ஒலிபரப்பாகி இருக்கின்றன.

       மனத்தில் பதிந்தவர்கள் பகுதி, கவிதை உறவு இதழில் மாதம் ஒரு கட்டுரை தான் எழுதி வருகிறார்கள். அதில் முதல்வர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் என்று பல பிரபலங்கள் பற்றி எழுதிவரும் ஏர்வாடியார்.  சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணிபுரியும் சாதாரணமான என்னைப் பற்றியும் மனத்தில் பதிந்தவர்கள் பகுதியில் என்னைப் பற்றி எழுதிய ஒரே ஒரு கட்டுரை ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை.  சென்ற இடமெல்லாம் கட்டுரை குறித்து பாராட்டாதவர்கள் யாருமில்லை.  சாதாரணமான என்னைப் பற்றியும் எழுதி விட்டதால், என் போன்ற சக கவிஞர்கள் ஏர்வாடியார் நம்மைப் பற்றி எழுத மாட்டாரா? என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.  அந்த அளவிற்கு சக்தி மிக்கது ஏர்வாடியார் எழுத்துக்கள்.

       என் போன்ற சக கவிஞர்கள் எல்லோரையும் பற்றி மனத்தில் பதிந்தவர்கள் பகுதியில் மாதம் ஒருவராக எழுத எழுத ஏர்வாடியாரின் ஆயுள் நூற்றாண்டு கடந்து நீளும் என்ற நம்பிக்கை உண்டு.  இலக்கியம் படித்தவர்களுக்கு நோய் வருவதில்லை.  குறிப்பாக தமிழ் இலக்கியம் படிப்பவர்களுக்கு ஆயுள் நீளும்.  இதயம் இதமாகும் கோபம் வராது.  ஏர்வாடியார் கோபப்பட்டு நான் இதுவரை பார்த்ததே இல்லை. ‘இன்னா செய்தாரை’ திருக்குறளை படித்தது மட்டுமன்றி வாழ்விலும் கடைப்பிடித்து வருபவர்.

       ஏர்வாடியார் அவரது மகிழுந்துவை அவரே ஓட்டி வரும் பழக்கம் உள்ளவர்.  சில படைப்பாளிகள் நூல் அனுப்பிய மறுநாளே அலைபேசியில் அழைத்து ஆர்வம் மிகுதியில் நூல் மதிப்புரை கவிதை உறவில் எப்போது வரும் என்று மகிழுந்துவை சென்னை மாநகரில் ஓட்டு வரும் போது கேட்பதுண்டு.  நானும் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் இக்காட்சியினை நேரில் பார்த்து இருக்கிறோம்.  அவரோடு மகிழுந்தில் பலமுறை பயணப்பட்டு இருக்கிறோம்.  அப்போதும் ஏர்வாடியார் எந்தவித கோபமின்றி, பதட்டமுமின்றி பண்போடு பதில் சொல்வார்கள்.  நூல் முழுவதும் படித்து முடித்து விட்டு விமர்சனம் பதிவு செய்கிறேன் என்பார்கள். கோபப்படாத நல்ல உள்ளத்தை உயர்ந்த பண்பை நான் ஏர்வாடியாரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

       மகாகவி பாரதியார் போல கவிதை எழுதுவதோடு நின்று விடாமல் எழுதியது போலவே வாழ்ந்து வரும் நல்லவர் ஏர்வாடியார்.  இவ்வளவு ஆற்றல் மிக்கவரை இலக்கிய உலகம் தமிழகம் இன்னும் பெரிய அளவில் அங்கீகாரம் செய்யவில்லை என்ற வருத்தம் ஏர்வாடியாருக்கு இல்லை. ஆனால் எனக்குண்டு.  

ஏர்வாடியார் கேரளாவில் பிறந்து இருந்தால் தலையில் வைத்துக் கொண்டாடி இருப்பார்கள். கேரளா அளவிற்கு இங்கு இலக்கியவாதிகளை மதிக்க தெரியவில்லை . நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் இன்றி அரசியல் கருத்துக்கள் இன்றி கவிதை, கட்டுரை, நூல் மதிப்புரை தாங்கி வரும் ஒப்பற்ற கவிதை உறவு மாத இதழை பரவலாக எல்லோரும் சந்தா செலுத்தி வாங்கினால் ஏர்வாடியார் மனம் மகிழ்வார்கள்.  தரமான இலக்கிய இதழை தமிழர்கள் அங்கீகரிக்க முன்வர வேண்டும் என்பதே என் ஆசை.

       கவிதை உறவு இதழை கடல் கடந்து அயல்நாடுகளிலும் படிக்கிறார்கள்.  இலண்டன் கல்லூரி துணை முதல்வர் கவிஞர் புதுயுகன், சிவயோகம் மலர் ஆசிரியர் பொன் பாலசுந்தரம், பத்திரிகையாளர் ஐ. தி. சம்மந்தன், கனடா எழுத்தாளர் www.tamilauthors.com இணையத்தின்    ஆசிரியர் அகில், ஜெர்மனி தம்பி புவனேந்திரன் உள்பட பல நண்பர்கள் மின்னஞ்சல் வழி கவிதை உறவு இதழைப் படித்துவிட்டு பாராட்டி வருகிறார்கள்.

       மு.வ. அவர்களின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் எழுதிய நூல் மு.வ. அல்லது முன்னேற்ற வரலாறு’ நூல் மதிப்புரை கவிதை உறவு இதழில் ஏர்வாடியார் அவர்கள் எழுதியிருந்தார்கள்.  படித்து வியந்து போனேன்.  நானும் இந்த நூலிற்கு விமர்சனம் எழுதி www.eraeravi.com  என்ற எனது இணையத்தில் பதித்து உள்ளேன்.  இருந்தபோதும் ஏர்வாடியாரின் எழுத்துக்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.  நானும் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் அலைபேசியில் பேசாத நாட்கள் இல்லை எனலாம்.  அப்படிப் பேசும் ஒவ்வொரு முறையும் ஏர்வாடியாரின் எழுத்தாற்றல் பற்றி தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் பாராட்டாத நாளே இல்லை.  மனதார பாராட்டி மகிழ்வார்கள்.

       “டாக்டர் மு.வ. அவர்களின் ஆற்றல் குறித்து அதிகம் அறிந்து வைத்திருக்கிற அவரைப் போன்ற ஆற்றலாளர் பேராசிரியர் இரா. மோகன் அவர்கள் ஆய்வு நோக்கிலும், அனுபவ நோக்கிலும் ஆழமாகத் தெரிந்து, தெளிந்து நூல்கள் சிலவற்றைத் தந்து நூற்றாண்டு விழா நினைவில் தன்னையும் பதிவு செய்து கொண்டுள்ளார்”.

       மூத்த பத்திரிகையாளர் இனிய நண்பர் ப. திருமலை எழுதிய காந்தி தேசம் நூலின் மதிப்பீடு படித்தேன். நூல் என்ற கனி பிழிந்து அதன் சாறாக மதிப்பீடு வழங்கும் நுட்பம் கற்றவர் ஏர்வாடியார். 

 “கௌரவக் கொலைகள், சிறையில் சாவுகள், கந்துவட்டி, பெண்போலீஸ் தற்கொலை, ஊழல்கள் என்று சமூகம் சார்ந்த பல கட்டுரைகளை வாசிக்கும் போது நம்மைச் சுற்றி இத்துணை அவலங்களா என்று அச்சமுற நேர்கிறது.  சமூக அக்கறையுடன் தீர்வுகளுமாய இந்த நூல் இன்று தேசத்துக்கும் நமக்கும் தேவையானதாயிருக்கிறது. தந்திருக்கிற திருமலை அவர்களைப் பாராட்டி மகிழ வேண்டும்”.

       இந்தியாவிற்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்டிட முதல்முதலில் கோரிக்கை வைத்தவர் தந்தை பெரியார்.  அவர் சொன்ன அந்தப் பெயர் நாட்டிற்கு சூட்டாவிட்டாலும் எழுதிய நூலிற்கு சூட்டிய ப. திருமலை அவர்களின் நூலிற்கு மதிப்புரை எழுதியது மட்டுமன்றி கவிதை உறவு நூல் போட்டிக்கு வந்த நூல்களில் காந்தி தேசம் நூலிற்கு சிறந்த நூல் பரிசும் வழங்கி மகிழ்ந்தவர் ஏர்வாடியார்.

       இலண்டன் கல்லூரி துணை முதல்வர் கவிஞர் புதுயுகன் அவர்கள் எழுதிய ‘மடித்து வைத்த வானம்’ நூலிற்க்கு ஏர்வாடியார் எழுதிய அணிந்துரை நூலாசிரியரின் பின்புலத்தை படம் பிடித்துக் காட்டும் விதமாக உள்ளது.  பாருங்கள்.

       “மகாத்மா காந்தி என்ற பிரமாண்டமான படைப்பைத் தமிழுக்குத் தந்த பெருமைக்குரிய புலவர் இராமானுஜ கவிராயர் அவர்களுடைய பெயரன் என்கிற புகழோடு விளங்குகிற கவிஞர் புதுயுகன் மென்பொருளைக் கையாள்கிறவர்.  அது அவருக்குக் கை நிறைய ஊதியௌம் தருகிறது என்றாலும் மனம் நிறைகிறது என்கிற அளவுக்கு மிகச்சிறந்த கவிதைகளைப் படைக்கிறார்.

       இராமன் மிதித்ததும் கல் பெண்ணாகியது என்பார்கள். அது கற்பனை. ஆனால் ஏர்வாடியாரின் பார்வை பட்ட நூல் பிரபலமாகும் என்பது உண்மை.  எனது சமீபத்திய நூல்கள் ஏர்வாடியாரின் பார்வை பட்டு எழுத்தில் வடித்த பின்னே தான் பிரபலமானது.  என் போன்ற பல வளரும் படைப்பாளிகளின் படைப்பை தாயுள்ளத்துடன் உச்சி மோர்ந்து பாராட்டி வரும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் ஏர்வாடியார்.

  ‘தோன்றின் புகழொடு தோன்றுக’ என்ற திருக்குறளுக்கு இலக்கணமானவர் ஏர்வாடியார்.  புகழோடு தோன்றிய போதும் தலைக்கணம் இல்லாத எளிய மனிதர்.  இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்மாதிரியாக விளங்கிடும் மிகச்சிறந்த ஆளுமையாளர் ஏர்வாடியார்.  வாழ்க பல்லாண்டு.
-----------------------------------------------------------------------------------------------------
ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு – ஓர் பார்வை – பகுதி 2
கவிஞர் இரா. இரவி.
*******
       ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு மட்டும் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறலாம்.  அந்த அளவிற்கு கருத்துச் சுரங்கமாக நூல் மதிப்பீடு உள்ளது.  கவிதை உறவு மாத இதழில் நூல் மதிப்பீடு வராத மாதம் இல்லை என்று சொல்லலாம்.  மாதந்தோறும் சில நூல்களை எடுத்துக்கொண்டு அந்த நூலில் உள்ள சிறப்பை மட்டுமே எடுத்து எழுதுவதை தமது கொள்கையாகக் கொண்டவர் ஏர்வாடி.

       முன்னோரு காலத்தில் அன்னம் என்று ஒரு பறவை இருந்ததாம்.  அப்பறவை பாலில் தண்ணீர் கலந்து இருந்தால் தண்ணீரை விட்டு விட்டு பாலை மட்டும் பிரித்து அருந்துமாம்.  அது போல ஏர்வாடியார் நூலில் உள்ள நல்லவை பற்றி மட்டுமே எழுதுவார்.  அல்லவை இருந்தால் அது பற்றி எழுத மாட்டார். அன்னப்பறவை போன்ற குணம் படைத்தவர் ஏர்வாடியார்.

       ஏர்வாடியார் அவர்கள் கதை, கவிதை, கட்டுரை எழுதிடும் படைப்பாளி என்பதால், படைப்பாளியின் மனதை காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக எழுதுவார்கள்.  சில ஆயிரங்கள் செலவழித்து நூல் அச்சிட்ட படைப்பாளிக்கு ஏர்வாடியார் கவிதை உறவு மாத இதழில் கோடி ரூபாய் கிடைத்தாலும் வராத மகிழ்ச்சி கவிதை உறவில் அச்சில் பார்த்தால் வந்து விடும்.

       அப்துல்கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக, இன்றைய இளைஞர்கள் அதிகம் நேசிக்கும் சிறந்த சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் 40-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி உள்ளார்கள்.  நாடு அறிந்த நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல, நேர்மையான அதிகாரி.  அவருடைய 'நெஞ்சைத் தொட்டதும், சுட்டதும்' நூலை நான் படித்தேன்.  ஆனால் கவிதை உறவில் ஏர்வாடியார் நூல் மதிப்பீடு எழுதிய பின்பு திரும்பவும் அந்த நூலை எடுத்து வாசித்து மகிழ்ந்தேன்.  காரணம் நூலின் சிறப்பினை மிக நுட்பமாக உணர்த்திடும் ஆற்றல் பெற்றவர் ஏர்வாடியார்.

       நூல் மதிப்பீட்டிலிருந்து சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு இதோ!
       “இந்தக் கட்டுரைகள், பெண்கள் பெருமை, சுற்றுலாச் சிறப்புகள், தம் இளமை, தாம் வியந்த தாய்மை குறித்தவையாக நம்மைப் பெரிதும் ஈர்க்கின்றன.  பார்க்கும் காட்சிகளில் முப்பட்டை வடிவம் (3டி) என்பது போல் படிக்கும் போதே நமக்குப் பார்க்கும் நெகிழ்வையும், நிறைவையும் ஏற்படுத்துகின்றன.  கட்டுரைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான இவரது இன்னுமோர் எடுத்துக்காட்டு இந்நூல்.  எழுத்தும் எழுத்தாளரும் பாராட்டுப் பட்டியலில் வருகிற பெருமைக்குரியராதல் இதன் சிறப்பு”.

       ஆம், நல்ல எழுத்து என்பது ஒரு வாசகன் படிக்கும் போதே நூலில் வருபவை வாசகனின் மனக்கண்ணில் காட்சியாக விரிய வேண்டும்.  முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் நூலான நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் நூல் படிக்கும் போது நாம் உணரும் அனுபவத்தை ஏர்வாடியார் நூல் மதிப்பீட்டில் மிக நுட்பமாக உணர்த்தி உள்ளார்.  பாராட்டுக்கள்.

       ஒரு நூல் விமர்சனம் படித்தால் அந்த நூலை உடன் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் விதமாக இருக்க வேண்டும்.  ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு படித்தால் அந்த நூலை படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கும்.

       சுற்றுலாத் துறையின் செயலராக முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் இருந்த போது சுற்றுலாத் துறையின் ஆணையராக இருந்தவர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப. அவர்கள்.  இருவரின் காலம் சுற்றுலாத் துறையின் பொற்காலம் என்று சொல்லுமளவிற்க்கு பல நல்ல திட்டங்கள் நிறைவேறின.  இவர்கள் இருவரும் அரசுப்பணியோடு நின்று விடாமல் , எழுத்துப் பணியிலும் முத்திரை பதித்து வருபவர்கள். முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப. அவர்களின் 'கல்வி பூங்காவில் சிந்தனைப் பூக்கள்' நூலை நான் படித்து இருக்கிறேன். நூல் விமர்சனம் எழுதி எனது இணையத்தில் www.eraeravi.com  பதிவு செய்துள்ளேன்.  ஆனால் ஏர்வாடியார் அவர்கள் கவிதை உறவு இதழில் இந்த நூலின் மதிப்பீடு எழுதி இருந்தார்கள், படித்து வியந்து போனேன்.

       “ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்” என்பதை பவணந்தி அடிகளின் பாடல் வரிகளால் புகட்டியுள்ளார். நூலாசிரியர் 3-ஆவது பகுதி இளைஞர்கள் குறித்தது.  நம்பிக்கைச் சிந்தனைகளை இதில் நிரம்பத் தந்துள்ளார். அன்பு, உழைப்பு, நிதானம் போன்றவற்றின் அவசியத்தை நல்ல எடுத்துக்காட்டுகளுடன் நிறுவுதல் அருமை. பெண்கள் குறித்தும் ஒரு பகுதி பயன் தருகிறாது.  நிறைவாக கல்வி தொடர்பான செய்திகள், மேனாட்டார் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. சுவையான சின்னச்சின்ன கதை வெளிச்சங்கள், கருத்துச் சிதறல்கள் இயல்பான நடை யாவும் இந்நூலை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவதால் நூல் இலகுவாக வெற்றி பெற்று விடுகிறது."

       கல்வியின் மேன்மை குறித்து சிறப்பாக விளக்கிய நூலின் ஆசிரியரான முனைவர் மூ. இராசாராம் அவர்கள் தமிழ்த்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை செயலராக இருந்து தனிமுத்திரை பதித்து வருகிறார்கள். குறிப்பாக மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவி மாதாமாதம் தமிழ் வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கம் தொடர்ந்து நடைபெறுவதற்கு காரணமாக இருந்து வருகிறார்கள்.

       ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80வது பிறந்த நாள் விழா சென்னையில் சீரும் சிறப்புமாக நடந்தது.  கவிஞர் கவிமுகில் அவர்களும் விழிகள் பதிப்பக நடராசன் அவர்களும் இணைந்து பிரமாண்ட விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள்.  அந்த விழாவில் எனக்கு எழுத்தோலை விருதும் கவிதை உறவு இதழுக்காக ஏர்வாடி யாருக்கும் விருது வழங்கினார்கள். 

 ஹைக்கூ கவிதைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்தியதில் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு சிறந்த இடம் உண்டு.  அவருடைய நூலான தத்து பித்துவம் நூல் மதிப்பீடு ஏர்வாடியார் அவர்களால் கவிதை உறவு இதழில் எழுதப்பட்டது.  படித்து விட்டு பிரமித்துப் போனேன்.  எல்லோருக்கும் போல ஏர்வாடியாருக்கு 24 மணி நேரம் தானா? அல்லது இவருக்கு மட்டும் கூடுதலாக நேரம் உண்டோ! என்று வியந்து போனேன்.

       ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளின் மேல் இலாவகமாக பயணிப்பது போல, ஏர்வாடியார் படிப்பு, விமர்சனம் என்ற இரண்டு துறையிலும் பயணித்து தனி முத்திரை பதித்து வருகிறார். நூல் மதிப்பீட்டிலிருந்து சிறு துளிகள் இதோ!

       “தமிழன்பன் அவர்களின் பேனா வித்தகம் வாழ்வியலை உணர்த்துகிறது.  எளிமையாக இருப்பதே கவிதை. இனிமையாக சுவைக்கவே கவிதை என்ற கவிதையின் எதிர்பார்ப்பை தமிழன்பன் அவர்களும் கற்றுத் தருகிறார். ‘எல்லோரும் இனிதாகப் புரிந்து கொள்ள எளிதாகப் புல்லான சொல் மேலே புனையுன்னைக் கவிதையிலே’ என்ற வரிகளில் முத்து முத்தான கவிதைகள் தத்துவமாகவும் பித்துவமாகவும் அருமை!"

       ஆம், ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் வாழ்வியல் கருத்துக்களை எளிமையாகவும் இனிமையாகவும் வடித்து உள்ளார்கள்.

       இனிய நண்பர் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் தான் ஒரு பெரிய எழுத்தாளர் என்பதை தலையில் எப்போதும் ஏற்றிக் கொள்ளாதவர்.  மதுரையின் பெருமைகளில் ஒன்றாக விளங்குவார்.  பரபரப்பான சூழ்நிலையிலும் நான் எனது நூல் கொடுத்தால் உடன் மதிப்புரை  எழுதிக் கொடுத்து வியப்பில் ஆழ்த்திடும் விந்தை மனிதர்.  அவருடைய நூலான, ‘மனம் ஒரு மர்ம தேசம்’ பற்றி கவிதை உறவு இதழில் ஏர்வாடியார் எழுதி இருந்த நூல் மதிப்பீடு படித்தேன்.  நூலின் மதிப்பை மேலும் உயர்த்துவதாக இருந்தது.  பொதுவாக படைப்பாளிகளைப் பாராட்டுவதில் ஏர்வாடியார் பாரி வள்ளல் என்றே சொல்லலாம்.  பாராட்டுவதில் அவருக்கு கஞ்சத்தனம் பிடிக்காது.  யாரையும் மனம் திறந்து பாராட்டுவது ஏர்வாடியாரின் சிறப்பியல்பு.

        ‘மனம் ஒரு மர்ம தேசம்’ நூலை விமர்சனம் செய்ய வேண்டும் என்று என்னிடம் ஏர்வாடியார் அலைபேசியில் சொன்ன அன்றே நூலை வாங்கி அனுப்பி வைத்தேன்.  அந்த மாத கவிதை உறவில் சுடச்சுட விமர்சனம் பதிவு செய்து இருந்தார்கள்.  கவிதை உறவில் நூல் மதிப்புரை படித்து விட்டு இனிய நண்பர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களும் அலைபேசியில் என்னை அழைத்து ஏர்வாடியாரின் எழுத்தாற்றல் பற்றி குறிப்பிட்டு வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.  இது போன்ற பல மலரும் நினைவுகளை மகிழ்வித்தது இந்த நூல் மதிப்பீடு.

       “வானத்தைப் போன்று மனம், வானம் எப்படி எல்லா அளவுகளுக்கும் பரவிக் கிடக்கிறதோ, அப்படித்தான் மனம்.  அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் மறவாமல் பல எடுத்துக்காட்டுகளோடு எழுதி இருக்கிறார்.  நூலாசிரியர் மனம் குறித்துச் சிந்திக்கிற போது கட்டுப்பாடற்ற இளமைப் பருவத்தின் பொறுப்பை விவரிக்காமல் தொட்டிருக்கிறார்”.  மனத்தை மர்மதேசத்திலிருந்து தர்ம தேசமாக மாற்றிக் கொண்டால் கவலை, வருத்தம், வலி, வேதனை இல்லை என்று நூல் நிறைகிறது.  நம் மனமும் நிறைந்து வழிகிறது.  திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய, இன்றைக்கு மிகவும் தேவையான நூல்”.

       ஏர்வாடியார் கவிதை உறவு இதழில் பல்லாண்டுகளாக நூல் மதிப்பீடு எழுதி வருகிறார்கள்.  கடல் போன்றது அவருடைய நூல் மதிப்பீடு.  கடலை குவலயத்தில் அடைக்கும் முயற்சி தான் இந்த நூல் மதிப்பீடு குறித்த மதிப்பீடு. மலை அளவிற்கு அவர்கள் எழுதி குவித்து இருந்தாலும் மடு அளவிற்கு எடுத்து இயம்பிட முயன்றுள்ளேன்.  ஏர்வாடியார் நூல் மதிப்பீடு என்று வழங்கிய சாரத்தின் சாரத்தை நான் எழுதிட முயன்று உள்ளேன்.  எனவே பதச்சோறாக சில நூல் மதிப்பீடுகள் மட்டுமே இங்கே மேற்கோள் காட்டி உள்ளேன். அவருடைய அனைத்து நூல் மதிப்பீடுகளும் நான் படித்த போதும் அனைத்தையும் மேற்கோள் காட்டினால் இந்த நூலில் மற்றவருக்கு இடம் இருக்காது.

       தன்னம்பிக்கை, எழுத்து, பேச்சு இரண்டிலும் முத்திரை பதித்து வருபவர்.  கோவையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழ்பவர் கவிதாசன்.  எல்லோரிடத்திலும் தன்னம்பிக்கை என்ற சுடர் எரிந்து கொண்டு இருந்தாலும் அச்சுடரை தூண்டி விடும் எழுத்துக்கும், பேச்சுக்கும் சொந்தக்காரரான கவிஞர் கவிதாசன்.  மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் இலக்கியங்களில் தன்னம்பிக்கை என்ற தலைப்பில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றி மாணவர்களின் கைதட்டலை பரிசாகப் பெற்றவர் கவிஞர் கவிதாசன். 

 கவிஞர் கவிதாசன் நூலான “திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன்’ நூல் மதிப்பீடு கவிதை உறவு இதழில் ஏர்வாடியார் எழுதி இருந்தார்கள். மிகச்சிறப்பாக இருந்தது. “உப்பில்லாமல் கூட உயிர் வாழலாம். ஆனால் நட்பில்லாமல் உயிர் வாழ முடியாது”  இந்த வைர வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் கவிதாசன். நட்பின் மேன்மை பற்றி ரத்தினச் சுருக்கமாக விதைத்த வரிகள்.  மதுரையில் பேசும் போது மட்டுமன்றி அவர் பேசிடும் எல்லா மேடைகளிலும் இந்த வைர வரிகளை மேற்கோள் காட்டி பேசுவார்கள்.  அதனை மேற்கோள் காட்டி எழுதிய நூல் மதிப்பீடு மிக நன்று.

  “நூல் முழுவதும் நிகழ்ச்சிகள், நண்பர்கள், நல்ல அனுபவங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள், சாதனைகளைத் தந்திருக்கிறார்.  படிக்க இதமான தமிழ்.  கவிதாசன் அவர்களின் வாழ்க்கை தான் இந்நூல் என்றாலும் நமது வாழ்க்கைக்கான செய்திகளும் நூலில் நிரம்ப உள்ளன.  பயனுள்ள நூல்.  கவிதாசன் அவர்களைப் பாராட்டிற்குரியவராக்குகிறது நூல்."

       ஏர்வாடியார் ஒவ்வொரு நூலின் மதிப்பீடு எழுதும் போது முடிப்பு என்பது மிகவும் முத்தாய்ப்பாக இருக்கும். நூல் ஆசிரியர் படித்தால் பூரித்து மகிழ்வார்.  இன்னும் தொடர்ந்து நூல்கள் எழுத வேண்டும்.  ஏர்வாடியாரின் பாராட்டைப் பெற வேண்டும் என்றா உத்வேகத்தை படைப்பாளிக்கும் விதைக்கும் ஆற்றல் ஏர்வாடியாரின் எழுத்துக்கு உண்டு.  ஏர்வாடியார் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது பெருமை.  ஏர்வாடியார் நூல் மதிப்பீடு எழுதும் வண்ணம் நாம் நூல் எழுதுகிறோம் என்பது படைப்பாளிகளுக்கு பெருமை.

       ‘தோன்றின் புகழோடு தோன்றுக’ என்ற உலகப் பொதுமறைக்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர் ஏர்வாடியார்.  பெரியவர், சிறியவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், பணக்காரர், ஏழை என்ற எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருடனும் சமமாகப் பழகிடும் பண்பாளர்.  ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்ற திருக்குறள் போல என்றும் வன்சொல் பயன்படுத்தாதவர்.  இன்சொல் பேசி எல்லோருடனும் அன்பாகப் பழகி வரும் நல்லவர். சென்னைவாழ் மக்களுக்குரிய பரபரப்பு இல்லாதவர். 

 ஏர்வாடியாரை மதுரையில் சந்தித்தாலும் சென்னையில் சந்தித்தாலும் பரபரப்பு இன்றி எப்போதும் ஒரே மாதிரியாக இன்முகத்துடன் உரையாடும் பண்பாளர்.அவருக்கு சினம் வந்து யாரும் பார்த்து இருக்க முடியாது .சினம் கொள்ளாத சீரான மனதிற்கு உரியவர் .பண்பாளார் .பலருக்கு பாடமாக விளங்குபவர்.முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வது போல எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர்.   பாரத மாநில வங்கியில் இருந்து ஒய்வு பெற்ற பின் ஒய்வுக்கு ஒய்வு தந்து விட்டு ஓய்வின்றி இலக்கிய உலகில் இயங்கி வரும் இனியவர் .

       விளம்பர மொழிகள் எழுதி விளம்பரமானவர் கவிஞர் தியாரூ.  இவரை எனக்கு அறிமுகம் செய்தவரும் ஏர்வாடியாரே.  அவரது நூலான் ‘இரவு 10 மணிக்கு மேல்’ என்ற சிறுகதைகள் நூல் மதிப்பீடு கவிதை உறவு இதழில் படித்த போது கவிஞர் தியாரூ அவர்களின் மீதான மதிப்பு மேலும் உயர்ந்தது.  கவிஞர் தியாரூ அவர்கள் கவிஞர் மட்டுமல்ல சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதை பறைசாற்றியது ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு.

       “எழுத்தின் எல்லாப் பரிமாணங்களிலும் மிளிர்கிறார் கவிஞர் தியாரூ அவர்கள். கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றுடன் கதைக்கலையும் அவருக்குக் கைவந்திருக்கிறது என்பதற்கான சான்று இந்நூல்.  ஒவ்வொரு கதையிலும் ஒரு உணர்ச்சி திருப்பம் என்று நம்மை எல்லாக் கதைகளும் ஈர்க்கின்றன.  ஒரு நல்ல கவிஞர் நல்ல சிறுகதையாசிரியராகியிருப்பதைப் புலப்படுத்துகிற நல்ல தொகுப்பு இந்நூல்."

       தமிழறிஞர் மட்டுமன்றி நல்ல கவிஞராகத் திகழும் குலோத்துங்கன் அவர்களின் படைப்புகளில் இருந்து தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் தொகுத்து வழங்கிய ‘குலோத்துங்கப் பண்ணையில் கொய்த கதிர்கள்’ என்ற இந்த நூலின் விமர்சனம் கவிதை உறவில் படித்து விட்டு நூலினை தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களிடமிருந்து பெற்று விமர்சனம் இணையத்தில் பதிவு செய்தேன்.  அதனைப் படித்து விட்டு தமிழறிஞர் கவிஞர் குலோத்துங்கன் அவர்கள் படித்து விட்டு பாராட்டி நன்றி சொல்லி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தார்கள்.  இந்த மகிழ்வான தகவலை தமிழ்த்தேனீ இரா. மோகன் அய்யாவுடன் பகிர்ந்து மகிழ்ந்தேன்.

       ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு படித்து மகிழுங்கள்.

       “அறிவு சார்ந்த ஒரு மனிதர், சமூக அக்கறை மிகுந்த ஒரு தமிழர் அறிவுறுத்தத் தகுதியுள்ள ஒரு கவிஞர் எனும் நிலைகளில், கவிஞர் குலோத்துங்கன் விளங்குகிறார்.  கலப்பையில் தொடங்கி இன்று கணிப்பொறி இணையம் என்ற அளப்பெரும் வெற்றி போற்ற ஆயிரம் கவிஞர் வேண்டும் என்ற ஆவலின் முதற்கவிஞராகவே அவர் துலங்குகிறார்.  கவிஞரின் எல்லா  நூல்களையும் படித்த நிறைவு மட்டுமல்ல, எல்லா நூல்களையும் படிக்க வேண்டும் என்கிற ஆவலையும் தூண்டுகிற நூல்”

கவிஞர்களை கவிஞர்களாகவே பார்ப்பவர் ஏர்வாடியார்.  கவிஞர் சார்ந்துள்ள கட்சிகள் பற்றிய கவலை என்றும் கொள்ளாதவர். எந்தக் கட்சியில் இருந்தாலும் படைப்பை மனதார  பாராட்டும் உயர்ந்து உள்ளம் பெற்றவர் .

       50 நூல்களை விமர்சனம் செய்து புத்தகம் போற்றுதும் என்ற பெயரில் புகழ்பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக எனது 13-ஆவது நூல் வந்தது.  ஏர்வாடியாருக்கு அனுப்பி வைத்தேன்.  உடன் அந்த நூலிற்கும் நூல் மதிப்பீடு கவிதை உறவு இதழில் பதிவு செய்து வளரும் படைப்பாளியான என்னையும் ஊக்கப்படுத்தியவர் ஏர்வாடியார்.  கவிதை உறவு இதழில் நூல் மதிப்பீடு படித்து விட்டு நான் அடைந்த மகிழ்ச்சியை சொற்களால் எழுதி விட முடியாது.  அளப்பரிய ஆனந்தம் அடைந்தேன்.  நான் மட்டுமல்ல, உள்ளடக்கத்தில் இடம் பெற்ற 50 நூல்களின் ஆசிரியர்களும் அடைந்து இருப்பார்கள்.

       “கவிஞர் இரா. இரவி சிறந்த கவிஞர் என்பது போலவே சிறந்த சுவைஞரும் கூட.  அவரது இணையதளத்தில் தாம் வாசித்த சிறந்த நூல்களை மதிப்பீடு செய்து வெளியிடுவது அவரது பழக்கம் மட்டுமல்ல, பண்பு நலனும் கூட.  நல்ல நூல்களை மதிப்பீடு செய்கிறவர்கள் தம்மை இரண்டு வகைகளில் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.  ஒன்று நிறைய வாசிக்கிறார்கள் என்பது, அடுத்தது அவற்றை மதிப்பீடு செய்வதின் மூலம் தம் பெருந்தன்மையைப் புலப்படுத்துகிறார்கள் என்பது இவ்விரண்டு பண்புகளும் கவிஞர் இரவி அவர்களிடம் உள்ளதால் இந்நூல் சாத்தியமாகி இருக்கிறது.  இந்நூலில் 50 சிறந்த நூல்களின் கவிஞர் இரா. இரவி பார்த்த கண்ணோட்டம் இடம் பெற்றுள்ளது.”

       ஏர்வாடியார் பெருந்தன்மை எல்லா நூல் மதிப்பீட்டிலும் வெளிப்படும் என்பது உண்மை.  சக படைப்பாளிகள் மீது எந்தவித பொறாமையும் கொள்ளாமல், திறந்த மனதுடன் பாராட்டும் தாயுள்ளத்திற்கு சொந்தக்காரர் ஏர்வாடியார்.  நூல் மதிப்பீடு என்று பெயரில் படைப்பாளியை காயப்படுத்துவதற்கும் ஒரு கூட்டம் உள்ளது. ஆனால் ஏர்வாடியார் ஒரு நூல் படித்து விட்டால், பிடித்து விட்டால் ஒளிவு மறைவு இன்றி உள்ளது உள்ளபடியே உணர்ந்த உணர்வுகளை எழுத்தாக வடித்து கவிதை உறவில் பிரசுரம் செய்து கௌரவப்படுத்துவார்கள்.

       நாடறிந்த கவிஞர் நா. காமராசன் அவர்கள், இப்படி புகழ்பெற்ற கவிஞர் தொடங்கி முதல் நூல் வெளியிட்ட வளரும் கவிஞர் வரை பாரபட்சமின்றி நூல் மதிப்பீடு செய்திடும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர்.  கவிதை உறவு இதழில் அவரது ‘நா. காமராசன் கவிதைகள்-ஒரு திறனாய்வு” நூல் விமர்சனம் படித்த போது, மதுரையில் கவிஞர் நா. காமராசன் அவர்களுக்கு பார்ச்சூர் பாண்டியன் விடுதியில் இனிய நண்பர் பொறியாளர் ரத்னவேல் அவர்கள் பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருந்தார்கள்.  அந்த விழாவில் கவிஞர் நா. காமராசன் அவர்களை பாராட்டிப் பேசி பொன்னாடை போர்த்திய நிகழ்வு என் நினைவிற்கு வந்தது.

       நா. காமராசன் கவிதைகள் ஒரு திறனாய்வு (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் திறனாய்வுச் செம்மல் எம்.எஸ். தியாகராஜன் அவர்கள்.  நாடறிந்த கவிஞர் நா. காமராசன் கவிதைகள் திறனாய்வு செய்தது.  திறனாய்வு செய்து பரிசு பெற்றவர் திறனாய்வுச் செம்மல் எம்.எஸ். தியாகராஜன்.  கவிஞர் பாசந்தி அவர்களின் ஹைக்கூ நூல் திறனாய்வு போட்டி மின்மினி இதழால் நடத்தப்பட்டது.  அப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர் எம்.எஸ். தியாகராஜன் அவர்கள்.  நான் இரண்டாம் பரிசு பெற்றேன்.  இந்த விழாவிற்காக சென்னை சென்று மின்மினி ஆசிரியர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் விழா ஏற்பாடு செய்து இருந்தார்.  இப்படி பல நினைவுகளை மலர்வித்தது இந்த விமர்சனம்.

       "நா. காமராசன் அவர்கள் புதுக்கவிதைப் பிதாமகர்களில் ஒருவரென்றாலும் மரபறிந்து மீறியவர் என்பதையும் மறவாமல் குறிப்பிட்டுள்ளார் தியாகராஜன். பலவேறு அறிஞர் பெருமக்களின் கருத்துரைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.  நா. காமராசன் அவர்களை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிற நூலாசிரியர் நா. காமராசன் அவர்களை மதிப்பீடு செய்திருக்கிறார் என்பதோடு மதிக்கவும் செய்கிறார் என்பதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது."

       ஒரே விமர்சனத்தில் கவிஞர் நா. காமராசர் மற்றும் அவரை ஆய்வு செய்து கட்டுரைகள் வடித்த எம்.எஸ். தியாகராஜன் இருவரையும் மனதாரப் பாராட்டி நூல் மதிப்பீடு செய்துள்ளார் ஏர்வாடியார்.

       வானொலி நிலையத்தில் இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்று பேச்சு, எழுத்து இரண்டு துறையில் முத்திரை பதித்து சமீபத்தில் தமிழ்த்துறையின் மகாகவி பாரதியார் விருது பெற்ற இளசை சுந்தரம் அவர்கள் எழுதிய நீங்களும் மகுடம் சூட்டலாம் நூல் மதிப்பீடு கவிதை உறவு இதழில் படித்தேன், வியந்தேன், மகிழ்ந்தேன்.

       “தலைமைப் பண்பை உருவாக்கிக் கொள்ளுதல் என்ற உயர்ந்தோங்கும் செயலுக்கென உன்னதப் பண்புகளைப் பட்டியலிட்டுப் பெரிதும் விளக்கமாய் எழுதி, வெற்றிமாலை சூடவும்,  மகுடம் சூடி மகிழவும் இந்நூல் வழியே நல்ல செய்திகளைக் சொல்லியிருக்கிறார் இளசை சுந்தரம்.  செய்திகளோடு சிறு சிறு கதைகள், நகைச்சுவை என்பனவெல்லாம் நூலை வாசிக்கும் போது நம்மைச் சிலிர்க்கவும், சிரிக்கவும் வைக்கின்றன. வெற்றியாளர்கள் வாசிக்க வேண்டிய நூல்."

       ஏர்வாடியார் முதலில் கவிஞர் பிறகு தான் எழுத்தாளர், கட்டுரையாளர் என்பதால் அவர் எழுதிடும் நூல் மதிப்பீடு கவித்துவமாக இருக்கும்.  சொற்களில் களி நடனம் புரியும்.  ‘நம்மைச் சிலிர்க்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன’.  முதல்எழுத்து ஒன்றி வரும் மோனை, இரண்டாம் எழுத்து ஒன்றி வரும் எதுகை, இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபும் நூல் மதிப்பீடு முழுவதும் ஒன்றி வருவதை உணர முடியும்.

       ஏர்வாடியாரின் எழுத்துக்களில் புரியாத மாதிரி எதுவுமே இருக்காது..  மிகவும் படித்த பண்டிதர்கள் முதல் அதிகம் படிக்காத பாமரர்கள் வரை படிக்கும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கும்.   தெளிந்த நீரோடை போல கண்ணாடியாக இருக்கும்.  எழுத்துக்கு ஆற்றல் உண்டு என்பதை ஏர்வாடியாரின் எழுத்தின் மூலம் உணர முடியும்.

       இனிய நண்பர் நம்பிக்கைவாசல்  மாத   இதழ் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன்.  பொதுவாக சில பத்திரிகைகள் வேறு பத்திரிகை ஆசிரியர் அந்த விழாவில் பங்கு பெற்றால் அந்தச் செய்தி தம் பத்திரிக்கையில் வருவதை தவிர்த்து விடுவார்கள்.  இந்த நிலை இன்றைக்கும் பல பிரபல பத்திரிகைகள் கடைபிடித்து வருகின்றன. சில சிற்றிதழ்களுக்கும் இந்த குணம் உண்டு. ஆனால் ஏர்வாடியாருக்கு அத்தகைய குணம் கிடையாது.  கவிதை உறவு இதழ் ஆசிரியராக இருந்த போதும் நம்பிக்கை வாசல் இதழ் ஆசிரியர் கவிஞர் ஏகலைவன் நூல் பற்றியும் நூல் மதிப்பீடு எழுதிடும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் ஏர்வாடியார்.

       ‘குறையொன்றுமில்லை’ வாழ்வியல் சிந்தனைகள் நூலாசிரியர் கவிஞர் ஏகலைவன்.

       “நம்பிக்கை நாற்றுகளை நாளும் நம் நெஞ்சில் பதித்த பெரியோர் தம் வரலாற்று செய்திகள் நூலின் சிறப்பை மேம்படுத்துகின்றன.  இந்நூலைப் படிக்கிற எவருக்கும் வாழ்க்கையில் குறையொன்றுமில்லை என்றே கூறத் தோன்றும்.  அளவில் சிறிய ஆலமரம், ஆனால் நல்ல நிழல் தரும்."

       ஏர்வாடியார் உவமைகள் இனிக்கும் .ஆலமரம்.  ஆனால் நல்ல நிழல் தரும்.  ஏர்வாடியாரின் எழுத்தாற்றல் பற்றி நூல் மதிப்பீடுகளின் சிறப்புகள் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். 

       இறுதியாக, நூல் வெளியிடும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் கவிதை உறவில் நூல் மதிப்பீடு செய்து மகுடம் சூட்டி வரும் மகத்தான பணியினை ஏர்வாடியார் செய்து வருகின்றார்.  அவர் வாழ்க பல்லாண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !