இரா. இரவியின் படைப்புலகம் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு !

இரா. இரவியின் படைப்புலகம் !


நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் !

நூல் மதிப்புரை கவிஞர் கே .ஜி .ராஜேந்திர பாபு !

வெளியீடு : வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தி.நகர்,
சென்னை-17. தொலைபேசி- 044-24342810/24310769,
பக்கங்கள் 104, விலை ரூ. 70.

நூல் மதிப்புரை வெளியீடு. நன்றி .புதுகைத் தென்றல், 24, திருநகர் முதன்மைச் சாலை, வடபழனி, சென்னை – 600 026.  
செல் : 98410 42949.


      தமிழக அரசின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை 2012 ஆம் ஆண்டு பெற்றவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் – தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய ‘தமிழ்ச்சுடர்’ விருதினைப் பெற்றவர்.  இரண்டாயிரம் பட்டிமன்றங்-களுக்கு மேல் (வானொலி, தொலைக்காட்சி உட்பட) நடத்தியவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழியற்புலத் தகைசால் பேராசிரியர். இரா. மோகன்,

 “எங்கு நாற்று கண்களுக்குத் தெரிந்தாலும் அது மரமாக வளரும் வரை குடைபிடிக்கும் எண்ணத்தைக் கடைப்பிடிக்கும் பேராசிரியர் மோகன்” என்று முனைவர் வெ. இறையன்பு அவர்களால் பாராட்டப் பெற்றவர். 133 நூல்கள் எழுதியுள்ள நுட்ப அறிவினர். மு.வ.வின் செல்லப் பிள்ளை பேராசிரியர் இரா. மோகன் என்கிற மோகனமான தமிழறிஞர்.

     இரா. இரவி ஹைக்கூ திலகம், கவியரசு, கவிமுரசு உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர். இரா. மோகன் அவர்களை நடுவராக கொண்ட விழிப்புணர்வுப் பட்டிமன்றங்களில் பேசி வருபவர். இரா. இரவி.  கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் இருந்து ‘வளரும் கலைஞர்’ விருது பெற்றவர்.  கவிதை உறவு நடத்திய போட்டியில் கவியமுதம் நூலுக்கு இரண்டாம் பரிசு பெற்றவர்.  ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்தநாள் விழாவில் எழுத்தோலை விருது பெற்றவர்.  ஹைக்கூ எழுதிக் குவித்து வரும் ஹைக்கூ திலகம் .

      இரா. இரவி எழுதிய 16 நூற்களில் 10 நூற்களுக்கு அணிந்துரை வழங்கியவர் பேரா. இரா. மோகன், அந்த அணிந்துரைகளைத் தொகுத்து வெளியிட்ட நூல்தான் ‘இரா. இரவியின் படைப்புலகம்’. வானதி பதிப்பகம் வெளியீடு.

      இனி நூலுக்குள்....

      ஹைக்கூ கவிதைகளில் எப்போதும் மூன்றாவது வரிதான் முக்கியமானது அதில் தான் அழுத்தமும் ஆழமும் கொலுவீற்றிருக்கும்.  ஹைக்கூ கவிஞன் முதல் வரியில் சாட்டையைத் தன் கையில் எடுப்பான்.  இரண்டாவது வரியில் சாட்டையை கையில் யரப்பிடிப்பான்.  மூன்றாவது வரியில் தான்  அவன் சாட்டையை வேகமாக வீசுவான்.  இவ்வகையில் மனம் கொள்ளத்தக்க ஹைக்கூ இதோ....

“செடி வளர்த்தோம்
கொடி வளர்த்தோம்
மனித நேயம்?”      
(இரா. இரவி)

      இந்தப் பத்தியில்  ஹைக்கூவிற்கான இலக்கணத்தில் ஒன்றைச் சொல்லியுள்ளார் பேரா. மோகன், ஹைக்கூ கவிஞர்களுக்குப் பயனுள்ள கருத்து இது.

“அசுத்தம்
சோறு போடும்
துப்புரவுத் தொழிலாளி”

      என்ற இரா.இரவியின் ஹைக்கூவை மேற்கோள் காட்டி “ஹைக்கூ என்பது விடுகதையல்ல, சிலேடையும் இல்லை. ஹைக்கூ என்பது புனைவு இலக்கியம் அல்ல.  அது உணர்வு இலக்கியம்” என்று எழுத்தாளர் வெ. இறையன்பு அவர்கள் ஹைக்கூ பற்றி சொன்ன கருத்தை இந்நூலில் பதிவு செய்துள்ளார் மோகன்.

      “ஒருநாள் அல்ல இருநாள் அல்ல பலநாள் பயின்று பல்லாண்டு ஆயினும் ஹைக்கூ மீது என்றென்றும் மாறாத” தலைநாள் விருப்பம் வைத்திருப்பவர் இரா. இரவி என்று எழுதியுள்ளார் பேரா. மோகன்.  அதியமானைப் புகழுங்கால் “ஒருநாள் செல்லலாம், இருநாள் செல்லலாம், பன்னாள் பயின்று பலரோடு செல்லினும் தலைநாள் போன்ற விருப்பினன்” (புறம் 101) என்று அவ்வையார் பாடுவார்.  அவ்வை பயன்படுத்திய தலைநாள் விருப்பம் என்ற சொற்றொடரை பேரா. மோகன் பயன்படுத்தியுள்ளது சிறப்பு.

      ஐம்பது அறிஞர்களின் – இலக்கியவாதிகளின் நூற்களுக்கு இணையத்தில் விமர்சனம் எழுதி அதைப் ‘புத்தகம் போற்றுதும்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார் இரா. இரவி.

      இந்நூலுக்கான அணிந்துரைக்கு ‘நந்தவனத்தில் நடைபயின்ற உணர்வு’ என்று எழிலான தலைப்பிட்டுள்ளார் மோகன். மேலும் “படிக்கும் போதே படிக்கும் வாசகர் மனதில் பல்வேறு நினைவுகளை மலர்விக்கும் விதமாக இந்த நூல் (எழுந்து வேந்தர் இந்திரா சொந்தர்ராஜனின் மனம் ஒரு மர்மதேசம்) உள்ளது.”  என்றாற் போல் இரண்டே வரிகளில் இரத்தினச் சுருக்கமான மொழியில் நூல் பற்றி திறனாய்வினை எழுதிச் செல்லும் போக்கினை இரா. இரவியிடம் சிறப்பாக காணமுடிகிறது என்று இரவியின் திறனாய்வுத் திறனைப் பாராட்டுகிறார் பேரா. மோகன்.

      ஒரு நூலுக்கு பேரா. மோகன் அணிந்துரையோ முன்னுரையோ வழங்கும் போது அவ்வுரை செறிவாகவும், நூலாசிரியருக்கு நிறைவாகவும், வாசகர்களுக்கு சிறந்த தகவலும் கிடைக்கும் என்பதற்கு இதோ ஓர் உதாரணம். 

 “தனித்தமிழ் இயக்கம் போல தமிழில் ஆத்திசூடி இலக்கியம் பாடுவது என்பது ஓர் இயக்கம் என்பார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார்.  ஒளவையின் அடிச்சுவட்டில் இருபதாம் நூற்றாண்டில் ஆத்திசூடி இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர் பாட்டுகொரு புலவர் பாரதியார்.  அதனைத் தொடர்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.  தொடர் ஓட்டமாக சுத்தானந்த பாரதியார்.  வாணிதாசன், வ.சுப. மாணிக்கம், தமிழண்ணல், ந. சஞ்சீவி,
ச. மெய்யப்பன், ரெ. முத்துக்கணேசன், அறிவுமதி முதலான கவிஞர் பெருமக்களும் பல்வேறு பொருள்களில் ஆத்திசூடி இலக்கியங்களைப் படைத்துள்ளனர்.

 “இரவியும் தன் பங்கிற்குப் புதிய ஆத்திசூடி எனும் தலைப்பில் பன்னிரு உயிரெழுத்துக்களுக்கு மட்டும் சூடிகள் பாடியுள்ளார்”.

      நாமக்கல் கவிஞர் வாக்கினை அடியொற்றி பொட்டில் அடித்தாற்போல்,
“தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
ஆங்கிலக் கையொப்பம் ஏனடா”   என்றும்
மருதகாசியின் திரைப்பாடலைக் கொஞ்சம் மாற்றி,
“என்ன வளம் இல்லை தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்”            என்றும்
இரா.இரவி எழுதிய கவிதைகளை இரு வேறு இடங்களில் சுட்டிகாட்டி உள்ளார். இரா.மோகன். 

      ஹைக்கூவுக்கு அமுதென்று பேர் என்ற கட்டுரையை முடிக்கும் போது பேரா. மோகன் மொழிந்துள்ள கருத்து ஹைக்கூ பற்றி மேலும் தெளிவுப்படுத்தும்.

      “சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலை" என்பாரே மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

அதுபோல்,
சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக்கவி வடிவாம் ஹைக்கூவில் திட்பமும், நுட்பமும், ஒட்பமும் கைவரப்பெற்று எதிர்காலத்தில் கெழுதகை நண்பர் இரா. இரவி முத்திரை பதிக்க வேண்டும் என் நெஞ்சார் வாழ்த்துகிறேன்.”

ஹைக்கூவில் திட்பம், நுட்பம், ஒட்பம் மூன்றும் வேண்டுமென்று தெளிவுபடுத்துகிறார் பேரா. இரா. மோகன். வெறும் பாராட்டுமின்றி, பயனுள்ள அறிவுரையும் வழங்குகிறார் பேரா. மோகன். சொற்களைச் சுண்டக் காய்ச்சி, செதுக்கிக் கையாளும் கலையில் இரவி இன்னும் கூடுதலாகப் பயிற்சி எடுத்துக் கொள்ளல் வேண்டும் என்ற அறிவுரை இரவிக்கு மட்டுமா?

பேரா.இரா. மோகனின் ஆய்வுரை போன்ற அணிந்துரைகளாலும் -  இடை இடையே எடுத்துக் கையாளப்பட்ட இரா. இரவியின் கவிதைகளாலும் (ஹைக்கூ உள்பட) இந்நூல் சிறப்புப் பெறுகிறது.

இலக்கியவாதிகளுக்கு இனிய நூல் இரா.இரவியின் படைப்புலகம், கவிதைகள் குறித்து – குறிப்பாய் ஹைக்கூ குறித்து – தெரிந்து கொள்ள, புரிந்து விரும்புவோர் படிக்க வேண்டிய நூல் இரா.இரவியின் படைப்புலகம்.


கருத்துகள்