வெளிச்ச விதைகள் . (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி, நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடி எஸ் .இராதா கிருஷ்ணன் 1

வெளிச்ச விதைகள்  .


(கவிதைகள்)

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி, 

நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடி
 எஸ் .இராதா கிருஷ்ணன் 1

வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017. பக்கங்கள் 190; விலை ரூ. 120/-
********
நூல் மதிப்புரை வெளியீடு : “கவிதை உறவு  மனிதநேய இலக்கியத் திங்களிதழ்
மலர் 30, இதழ் 2, பிப்ரவரி 2017
420
-E, மலர்க் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-600 040.
*******
      கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு எல்லா வகைக் கவிதையும் வருகிறது.  சிறந்த கவிஞர்கள் சிலருள் வைத்துப் போற்றுதற்குரியவர் அவர். இந்நூல் அவரின் திறனை இன்னும் அதிகமாய்ப் புலப்படுத்துகிறது. 

“இரவிக்குக் கடன் இணையத்தில் தமிழ்ப்பணி செய்து கிடப்பதே” என்று பேராசிரியர் இரா. மோகன் தன் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது போல, இணையத்தின் வாயிலாய் எழுதிக் குவிக்கும் கவிஞரின் பாட்டுக் குவியலே இந்தப் பனுவல்.  கவிஞர் இரவியின் பதினோராவது நூலிது.  இணையத்தைப் பயன்படுத்துவதில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் இருப்பது போலவே, மொழிகளில் ஆங்கிலத்துக்கு அடுத்த இடத்தில் தமிழ் என்பது அகம் மகிழச் செய்கிறது.  இதை இரவி போன்றவர்களே நிகழ்த்துகிறார்கள் என்றும் சொல்லலாம்.  இந்நூலில் எல்லாக் கவிதைகளுமே அருமை. 

“நிலவுக்கு உவமை நிலவு மட்டுமே,
      நிலவுக்கு நிகர் நிலவு மட்டுமே”              அழகான வரிகள். 
“பசியோடு பார்ப்பவனுக்கு  தோசை நீ.
      பரவசத்தோடு பார்ப்பவனுக்குப் பால்நிலா நீ,
      விளையாட்டு வீரர் பார்வைக்குப் பந்து நீ.
      விவேகமாய்ச் சிந்திப்பவன் பார்வைக்கு விந்து நீ”

என்று நிலவுக்குச் சாமரம் வீசுகிறார் கவிஞர் இரவி.

நிலவைப் பாடிய கவிஞர் காதலை மட்டும் விடுவாரா என்ன?  காதலில் விழுந்த கவிஞர் ரவி, காதலிக்கு எழுதும் வரிகளில்

“மூன்று பக்கமும் கடலால் சூழ்ந்தது இந்தியா.
      முழுவதுமே உன்னால் சூழப்பட்டவன் நான்...”

என்பதைப் படித்தால் எந்தப் பெண்ணும் இவர் மீது முழுவதுமாகக் காதல் வயப்படக் கூடும். 

காதலைப் பாடியும், அரசியல்வாதிகளைச் சாடியும் எழுதாத கவிஞர்கள்  இல்லை எனலாம். இரவியும் விதிவிலக்காகவில்லை. 

“வாக்கு வங்கி அரசியலுக்காக
      அரசியல்வாதிகள் வாயில் வந்ததைப் பேசி
      ஏமாற்றி வருகின்றார்

என்று அவர் கூறுவதை மறுக்க முடியாது. 
தாயின் மீது தணியாத பாசம் கொண்டவர் கவிஞர் இரவி. 
உயிரும் உடலும் தந்த வள்ளல் 
                உயிரை வளர்த்த உன்னதச் செம்மல்”

என்று அவர் தாயை வழங்குவது அருமை.

அதுபோலவே,
தந்தையையும் அவர் விடவில்லை. 

“வாடினால் வாட்டம் போக்குபவர் தந்தை.  
                வளங்களை வழங்கி மகிழ்பவர் தந்தை” என்பதும் உண்மை.
தாய் தந்தையரைப் போற்றும் கவிஞரிவர். 

தன்னோடு பயணிக்கும் மனைவியைக் கூட மறக்கவில்லை.  திருமண நாளை அடிமைகளின் ஆரம்ப நாள் என்பார்கள்.  ஆனால் இரவி அவர்களுக்கோ அது,

“வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள். 
                வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள்”. 

அன்பு செலுத்தி ஆனந்தமாய் வாழ்ந்தால் ஆயுள் இருவருக்கும் நீளும் என்பது உண்மை என்கிறார்.  உண்மைதான், எழுத்து என்பது எண்ணத்தை வெளிப்படுத்தும் வாகனம்.  அதில்தான் எண்ணங்கள் பயணிக்கின்றன.  அந்த “எழுத்தை அறிவித்தவன் இறைவன் என்று இயம்பிடும் அளவுக்கு உயர்ந்தவர்”

  என்கிறார் இரவி.  ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்து இது.
“முயல வேண்டும் முடியுமென்று.
                 மனதில் எண்ணம் வளர வேண்டும். 
                இது தான் சாதிக்க நினைப்போர்தம் சாதனம்.” 

இதை முயற்சி  திருவினையாக்கும் என்ற கவிதையில் முன்வைக்கிறார் கவிஞர் இரவி.

“முந்தைய சாதனை வரலாறு படித்திடு. 
                முயன்று முந்தையதை முறியடித்திடு”

என்று மேலும் முன்னேற வழிகாட்டுகிறார் அவர். 

சாதனை படைத்த தங்கவேலு மாரியப்பன், தங்கமங்கை சிந்து, சாக்சி மாலிக் போன்றவர்தம் புகழ்பாடும் இரவியின் வரிகளும் அருமை. 

தொடர்ந்து ‘உழைப்பே உன்னதம்’ என்று பாடுகிறார் அவர்
“மயிலுக்குத் தோகைதான் அழகினைத் தரும்.  
                மனிதனுக்கு உழைப்புதான் மேன்மை தரும்”

என்று கவிஞர் இரவி, உழைக்கிறார் உன்னதமான கவிதைகளைத் தருகிறார்.  சிறந்த கவிஞராக உயர்ந்தும் நிற்கிறார்.   

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்