இரா. மோகன் ! நூல் ஆசிரியர் ச. கவிதா. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

இரா. மோகன்  !


நூல் ஆசிரியர் ச. கவிதா.

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

கலைஞன் பதிப்பகம், 19 கண்ணதாசன் சாலை,
தியாகராயர் நகர், சென்னை 600 017. பக்கம் 96 விலை 90

     தமிழுக்குத் தொண்டாற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், மூன்று முறை உலகத்தமிழ் மாநாடு நடத்திய மலாய் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், வைரவிழாக காணும் சென்னை கலைஞன் பதிப்பகத்துடன் இணைத்து வெளியிட்டுள்ள நூல்.

     குருவிற்கு சீடன் செய்திட்ட சீராக விளைந்திட்ட நூல். நாடறிந்த நல்ல பேச்சாளர், எழுத்தாளர், பட்டிமன்ற நடுவர், தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவரது முனைவர் பட்ட மாணவி ச. கவிதா அவர்கள் எழுதியுள்ள நூல்.

     வளர்ச்சி என்பதும் மாற்றம் என்பதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பார்கள். இந்த நூல் எழுதிய போது 117 நூல்கள் எழுதி இருந்த தமிழ்த்தேனீ அவர்கள் தற்போது 130 நூல்களை எட்டி விட்டார்கள்.  ஒவ்வொரு நாளும் வாசிப்பது, எழுதுவது, பேசுவது மூன்றையும் ஒரு தவமாகச் செய்து வரும் மேன்மையாளர் பற்றி மென்மையான நூல் இது.

     இன்றைய இளைய தலைமுறையினர் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.  இந்த நூலை எழுதியுள்ள முனைவர் ச. கவிதா அவர்கள் என்றுரையில் குறிப்பிட்டுள்ளவற்றில் இருந்து சிறு துளிகள்,

“பேராசிரியரின் ஆளுமையை, தந்தையைக் கதாநாயகனாகக் கண்டு வியப்பிறும் குழந்தையைப் போல ஒவ்வொரு நாளும் பார்த்து வியந்து தாக்குண்ட தருணங்கள் பலவாகும். எழுவதற்கு நேரமில்லை எனும் போதெல்லாம் ஜவஹர்லால் நேரு அவர்களது கூற்றினை நினைவு கவர்ந்து, உண்ணும் நேரத்தையும், உறங்கும் நேரத்தையும் கடன் வாங்குங்கள். கடல் நீரைக் கமண்டலத்தில் அடைப்பது போல தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் வரலாற்றை 10 தலைப்புகளில் அடைத்து உள்ளார்.  நூல் ஆசிரியர் முனைவர் ச. கவிதா அவர்களுக்கு பாராட்டுகள். நூலை கடமைக்கு எழுதாமல், கண்டு உணர்ந்த உண்மைகளை வடித்துள்ளார்.

     வாழ்க்கைச் சித்திரம் என்ற முதல் தலைப்பில் பிறப்பு, கல்வி, மதுரை வருகை, முதல் கட்டுரைக்குக் கிடைத்த முதல் பரிசு, மு.வ. உடனான கடித உறவு, வாழ்க்கைத் துணை தேர்வு, ஆற்றிய பணிகள், பட்டிமன்றப் பேச்சாளர், வகித்த பொறுப்புகள், பெற்ற விருதுகள், இலக்கியப் பங்களிப்புகள் என வாழ்வின் பல்வேறு கூறுகளை படம் பிடித்துக் காட்டி உள்ளார்.

     சங்க இலக்கியம் தொடர்பாக வடித்த நூல்களின் விளக்கங்களை ‘சங்க இலக்கிய வளம்’’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.  இன்றைய இயந்திரமயமான உலகில் மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்று அறக்கருத்துகளே ‘அற இலக்கிய நலம்’’ என்ற தலைப்பில் விளக்கம் நாலடியாரை ஆராய்ந்து வடித்த நூல்களின் விளக்கம் உள்ளது.  ‘காப்பியக் கலைத்திறன்’’ என்ற தலைப்பில் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் உணர்த்தும் பண்பாடு குறித்து தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் எழுதிய நூல்களின் விளக்கங்கள் இலக்கிய விருந்தாக உள்ளன.

     பக்திச்சுடர் என்ற தலைப்பில் பக்தி இலக்கியத்திற்கான பங்களிப்பையும் நன்றாக பதிவு செய்துள்ளார். ‘நவீன இலக்கிய நயம்’’ என்ற தலைப்பில் புனைகதைத்திறன் ஆய்வு, புதுமைப்பித்தன் ஆய்வு மு.வ.வும் காண்டேகரும் ஒப்பீடு இலக்கிய வித்தகர் வ.வே.சு. ஐயர், புதிக்கவிதைத் திறன், பெண்ணிய சிந்தனைகள் ஆய்வு, ஹைக்கூ கவிதகள் ஆய்வு என தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் படைப்பிலக்கிய ஆய்வாக நூல் உள்ளது.

     ‘சான்றார் திறம்’’ என்ற தலைப்பில் டாக்டர் மு.வ., பண்டிதமணியின் நடை நயம் பண்முகப் பார்வையில் பாரதி, திரு.வி.க. வாழ்க்கை விளக்கம் வ.சுப. மாணிக்கம், கு.ப. ராஜகோபாலன், வா.செ.கு என்ற ஆளுமையாளர், காந்தியக் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை கவிஞர்கள் முடியரசன், 

கா. வேழவேந்தன், சிற்பி என பல்வேறு சான்றோர்களின் ஆளுமைத் திறன் குறித்து ஆய்வு செய்து வடித்திட்ட நூல்களின் விளக்கம் நன்கு பதிவு செய்துள்ளார்.

     எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ‘அன்புள்ள நிலாவுக்கு’ கடித இலக்கியம் நூல் பற்றிய பதிவும் நன்று. இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் தமிழ்ச் சுடர் இருவரும் காதலித்து , இலக்கிய இமயம் மு .வ .அவர்களின் சம்மதத்துடன் கரம் பிடித்து இனிமையான நல் வாழ்க்கை வாழ்ந்து மணி விழா கண்டவர்கள் .காதல் திருமண வெற்றிக்கு சான்றாக வழுங்குபவர்கள். கடிதத்தில் உண்மைக்கு காதல் இருப்பதால் ,கடித இலக்கியம் மிக நன்று .திருவள்ளுவருக்கு ஒரு  வாசுகி போல, காந்தியடிகளுக்கு ஒரு கஸ்தூரி பாய் போல, பாரதிக்கு ஒரு செல்லம்மா   போல ,பேராசிரியர் இரா .மோகனுக்கு ஒரு பேராசிரியர் நிர்மலா மோகன் என்றால் மிகை அன்று .நூலின் இறுதியில் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களின் நேர்முகமும் அவர் எழுதிய நூல்களின் பட்டியல் வெளியான வருடத்துடன் புள்ளி விபரமாக உள்ளது. பெற்ற விருதுகள் பட்டியலும் உள்ளது.

     சிறந்த நூல் ஆசிரியர் முனைவர் ச. கவிதா அவர்கள் கோவை, கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் 2009 முதல் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். தன் வீடு தன் குடும்பம் என்று சராசரியாகச் சுருங்கி விடாமல். தனது ஆசான் தனது முனைவர் பட்ட நெறியாளர். தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்கள் நெறிப்படுத்தியதால் முனைவர் பட்டம் கிடைத்தது முனைவர் பட்டத்தால் உதவிப்பேராசிரியர் பணி கிடைத்தது. அந்த நன்றி மறவாமல் தன்னை வளர்த்து விட்ட பேராசிரியருக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த நூலை எழுதி உள்ளார்.

     ஆசிரியர் மாணவர் உறவுக்கு மகுடம் சூட்டும் விதமாக இன்றைய இளைய தலைமுறைக்கு ஆசிரியரை எப்படி மதிக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டும் விதமாக வடிக்கப்பட்ட நல்ல நூல், இருவருக்கும் பாராட்டுக்கள். நேர்காணல் பகுதியில் இறுதியில் உள்ள இரண்டு கேள்வி பதிலை மட்டும் இங்கே பதச்சோறாக வழங்குகின்றேன்.

படைப்பாளிகளுக்குத் தாங்கள் சொல்வது? 

உறவு, உணர்வு இரண்டும்  முக்கியமானவை படைப்பிலும் ஆளுமையிலும் இரண்டுக்கும் சமமான முதன்மையைத்தாருங்கள். தமிழின் அடையாளம் இந்தியப்பண்பு உலகளாவிய பார்வை மூன்றும் படைப்பிலும் வாழ்விலும் இருக்கட்டும். வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்து காட்டுங்கள்.

தாங்கள் இனிமை மாறா மோகனாக இருப்பதன் ரகசியம்? 

நமக்கும் பிறருக்கும் இடையே நிலவும் முரண்பாடுகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதில் பயன் விளையாது. ஒருவருடன் நான் முரண்பட்டு எதையும் சாதிக்க முடியாது.  மாறாக நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒத்துப் போகும் விசயங்கள் எத்தனை என்று கண்டறிந்து அவற்றைப் பற்றி மட்டும் விவாதித்தால் உறவு நன்றாக இருக்கும் உணர்வு மதிக்கப் பெறும். சினம் வேண்டாம், எவரிடாதும் சினப்பதென முடிவெடுத்தல் சினத்தோடு சினப்பது தான் சிறப்பான  சிறப்பாகும் என்ற மலையாளக் கவிஞர் உள்ளுர் பரமேசுவர அய்யரின் வைர வரிளே நினைவுக்கு வருகின்றன.

உண்மைதான் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை எப்போதும் முகத்திலும் அகத்திலும் புன்னகையை அணிந்து இருப்பவர், எல்லோரும் அவர்க்கு நண்பர்கள்.

 இரண்டு எதிர் எதிர் அணியினர் இருவருமே அவருக்கு நண்பர்களாக இருப்பார்கள் யாரிடமும் எதை நம்மைப் பிரிக்கிறது என்ற பாராமல் எதை நம்மை இணைக்கிறது என்று வாழ்க்கைத் துணையிடமும் நண்பர்களிடமும் பார்த்தால் வாழ்க்கை சிறக்கும் நட்பு நீடிக்கும்.  இப்படி பல்வேறு புரிதல்களை வாழ்வியல் கருத்துகளை உணர்த்திடும் நல்ல நூல். வாழ்வின் வெற்றி சூத்திரம் விளக்கிடும் நூல்.  


நூலினை மிக நேர்த்தியாக அச்சிட்ட கலைஞன் பதிப்பகத்திற்கு பாராட்டுகள் .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்