மருதாணிப் பூக்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



மருதாணிப் பூக்கள் !



நூல் ஆசிரியர் கவிஞர் பரிமளாதேவி !
நூல்  விமர்சனம்  : கவிஞர் இரா. இரவி ! 


நம்மொழி பதிப்பகம், 62/21, திருவள்ளுவர் தெரு, அன்பழகன் நகர், செம்பியம், சென்னை – 600 011.  பேச : 98409 12010
 kaviooviya@gmail.com
64 பக்கங்கள் விலை : ரூ. 60 
******
நூல் ஆசிரியர் கவிஞர் பரிமளாதேவி அவர்களின் இரண்டாம் நூல் இது.  முதல் நூல்' மிதக்கும் சிற்பங்கள்.'  அதற்கு நூல் மதிப்புரை எழுதி இணையத்தில் பதிந்துள்ளேன்.  நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ளது இந்த நூல். 

 ‘மருதாணிப் பூக்கள் நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது.  சிந்திக்க வைத்தது.  மருதாணி இலைகள் கேள்விப்பட்டு இருக்கிறோம்.  பார்த்து இருக்கிறோம்.  பச்சை இலையில் சிவப்பு வண்ணம் உள்ளீடாக இருப்பது போல மருதாணிப் பூக்களில் கவிதைகள் மலர்கள் போல மலர்ந்துள்ளன.

திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், கவிச்சுடர் கார்முகிலோன், முனைவர் நீ. இராசன்பாபு ஆகியோரின் அணிந்துரையும் நூலாசிரியரின் தன்னுரையும் பதிப்பாளர் மயிலாடுதுறை இளையபாரதி பதிப்புரை என யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன.  சிறப்பாக அச்சிட்டுள்ள பதிப்பாளருக்கு முதல் பாராட்டு.

“இந்நூல் என்னுள் நிறைந்திருக்கும் என் அம்மாவிற்கு அன்புடன் பரிமளாதேவி என்று காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு.  அம்மா மீதான அன்பின் வெளிப்பாடு நன்று.

இயந்திரமயமாகி விட்ட நவீன உலகிலும் இன்னும் ,சுற்றி வளைத்துப் பேசி என்ன சாதி என்று அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கும் மனிதர்கள் இருக்கின்றனர். சிலருக்கு மனநோய் போல உள்ளது.  யார் என்ன சாதி என்று அறிந்து கொள்ளாவிடில் அவர்கள் தலை வெடித்து விடும்.  அப்படிப்பட்ட மனிதர்கள் பற்றிய பதிவு நன்று.

என்ன சொல்ல 
கொஞ்சம் பழகியபின் 
கேட்டார்கள்
      நீங்க நம்ப ஆளுங்களா?
      பணம் படைத்தவரெல்லாம் ஒரே சாதி தானே?
      பின்பு நாம் எப்படி?

விடுதலைத் திருநாளை பள்ளி, கல்லூரிகளில், அரசியல் மேடைகளில் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறோம்.  ஆனால் நாட்டில் நடப்பது பல முரண்பாடுகள். விடுதலையின் பயனை முழுமையாக அடைய முடியவில்லை என்ற ஆதங்கத்தை நன்கு பதிவு செய்துள்ளார், பாராட்டுக்கள்.

எடுத்த உறுதிமொழி மட்டும் 
காற்றில் பறந்த்து
      தேசியக் கொடியைப் போல 
ஆள்பவரின் ஆணவப் போக்கில்
      அடிமைப்பட்டுக் கிடக்கும் சுதந்திரம் மட்டும்
      விடுதலையை எதிர்பார்த்து 
பரிதாபமாய்!

உண்மை தான்.  விடுதலைக்கு விடுதலை வேண்டும் என்கிறார்.  உண்மையான விடுதலை வேண்டும் என்கிறார்.  "இமயம் முதல் குமரி வரை இந்தியா, இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தோர்." என்று உறுதிமொழி ஏற்கிறோம். அந்த உணர்வு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வர வேண்டும். மனிதநேயம் மலர வேண்டும் .விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வர வேண்டும் .

மிகவும் படித்த உயர்பதவியில் உள்ள பெண்கள் கூட சிலர் தங்க நகை மீதான் ஆசையை விடவில்லை.  பல விழாக்களில் காண்கிறோம்.  நூல் ஆசிரியர் கவிஞர் பரிமளாதேவி முற்போக்கு சிந்தனை உள்ளவர் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தக் கவிதை.

எண்ணத் திரிபு.
உனக்கு ஒன்றும் தெரியாது 
என்று 
நீ கூறும்
      வேளையில் 
பல கோப்புகள் 
காத்திருக்கும்
      என் கையெழுத்திற்காக.
இருவரும் வெளியே சென்றோம்
நானோ, புத்தகக் காட்சிக்கு என்றேன்
தோழியோ 
நகைக்கடைக்கு என்றாள்!
புத்தி கொள்முதலுக்கு 
புத்தகம் என்றேன் நான்!
தோழியோ! நகைகளும் முதலீடு தானே என்றாள்!
உலோகத்திடம் தன் புத்தியை 
அடகு வைத்த தோழியை
இன்று வரை மீட்க முடியவில்லை.

உண்மை தான். பெண்கள் நகை மீதான ஆசையை விட்டொழித்தால் நாட்டில் அமைதி நிலவும், வன்முறை இருக்காது என்பது என் கருத்து.

இன்றைய ஆணாதிக்க சிந்தனையை தோலுரித்துக் காட்டும் விதமான கவிதை நன்று.

பெண் மனம் 
 என் புகழை – நீ 
செரிக்க சிரமப்படுகிறாய்!
 எனது வளர்ச்சியில் நீ 
குறைந்து போகிறாய்!
 எனது எழில் கண்டு நீ
  அசிங்கப்படுகிறாய்!
எனது சாகசத்தில் நீ 
 செயல் இழக்கிறாய்!
எனது ஏற்றத்தில் நீ 
 தோற்றுப் போகிறாய்!
எனது சாமர்த்தியத்தில் நீ 
 சராசரியாகிறாய்!
எனை வீழ்த்தும் நீ 
 உனை வாழ்த்தும் நான்.
நீ எத்துணை துயர் செய்தாலும் 
 மேன்மையாய் வாழும் என் மனம்.

பெண்ணில் அழ்மனதை, உயர்ந்த உள்ளத்தை படம் பிடித்துக் காட்டி வெற்றி பெற்றுள்ளார், பாராட்டுக்கள்.

எண்ண அலைகள், மன அலைகள், நினைவலைகள் அதன் ஆதிக்கத்தை, மேன்மையை, மென்மையை உணர்த்துடம் கவிதை இதோ!.
காத்திருப்பு!

மழலையின் வருடல்களையும்
மயிலிறகின் வருடல்களையும் விட
      மனமே 
உன் நினைவுகளின் வருடல்கள் 
என்னுள்
      பெரும ரசவாத மாற்றத்தையல்லவா 
உண்டு பண்ணுகிறது !
      மனமே 
நினைவுகளை விடுத்து நிஜமாகி விடுவாய்
      ஒரு உலோக நிலைத் திரவமாக 
காத்திருக்கும் உன் உயிர் !

உலோக நிலைத் திரவம்! புதிய சொல்லாட்சி.  இப்படி புதிய சொற்களைப் பயன்படுத்தி கவிதை எழுதும் போது கவிதையின் தரம் கூடி விடுகின்றது.

இன்றைய அரசியலில் தலைவர்கள் ஏமாற்றுகின்றனர்.  ஏமாளித் தொண்டன் கோமாளியாக வலம் வருகின்றான். நாட்டு நடப்பை அரசியல் அவலத்தை சுட்டிடும் கவிதை நன்று.

தொண்டன் !

தலைவனோ 
நகராப் பொழுதை நகர்த்தியபடி
      தோரணம் கட்டிய தொண்டனோ 
தோற்க மாட்டான் என் தலைவன்
       என்கிறான் 
அசைக்க முடியாத 
 நம்பிக்கையுடன்
       வார்த்தைக் குவியல்களில் மயங்கி 
 சிந்தனை
      சோரம் போய்க் கிடக்கிறதே!

தொண்டன் சிந்திப்பதே இல்லை.  தலைவன் சொல்லும் பொய்கள் அனைத்தையும் உண்மை என்று நம்பி ஏமாறுகின்றான்.  இந்த நிலை மாற வேண்டும்.  சிந்தித்துப் பார்த்து திருந்த வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைத்துள்ளார்.

கவிஞர் பரிமளாதேவி அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ள ஆன்மிகவாதி தான் என்று நினைக்கிறேன்.  ஆனாலும் மூட நம்பிக்கை சாடி பகுத்தறிவு விதைக்கும் விதமான கவிதை இதோ!

மாற்றம் இல்லை!

குசேலனின்  
கைவண்ணத்தில்  
குபேரனும், லட்சுமியும்!
       தங்கமாய ஜொலிக்கிறார்கள் 
 ஆனாலும்
 குடிசைகள் மட்டும்
       மாறவேயில்லை.  
 கிருஷ்ணனுக்கே 
 இங்கு
       அவல் கிடைப்பதில்லையாம்!

ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் வரவில்லை என்பதை கவிதையில் சுட்டிய விதம் சிறப்பு. மற்றுமொரு மூட நம்பிக்கை சாடும் கவிதை நன்று.

நிலை உணர் 
பசித்தழும் 
குழந்தைகளின் கதறல்கள்
      எட்டவேயில்லை
நந்தியின் காதுகளுக்கு
      அங்கு தான் பாலாபிசேகம் நடக்கிறதே!

உண்மை தான், நந்திகளின் காதுகளுக்கு மட்டுமல்ல, கடவுள்களின் காதுகளுக்கும் எட்டவில்லை.

இன்றைய பெண்களின் நிலையை, சிறிய கவிதையின் மூலம் அழகாக பெண்ணீயம் குறியீடாக வைத்துள்ள கவிதை நன்று.

விடுதலை !
அவள் வரைந்த 
பறவைகளுக்க்கு சிறகுகள் தந்து விட்டு
      தான் மட்டும் 
கூட்டைச் சுமந்தபடி 
குரல் உயர்த்தி 
விடுதலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறாள் !

ஹைக்கூ கவிதைகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன .ஒரே கல்லில்  இரண்டு மாங்காய் எனப்துபோல ஒரே நூலில் புதுக்கவிதை ஹைக்கூ கவிதை இரண்டும் உள்ளன.

சான்றோர்களின் 
சிந்தனைப் பதிவிடம் 
வாசக சாலை !
-----
வென்றுவிட்டேன் 
எல்லாவற்றையும் 
உன்  ஞாபங்களைத் தவிர !
-----------
முக்காலமும் 
வரலாறாகும் 
நல்ல நட்புகளால் !

ஹைக்கூ கவிதைகளின் மூலம் சின்னச் சின்ன மினல்களை சிந்தையில் உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார் .

நூல் ஆசிரியர் பரிமளாதேவி அவர்களுக்கு பாராட்டுகள்.  மூன்றாவது நூல் விரைவில் மலர்ந்திட வாழ்த்துகள்.
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்