சவூதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும், பிழைப்பும்! நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! viji.masi@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

சவூதி அரேபியாவில் 


தமிழரின் உழைப்பும், பிழைப்பும்!

நூல் ஆசிரியர் : கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
viji.masi@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி .

மணிமேகலை பிரசுரம், 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-600 017.  பக்கங்கள் : 96, விலை : ரூ. 60. பேச : 044 24342926 
மின் அஞ்சல் : manimekalaiprasuram@gmail.com 

       நூல் ஆசிரியர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் கதை, கட்டுரை வடிக்கும் பன்முக ஆற்றலாளர்.  பல விருதுகளும், பரிசுகளும், பாராட்டுகளும் பெற்ற திறமையாளர்.  சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு அலுவலராகப் பணிபுரிந்து வந்தவர்.  விருப்ப ஓய்வு பெற்று கணவருக்காக, குழந்தைகளுக்காக பல்வேறு நாடுகள் பயணப்பட்டு தற்பொழுது சவூதி அரேபியாவில் வாழ்ந்து வருபவர்.  அடிக்கடி இலக்கிய நிகழ்வுகளுக்காக சென்னையும் வந்து செல்பவர். 

 இனிய முகநூல் தோழி.  இந்த முறை கணவரோடு மதுரை வந்த போது சந்தித்து உரையாடினேன்.  இவரது கணவர் திரு. மாசிலாமணி மிகச்சிறந்த பண்பாளர்.  மதுரை விழாவிற்காக இவரது மகன் அமெரிக்காவிலிருந்து வருகை தந்து சிறப்பித்தார்.  அவரிடம் என் பாராட்டைத் தெரிவித்தேன்.

       நூல் வெளியீட்டு விழாவிற்கு முதல் நாளே இந்த நூலை என்னிடம் வழங்கினார் நூலாசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி.  இந்த நூலிற்கு சிறப்பான அணிந்துரையை தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் வழங்கி உள்ளார்கள்.  இதற்கு காரணமாக இருந்த எனக்கும் மறக்காமல் என்னுரையில் நன்றியை எழுதி உள்ளார்கள்.

       மணிமேகலை பிரசுரம் நூலினை மிக நேர்த்தியாக வடிவமைத்து முக்கியமான புகைப்படங்கள் இணைத்து சிறப்பாக அட்டைப்படம் வடிவமைத்து நல்லமுறையில் பதிப்பித்து உள்ளனர்.  பாராட்டுகள். சவூதி அரேபியா ரியாத் பொறியியல் வல்லுநர் அபுல் கலாம் ஆசாத் அவர்களும் அணிந்துரை வழங்கி உள்ளார்.  அபுல் கலாம் என்ற பெயரைப் படித்தவுடன் எனக்கு மாமனிதர் அப்துல் கலாம் பெயர் நினைவிற்கு வந்தது.

       2014ஆம் ஆண்டு ஜீலைத் திங்களில் மொரீசியஸ் நாட்டில் புலம் பெயர்ந்த தமிழர்கள் குறித்த முதல் அனைத்துலக மாநாட்டில் நூலாசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் வாசித்த ஆய்வுக் கட்டுரையே நூலாகி உள்ளது.

       சவூதி அரேபியாவில் தமிழரின் உழைப்பும், பிழைப்பும் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக மிகச்சிறப்பாக எழுதி உள்ளார்.  கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை அப்படியே பதிவு செய்துள்ளார்.

       பெற்றோர் மரணத்திற்குக் கூட வரமுடியாத அவலத்தையும், கட்டிட வேலை என்று சொல்லி அழைத்து வந்து ஒட்டகம் மேய்க்க விட்ட துன்பத்தையும், வீட்டு வேலை என்று சொல்லி அழைத்து வந்து பெரிய கூடங்களின் கழிவறை சுத்தம் செய்ய வைத்த துன்பத்தையும் அவர்களின் பெயர்களுடன் பதிவு செய்துள்ளார்.

       அவனுக்கு என்ன வெளிநாட்டுப்பணம் என்று கேலி பேசுகின்றோம்.  ஆனால் வெளிநாட்டில் புலம்பெயர்ந்து புலன் அடக்கி தவவாழ்வு வாழ்ந்து உடல் வருத்தி ஊதியம் பெற்று சேமித்து சொந்த பந்தங்களைப் பார்க்க வரும் மனிதர்களின் உழைக்கும் உயர்ந்த குணத்தை, தியாகத்தை நூலில் நன்கு உணர்த்தி உள்ளார்.  “இக்கரைக்கு அக்கரை பச்சை தான் அயல்நாட்டு வாழ்வு என்பது” என மிக அழகாக வடித்துள்ளார்.

       முறையான கல்வி அறிவுடன் முறையான நிறுவன்ங்களுடன் முறையான ஒப்பந்தம் செய்து செல்லும் மருத்துவர்கள், பொறியாளர்கள் சவூதி அரேபியாவில் மகிழ்வான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற உண்மையையும் பதிவு செய்துள்ளார்.

       தரகர்களின் மூலம் படிப்பறிவின்றி உழைப்பாளிகளாகச் செல்வோரின் உழைப்பு சுரண்டப்படுவதையும் ஊதியத்தில் கமிசன் அடிப்படையும், அங்கு சென்றதும் கடவுச் சீட்டை முதலாளி வாங்கி வைத்துக் கொள்வார்.  வேறு எங்கும் செல்ல முடியாது, தப்பிச் சென்று வேறு எங்கும் வேலை பார்த்தாலும் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தோடு தினமும் செத்து செத்துப் பிழைக்கும் பலர் சவூதி அரேபியாவில் வாழ்கின்றனர்.  இவர்களின் வாழ்வில் விடியல் விளைந்திட இந்தியத் தூதரகம் மூலம் உதவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.

       தன் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு தர வேண்டும் என்பதற்காகவே குடும்பத்தை விட்டுவிட்டு புலம் பெயர்ந்து கடின உழைப்பை நல்கி கடும் வெயிலில் வதங்கி தியாக வாழ்வு வாழும் மனித தெய்வங்கள் பலரை மனக்கண்முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றது இந்நூல்.

       தன் மகன் படிப்பிற்காக சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு என்று சென்ற தாய், கழிவறை சுத்தம் செய்வது மகனுக்கு தெரியாது என்று சொல்லி கண்கலங்கிய நிகழ்வு படிக்கும் போது, படிக்கும் வாசகர் கண்களிலும் கண்ணீர் வருகின்றது.  நூல் முழுவதும் உண்மை, உண்மை தவிர வேறில்லை.

       சவூதி அரேபியாவில் வாழும் புலம் பெயர்ந்த பெண்கள் நிலையையும் படம் பிடித்துக் காட்டி உள்ளார்.  நூலிலிருந்து சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு.

“சிலருக்கு ஒட்டகம் மேய்க்கும் வேலை ; பலருக்கு
எரிவாயு சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் வேலை ;
இன்னும் சிலருக்கு எண்ணெய்கிணறுகளில் உழைப்பைக்
கொடுத்தால் தான் சம்பளம் கிடைக்கும். இவர்களை வேலைக்கு
அமர்த்தியவர்களின் மனம் திருப்தி அடைந்தால் தான் இவர்களுக்கு பணம் கிடைக்கும்”

தமிழன் உழைக்கச் சளைத்தவன் இல்லை, அண்டை மாநிலமாக இருந்தாலும் கடினமாக உழைப்பவன்  தமிழன்.  கடைசியில் வஞ்சிக்கப்படுவதும் தமிழன் தான் என்பது வேதனை.

       “இளமை வனப்போடு வரும் இவர்கள்,  ஒரு நாளில்
       எட்டு மணி நேரம் உழைத்தோம், சாப்பிட்டோம்,
       படுத்தோம் என்றில்லாது ஒரு நாளில் 17 மணி
       நேரங்கள் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலைகளில்
       மாட்டுகிறார்கள்”.

      17 மணி நேரம் பாணியாற்றத் பணிப்பது   என்பது கொடுமையிலும்  கொடுமை .கண்டனத்திற்குரியது சரியான தங்கும் வசதியின்றி, அங்காடித்தெரு  .திரைப்படத்தில் வரும் காட்சி போல படுக்க வைக்கிறார்கள், .போதைய கழிவறைகள் இன்றி சுகாதாரக் கேடு காரணமாக நோய்வாய்ப்படும் தகவலும் நூலில் உள்ளது.

       “சவூதி அரேபியாவில் வசிக்கும் பெண்கள் தனியாகக் கடைவீதிகளில் நடக்கக் கூடாது.  கணவர், குழந்தை, பாதுகாவலர் இவர்களுடனேயே வெளியே செல்ல வேண்டும்.  வீட்டை விட்டு வெளியே வரும் போது, கருப்பு அங்கியை அணிந்து கொண்டே வர வேண்டும்.  வீட்டிற்கு வெளியே எங்கு சென்றாலும் தலைமுடியை மறைத்துக் கொள்ள வேண்டும்.  மொத்தத்தில் தலை முதல் கால் வரை கறுப்புத்துணியில் மூடிக் கொள்ள வேண்டும்.  வெளிநாட்டுப் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டியது இல்லை.  பலத்த சத்தமுடன் சிரிக்கவும் கூடாது”.

       இப்படி பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு சவூதி அரேபியாவில் இருப்பதை நூலில் சுட்டிக்காட்டி உள்ளார்..அயல் நாட்டு வேலை பற்றி விழிப்புணர்வு விதைக்கும்   நல்ல நூல் எழுதிய நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி
அவர்களுக்கு பாராட்டுகள் .வாழ்த்துகள் .
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்