இவர்களும் இந்நாட்டின் கண்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மு. வாசுகி vasuki16011973@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

இவர்களும் இந்நாட்டின் கண்கள் !


நூல் ஆசிரியர் : கவிஞர் மு. வாசுகி  vasuki16011973@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மணிமேகலை பிரசுரம், 7 (ப.எ. 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017.  பக்கங்கள் :    
     
*****
       மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டிகளில் பரிசும் விருதும் பெற்ற கவிஞர் மு.வாசுகி அவர்களின் முதல் நூல் இது.  வாசுகி என்ற பெயரை வாசித்ததும் எல்லோருக்கும் திருவள்ளுவரின் மனைவி வாசுகியின் நினைவு வந்து விடும்.  இந்த நூலில் எனது இனிய நண்பர்கள் வித்தகக் கவிஞர் பா.விஜய், கவிஞர் நெல்லை ஜெயந்தா இருவரும் அணிந்துரை வழங்கி உள்ளதை மணிமேகலை பிரசுரத்தின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது, பாராட்டுகள்.
       நூல் ஆசிரியர் கவிஞர் வாசுகி அவர்கள் இல்லத்தரசியாக இருந்து கொண்டு 2 மகள்கள், 1 மகனை நன்கு படிக்க வைத்துக் கொண்டு கவிதையிலும் தனி முத்திரை பதித்து வருபவர்.  அவரது முதல் நூல் முத்திரை பதிக்கும் நூலாக முத்தாய்ப்பாக வந்துள்ளது.  பாராட்டுகள்.  நூலில் ஹைக்கூ கவிதை, புதுக்கவிதை, மரபுக்கவிதை என முக்கவிதைகளின் சங்கமமாக பல்சுவை விருந்தாக கவிதைகள் உள்ளன.
       உலகில் உள்ள உறவுகளின் உன்னதத்தை ஒப்பற்ற உறவு அம்மா. அம்மா என்ற உறவுக்கு ஈடான உறவு உலகில் இல்லை.  ஈடு இணையற்ற உறவு அம்மா பற்றி ரத்தினச் சுருக்கமாக கவிதை அம்மாவின் மேன்மையை மேதினிக்கு உணர்த்துவதாக உள்ளது.
       அம்மா!
       இருப்பிடத்தின் முகவரியை எவராலும் தர முடியும்
       ஓர் முகவரிக்கே இருப்பிடத்தை 
       இவளால் தான் தர முடியும்  
       போதி மரத்திற்கு மனித உருவம் கொடுத்துப் பார்த்தேன்
       அம்மா தெரிந்தாள்.
       என்னுடைய பல நூல்களுக்கு விமர்சனம் எழுதிய தோழிக்கு அவரது முதல் நூலுக்கு எழுதிடும் விமர்சனம்.
       மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்.  புத்தகம் மட்டும் கண்டுபிடிக்கவில்லை என்றால் மனித சமுதாயம் உயர்ந்திருக்க வாய்ப்பே இல்லை. மிகச்சிறந்த புத்தகம் பற்றிய கவிதை சிந்திக்க வைத்தது.
       புத்தகம்!

       அச்சடித்த ‘அகம்’ புத்தகம்
       இதயத்தை உழுவதற்கு
       வாசிப்புகளால் நகர்த்தப்படும்
       எழுத்துக் கலப்பை புத்தகம்!
       எள்ளல் சுவையுடனும் ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளார்.  அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. 
       கொசு !
       குபேரர்களாக்கியது
       மருத்துவர்களை
       டெங்கு.
       இன்று பலரும் கவிதை எழுதுகின்றனர்.  ஆனால் வித்தியாசமாக எழுதுபவர்களே வெற்றி பெறுகின்றனர்.  நூலாசிரியர் கவிஞர் வாசுகி அவர்கள் இந்நூலில் பல கவிதைகள் மிக வித்தியாசமாக எழுதி வெற்றி பெறுகின்றார்.  தினமும் பூட்டை எடுத்து பூட்டுகின்றோம். இப்படி ஒரு சிந்தனை நமக்கு வந்ததே இல்லை என வாசகர்களை வியப்பில் ஆழ்த்தும் கவிதை ஒன்று மிக நன்று.
       நான் வெளியே கிளம்பும் போதெல்லாம்
       ஒருமுறை இணைந்து விடுகிறது
       பூட்டும் சாவியும்!
       காலை நாளிதழை காலையில் படிப்போம்.  அந்த நாளிதழ் இரவிலேயே காலாவதியாகி விடுவது உண்மை.  அதனை அழகாக உணர்த்திடும் கவிதை, இதோ!.
       விடியலில் மட்டுமே
       கௌரவிக்கப்படுகிறது
       நாளிதழ்!
       நம் நாட்டில் வறுமையை ஒழிப்போம் என்று வரிந்து கட்டி அறிக்கை விட்டு பதவிக்கு வருகின்றனர்.  ஆனால் வறுமை மட்டும் ஒழியவே இல்லை.  ஆனால் பதவிக்கு வந்தவர்கள் வறுமை ஒழிந்து வளமாகி விடுகின்றனர்.  இப்படி பல சிந்தனைகளை தோற்றுவிக்கும் கவிதை!
       நல்ல வேளை!
       வறுமைக்குக் கோடு போட்டார்கள்
       ‘படம்’ வரைந்திருந்தால்...?
              கற்பனைக் குதிரைகள் கூட
              கனவில் வருவதில்லை
              நாங்கள் ஏழை என்பதனால்!
       தங்கை பிறந்த போது வீட்டில் 
       தாழ்ப்பாள் தான் இல்லை
       கட்டிக் கொடுக்கும் போது வீடே இல்லை.
       உலகப்பணக்காரர் பலர் இந்தியாவில் இருந்த போதும் இந்தியாவின் ஏழ்மை மட்டும் இன்னும் ஒழிந்தபாடில்லை.  பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகின்றான்.  ஏழை மேலும் ஏழையாகின்றான்.  கருப்புப்பணத்தை மீட்டு வருவோம் என்று சொல்லி பதவிக்கு வந்தவர்கள் சொன்னதைச் செய்யவில்லை. வறுமை பற்றிய கவிதைகள் படித்த போது இப்படி பல சிந்தனைகளை தோற்றுவித்து வெற்றி பெறுகிறார் நூல் ஆசிரியர் கவிஞர் மு. வாசுகி.
       மண் சோறு அல்ல
       மண்ணே போடும் சோறு
       குயவனின் வருமானம்
       நல்ல கவிதை.  ஆனால் உலகமயம் புதிய பொருளாதாரம் என்ற பெயரில் குயவனின் பிழைப்பில் மண் போட்டு விட்டார்கள்.  வேதனை.
       கவிதை எழுதுவதற்கு ரசனை என்பது மிகவும் அவசியம்.  ரசனை உள்ளவர்களால் தான் கவிதை வடிக்க முடியும்.  ரசனை உள்ளவர்களால் தான் கவிதை வாசிக்கவும் முடியும்.
       இன்னும்
       அறிவிக்கப்படாத கவிஞர்களே!
      
       எள்ளல் சுவையுடன் அசைவ உணவிற்கான கண்டனத்தை மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார். 
       ஒரே ஆடு
       நூறு பேர் வயிற்றுக்குள்
       சமாதி.
       இயற்கையைப் பற்றி பாடுவதில் ஜப்பானியக் கவிஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என்று மெய்ப்பிக்கும் விதமாக இயற்கை பற்றி பல ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார்.
       ஒரு நிலா விளையாட
       எத்தனை பெரிய விளையாட்டுத் திடல்
       வானம்.
              மழையிலும்
              வளைகாப்பு
              வானவில்.
       நூலாசிரியர் ஒன்றைப் பற்றி எழுதியது, வாசகர் படிக்கும் போது மற்றொன்றும் நினைவிற்கு வர வேண்டும்.
       ஒரு மாதம் நீர்
       பதினோரு மாதம் குப்பை
       எங்கள் ஊர் குளம்
       இந்த ஹைக்கூ படித்தவுடன் எனக்கு வைகை ஆறு நினைவிற்கு வந்த்து.  ஒரு காலத்தில் கரைபுரண்டு ஓடிய வைகை, இன்று அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை மாதம் மட்டும் தண்ணீர் வரும் வைகையாக வறண்டது நினைவிற்கு வந்தது.
       நூலின் தலைப்பிலான கவிதை, இல்லத்தரசிகளின் உள்ளக்குமுறலாக, பெண்ணியக்குரலாக ஒலிக்கின்றது.
      “வேளை வேளைக்கு இரைப்பையை நிரப்பிய பின்
       தன் கருப்பையை நிரப்பி வாழும் பெண்ணினமே
       நீங்களுமன்றோ இந்நாட்டின் கண்கள்”      
       உயிர் என்ற கவிதையும் பெண்ணியம் பேசி உள்ளது.  ஆணாதிக்கத்துடன் ஆண்கள் பலர் வாழ்கின்றனர்.  மூன்று வேளைக்கும், ஆயுள் முழுமைக்கும் உணவு சமைத்து வழங்கும் மனைவியிடம் ஆறுதலாக, நீ சாப்பிட்டாயா? என்று கேட்பதே இல்லை. அதனை உணர்த்திடும் கவிதை நன்று.
       சாப்பிடுவதில் கிடைக்காத சத்தும்
       சாப்பிடுவாயா? எனக கேட்கும்
       சொற்களில் கிடைத்துவிம் ஒரு மனைவிக்கு!
       மாமனிதர் அப்துல்கலாம் பற்றி, கவிஞர் வைரமுத்து பற்றி, சென்னையின் சோகம் மழை பற்றிய கவிதைகளும் உள்ளன.  பாராட்டுகள்.முதல்நூல் முத்தாய்ப்பாக வந்துள்ளது  நூல் ஆசிரியர்  கவிஞர் மு. வாசுகி அவர்களுக்கு பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்.

.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்