செப்பேடு! நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

செப்பேடு!


நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வசந்தா பதிப்பகம், 2-16, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர்-635 109.  பக்கம் : 176, 
விலை : ரூ. 150.
*****
       ‘செப்பேடு நூலின் தலைப்பே செப்பலான ஏடு என்ற பாராட்டுப் பத்திரத்தை நினைவூட்டுவதாக உள்ளது.  நல்ல பெயர். மரபுக்கவிதைப் போட்டிகளில் தொடர்ந்து முதல் பரிசை வென்று வரும் வெற்றியாளர் நூல் ஆசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள்.  45 ஆண்டுகளாக மரபுக் கவிதை எழுதி வரும் ஆற்றலாளர்.  ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு இலக்கியப் பணியில் முழூ மூச்சுடன் இயங்கி வருகின்றார். 

மதுரையில் சந்தித்த போது நூலாசிரியரிடம் வேண்டுகோள் வைத்தேன்.  முகநூல் இணையங்களில் எழுதுங்கள் என்று. எனது வேண்டுகோளை ஏற்று இன்று நவீன ஊடகமான முகநூல் இணையத்தில் தடம் பதித்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்.  பெருமையாக உள்ளது.  மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.

       தந்தை பெரியார் போல, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர்.  மரபுக்கவிதையே எழுதுவது என்பதில் கொள்கை மாறாதவர்.  மரபு மாறாத மரபாளர்.  புதுக்கவிதை, வசன கவிதை, ஹைக்கூ கவிதை என்று எத்தனையோ வடிவங்கள் வந்தாலும் மரபுக்கவிதைக்கு ஈடாக முடியாது. மரபுக்கவிதை என்பது பழைய திரைப்படப்பாடல்கள் போல என்றும் இனிப்பவை.  இனிமை மிக்கவை. 

 சொல் இனிமை மட்டுமல்ல கருத்து இனிமையும் உண்டு. சொல்லில் உயர்வு தமிழ்சசொல், அச்சொற்களின் சுரங்கம் இந்நூல்.  சொற்களஞ்சியமாக உள்ள நூல். வளரும் கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல்.  மரபுக்கவிதைகளின் பெட்டகம்.  தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக ஒளிர்கின்றது.
       தமிழ் இனத்தைக் கண்டு கோபம் கொண்டு கவிதைகள் பல வடித்துள்ளார்.  அவற்றுள் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.  நூலாசிரியர்           பெருமைகளில் ஒன்றானவர்.

       சுட்டு விரல்
       மொழி மறந்தாய் பண்பாட்டைத் துறந்தாய்                தொன்மை
       மொழிகின்ற இனஅடையா ளத்தை விட்டாய்
       விழிவிற்றுச் சித்திரத்தை வாங்கு கின்ற
       வினைமுரணாய் அனைத்தையுமே இழந்து                போனாய்.

       உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போல, தமிழ் உணர்ச்சி மிக்க கவிதைகள் நூலில் நிறைய உள்ளன.  காலத்தால் அழியாத கவிதை மரபுக்கவிதை. செப்பேட்டில் செதுக்கியது போல சந்தக் கவிதைகளை நூலில் செதுக்கி உள்ளார்.
       உலகப்பொதுமறை என்று உலக அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு போற்றிய போதும் நம் நாட்டில் தேசிய நூல் என்று அறிவிக்க இன்னும் சிந்தனை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது வியப்பு. 

       திருக்குறளை தேசிய நூல் ஆக்குவோம்!
திருக்குறள் தான் தேசிய நூல் என்றே ஏற்றுத்     
தில்லி ஆனை இடுவதற்கே நெருக்க வேண்டும்
அருந்தமிழர் நாமிணைந்தே களம்பு குந்தால்
அடுக்கிவைத்த தடைகளெல்லாம் தூள்தூ ளாகும்!

பாரதீய சனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. தருண் விஜய் அவர்களும் திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து  வருகிறார்.  மத்தியில் ஆளும் மைய அரசு இன்னும் செவி சாய்க்காமல் அறிவிக்காமல் இருப்பது உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

தமிழிசையை உயிர்பிப்போம், தாயைப் போலத் தமிழைக் காப்போம், நம் மொழியை நாமறிவோம், வீழ்ந்ததேன் தமிழன் எனப் பல்வேறு தலைப்புகளில் மரபுக் கவிதைகள் வடித்து மரபு விருந்து வைத்து தமிழுணர்வை ஊட்டி உள்ளார்.  பாராட்டுக்கள்.  மரபுக்கவிதை படிப்பதே சுகமான அனுபவம்.

குன்றக்குடி அடிகளார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட பட்டிமன்றம் இன்று தரமிழந்து வெறும் நகைச்சுவைகள் சொல்லும் அரங்கமாக மாறி விட்டதற்கான கோபத்தை கவிதையில் நன்கு பதிவு செய்துள்ளார்.  பாருங்கள்.

சிந்திக்கப் பேசுவோர்கள் யாரு மின்றிச்
              சிரிப்பொன்றே பட்டிமன்றம் ஆன தின்று
      சொந்தமாக ஆய்வு செய்து பேசிடாமல்
              சொல்லிடுவார் தொலைக்காட்சி தொடரை         வைத்தே
          எந்திரம் போல நகைச்சுவைகள் நடிப்பைக் காட்டி
      ஏளனங்கள் அவர்களுக்குள் வீசிக் கொள்வர்
          சந்ததியைக் கெடுக்கின்ற தொடரைப் போன்றே
      
சாய்ந்ததுவே தொலைக்காட்சி பட்டி மன்றை!

புதுக்கவிதைகள் காலத்திலும் மரபு மாறாமல் மரபுக் கவிதை வடிக்கும் நூலாசிரியர் போல தரம் குறைந்து விட்ட இக்காலத்திலும் தமிழ்த்தேனீ இரா. மோகன், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. போன்றோர் தரமான பட்டிமன்றத்தின் நடுவராக இருந்து விழிப்புணர்வு பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.

உயிரேடு, உழைப்பேடு, உரிமையேடு, நினைவேடு என்று பல பகுதிகளாகப் பிரித்து கவிதைகள் வழங்கி உள்ளார்.  நூல் ஆசிரியரின் 22வது நூல் இது.  பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் அப்படியே ஓய்வு பெற்றுவிடும் சராசரி ஆசிரியராக இல்லாமல் ஓய்வின்றி தமிழ்க் கவிதைகள் உலகில் உழைத்து வருகின்றார்.

  உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமாக பல்வேறு பரிசுகளும், விருதுகளும் பெற்று வருகின்றார்.  மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.  மதுரை வந்து இருந்தார்.  வானிலிருந்து வரும் அமுதமான மழை பற்றிய கவிதை நன்று.  மாமழை போற்றி உள்ளார்.

மழை!
மனிதர்க்குப் பெற்றதாயின் பாலைப் போன்று
       மண்ணிற்கு மழையொன்றே தாயின் பாலாம்
       இனிதான வானமிழ்தாம் என்றே முன்னோர்
       இருகரத்தால் வணங்கியதை சிலம்பு கூறும்.

வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் அடிக்கடி சொல்லும் சொல்லான வெங்காயம் பற்றிய கவிதை நன்று.

வெங்காயம்!
பெரியாரின் சொற்களிலே உவமை யாகி
       பெருமைமிடு தத்துவத்தின் உருவ மாகி
       அரிதான கருத்துக்களை விளக்கு தற்கே
       அடையாள மாய்க்காட்டும் காட்டு மாகி !

நாட்டில் நடக்கும் அவலத்தை, காந்தி சிலை பேசினால்! என்று தலைப்பிட்டு வடித்துள்ளார்.  .

காந்தி சிலை பேசினால்!
இந்தியாவின் செல்வத்தைச் சுரண்டித் தின்ற
      இங்கிலாந்து வெள்ளையனைத் துரத்தி விட்டால்
      பந்தி போட்டு நாட்டினையே தனது வீடாய்ப்
      பாதுகாக்க வேண்டியோரை தின்னு கின்றார் !
அரசியல்வாதிகள் இனியாவது திருந்த வேண்டும் .ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .உலக அரங்கில்  ஊழல்  காரணமாக எடுத்த கெட்டப் பெயரை அழிக்க முன்வர வேண்டும்

நினைவேடு பகுதியில் இந்தியாவின்கடைக்கோடியில் உள்ள இராமேசுவரத்தில் பிறந்தவர் .அவரது இறப்பிற்கு இந்தியா மட்டுமல்ல உலகமே  கண்ணிர் சிந்தியது . அவர் திருக்குறள் படித்து அதன் வழி நேர்மையாக வாழ்ந்த காரணத்தால் உலகம் போற்றுகின்றது .உடலால் உலகை விட்டு மறைத்தாலும் புகழால் உலக மக்கள் மனங்களில் என்றும் வாழ்கிறார்.வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றிய கவிதை நன்று.

வீர வணக்கம் செலுத்துவோம்!

 ஏழ்மையிலே வளர்ந்தாலும் உறுதி நெஞ்சில்
       ஏற்றுத்தாய் மொழித்தமிழ் கல்வி கற்றே
       ஊழ்வென்று படிப்படியாய் உயர்ந்து நாட்டின்
       உயர்பதவி குடியரசுத் தலைவ ராகி
       வாழ்வெல்லாம் எளிமையொடும் நேர்மை யோடும்
       வள்ளுவரின் குறள்வழியில் வாழ்ந்து காட்டித்
       தாழ்ந்திடாமல் தமிழர்க்கும், தமிழ் மொழிக்கும்
       தகுபெருமை சேர்த்தவர்தாம் அப்துல் கலாமாம்!

 மரபுக்கவிதை என்பது நிலவு போன்றது .மற்ற கவிதைகள் நட்சத்திரங்கள் போன்றவை .மரபுக்கவிதை என்பது நிலவிற்கு ஒளியூட்டி வரும் நூல் ஆசிரியர்  புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன்அவர்களுக்கு பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்