படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! ஏப்ரல் – 22, சர்வதேச பூமி தினக் கவிதை ! கவிஞர் ப.கண்ணன்சேகர், 9894976159, திமிரி.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஏப்ரல் – 22, சர்வதேச பூமி தினக் கவிதை !

கவிஞர் ப.கண்ணன்சேகர், 9894976159, திமிரி.

சுற்றும் பூமி சுகந்தானா
சற்றே சிந்தி மானிடரே!
சூழல் நலமே மாசானால்
சுகத்தில் வருமே பேரிடரே!
பூமியின் வெப்பம் தாங்காது
பூக்காடு எல்லாம் சாக்காடு!
சாமியும் வந்தால் தீராது
சரியான தீர்வை நீதேடு!
மரத்தை வெட்டி தீர்த்திடவே
மழைதான் இனியும் வந்திடுமோ!
வரத்தைக் கேட்டு அழுதாலும்
வனத்தில் பசுமை தந்திடுமோ!
நீரின் நிலைகள் பூமிக்கு
நாளும் செழிக்கும் ரத்தநாளம்!
ஊரின் வளர்ச்சி பெருக்கத்தால்
ஓடிய நதியோ அலங்கோலம்!
விளையும் நிலமும் ரணமாகி
வறட்சி கண்டு வெடிக்கிறது!
உலையின் கொதிப்பு போலாகி
உலவும் காற்று கொதிக்கிறது!
பஞ்ச பூதம் இயங்குவதும்
பரந்த பூமி அடித்தளமே!
கொஞ்சம் யோசி மனதினிலே
குவலயம் நன்மை கண்டிடுமே!
இயற்கை இணைந்த வாழ்வாலே
என்றும் நலமே சேர்த்திடலாம்!
உயர்ந்த சூழலைக் கொண்டாலே
உலகில் புவியைக் காத்திடலாம்!
-

கருத்துகள்