வியாழன், 21 ஜனவரி, 2016

"ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் திரு க .தியாகராஜன் செயல் இயக்குனர் தியாகராசர் மில் .

"ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை கவிஞர் திரு க .தியாகராஜன்
செயல் இயக்குனர்
தியாகராசர் மில் .

K. THIAGARAJAN
EXECUTIVE DIRECTOR
Thiagarajar Mills P. Ltd.,
Kappalur – 625 008.
Madurai, (INDIA).
Phone : 0452 2482595
18-01-2016
அன்புடைய கவிஞர் இரா. இரவிக்கு,
       வணக்கம்.  நீங்கள் அன்புடன் அனுப்பி வைத்த “ஹைக்கூ முதற்றே உலகு” நூல் கிடைக்கப் பெற்றேன்.  நன்றி, நூல் நன்கு அமைந்ததற்கு பாராட்டுக்கள்.
       கவிதை உலகில் ஹைக்கூ என்னும் புதுக்கவிதை நடை, இன்றைய இளைய சமூகத்தினரின் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுத் திகழ்கிறது.  அக்கவிதை முறையில் நீங்கள் இயற்றி இருக்கும் படைப்புகள், பல முற்போக்கு கோட்பாடுகளையும், நற் சிந்தனைகளையும் வெளிக்கொண்டு வருகிறது.  எளிய நடையும், தேர்ந்த சொற்களும், நவீன எண்ணங்களும் கவிதைக்கு செறிவூட்டுகின்றன.
       மழையின் பாதிப்புகளைக் கூறும் கவிதையில், நீர் ஆதாரங்களை சரியாக பாதுகாக்காவிட்டால் ஏற்படும் இன்னல்கள் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி, தீராத பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்பட்ட கருத்து ஏற்புடையது.
       திரைப்படம் என்னும் தலைப்பில் உள்ள கவிதை, பற்று, வெறி ஆகிய இரண்டின் வேறுபாடுகளை எடுத்துக்காட்டின் மூலம் கூறியது கவிதை நயத்தை உணர்த்துகிறது.
       ஆங்கிலேயன் கற்பித்த
       ஆகப் பெரிய தீங்கு
       மது!
என்ற வரிகள், ஆங்கில மோகத்தைக் கூறுகிறது.  மதுவின் தாக்கத்தை மற்ற இடங்களில் குறிப்பிட்டுக் காட்டியது, இந்நூலை படிக்கும் இளைஞர்களை யோசிக்கச் செய்யும்.
       இறந்த பின்னும் விடவில்லை
       பதவி ஆசை அரசியல்வாதிக்கு
       சிவலோக பதவி !
இதனால் தானோ என்னவோ, பெரியோர்கள் இதனை “பதவி” என்று குறிக்காமல், சிவலோக ப்ராப்தி என்று கூறினார்கள்.  யோசிக்க வேண்டிய கருத்து.
       மலர்களின் பயணம் கோவிலுக்கா? மயானத்திற்கா? இக்கேள்விக்கான பதில், தருணத்திற்கு ஏற்ப அமையும்.  மலரின் இறுதிப் பயணம் அதன் கர்ம வினைக்கு (!) ஏற்ப அமையலாம் அல்லவா?  தவம் கிடந்த மலர்கள் ஆண்டவன் மலரின நறுமணம் குன்றுவதில்லை.  இதுவே மலரின் (மாறாத) தன்மை, மனிதர்களும் இப்படி இருந்தால், உலகம் பூஞ்சோலையாகும்.
       தமிழ்ப் பழமொழியும், ஜப்பானிய சென்ரியுக் கவிதையும் இந்நூலில் இடம் பெற்றது புது முயற்சி.  இக்கவிதை முறையை எனக்கு இந்நூல் மூலம் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.  தமிழ்ப் பழமொழிக்கு ஒரு பார்வைத் திரிபைப் புகுத்தி, அவற்றுக்கும் புத்தொளி பற்ற வைக்கும் முயற்சி இந்நூலில் நடந்துள்ளதாக எழுதிய திரு. இரா. மோகன் அவர்கள், சில புதிய கவிதை வடிவங்களைப் பற்றி விரிவாக் குறிப்பிட்டுள்ளது ஒரு நல்ல அறிமுகமாக உள்ளது.  எல்லாப் பழமொழிகளும் உண்மையானதா என்பதை யோசிக்க வைக்கிறது.  பரணி தரணி ஆளும் என்பது, பொதுப்படையான ஒன்று.  அறிவியல், சோதிடம், வான சாஸ்த்திரம் போன்ற அளப்பறிய துறைகள் நமது தமிழ்ச் சமுதாயத்துக்கு சொந்தம்.  அவற்றை கற்ற அறிஞர்களிடம், கேட்டு ஐயம் தெளிதல் முக்கியமானது.  இல்லையேல் மூட நம்பிக்கைகளை நாம் நம்பியே தீர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.  இது “அறிவுச் சோம்பலுக்கு””" வழிவகுத்து, தர்க்க ரீதியாக ஆராய்வதை தடுத்து விடும்.  பழமொழியின் புதுக்கோணங்கள், சிந்தையைத் தூண்டுகிறது.  ஜப்பான் நாட்டுக் கவிதை நடையுடன் தமிழ் இலக்கியங்கள் உடன்பட்டு அமைவதை காணும் போது நமது மொழியின் சிறப்புத் தன்மை மேலும் வெளிப்படுகிறது.
       ஒரு வேளை, கல்லூரி வாசலை மிதித்து பட்டங்கள் பெற்று இருந்தால், அவரது படைப்பாற்றல் சிறந்திருக்க வாய்ப்பு சற்றே குறைந்திருக்கலாம்.  ஒரு நஷ்டத்தை  ஈடு செய்து காட்டியது தமிழ்க் கவிதை.  இலாபம் பெற்றோர் பலர் ; ஹைக்கூ உலகமும் சேர்ந்து!
அன்புடன்
க. ஹரி தியாகராசன்

.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது