வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு

வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!


நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு sabavadivelu@gmail.com

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணிமேகலைப் பிரசுரம், 7 (ப.எண். 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017.  போன் : 044 24342926, பக்கம் : 100, விலை : ரூ. 60
*****
       கவிதை உறவு இலக்கியத் திங்களிதழின் ஆசிரியர் கலைமாமனி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை, அழகுரை.  நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது.

       நூலின் தலைப்பே மனிதநேயம் மலர்விப்பதாக உள்ளது.  அந்தத் தலைப்பிலான கவிதை மிக நன்று.

       வீழ்க சாதி சமயம்!
       வெல்க மனிதநேயம்!
       சாதிமதம் துறந்த கலப்பு மணங்களே
       சகலருக்கும் பொதுவான நாட்டுவளங்களே
       சமத்துவம் சமுதாயம் சமைத்திடுவோம்
       சாதி துறப்போம்!  மதம் மறப்போம்!

ஆம், இன்றைக்கு சாதியும், மதமும் தான் சமுதாயத்தின் அமைதியை அழித்து வருகின்றன.  சாதியின் பெயராலும்  மதத்தின் பெயராலும் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகி வருகின்றன.  தந்தை பெரியார் சொன்ன பகுத்தறிவைப் பயன்படுத்தினால் மோதல்கள் முடிவுக்கு வரும்.

       அணிந்துரையில் ஏர்வாடியார் குறிப்பிட்டது போல, அழகெனப்படுவது யாதெனின் கவிதையும் அழகு தான்.  அழகு எவை என வரிசையாகச் சொல்லி விட்டு எது அழகு என்று எழுதி முடித்தது அழகு தான்.

       அழகெனப்படுவது யாதெனின்!
       அடர்ந்த காடென்பர் சிலர்
       ஆடும் மயிலென்பர் பலர்
       பனியின் வெளிரென்பர் சிலர்
       பட்டுப் புல்லென்பர் பலர்
       தாய்மையின் தூய்மையாய்த்
       தழைய தழைய வருமழகே!
       அழகு அழகு தாய்மையே அழகென்பேன்!

       இன்றைக்கு பலருக்கும் நீரிழிவு நோய் வந்துள்ளது.  இதன் காரணமாக பலரும் மனவருத்தத்தில் கவலையில் உள்ளனர்.  அவர்களுக்கு கவிதையிலேயே நோய் நீங்கிட தீர்வு சொல்லிய விதம் நன்று.

       இடும்பைகூர் நிரிழிவே,
       உன்னோடு வாழ்தல் அரிது
       நாளும் உடற்பயிற்சி செய்திடுவீர்
       உடலை வளைத்து உழைத்திடுவீர்!
       உண்பதைச் சீராய் செய்திடுவீர்
       கண்டதை யெல்லாம் உண்ணாதீர்!
       கவலை மனத்தில் தேக்காதீர்
       உணர்வை ஆளக் கற்றிடுவீர்!
       உடல் நலம் என்றும் பேணிடுவீர்!

       மருத்துவர் போல சர்க்கரை நோய் நீங்குவதற்கான வழிமுறைகளை கவிதையில் உணர்த்தியது சிறப்பு.  வாசகர்களுக்கு பயன்படும் வித்தியாசமான சிந்தனை.  நூல் ஆசிரியர் கவிஞர் சபா வடிவேலு அவர்களுக்கு பாராட்டுக்கள்.  அவரது பெயரிலேயே சபா இருப்பதால் சபாவில் பாடினால் கைத்தட்டல் விழும்.  கவியரங்கக் கவிதைகள் போலவே நூலில் எழுதி உள்ளார்.  கவிஞர் வடிவேலு, வடிவான கவிதைகளை வடிப்பவர் எனலாம்.

       வள்ளுவர் சொன்ன வாய்மையை காந்தியடிகள் வாழ்ந்த வாய்மையை உணர்த்தும் விதமாக மெய்யின் மேன்மையை சிறப்பிக்கும் விதமாக பொய்யால் வரும் தீமையை பட்டியலிட்டுள்ளார்.  ஒருமுறை நாம் பொய் சொல்லி விட்டால், அடுத்து நாம் பேசும் மெய்யும் சந்தேகத்திற்கு உட்படுத்தப்படும்.  எனவே மெய் பேசி வாழ்வதே இன்பம்.

       பொய்யாதீர் மானிடரே!
       பொய்த்து விடும் மன்னுயிரே!
       காதலன் பொய் நினைக்க, காதல் பொய்த்து விடும்!
       மணாளன் பொய் நினைக்க, மனையும் பொய்த்திடும்
       கற்றவன் பொய் பரப்ப கல்வி பொய்த்து விடும்
       மாணவன் பொய் கற்க மனமே பொய்த்து விடும்
       மருத்துவன் பொய் செய மருத்துவம் பொய்த்து விடும்
       ஆதலால் மானிடரே பொய்யாதீர்!
       பொய் போற்றின், பொய்த்து விடும் மன்னுயிரே!

       இக்கவிதைக்குக் காரணமாக விளங்கிய திருக்குறளையும் கவிதையின் முடிவில் எழுதியது சிறப்பு.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமைநன்று.                              குறள் 297
      
       நலிவுடையுதே நான்குகால் மண்டபம் என்ற கவிதையுல் இன்றைய அரசியல் அவலத்தை எழுதி கடைசியாக முடித்த முடிப்பு நன்று.  பொருத்தமாக பாராளுமன்றத்தின் ஓவியமும், தராசின் ஓவியமும் பதிந்தது சிறப்பு. 

       நல்லவரும் வல்லவரும் – நம்மில்
       செயலிழந்தே ஒதுங்கிடாது – சேர்ந்தே
       களை எடுக்க முனைவோமை
       கடன் முடித்து வெல்வோமே!

       இன்று நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்றாகி விட்டது.  ஆனால் நூலாசிரியர் கவிஞர் சபா வடிவேலு அவர்கள், நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற தனது ஆசையை கவிதையில் நன்கு வடித்துள்ளார்.

       உலக பூமி தினம் ஏப்ரல் 22.  அதற்கும் ஒரு கவிதை எழுதி உள்ளார்.  கவிகங்களுக்கு கவிதையின் தலைப்பு என்பது லட்டுப் போல, தலைப்பு கிடைத்து விட்டால், உடன் சிந்தனையை ஓடவிட்டு அழகிய கவிதை வடித்திடுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல கவிதைகள் நூலில் உள்ளன.  பாராட்டுகள்.

       நூலாசிரியர் கவிஞர் சபா வடிவேலு அவர்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்குநராகவும், முதுநிலை வணிகவியல் பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  காமராசர் போல உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் இன்று இல்லையே என்ற ஆதங்கத்தை இன்றைய அரசியல் அவலத்தை பல்வேறு கவிதைகளில் பதிவு செய்துள்ளார். 

       மழை பற்றிய கவிதையும் நன்று.  இக்கவிதை மழை இல்லாத காலத்தில் பாடிக் கொள்ளலாம்.  மழையால் சென்னையில் மரணஓலம் கேட்டது/  இப்படி பல நினைவுகளை மலர்வித்தது மழை கவிதை!

       முயற்சி திருவினையாக்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழியை வழிமொழிந்து வடித்த கவிதை நன்று. மூச்சு இருக்கும் வரை முயற்சி இருக்க வேண்டும்.  இன்றைய இளையதலைமுறை கவனத்தில் கொள்ள வேண்டும். 

       முயற்சி!
       முயற்சி திருவினை ஆக்கும்
       பொய்யாமோ வள்ளுவர் வாக்கு?
       முயற்சி போயின், முயற்சி போயின்
       தளர்ச்சி, தளர்ச்சி, தளர்ச்சியே!

       நாளிதழ்களில் படிக்கும் செய்திகள் படைப்பாளிகள் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.  அவை படைப்புகளாக வெளிவரும்.  குருதிக்காசு என்ற கவிதை அப்படி எழுதப்பட்டது.

       நூலின் இறுதியில் புதிய உலக நீதி என்ற தலைப்பில் வைரவரிகளை வழங்கி உள்ளார். 

       மனைதனிலே தமிழ் பேச மறக்க வேண்டா
       தாய்மொழியில் பெயர் வைக்கத் தயங்க வேண்டா

       இந்த இரண்டு வரிகளை உலகத் தமிழர்கள் வாழ்வில் கடைபிடித்தால் உலகம் உள்ளவரை தமிழ்மொழி வாழும்.  நூலாசிரியர் கவிஞர் சபா வடிவேலு அவர்களுக்கு பாராட்டுகள்.

--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்