‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் கவிஞர் மித்ரா,

.‘கவியமுதம்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : 
பேராசிரியர் கவிஞர்  மித்ரா,                                                                                                                                                                                                                                         
   
                                                 




226, இரண்டாவது குறுக்குத் தெரு, அண்ணாமலை நகர், முத்தையா நகர், சிதம்பரம் – 608 002.  கடலூர் மாவட்டம்.
********
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100 பேச 044 24342810 . 24310769. 
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com 
இணையம் www.vanathi.in
கவிஞர்  இரா. இரவியின் ‘கவியமுதம்’ கண்டேன்.  இந்நூலுக்கு முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., முனைவர் இரா. மோகன் ஆகியோரின் அணிந்துரைகள் அழகோச்சுகின்றன.  கவிஞரின் 14-வது நூலிது.  இணையதளத்தில் முத்திரை பதித்த இவர் தமிழ்த்தேனீ இரா. மோகனின் செல்லப்பிள்ளை.  இந்நூலின் கட்டமைப்புக்கும் இவரே காரணமானவர் என்பதனையும் நூல் கூறுகிறது.
நூலில் உள்ள கவிதைகளை, 1) நம்பிக்கைச் சிறகுகள், 2) தமிழ்-தமிழர் நலம் 3). சான்றோர் திறம், 4) காதல் செவ்வி 5) பெண்ணின் பெருமை
6) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு 7)  நாளும் நகரமும் 8) சமூகச் சித்திரிப்பு
9) உணர்ச்சி ஊர்வலம் என 9 பகுதிகளாகப் பிரித்துள்ள திறம் காணலாம்.  புதுக்கவிதை, உரை வீச்சு என்னும் வகையில் கவிதைகள் அமைந்துள்ளன.  காதல் செவ்வி என்னும் 4ஆம் பிரிவில் 41 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.  இதனையே சிறு கவிதைத் தொகுப்பாகக் கூட போட்டிருக்கலாம்.  காதலின் மென்மையை கவிதைகளில் இழையோடச் செய்துள்ள பாங்கு இனிமை.
ஒவ்வொரு இளைஞனுக்கும் அவனது காதலி உலகமகா அழகி தான்.  இவருக்கும் அதே உணர்வு உள்ளதை, காதல் பார்வையை, காதல் தீயை, புன்னகையை, பெண் புயலை, அவளிடம் அவர் வைத்த வேண்டுகோளை, அவளது அழகை, காதலெனும் மூன்றெழுத்து உணர்வை, காதல் ரசவாதத்தை, தேனீரை சூடாகக் குடிக்கும் காரணத்தை, கண்களின் மகத்துவத்தை, இனிய நினைவுகளை, அழகை, ஊடலை 41 கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.  இவை படிக்கும் இளைஞர்க்கு இனிய காதல் உணர்வை தூண்டும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்-தமிழர் நலம். இப்பகுதியில் 17 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன.  தமிழின் அருமை பெருமைகளை எடுத்தியம்பி,
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி
     உலகில் ஈடு இணையற்ற உன்னத மொழி தமிழ்மொழி   (ப.25)
என்னும் கருத்தைத் திறம்பட எடுத்தியம்பி உள்ளார்.
தமிழ்மொழி உலகின் முதல் மொழி, உலகின் முதல் மனிதன் பேசிய மொழி. இலக்கிய இலக்கணங்களின் களஞ்சியம், சொற்களின் சுரங்கம், உலகப்பொதுமறையை வழங்கிய மொழி இது.
‘தேவ’மொழிக்கும் மூத்தது எம் தமிழ்மொழி.  (ப.26) என்னும் தேவநேயப் பாவாணர் கூற்றையும் முன் வைத்துள்ளார். 
வடமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தமிழில் கலந்து பேசுவோர்க்கும் எழுதுவோர்க்கும் கவிஞர் கூறும் அறிவுரை,
“தமிழில் பிறமொழி கலந்து பேசக்கூசு
       தமிழில் பிறமொழி கலவாமல் பேசு’                (ப.31) என்பதாகும்.
தமிழைச் சிதைத்தல் கூடாது. தமிழை நினைத்தல் வேண்டும்.  தமிழில் உள்ள உறவுச் சொற்களை அறிதல் வேண்டும். தாயினும் உயர்ந்தது தமிழ்மொழி, அதனை,
“தாயை மறந்தாலும் தமிழை மறக்காதீர்,
       தாயினும் உயர்ந்தது தமிழ் என உணர்வீர்’                  (ப.33)
என்னும் கருத்தமைந்த அடிகளில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் உணர்வின்றி ஆங்கிலம் கலந்து பேசுதல் தகாது.
“ஈழத்தமிழர்களின் உச்சரிப்பைப் பார்!
சோகத்திலும் சுந்தரத் தமிழ் பேசுகின்றனர்’                (ப.35)
என்றும் பேருண்மையைக் கவிர் சுட்டிய திறம் சிந்தனைக்குரியது.
       சான்றோர் திறம் என்னும் பகுதியில் 13 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.  அவருக்கு நிகர் அவரே எனத் தந்தைப் பெரியாரைக் குறிப்பிட்டு விட்டு,
      “தமிழகத்தில் பெரியார் பிறக்காது போயிருந்தால்
       தமிழகம் அறியாமை இருளிலேயே இருந்திருக்கும்” (ப.53)
       ‘தந்தை பெரியார் அவர் மட்டுமே பெரியார்!
       தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார்!?              (ப.54)
என்று பெரியாரின் மேன்மையை கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.
       கதராடை அணிந்த கருப்பு வைரம், கட்டாயக் கல்வி தந்த கல்வி நேசர் காமராசர் என்பதனை,
       “எட்டாக் கனியாக இருந்த கல்வியை எட்டும் கனியாக்கியவர்
        கற்றோர் போற்றும் காமராசர் கல்வி நேசர்”               (ப.56)
என்னும் கவிதை வரியில் குறிப்பிட்டுள்ளார்.
       அறிஞர் அண்ணா அறிவின் சிகரம், ஆற்றலின் அகரம் என்றும் கூறும் கவிஞர், நடமாடும் சொற்களஞ்சியம், நல்லவர் போற்றும் சிறந்த பண்பாளர்,
       அமைதி பூங்காவாகத் தமிழகம் திகழ்ந்திட
       அடித்தளம் அமைத்துத் தந்தவர்                             (ப.60)
என்றும் கூறியுள்ளார்.
       ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் நெல்சன் மண்டேலா.  27  ஆண்டுகள் சிறைவாசம் செய்து தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சியை மலரச் செய்த தென்னாப்பிரிக்கவின் முதல் குடியரசுத் தலைவரவர்.  95வது வயது வரை வாழ்ந்த மாமனிதன் என்கின்றார் கவிஞர்.
       கவிஞர், நூற்றாண்டு கடந்தும் வாழும் வீரமங்கை வள்ளியம்மை என்கிறார். அவரது தியாகம் கண்டு காந்தியடிகள் வியந்ததை, கவிஞர்,
       “இந்தியன் ஒப்பினீயன் இதழில் எழுதினார் காந்தியடிகள்
        இந்தியாவின் தங்க மகளை இழந்தோம்”                   (ப.64)
என்று திறம்பட் எடுத்தியம்பியுள்ளார்.  ‘போராளிகளுக்கு மரணம் இல்லை’ என்று உணர்த்தியவர் என்றும் கவிஞர் குறிப்பிடும்போது இமைகள் நனைகின்றன.
       “சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்து
       பெரும் கூடல் பாட்டு எழுதிய கவியரசர்”                   (ப.65)
என்று குறிப்பிடும் கவிஞர் இரா. இரவி, அவரது மிகச்சிறந்த பாடல்களை மக்களுக்கு நினைவுபடுத்தவும் தவறவில்லை.  ‘சேரமான் காதலி’க்குக் கவிஞர் சாகித்திய அகாதெமி விருது பெற்றதை, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ ‘இயேசு காவியம்’ எழுதியதையும் நூலில் கவிஞர் பதிவு செய்துள்ளார்.
       கவிஞர்கட்கு ஓவியம் வரைய வரும்.  கவிஞர் வாலியும் தொடக்கத்தில் ஓவியம் வரைந்தார்.  புகழ் பெறவில்லை அவர்.  கவிதையில் உயர்ந்தார் அவர்.
       வாலி,
       “பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிக் குவித்தவர்” என்றும்,
       “வாலிபனைப் போலவே என்றும் எழுதிய வாலி’           (ப.68)
என்கின்றார் கவிஞர்.
       சௌந்தரராஜனின் தாய்மொழி சௌராஷ்ட்ரா என்பதனை,
       “உனது தாய்மொழி சௌராஷ்ட்ரா மொழி
        உனது வாய்மொழி செம்மொழி தமிழ்மொழி
       (ப.70)
என்று குறிப்பிட்டுள்ளார்.  அவரது குரலுக்கு தனி இடம் உண்டு என்று பெருமைபட பேசியுள்ளார் கவிஞர்.
       அழ. வள்ளியப்பா-வை இரா. இரவி,
       “அழ. வள்ளியப்பா என்ற அவரது பெயரினை
        அழகிய பாய்கள் வடித்த வள்ளியப்பா
 எனலாம்!           (ப.73)
என்கின்றார்.
       “குவலயத்தில் குழந்தைகள் இருக்கும் வரை
        குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா புகழ் அழியாதப்பா
       (ப.74)
என்று உறுதிபட எடுத்துரைத்துள்ளார்.
       கவிஞர் இரா. இரவி, சிவந்தி ஆதித்தனாரைப் பற்றி குறிப்பிடுகையில்,
       சிவந்தி மலர் போன்ற முகமுடையவரே !
       சிரித்த முகத்திற்கும் சிறந்த அகத்திற்கும் சொந்தக்காரரே ! (ப.75)
என்கின்றார்.
       இயற்கையாகி விட்ட இயற்கை நேசர் நம்மாழ்வார் பற்றி கவியாக்கையில்,
       “இயற்கையை நேசிப்போம், நம்மாழ்வாரை நினைப்போம்.
       செயற்கையை குறைப்போம், நம்மாழ்வாரை மதிப்போம்.        (ப.79)
என்பார்.
       நீதி நாயகன் சந்துரு எளிமையின் சின்னம்.  நீதி தவறாதவர், பெண்ணுரிமையைப் போற்றியவர்.  மூட நம்பிக்கையை ஒழித்தவர்.
       “நீதிபதிகளில் சந்திரனாகத் திகழ்ந்தவர் சந்துரு
        நீதி நாயகம் சந்துருவுக்கு இணை சந்துரு மட்டுமே
              (ப.81)
என்று நீதிபதியின் அரும்பெரும் செயல்களுக்காக அவருக்குப் புகழாரம் சூட்டி மகிழ்கின்றார் கவிஞர்.
       பெண்ணின் பெருமை : இப்பிரிவில் 2 கவிதைகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.  சாதிக்கப் பிறந்தவள் பெண் என்று குறிப்பிடும் கவிஞர்,
       “ஆண்களை விடப் பெண்களின் மூளைக்கு
        ஆற்றல் அதிகம் ஆய்வின் முடிவு!                                 (ப. 105)
என்கின்றார்.
       பெண்மக்களின் நிறைகுறைகளைக் கூறும் கவிஞர் உற்சாக வார்த்தைகளில் உயிர் சிலிர்க்க வைத்துள்ள கவிதை வரிகள்,
       “சராசரியாக வாழ்ந்தது போதும் பெண்ணே!
        சரி நிகர் சமமாக வாழ வேண்டும் பெண்ணே
                    (ப. 106)
என்பனவாகும்.
       பெண் சிசுக்கொலை, பெண் பாலியல் கொடுமை இன்று பெண்ணினத்தின் பெரும் சவால்கள்.  கவிஞர் பெண் சிசுக்கொலையை மனம் நொந்து கவியாத்துள்ளதை,
       “காட்டுமிராண்டிக் காலத்தில் கூட சிசுக் கொலை இல்லை!
        கணினியுகத்தில் சிசுக் கொலை நடப்பது மனித நேயம் இல்லை
 (ப.107)
என்னும் கவிதை வரிகள் கூறும்.
       ‘அவில் தொடங்கும் அற்புதம் என்னும் கவிதையில், அன்னையர் தினத்தில் மட்டும் அன்னையை  நினையாமல் அவளது தியாகத்தை என்றும்  நினைந்து போற்றுவோம் என்கின்றார் இந்த தாய்ப்பாசம் மிக்க பிள்ளை.                                                                                         சுற்றுச்சூழல் விழிப்புணர்வு :  இப்பிரிவில் 6 கவிதைகள் உள்ளன.  மழை நீரை சேமிக்க வேண்டியதன் அவசியத்தை,

       “சிறு துளி பெரு வெள்ளம்” என்பது உண்மை.
       சிதறாமல் சேகரித்தால் வருவது வளமை                         (ப. 111)

என்கிறார் கவிஞர்.

       தோகை மயிலின் அழகை, ஆடலைக் கண்டால் கவலைகள் காணாமல் போகும் என்கின்றார் நூலாசிரியர். 

       தன்னையே தான் தரும் மரத்திற்கு மனிதன் தரும் பரிசு ‘கோடரி’   (ப.113)

என்கிறார். இது கொடிய இழிசெயல் என்பது பொருத்தம்.  காட்டை, அதில் வாழும் உயிர்களை, இயற்கையை ரசி என்று அறிவுரை கூறும் கவி உறுதிமொழிகளையும் முன் வைத்துள்ளதை,

       காடுகளை அழியாமல் காப்போம்
       காற்றுகளை மாசின்றிக் காப்போம்!

       வனம் சென்றால் ரசித்து வா!
       மனம் செம்மையாகும் சிந்தித்து வா!                              (ப. 116)    

என்பதனால் அறியலாம்.

       மரம் வளர்ப்போம், மழை நீர் சேகரிப்போம், செயற்கை உரங்களைத் தவிர்ப்போம், இயற்கை உரங்களை வரவேற்போம்.  நெகிழிகளுக்கு விடை கொடுப்போம்.  வெப்பமயத்தை தடுத்திடுவோம்.  வருங்காலத் தலைமுறைக்கு பசுமைச் செழிப்பை விட்டு வைப்போம் என்னும் உயரிய கருத்துக்களை நூலில் சொல்லி சென்றுள்ள பாங்கறிவோம்.

       “நாளும் நகரமும்” என்னும் பகுதியில் 9 கவிதைகள் இடம் பெற்றுள்ளன.  கவிஞர் இரா. இரவி தனது புத்தாண்டு வாழ்த்தில், வறுமை, ஏழ்மை, சாதி மதச் சண்டைகள் இல்லாத ஆண்டாக இருத்தல் வேண்டும் என்கின்றார்.  மொத்தத்தில்,

       “வன்முறை இன்றி அமைதி நிலவும் ஆண்டாகட்டும்!
       நன்முறையில் மக்கள்  நடக்கும் ஆண்டாகட்டும்                 (ப. 119)

என்கின்றார்.

       கவிஞர் தமது பொங்கல் நல்வாழ்த்தில், தமிழனின் உயர்ந்த குணங்களை, அறிவை, ஆற்றலை, திறமையைக் கூறி தமிழைத் தமிழாகப் பேசு. உலகின் முதல் மொழியை உருக்குலைக்கக் கூடாது எனக் கேட்கும் அவர்,

       “ஆங்கிலேயர், ஆங்கிலத்தோடு தமிழ் கலப்பதில்லை
        தமிழர் மட்டும் தமிழோடு ஆங்கிலம் கலப்பதேன்”                (ப.37)

என்னும் நியாயமான கேள்வியை முன்வைத்துள்ளார். 

       உயர்நீதிமன்றத்தில், மீனாட்சியம்மன் கோயிலின் கருவறையில், அங்காடிகளில், விளம்பரப் பலகையில் தமிழ்மொழி இடம் பெறவில்லை என்று நெஞ்சம் குமுறுகின்றார் கவிஞர். 

       பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையில் இதயம் பறிகொடுத்தவர் என்பதற்குச் சான்றாக,

“எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? எதனால்? எனக் கேட்டுப் பழகு, எம் பெரியாரின் வழி பகுத்தறிவை பயன்படுத்திடு”           (ப. 39)

என்பதாகும்.

       பேகன், பாரி, மனு நீதிச்சோழன், சிபிச் சக்கரவர்த்தி, திருவள்ளுவர், கரிகால் பெருவளத்தான், இராஜராஜ சோழன் போன்றோரின் உயரிய செயல்களைத் திரட்டித் தந்த இரா. இரவி, தமிழ்நாட்டில் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதற்கு தடையா? எனக் கேட்டு,

       “தூங்கிக் கொண்டு இருக்கும் புலியைச் சீண்டாதீர்கள்,
        தூக்கம் விடுத்து விழித்து எழுந்தால் தாங்க மாட்டீர்கள்”         (ப. 43)

என எச்சரிக்கை விடுத்துள்ள திறம் பெருமை கொள்ளச் செய்கிறது.

       திருக்குறள் உலகப்பொதுமறை என்றதோடு, தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள், திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்.

“1330 திருக்குறளை மனப்பாடம் செய்வதை விட
 10 திருக்குறளின் வழி நடப்பது நன்று”                            (ப. 49)

என்னும் அரிய கருத்தையும், நூலில் பதிவு செய்துள்ள திறம் கண்டு பாராட்டலாம்.  இத்தகைய அரிய-உயரிய திருக்குறளைத் தேசிய நூலாக்குக’ என அரசுக்கு கட்டளை இடும் திறம் கண்டு பாராட்டலாம்.     

       “தமிழனாகப் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்,
       தமிழர் திருநாளை மகிழ்வோடு கொண்டாடுவோம்”              (ப. 122)

என்று பெருமைபட தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

       நதிகளை இணைக்க அரசு முயலாததால், அதனால் பொங்கல் என்னவானது என்பதனை,

       “இனிக்கவில்லை பொங்கல், கசந்தது தமிழருக்கு!
       இனியாவது நதிகளை இணைக்க முயலுங்கள்!”                  (ப. 123)

என்று தெளிவுபட கவியாத்துள்ளார்.

       “தினம் தினம் உழைப்பவன் உழைப்பாளி!
        தித்திக்கும் உலகை உருவாக்கியவன் உழைப்பாளி”        (ப. 124)

என்று உழைப்பாளர் தினத்தைப் பெருமைபட பேசியுள்ளார்.

       இனாம் தொல்லையால் ஏன் வருகிறது இந்தத் தீபாவளி என்னும் நிலை மக்களுக்கு வந்துள்ளது.  இன்னொரு சிந்தனையும் கவிஞருக்கு வந்தனை,

       “தீபாவளி முடியும் வரை தலைமறைவாகத் திட்டம்”              (ப. 127)

என்னும் கவிதை அடியால் அறியலாம்.

       உலக சிறுநீரக தினத்தில் சிறுநீரக நோய் வராமல் இருக்க மக்கள் எந்த நிலையில் செயல்பட வேண்டும் என்கின்றார்.  சிறுநீரகம் பாதித்தவருக்கு அன்பு தேவை.  இக்கவிதையை அனைவரும் படித்தல் வேண்டும், நல்ல கவிதை, மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களைக் கூறிய கவிஞருக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

       கவிஞர், “புலிப்பால் இரவி” தமது கருத்துக்களை நிகழ்கால, வருங்கால தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் கவியாத்துள்ள திறம் கண்டு மகிழலாம்.  தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராக இரா. இரவி பணியாற்றுவதால், மதுரையின் சிறப்புகளை மிக அழகாகத் தொகுத்தளித்துள்ளார் கவிஞர்.  யானைமலை யானை போல இருக்கும், சமணர் படுகைகள் இருக்கும் மலையின் அழகை இரசிக்க இரு வரிகள் போதாது என்கின்றார்.

       “சமூகச் சித்திரிப்பு” என்னும் இப்பிரிவில் 10 கவிதைகள் உள்ளன.  சாதி வெறி வேண்டாம், இவ்வெறி இளவரசனோடு முடியட்டும், வறுமை கொடிது, எங்கும், எதிலும் ஆபாச நஞ்சு, சினம் தன்னையே கொல்லும், புகையிலை பழக்கம் உயிரைக் கொல்லும், பணம், அச்சடிக்கப்பட்ட வெறும் தாள்.  அவமரியாதை செய்வதை உடனே நிறுத்த வேண்டும், சேமிக்க வேண்டும், தந்தி இன்று மடிந்து விட்டது.  இந்தியா தோற்றதற்கு நன்றி, ஓய்வின்றி உழைப்பவரே மனிதனுக்கு அழகு, வாடகை வீடு தொல்லையோ தொல்லை என்றெல்லாம் கவிதை யாத்துள்ளார் இரா. இரவி. வெறும் பாடுபொருட்களைக் கொண்டு கவிதையாக்காமல், எல்லாக் கருத்துக்களையும் கவிதைகளில் திரட்டிக் குறிப்பிட்டுள்ளார்.  வருங்கால தமிழ்மக்கள் இத்தொகுப்பை ஒரு முறை படித்தால் தெரியும் அதன் அருமை.

       நல்ல கருத்துக்கள் அடங்கிய பயனுள்ள நூல்.  அனைவரும் படிக்க வேண்டிய நூல்.  தமிழகம் எல்லா நலமும், வளமும் பெற இந்நூல் வழி வகுக்கிறது.  இத்தகையப் பயனுள்ள நூலை யாத்துள்ள கவிஞருக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

                                                                                                                                              

கருத்துகள்