ப்ளாஸ்டிக் இரவுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மு. குணசேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


ப்ளாஸ்டிக் இரவுகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் மு. குணசேகரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராயர் நகர், சென்னை—600 017.  பேச : 044 52070663

*****
       நூலாசிரியர் கவிஞர் மு. குணசேகரன் அவர்கள் நூலின் தலைப்பை ப்ளாஸ்டிக் இரவுகள் என்று சூட்டியதற்கு எது காரணமோ?  என வியப்பை நன்கு பதிவு செய்துள்ளார் இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்கள், இயக்குநர் தரணி அவர்களும் வாழ்த்துரை வழங்கி உள்ளார்.  காதல் மணம் கமழ கவிதைகள் வடித்துள்ளார்.  வானில் உள்ள நிலவை ரசிக்க சலிப்பு வருவதில்லை.  அதுபோலவே யாருடைய காதல் கவிதையாக இருந்தாலும், படிப்பதற்கு சலிப்பு வருவதில்லை.  காரணம், காதல் கவிதைகள் படிக்கும் போது, படிக்கும் வாசகர்களின் காதல் நினைவுகளையும் மலரும் நினைவுகளாக மலர்வித்து மகிழ்விக்கும்.  அந்த வகையிலான கவிதைகள் நூல் முழுவதும் உள்ளன.
       முதல் கவிதையே ஒரு ஹைக்கூவோடு தொடங்கி உள்ளார்.
 வாழ்ந்ததற்கு 
 அடையாளம் 
 காதல்.
       உண்மைதான், காதல் வயப்பட்டவர்கள் எல்லாம் பாக்கியவான்கள் எனலாம். அது ஒரு சுகமான அனுபவம்.  சொற்களால் உணர்த்தி விட முடியாத உன்னத உணர்வு. 

 எதற்கென்று தெரியவில்லை !

 உன்னை பிடித்திருக்கிறது
 காதல் செய்திட்டு 
 இயல்பாய் இருப்பது 
 இயலாத காரியம்
 
நான் நெய்யும் 
 ஒவ்வொரு கவிதையிலும் 
 நூலாக இருப்பது நீயே
 காதல் கதைக்கு 
 விதை போட்டாய் 
 கவிதை
 காதலிக்க வேண்டாம் 
 மனிதனாக விரும்பாதவர்கள்.

       காதலுக்காக கொடி பிடித்து கட்சி தொடங்கி மனிதனாக வேண்டுமா? உடன் காதலியுங்கள் என்று கவிதையை வடித்துள்ளார்.

       காதலுக்கு மெய் அழகு, காதல் கவிதைக்கு பொய் அழகு, பொய் என்று தெரிந்தும் காதலி ரசிப்பது உண்மை.  அதனால் தான் பலர் காதல் கவிதைகளில் மையோடு பொய்யும் கலந்து எழுதி வருகின்றனர்.

 நீ 
 மழையில் நனைந்தால் 
 எறும்பு கூட
 காளானுடன் வருகிறது.
       எறும்புகள் ஒன்று கூடி காளானை இழுத்து வரலாம்.  அதனைக் கண்ட கவிஞர் அவை காதலிக்குக் குடைப்பிடிக்கக் கொண்டு வருவதாகக் காட்சிப்படுத்துகின்றார். 

கல்லூரிகளில் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் வகுப்பறைகள் உண்டு.  இதில் காதலி வரவில்லை என்றால் காதலன் எழுந்து சென்று விடுவதுண்டு. தமிழ்த் திரைப்படங்களிலும் காட்டி இருக்கிறார்கள். இவர் அக்காட்சியை கவிதையில் உணர்த்துகின்றார். பாருங்கள்.

 என் தேவதை 
 இல்லாத வகுப்பில் 
 நமக்கென்ன
 வேலையென 
 சென்று விட்டேன் 
 மறு நாள் தான்
 தெரிந்தது 
 நீ காலம் தாழ்த்தி வந்திருக்கிறாய் !

       அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதையும் உணர்த்தி விடுகின்றது.

       இமைக்காமல் பார்க்கும் போட்டி வைத்தால் வெல்வது யார்? என்றால் காதலி எனலாம்.  கண்களால் விழுங்குவது கேள்விப்பட்டிருக்கிறோம். இவர் கண்களால் உண்பது பற்றி கவிதை வடித்துள்ளார்.

 எத்தனை முறை தின்றாலும் 
 என் இதயத்திற்கு மட்டும்
 திகட்டுவதில்லை 
 உன் விழிகள்.
 நான் 
 உறங்க படுத்ததும் 
 எங்கிருந்தோ வந்து
 என் நெஞ்சத்தில் சாயும் 
 உன் நினைவுகளுக்கும் சேர்த்தே
 தாலாட்டு பாடுகிறது 
 காதல்
 பார்வைகளை 
 உதிர்த்துக் கொண்டே போ
 நான் சேகரித்துத் தருகிறேன்.

       காதல் கவிதைகளில் முத்தம் பற்றிய கவிதை இல்லாமலா இருக்கும்.  இருக்கின்றது.  முத்தத்தின் தித்திப்பிற்குக் காரணம் முத்தமிழ் என்கிறார்.

 ஒரு சந்தேகம் 
 இதழ்களை தமிழிலா 
 ஊற வைப்பாய்
 இப்படி சுவைக்கிறது 
 நீயும் 
 என் போல் தானே
 அவஸ்தைப்படுவாய் 
 பிறகேன் 
 முத்தம் தர மறுக்கிறாய்
 என்னிடம் சண்டை போடு 
 அப்போது தானே
 சமாதானஞ் செய்ய 
 முத்தமிட முடியும்.
       நீ! , நீ! என்று முடிக்கும் நீள்கவிதை மிக நன்று.  பதச்சோறாக சில வரிகள் மட்டும்.

 அழுதால் அணைக்கும் ஆறுதல் நீ 
 நடையிட ரசிக்கும் ரசிகை நீ
 விடைபெற குறையும் புன்னகை நீ 
 நேரம் காலம் இல்லாமல்
 இமைத்ததும் 
 என் முன் வருபவள் நீ 
 இராசி, கோள்கள்
 ஏதுமின்றி பார்த்ததும்
 ஆசை வைத்தவள் நீ
 வேசம் முகத்தில் போடாமல் 
 உண்மை உருவில் உறைபவல் நீ!

       காதல் வயப்பட்டவுடன் காதலன், காதலி இருவரும் உணவருந்தும் போது காதலி, காதலனுக்கு ஊட்டி விடும் பழக்கம் சிலருக்கு உண்டு.  அதனை நினைவூட்டும் கவிதை மிக நன்று.

 என் விரல்களை விட 
 உன் விரல்களையே
 அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன் 
 சாப்பிட உதவியாய்.
       உண்மையில் காதலன் குழந்தையாக இருந்த போது அவரது அம்மா தான் ஊட்டி விட்டு இருப்பார்கள். காதலி சில வேளை மட்டும் ஊட்டி இருக்கலாம்.  காதலன் அம்மாவை மறந்துவிட்டு காதலியைப் பாராட்டுவது இயல்பு தான்.  நாட்டில் நடக்கும் ஒன்று தான்.

       சண்டையிட்டு ஊடலில் கோபித்துக் கொண்டு சென்ற காதலி உடன் வந்து விட்டாள் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லது கண் மூடியதும் கனவில் வந்து விடுகிறாள் என்றும் பொருள் கொள்ளலாம்.  இதில் எது உண்மை என்பது எழுதிய கவிஞருக்கே வெளிச்சம்.

 நாம் சந்திக்க 
 வாய்ப்பே இல்லையென 
 சென்ற நீ
 ஏன் இமைத்ததும் 
 எதிர்வந்து நிற்கிறாய்.
       காதல் கவிதைகளில் வாசகர்கள் கேள்வி கேட்க கூடாது.  இது நடக்குமா? இது நடந்ததா? இப்படி எழுதலாமா? என்று கவிதையை அப்படியே ரசிப்பது தான் ரசிகரின் வேலை.  அப்படியான கவிதை ஒன்று, இப்படி எழுதினால் தான் காதலி ரசிப்பாள்.
 நீ 
 வந்து போன பாதை 
 தனக்குத்தான் சொந்தமென
 உச்சநீதிமன்றத்தில் 
 புற்களும் பூமியும்.
       உச்சநீதிமன்றத்தில் மனிதர்கள் தொடுக்கும் சில வழக்குகளே ஏற்காமல் தள்ளுபடி செய்து விடுகின்றனர். புற்களும் பூமியும் வழக்குத் தொடுத்தால் உச்சநீதிமன்றத்தில் ஏற்பார்களா?  என்ற கேள்வி எழுப்பாமல் கவிதையை ரசியுங்கள்.

       காதலிக்கும் காலத்தில், காதலிக்கு வலி, வேதனை, துன்பம் வரக்கூடாது என்று காதலன் நினைப்பது வாடிக்கை. 

       அன்பே !
 பிரசவ வலி உனக்கு வேண்டாம்
 குழந்தை வேண்டுமானால் 
 தத்தெடுத்துக் கொள்வோம்!
       காதலியின் மீதுள்ள அக்கறையில் தத்தெடுக்கும் பொதுநலமும் உள்ளது.  பாராட்டுக்கள்.  உண்மையில் பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மறுஜென்மம் என்பார்கள்.  ஒவ்வொரு பெண்ணும் தன்னுயிரை துச்சமென நினைத்துத்தான் இந்த மண்ணில் குழந்தையை பிரசவிக்கிறார்கள்.
       காதல் ரசம் சொட்டச் சொட்ட புதுக்கவிதை வடித்த நூலாசிரியர் கவிஞர் மு. குணசேகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்