அர்த்தமுள்ள தமிழ் ! நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

அர்த்தமுள்ள தமிழ் !
நூல் ஆசிரியர் : புலவர் ஆறுவிரல் ஐம்பொறி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
பூந்தமிழ்ப் பதிப்பகம், வீரசோழபுரம் 606 206.
(வழி) தியாகதுருவம், கள்ளக்குறிச்சி வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்,
அலைபேசி எண் : 94432 85843 விலை : ரூ. 60
*****
நூல் ஆசிரியர் ஆறுவிரல் ஐம்பொறி அவர்கள், முதல் இடைநிலை ஆசிரியர், தமிழாசிரியர், நடுநிலைப்பள்ளி ஆசிரியர், தலைமையாசிரியர் என படிப்படியாக உயர்ந்து சிறந்தவர். ஓய்வு பெற்ற பின் ஓய்வின்றி எழுதி வரும் ஆற்றலாளர். இந்த நூல் தலைப்பே மிகவும் அர்த்தமுள்ளது. ‘அர்த்தமுள்ள தமிழ்’. உண்மை தான். உலகின் முதல்மொழியான தமிழ், அர்த்தமுள்ள தமிழ் தான். இந்த நூல் 125 சிறிய கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகள் என்பதை விட ஒரு சொல்லிற்கான விரிவான விளக்கம் என்றே கொள்ளலாம்.
இந்த நூல் தமிழ்மொழியின் பெருமையை மேலும் உயர்த்துவதாக உள்ளது. தமிழ் எழுத்துக்கள் பற்றியும், இலக்கணங்கள் பற்றியும் மிக எளிமையாக விளக்கி உள்ளார்கள் நூலில் 125 சொற்களின் விளக்கம் இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.
ஏர் : சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றும், உழுவார் உலகத்திற்கு அச்சாணி என்றும் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளார். உழவுத்தொழிலில் உழுகின்ற கருவிக்கு ஏர் என்பது பெயர். இந்த ஏர் தான் உலகுக்கெல்லாம் உணவு அளிக்கின்றது. பயன்படுவதே பேர் அழகு. ஒரு பொருள் பயன்படாவிட்டால், அப்பொருள் அழகாய் இருப்பினும் அழகன்று, ஒரு பொருள் பயன்பட்டால் அழகின்மை யாயினும் அப்பொருள் அழகே.
ஏர் உலக மக்களின் பசியைத் தீர்க்கப் பயன்படுகிறது. ஏர் அழகு தானே?
எனவே “ஏர் என்ற சொல்லுக்கு ‘அழகு’ என்று பொருள்”. ஏர் என்றால் என்னவென்றே அறியாத இளையதலைமுறைக்கு விளங்கும் வண்ணம் உள்ள சொல்விளக்கம் மிக நன்று. இப்படி ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் தொடர்புடைய காரண காரியம் சொல்லி விளக்கி இருப்பது மிக நன்று.
இந்த நூலை தமிழாசிரியர்களும், மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டும். அறியாத பல சொற்கள் பற்றி அறிந்திட உதவிடும் நூல். நூலாசிரியர் ஆசிரியர் என்பதால், வகுப்பு எடுப்பது போலவே மிக விளக்கமாக எடுத்து இயம்பி உள்ளார்.
சிலர், பணம் பணம் என்று இயந்திரமாக இயங்கி வருகிறார்கள். மனிதநேயம் மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கு செல்வம் பற்றி புரிதலை உண்டாக்கும் விதமான விளக்கம் மிக நன்று.
செல்வம் : யார் மட்டும் நில்லாது செல்வம். செல்வம் சகடக்கால் போல வரும் என்பது நாலடியார்.
நிலையாக ஓரிடத்தில் நில்லாமல் செல்வோம் என்று, செல்லும் தன்மையைப் பெற்றதால் இதனைச் செல்வம் என்று கூறுகிறோம். இப்படிச் செல்லும் தன்மையுடைய செல்வத்தை ஒரே இடத்தில் பதுக்கி வைப்பவர் பலர் உளர். செல்வம் கெட்டு அழிவதற்குக் காரணமானவர்களும் இவர்களே. சில இடங்களில் கடுமையான பஞ்சம் ஏற்படுவதற்குக் காரணமும் இவர்களே.
“தீய வழியில் தேடிய செல்வத்தையும், செல்வாக்கையும், மதிப்பையும் விட ஏழ்மையே சிறந்தது - சீன தத்துவஞானி கன்பூசியஸ்”.
காடுகள் அழிந்து வருகின்றன. நவீனம், நாகரீகம் என்று வளர வளர மறுபுறம் இயற்கை அழிக்கும் வேலையும் நடந்து கொண்டே இருக்கின்றன.
புவனம் : சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு ஊரின் பரப்பளவை விட நூறு மடங்கு அதிகமான பரப்பளவில் காடுகள் இருந்தன. அக்காடுகள் ஈறுழைந்தால் அதன் இறகு ஒடியும் அளவிற்கு அடர்ந்தும் படர்ந்தும் இருந்தன.
‘ஓர் அறிவு உயிர் தானே’ என்று மரத்தை வெட்டுகிறோம். ஒன்று அங்குல நீளமுள்ள நாக்குத்தான் எழுபத்திரண்டு அங்குல உயரமுள்ள மனிதனைக் கொன்று விடுகிறது.
மரமில்லை மழையில்லை யார் காரணம்?
சிந்திப்பீர்
இப்படி மரத்தின் அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ளார் நூலாசிரியர்.
வண்ணம் : சலவைத் தொழிலாளி, அந்த அழுக்கான ஆடைகளை அடித்து, துவைத்து, அழுக்கு நீக்கி ஆடைகளின் உண்மையான வண்ணத்தை வெளிப்படுத்துகிறான். எனவே சலவைத் தொழிலாளி வண்ணத்தான் என்று அழைக்கப்பட்டான். காலப்போக்கில் வண்ணத்தான் என்ற சொல்லிலுள்ள அத்துச்சாரியை நீக்கி வண்ணான் என்று ஆனது.
சாதி, மத, இன வேறுபாடுகளை நீக்கி ஒற்றுமையாக வாழ வேண்டும்.
வண்ணம் பற்றி விளக்கியதோடு நின்று விடாமல் அதன் தொடர்புடைய மற்ற சொல்லையும் விளக்கி முடிக்கும் போது சமூக உணர்வுடன் மனிதநேயத்துடன் கூறிய அறிவுரை மிக நன்று.
சங்கு : கடலில் வாழும் சங்குகள் முத்துக்களை ஈனுகின்றன. இம்முத்துக்கள் விலைமதிப்புள்ளவை. மூன்று தமிழ்ச் சங்கங்கள், எழுத்துக்களை ஈன்றன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென்கீழ்கணக்கு நூல்களில் உள்ள எழுத்துக்கள் விலைமதிப்பில்லாதவை, ஈடு இணையற்றவை.
சங்கு பற்றி விளக்க வந்தவர், முத்து விலைமதிப்பு உள்ளது. தமிழ் இலக்கிய நூல்களோ விலைமதிப்பற்றவை என விளக்கம் தருவது சிறப்பு. நூல் ஆசிரியர் புலவர் ஆறுவிரல் ஐம்பொறி அவர்களின் தமிழப்பற்றை பறைசாற்றும் விதமாக நூல் உள்ளது. பாராட்டுக்கள். தமிழன்னைக்கு அணி சேர்க்கும் நூலாக உள்ளது.
அட்டைப்படத்தில், அன்று மயில் இறகால் எழுதி வந்த வழக்கத்தை நினைவூட்டியது சிறப்பு. அட்டை முதல் அட்டை வரை அழகுத் தமிழின் சொல் விளக்கம் மிக நன்று.
பல அறியாத சொற்கள் பற்றி அறிய உதவியாக உள்ள நூல். ‘தூவி’ என்றால் தூவுதல் என்று நினைக்கலாம். ஆனால் அது அல்ல, தூவி என்ற சொல் பறவையின் இறகைக் குறிக்கும் என்பதை இந்த நூல் படித்துத் தான் தெரிந்து கொண்டேன்.
சிறிய தமிழ் அகராதி நூல் போல உள்ளது. தான் அறிந்தவற்றை, தெரிந்தவற்றை எழுதி நூலாக்கி வாசகர்களுக்கு தமிழ் விருந்து வைத்துள்ளார்கள். பாராட்டுக்கள். இந்த நூல் படித்து முடித்தவுடன் தமிழராகப் பிறந்ததற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்வார்கள் என்பது உறுதி

கருத்துகள்