‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.

‘புத்தகம் போற்றுதும்’




நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
*****
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. 
மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 
விலை ரூபாய் 150.
நிறைகளே நிரம்பி வழியும் நூல்!
*****
இரக்கத்திற்கு-தன்
இதயத்தை
இருப்பிடமாயக் கொடுத்த கவிஞர்
இரா. இரவி
 அவர்களின்         13-வது நூலான புத்தகம் போற்றுதும்!
என்ற இந்த நூலைப் படித்து, கற்று, உணர்ந்து, வியந்தேன்.  இதற்கு முன் “ஹைக்கூ ஆற்றுப்படை” என்ற விமர்சன நூலையும் நான் படித்திருக்கிறேன்.  ஆனால் அதைவிட பலமடங்கு இந்நூல் அழகு பெற்றுள்ளது.
எழுத்து
நாமே வாசித்தால் விழி வழியேயும்
பிறர் வாசிக்கக் கேட்டால் செவி வழியேயும்
உள்ளத்திற்குள் பயணிக்கும்
உயரிய சக்தி!
அதனைக் கையாளும் விதத்தில் தான் உள்ளத்திற்குள் சென்ற எழுத்து தங்கிக் கொள்வதும், வெளியேறி விடுவதும் நிகழ்கின்றது.  கவிஞர் இரா. இரவியின் எழுத்துக்கள் உள்ளத்தில் தங்கிக் கொள்ளும் தகுதி பெற்றிருப்பதை இந்திய எல்லை கடந்து இலண்டன் கவிஞர் ‘புதுயுகன்’ அவர்கள் அளித்திருக்கும் அணிந்துரை சான்றளித்திருக்கின்றது.
       மலர்கள் இலக்கியம் பேசுவது போல் வதனம் கொண்ட பேராசிரியர் இரா. மோகன் ஐயா அவர்களின் அணிந்துரை இந்நூலுக்கு முதல் விமர்சனமாகவும் இருப்பது அருமை!  இரா. மோகன் ஐயா அவர்கள் 100 நூலை எழுதி வெளியிட்டிருப்பது வியப்பின் உச்சம்!
       இந்த நூலில் விமர்சனத்திற்கு உட்பட்ட 50 நூலும் படிக்கப் படிக்க திகட்டவேயில்லை.  மேலும் நூலாசிரியர்கள் அனைவருமே நாடறிந்த நல்லவர்கள் என்பதால், என்னைப் போன்று நான்கு சுவற்றுக்குள் வாழும் பெண்களுக்கு இந்த விமர்சன் நூலான புத்தகம் போற்றுதும்! ஒரு வரப்பிரசாதம்.
       கவிஞர் இரா. இரவி அவர்கள் வழக்கம் போல அட்டைப்படம் துவங்கி அச்சு வரை விமர்சித்து அசத்தியிருக்கிறார். மேலும், கூடுதலாக நூல் வெளியீட்டு விழாவைப் பற்றியும் அழகாக வர்ணித்து இருக்கிறார். இது படிக்கும் வாசகர்களை அவ்விழா நடுவே கவிஞர்களோடு பேசிக் கொண்டிருக்கும் மனநிலையை ஏற்படுத்தி இருப்பது இந்நூலுக்கும் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கும் வெற்றி என்றே கூற வேண்டும்.
இந்நூலை வாசிக்கும் வாசகர்களில் இருபது சதவீத வாசகர்களாவது படைப்பாளியாக தங்களைத் தரம் உயர்த்திக் கொள்வர் என்பது உறுதி!  ஒவ்வொரு புத்தகமும் அருமை என்பதால் எதையாவது சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு எழுதவும் மனம் இடமளிக்கவில்லை.
பல இடங்களில் கவிஞர்களின் உள்ளார்ந்த கவிதை வரிகளுக்கு கவிஞர் இரா. இரவி அவர்களின் விளக்கம் அவ்வரிகளை புரிந்து கொள்வதற்கு மிகவும் துணையாக இருக்கின்றது.
கவிதைக் களஞ்சியம்! என்ற நூலில் பேராசிரியர் இரா. மோகன் ஐயா அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் கவிஞர்கள் கவிதை எழுதும் போது பார்க்காத பார்வையிலும், விமர்சகர்கள் பார்ப்பார்கள் என்ற வரிகள் நூறு சதவீத உண்மை!
‘நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை’ என்ற நூலின் ஆசிரியர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் மருமகன் என்ற தகவல் மிகச்சிறப்பு.
பெண்ணிய நோக்கில் கம்பர் – முனைவர் எம்.எஸ். ஸ்ரீலெஷ்மி அவர்களைப் பற்றிய குறிப்புகளே வியப்புகளைக் குவிக்கிறது.  அதிலே இந்நூல் பெண்ணியம் என்ற கண்ணாடி அணிந்து கம்பரை விமர்சிக்கும் விதமாக வந்துள்ளது என்ற வரிகள் மிக அருமை!
நினைவாற்றல் மேம்பட வழி என்ற நூலில் டாக்டர். பெரு மதியழகன் அவர்களைப் பாராட்டியதுடன் “தன்னம்பிக்கை” என்ற நூலில் ‘விலை’ என்பதற்குப் பதிலாக மூலதனம் என்று இருக்கும் என்ற செய்தியை உற்றுநோக்கி அதனை வாசகர்களுக்கும் தெரியப்படுத்தியிருப்பது நல்ல செய்தி!
வரலாற்றில் இன்று! பொறியாளர் கே.  முத்துராஜீ அவர்கள் நூலை தனது தாயார் மட்டுமின்றி மாமியாருக்கும் காணிக்கையாக்கி இருப்பது வியப்பை இரட்டிப்பாக்கியது.
வலி தாங்கும் மூங்கிலில் பாவைப் பதிப்பகத்தாருக்கு ஒரு பக்கம் உள்ள எழுத்துக்கள் அடுத்த பக்கம் தெரியாதவாறு அச்சிடுங்கள் என்ற வேண்டுகோள் விடுத்திருப்பதும் சிறப்பு தான்!
பல நேரங்களில்,
“நவகோள்களும் செய்யாத பணியைக் கூட
       வேண்டுகோள்கள் செய்து விடும் வலிமை படைத்தவை”
எனவே அதனை நன்கு அறிந்தே கவிஞர் இரா. இரவி அவர்கள் சொற்களைக் கையாளுகிறார் என்பது அருமை! உண்மை! மகிழ்ச்சி!
கவிஞர் இரா. இரவி அவர்களின் பெருமைமிகு நூலான ஆயிரம் ஹைக்கூ என்ற நூல் பற்றிய விமர்சனத்தில் பலரும் எழுதிய விமர்சனம் நடுவே எனது விமர்சனமும் இருப்பதைக் கண்டு இதயம் மகிழ்ச்சியை அருவியாக்கியது!  கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின் மதிப்புரை மகுடம்!  இந்த மதிப்புரை இன்னும் சில பக்கங்கள்முன்னுக்குத் தள்ளியிருக்கலாம் என்பது எனது பணிவான கருத்து.
தினமலர் “வாசிக்க புதுசு” கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
காயப்படுத்தாமல் – தன்
       கருத்தை வலியுறுத்தும் திறமை
       கதிரவக் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு
       கை வந்த கலை!
தங்களின் விமர்சன நூலில் எண்ணிக்கை முந்தைய 26லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது.  இந்த 50 நூல் 5000 ஆக உயர்ந்து அத்தனைக் கவிஞர்களுக்கும் விமர்சனம் எழுதிய பெருமையை தாங்கள் பெற வேண்டும்
என்ற வாழ்த்துக்களோடு....



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்