ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா. ‘

ஆயிரம் ஹைக்கூ !


நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

நூல் விமர்சனம் :  பேராசிரியர் முனைவர் யாழ். சந்திரா.  ‘
குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் !

யாழகம்’140-ஏ, வடக்காவணி மூல வீதி, மதுரை-625 001.
 மின் அஞ்சல் yazh.chandra@gmal.com

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.


அதிகாலையின் அடுக்களைப் பரபரப்பில் இருந்து விடுபட்டு அருகில் உள்ள
நகரத்தின் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மகளை அக்கல்லூரியின்
பேருந்தில் ஏற்றிவிட்டு, ஒவ்வொரு நாள் விடியலையும் இரசித்துக் கொண்டே
நடைப்பயிற்சியில் தினந்தோறும் வணக்கம் பகிர்ந்து கொள்பவர்களில் ஹைக்கூ
இரவியும் ஒருவர். அப்படியான ஒரு காலைப் பொழுதில் தோழர் இரவி கொடுத்த
‘ஆயிரம் ஹைக்கூ’. அன்று இரவு வாசிப்பிற்காகப் படுக்கையறை மேசையில்
வைத்து, அன்றைக்கே வாசித்து முடித்து கவிதையின் நெகிழ்வுச் சலனத்தோடு
உறங்க முற்பட்ட தருணங்கள் நினைவில் ஆடுகின்றன.

கல்லூரிப் பணியின் கடுமையான சூழல் திருடிக்கொண்ட பொழுதுகளில் விமர்சனம்
எழுதுவது தள்ளிக்கொண்டே போனது.  கோடை விடுமுறையின் சோம்பலான காலைப்
பொழுதில் மீண்டும் “ஆயிரம் ஹைக்கூ” கையில் எடுத்த போதும் இரு மாதங்களக்கு
முன்னர் கிடைத்த அதே கவிதை நெகிழ்வு!  ஹைக்கூ கவிஞராய், தோழர் இரவி பெற்ற
வெற்றியல்லவா இது!

பன்னிரண்டாவது ஹைக்கூ நூலைத் தொகுப்பாய் – தேர்ந்தெடுக்கப்பட்ட
கவிதைகளின் மாலையாய்த் தந்திருக்கும் கவிஞரின் படைப்பு முயற்சியை, வாமன
அவதாரம் எனலாமா?  காண்கின்ற காட்சி, எண்ணுகின்ற எண்ணம், பேசுகின்ற பேச்சு
(உண்ணும் சோறும், பருகும் நீரும்) எல்லாமே கவிஞருக்கு மூன்று வரி
முத்தாய்ப்பு தானோ?  அதனால் தான், முன்றில் அணில் கூட, ஹைக்கூவாகிறதோ
கவிஞருக்கு?

       ஹைக்கூ கவிதையை
       முதுகில் சுமப்பவை
       அணில்கள் !

என்ற கவிதை சேது பாலத்தோடு ஹைக்கூவையும் அல்லவா நினைவுச் சரடுகளில்
கோர்த்துவிடுகிறது.

       வியர்வைப் பெருக்கோடு விசிறி விற்பவனைக் காட்டும் ஜப்பானிய
ஹைக்கூவிற்குச் சற்றும் சளைக்காத கவிஞரின் படைப்பு.

              பட்டு நெய்தான்
              கந்தல் உடையுடன்
              நெசவாளி !

என்ற ஹைக்கூ நாடு, மொழி, இனம் ஆகியவற்றின் எல்லைகள், தொழிலாளி என்ற
வர்க்கத்தினரின் துன்பத்தால் அழிக்கப்படும் ஒருமையைச் சுட்டும் இந்த
ஹைக்கூ படைப்பாளியின் சமூகச் சார்பின் வெளிப்பாடாகிறது.

       மாறி வரும் காலங்களின் சாட்சியாய் நழுவிப் போகும் நம்பிக்கை.

              காவல் தெய்வம்
              கையில் அரிவாள்
              காணவில்லை உண்டியல் !

என்ற ஹைக்கூவும்,

              மக்களைக் காப்பது இருக்கட்டும்
              முதலில் உன்னைக் காப்பாற்றிக் கொள்
              தெருவோரக் கடவுளே!

என்ற ஹைக்கூவும்,  வெண்தாடி வேந்தரின்  நாத்திகச் சாட்சியாய்ச் சாட்டைகளாகின்றன.

              அழும் குழந்தை
              பால் ஊற்றினர்
              பாம்புப் புற்றுக்கு!

என்ற ஹைக்கூ, ஞானப்பால் சம்பந்தரைச் சமகாலத்தில் நோக்கும் புதிய பக்தித்
தமிழாக முப்புரிக் கவிதையாகிறதே!

       இயற்கையின் வளர்ச்சியும், மலர்ச்சியும் ஏழையின் பிழைப்பில்
இரசனையாகாமல் இழப்பாகும் அவலத்தை,

              யாரும் வாங்காமலே
              மலர்ந்தன பூக்கள்
              வாடினால் பூக்காரி !

என்ற கவிஞரின் படைப்பு, படைப்பாளியின் சமூக அக்கறையின் சாட்சியமாகிறது.

              கொஞ்சம் நில் இரயிலே
              தண்டவாளத்தில்
              இரயில் வண்ணத்துப்பூச்சி

என்ற பதைபதைப்பு, கவிதை மனதின் கனிவு அல்லவா?

              வானிலிருந்து குதித்தும்
              காயம் இல்லை
              மழைத்துளி!

என்ற கவி ஆசுவாசம், வாசிப்பின்போதான இதழோரச் சிரிப்பின் இரசனைக்கு விருந்தாகிறது!

              வீரத்தில் சிங்கமாய்
              வேகத்தில் சிறுத்தையாய்
              எப்போது மனிதனாய்?

என விலங்காகும் மனிதத்தை, வினாவிற்கு உள்ளாக்கும் கவிஞரின் அக்கறை!

              காவிரிக்கு விலங்கு
              கண்ணகி கோவிலுக்குத் தடை
              ஒன்றுபட்ட இந்தியா !


என்ற ஆதங்கம் தமிழர்களின் ஏக்கப்பெருமூச்சாக நூற்றாண்டுகளைக் கடந்து விடுமோ?

       அன்னிய இலக்கிய வடிவம் படைப்பாளிக்குள் பதிந்து, அதன் வழி தமிழ்
இலக்கியத்தில் தடம் பதித்த படைப்பாளியாய் உயர்ந்தோங்குகிறார் தோழர் இரவி!
 கலை வாழ்க்கைக்காக என்ற கடப்பாடு கவிதையின் அடிநாதமாக ஆயிரம் ஹைக்கூவில்
எண்ணாக - எண்ணமாக!  செறிவும், வலிவும் பெற்ற கவிதைகள், தெளிவும் பொலிவும்
பெற்றுத் தமிழ்க் கவிதை உலகின் தனி முத்திரையாக மிளிர்கின்றன!

       கவிஞரின் முயற்சிகள் வளரட்டும்!  வாழ்த்துக்கள்!


.

கருத்துகள்