விடியலுக்காக ! நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்தாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.!

விடியலுக்காக !


நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ்தாசன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.! 

நூல் கிடைக்குமிடம் :    செந்தில் புத்தக நிலையம், காலேஜ் ஹவுஸ் உட்புறம், நகர் மன்ற சாலை, மதுரை-1. 

கவிஞர் வைரமுத்து அவர்களின் வாழ்த்துரையோடு தொடங்கும் நூல்.  தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் அணிந்துரை அற்புத  உரை. " தமிழன்-தமிழரின்-தமிழ்நாட்டின் விடியலுக்காக வீறு கொண்டு  எழுவதிலே மோனையைப் போல முன்நிற்கும் என் இளைய நண்பர் கவிஞர்  தமிழ்தாசன் " என்று பாராட்டி உள்ளார்கள். முற்றிலும் பொருந்தும் விதமாகவே கவிதைகள் உள்ளன. முனைவர் முத்து சந்தானம், டாக்டர் 
ப. பழனியம்மாள்  ஆகியோரின் ஆய்வுரைகள் நன்று .

உசிலம்பட்டி அய்யனார்குளம் பிறந்த கிராமத்துக் குயில் நூலாசிரியர் கவிஞர் தமிழ்தாசன். இவரது பெயர் இயற்பெயரா? புனைப் பெயரா? என்பது  தெரியவில்லை. ஆனால் காரணப்பெயர் என்றே சொல்லலாம். தமிழ்மொழி  மீது பற்று மிக்கவராக, உள்ளவராக உள்ளார். பிறந்தது கிராமம் என்பதால்  இயற்கையை உற்று நோக்கி உள்ளார். இந்த  நூலை காணிக்கை ஆக்கி  இருப்பதிலேயே வித்தியாசப்படுகிறார்.

காணிக்கை  :
    நினைவுகளில் வாழும் என் அன்புத் தங்கை புகழேந்தி திருவடிகட்கு  இக்கவிதைத் தொகுப்பை காணிக்கையாக்குகின்றேன் . 

தமிழ் மொழி தமிழ் இன உணர்வுடன் இயற்கையை கவிதைக்கண் கொண்டு  ரசித்து வடித்த கவிதைகள் நன்று. நூலாசிரியர் கவிஞர் தமிழ்தாசன்  அவர்களுக்கு பாராட்டுக்கள்.

 தமிழகத்தில் தமிழ்த் தொலைக்கட்சிகளில் நாளும் தமிழ்க்கொலை  நடந்து வருகின்றது. தமிங்கில மொழியை மக்களுக்கும் கற்பித்து  வருகின்றனர். தமிழ் மொழியின் அருமை, பெருமை அறியாதவர்களின்  தலையில் கொட்டும் வண்ணம் உள்ள கவிதை நன்று.

பேரிகை :

மொழிப்பெருமை அறியாத மூடர் உண்டு. 
மோகமெல்லாம் அயலாரின்  மொழியை நாடி
குலப்பெருமை தனைவீழ்த்துவோர் இன்றி 
குழப்பத்தை  உண்டுபண்ணிக் கழிக்கின்றார்கள் . 

       இயற்கையை வாசகர்களுக்கு மனக்கண்ணில் காட்சிபடுத்தும் விதமாக  பல கவிதைகள் எழுதி உள்ளார்.  பதச்சோறாக ஒன்று.

வண்டு வந்து  தேனெடுக்கும்
              வண்ண வண்ணப் பூக்களிலே
       கொண்டு வந்து தேன்கவிதை
              கோபுரமாய் வளருதடி .

வாய்மையாளர்கள் மனமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிறார்.  நல்ல மனம் படைத்தவர்கள் வருந்திடக் கூடாது என்கிறார் கவிஞர்  தமிழ்தாசன்.

       வாய்மைக்குத் தோரணங்கள்
              வாழ்த்துக்கள் அமைத்திடலாம்
       தூய்மையான உள்ளங்கள்
              தூசி படலாகாதே .!

காதலைப் பாடாத கவிஞரும் உண்டோ? இல்லை. இவரும் பாடி  உள்ளார். பாருங்கள். காதலை ஊருகாய்  போல கொஞ்சமாகவே பாடி  உள்ளார்.  சங்கத் தமிழ்க் கவிதையை நினைவோட்டும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள் .

காதலின்  துயரம் 
       நிலவொளியில் பொன்னழகே
              நெடுந்தூரம் சென்றவளே
       உலவுகின்றாய் நீங்காமல்
              உன்னினியோன் உள்ளமதில்
       நீரோடைப் பக்கத்தில்
              நீ யாரோ; நீ யாரோ;
       வீராப்பு அன்றில்லை
              வீழ்ந்ததுமில் லைஎன்பேன் .

 கவிஞர் தமிழ்தாசன் இக்கவிதை படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும்  ஈழததில் படுகொலையான நம் சகோதரர்களின் சோகம் நினைவுக்கு  வருகின்றது. 

எரிமலைக்  குமுறல்           
எம் இனத்தைத் தீண்டிவிட யாரும் – பார்
       எழுந்தாலும் வீழ்ந்திடுவர் தூரம் – இனி
       எம் பகைவர் வந்திடுக
       எங்கிருந்தும் களத்தினிலே
       வீரம் – விழிகள்
       சீறும் !

ஈழக்கொடூரன் ராஜபட்சே ஐ.நா. மன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டும்  என்ற எண்ணமும் விதைத்தது கவிதை.  நூல் முழுவதும் சந்த நயத்துடன், ஓசை லயத்துடன் மரபுக் கவிதைகள் விஞ்சி நிற்கின்றன. கவிதை  வடிவங்களில் மரபுக் கவிதைகளின் தனி இடம் என்றும் உண்டு. மரபுக்  கவிதைகளின் தமிழ் மொழியின் வரத்தை பறைசாற்றுபவை. கவிஞர்களின்  மொழி ஆற்றலை உணர்த்துபவை. இலக்கணத்தோடு உள்ள இலக்கியமாக  வெண்பா விருந்து வைத்துள்ளார் நூலாசிரியர் கவிஞர் தமிழ்தாசன்.

வெண்பா விருந்து !

நாட்டின் பெருமை நலமுடன் காத்தருளத் 
தீட்டிடும் பாக்கள் திசையெங்கும் கேட்டிட
ஓடி விளையாடும் உட்பகை வஞ்சகக்
கட்டுகளைக் கிளம்பு .

பகுத்தறிவு விதைக்கும் கவிதையும் நூலில் உள்ளது. “சர்வ சக்தி  சாமிக்கு சங்கத்தமிழ் புரியாதா?” என்பார்கள் சிலர். இன்னும் தமிழகத்தில்  பெரும்பாலான கோவில்களின் கருவறையில் கன்னித்தமிழ் ஒலிக்கவில்லை.  புரியாத வடமொழிலே அர்ச்சனைகள் நடைபெற்று வருகின்றன. தமிழக  ஆலயங்களில் தமிழுக்கு இடமில்லையா? ஆதங்கத்தை பதிவு செய்துள்ள  கவிதை நன்று.

வெளிச்சத்தின் பாதையில்
அறிவுக்கு எட்டாத
ஆண்டவனைசொல்லி நிதம் 
நெறி கேட்டு  செல்வதனால்
நெஞ்சுக்குள் தீப்பிழம்பே 
அறிவியலின்அருஞ்செயலே
அறியாத மூடர்கள்
அணிவகுப்பைத் தொடர்கின்றீர்
கற்கண்டு தமிழுக்குக்
கருவறைக்குள் வேலையில்லை
கற்றறிந்த நெஞ்சத்தார்
கதை கேட்டே நிற்கின்றார்
ஏற்றமெங்கே எம்மொழிக்கு
எந்நாளும் சூழ்ச்சியாலே
சுற்றிவரும் கொடுஞ்செயலைச்
சுட்டெரிப்போம்  விழிப்புடனே !

நெஞ்சில் உரத்துடன், நேர்மை திறத்துடன் மனதில் பட்டதை கவிதையாக வடித்து நூலாக்கிய நூலாசிரியர் கவிஞர் தமிழ்தாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள்.


-- 

கருத்துகள்