'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. அணிந்துரை : தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !

'ஆயிரம் ஹைக்கூ'  


நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.

அணிந்துரை தமிழ்நாடு அரசின் முத்தமிழ்க்காவலர் விருதாளர் தமிழ்த் தேனீ , பேராசிரியர் , முனைவர் இரா. மோகன் !

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

கணினி யுகத்திற்கான கற்கண்டுக் கவிதைகள்
*****
இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் ஆயிரம் என்ற எண்ணுக்குத் தனி ஈர்ப்பு உண்டு; மிகுந்த செல்வாக்கு உண்டு.  போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற மாவீரனுக்குப் பாடப் பெறுவது பரணி இலக்கியம்.
       எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
                  யிருந்தது மிந்நாடே – அதன்
            முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
                  முடிந்தது மிந்நாடே – அவர்
            சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
                  சிறந்த்து மிந்நாடே.
எனத் தாய்நாட்டின் வந்தனை கூறி மனதில் இருத்தி வாயுற வாழ்த்திப் பாடுவார் கவியரசர் பாரதியார். காவியக் கவிஞர் வாலியும், கவிஞர் வைரமுத்துவும் தத்தம் ஆயிரம் திரையிசைப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டு உள்ளனர்.  மூத்த ஹைகூ கவிஞர் மித்ரா, மு.முருகேஷ் ஆகிய இருவரும் தங்கள் ஆயிரம் ஹைகூ கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளனர்.

      இவ்வரிசையில் அண்மையில் சேர்ந்துள்ளார் கெழுதகை நண்பர் இரா. இரவி.  “கவிதைச் சாரல்" என்னும் தொகுப்பின் வாயிலாக 1992-ஆம் ஆண்டில் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தவர் அவர். இப்போது அவரது கவிப்பயணத்தில் குறிஞ்சி மலராக “ஆயிரம் ஹைக்கூ’" என்னும் இத்தொகுப்பு அமைகின்றது.  “நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் உனை நினையாது ஒருபோதும் இருந்தறியேன் என்றாற் போல் இரா. இரவி தமது நெஞ்சினைத் தமிழுக்கே இடமாக வைத்தார்; தமிழை நினையாது ஒருபோதும் இருந்தறியாதவர்.  இன்னமும் கூர்மைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால், ஹைகூ கவிதை அவருக்குச் செல்லப் பிள்ளை; ஹைகூ கவிதையின் செல்லப் பிள்ளை இரவி என்றும் கூறலாம்.
      இரவியின் படைப்பாளுமையை அவரது இளமைக்காலம் முதற்கொண்டு செதுக்கிய பெருமக்களாக மூவரைச் சுட்டலாம்.  ஒருவர், “பகுத்தறிவுப் பகலவன்’" எனத் தமிழ் கூறு நல்லுலகம் மதிப்போடும் மரியாதையோடும் அழைத்து மகிழும் தந்தை பெரியார். இன்னொருவர், பாரத மணித்திருநாட்டின்  முன்னைக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜே. அப்துல் கலாம்; இரவியை விழித்துக் கொண்டே கனவு காணவும்’, கனவு காண்பதோடு நின்று விடாமல் கெட்ட போரிடும் உலகத்தை வேரொடும் சாய்ப்பதற்கான காரியங்களை ஆற்றவும் கற்றுத் தந்த ஆற்றல்சால் ஆளுமையாளர் அவர்.  மூன்றாமவர், இந்திய ஆட்சிப் பணியோடு இலக்கியப் பணியையும் இரு கண்ணெனப் போற்றி வாழ்ந்து வரும் முனைவர் வெ. இறையன்பு ; இரவி என்நேரமும் – எப்போதும் – இயங்கிக் கொண்டிருப்பதற்கான தூண்டுகோல் அவர். இம்மூன்று பெருமக்களது தாக்கத்தினை இரவியின் வாழ்விலும் வாக்கிலும் – எண்ணத்திலும் எழுத்திலும் – அங்கிங்கு எனாதபடி எங்கும் நீக்கமறக் காண முடிகின்றது.
   ஒரு கவிஞர் என்ற முறையில் இரா. இரவியிடம் தூக்கலாகக் காணப்படும் ஆளுமைக் கூறுகளாக பின்வருவனவற்றைச் சுட்டலாம்.
  • ஆழ்ந்த தமிழுணர்வு
  • அயலகத் தமிழர்பால் – குறிப்பாக, ஈழத்தமிழர் மீது மிகுந்த பரிவு.
  • கண்மூடிப் பழக்கவழக்கங்களுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான முற்போக்குச் சிந்தனை.
  •  மனிதநேயம்
  • வாழ்வியல் விழுமியங்களுக்கு முதன்மை தருதல்
  • தந்தை, தாய், மனைவி, மக்கள் முதலான குடும்ப உறவுகளைப் போற்றல்.
  • இயற்கை மீதான ஈடுபாடு.
  • திருக்குறள் பற்று
  • தன்னம்பிக்கைச் சிந்தனை
  • மெல்லிய நகைச்சுவை உணர்வு
அடிப்படையான இந்தப் பத்து ஆளுமைப் பண்புகளின் – புனைவுக் கூறுகளின் அழகிய பதிவுகளாகவே இரவியின் ஹைகூ கவிதைகள் விளங்குகின்றன.
      தமிழன் என்று சொல்லடா
       தலைநிமிர்ந்து நில்லடா
       ஆங்கிலக் கையொப்பம் ஏனடா?
என்பது தமிழனின் ஆங்கில மோகத்திற்கு எதிராகக் கவிஞர் சொடுக்கும் சாட்டையடி!
      சாகவில்லை வாழ்கிறது
       செம்மொழி தமிழ்மொழி
       ஈழத்தமிழர் நாவில்.
என்பது ஈழத்தமிழருக்கு ஹைகூ வடிவில் இரவி சூட்டியுள்ள புகழாரம்.
       படிப்பு எதற்கு
       அடுப்பூதும் பெண்களுக்கு?
       செருப்பாலடி சொல்பவனை.
கவிஞரின் முற்போக்குச் சிந்தைக்குப் பதச்சோறு இக்கவிதை!
      செடி வளர்த்தோம்
       கொடி வளர்த்தோம்
       மனித நேயம்
 ?
என்பது மனித நேயத்தினை வலியுறுத்திக் கவிஞர் படைத்துள்ள ஹைகூ.
      படித்தவன் பாட்டை
       எழுதியவன் ஏட்டை
       அரசியல்வாதி நாட்டை !
என்பது இரவியின் கூரிய அரசியல் சாடல்.
      உருகிடும் மெழுகு
       உறைந்திடும் அழகு
       அம்மா.
என்பது அன்னையைப் பற்றிய கவிஞரின் உணர்ச்சிமிகு பதிவு.
      தின்ன முடியவில்லை
       உயரத்தில் பஞ்சுமிட்டாய்
       வான்மேகம்.
என்பது இரவி தீட்டும் அழகிய இயற்கை ஓவியம்.
       அழைத்தும் ஓடிவரும்
       அன்பு மனைவியைப் பெற்றவர்
       திருவள்ளுவர்.
வாசுகியின் கணவரான திருவள்ளுவரை “வாசகர்களின் கண் அவர்” என்கிறார் கவிஞர்.
      மூச்சு உள்ளவரை முயற்சி
       முயற்சி உள்ளவரை மூச்சு
       வெற்றி உறுதி.
என்பது கவிஞர் இரவி காட்டும் வெற்றிக்கான வழி; தன்னம்பிக்கை னெறி.
      சுனாமி வருவதாய்
       மருமகள்கள் பேச்சு
       மாமியார் வருகை.
இரவியின் மெல்லிய நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும் ஹைகூ இது.
      “கணினி யுகத்தின் கற்கண்டு’”", “மூன்று வரி முத்தாய்ப்பு”", “தற்கால இலக்கியத்தின் தகதகப்பு", “உருவத்தில் கடுகு; உணர்வில் இமயம்”", “படித்தால் பரவசம்; உணர்ந்தால் பழரசம்" எனத் தாம் வகுத்த வரிவிலக்கணத்திற்கு ஏற்ப கவிதைகளைப் படைத்திட்ட அன்பு இளவல் இரவிக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  அழகிய வடிவில் நூலினை வெளியிட்டுள்ள வானதி பதிப்பகத்தார்க்கு என் வணக்கங்களை உரித்தாக்குகின்றேன்.




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்