ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிஞர் திருச்சி அ.கெளதமன் !

ஆயிரம் ஹைக்கூ ! 

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் கவிஞர் திருச்சி அ.கெளதமன் !

4/26 இராகவேந்திரா 2 வது தெரு ,சதாசிவம் நகர் ,மடிப்பாக்கம், சென்னை .91. அலைபேசி 8870748997  .

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. 
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

என் இனிய நண்பர் திரு இரா .இரவி ஹைக்கூ உலகில் ஓர் தனி இடத்தைப் பிடித்தவர் .ஆயிரம் ஹைக்கூ ! என்ற இந்நூல் 12 வது நூலாக மலர்ந்துள்ளது .முந்தைய  ஹைக்கூ நூல்களிலிருந்து சிறந்த ஹைக்கூ கவிதைகளைத் தேர்ந்தெடுத்து பல்வேறு தலைப்புகளில் மனம் மகிழும் வண்ணம் இந்நூலில் நமக்கு  விருந்தளித்துள்ளார் .

இது கருத்துக் கருவூலமா ? இயற்க்கை அழகின் எழில் மிகு காட்சிக் கோப்பா  ? புரட்சிச் சிந்தனைகளின் வெளிப்பாடா ?சமூக அவலங்களைச் சாடும் சவுக்கா ? என்றெல்லாம் வியக்கத் தோன்றுகிறது .அழகிய அட்டைப்படம் .உலகம் சார்ந்த திருக்குறள் எழுதிய வள்ளுவர் படம் ,அறிவியல் சாதனமாய் அறிவிக்கும் படம், விரிந்த வானத்தில் எழுகதிரை உயரே பார்த்து கைகள் விரித்துத் தன்னம்பிக்கையோடு தலையை உயர்த்தும் தன்மான இளைஞன் படம் என அட்டைப்படமே இவர் உள்ளக் கிடக்கையினைத் தெள்ளத் தெளிவாய் உணர்த்துகிறதோ ?

ஆயிரம் ஹைக்கூக்களில் என் மனம் கவர்ந்த ஹைக்கூக்களில் ஒரு சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

' சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே ' எனப்பாடினான் .மகாகவி பாரதி. பின்னால் வந்த பராதிதாசன் " தமிழுக்கு அமுதென்று பேர் ' எனப் பாடினான் .

என்னதான் ஆங்கிலக் கல்வியை அழகுறப் பயின்றாலும் , துன்பம் வந்திட்ட  பொழுதினிலே  தமிழ் மொழியே அவ்பனுக்கு வருகிறது என்பதை 

தடுக்கி விழுந்ததும் 
தமிழ் பேசினான் 
அம்மா !

என்ற ஹைக்கூவில் அழகாக வெளிப்படுத்துகிறார் நம் கவிஞர் 
இரா .இரவி .

தமிழன்  என்று சொல்லடா 
தலை நிமிர்ந்து நில்லடா 
ஆங்கிலக் கையொப்பம் ஏனடா ?

என்ற ஹைக்கூவில் வங்கிகளிலும் சரி ,அலுவலகங்களிலும் சரி ஆங்கிலக் கையொப்பம் இடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நம் தமிழர்களைச் சாடுகிறார் .

உலக அமைதி  கேள்விக்குறியானதை விளக்குகிறது இந்த ஹைக்கூ .

உள்ளுரில் இனவெறி 
வெளிநாட்டில் நிறவெறி 
உலக அமைதி கேள்விக்குறி ? 

காவிரிக்கு விலங்கு
கண்ணகி கோவிலுக்குத் தடை 
ஒன்றுபட்ட இந்தியா ?

என தேசிய ஒருமைப்பாடு சிதைவுற்றுக் கிடப்பதைத்  தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் .

காசு கரியானது தீபாவளி 
கரி காசானது 
நெய்வேலி !

என்ற ஹைக்கூவில்பகுத்தறிவுச் சிந்தனை விதைக்கிறார் .

உண்ணவில்லை அசைவம் 
உருவத்தில் பெரியது 
யானை !

யானை உருவத்தில் பெரியதாயினும் ,அதைவிட சிறிய விலங்குகளையோ , பறவைகளையோ கொன்று தின்னவில்லை. ஆனால் மனிதனோ இதற்கு முற்றிலும் மாறுபடுகின்றான் என்ற கருத்தை இந்த ஹைக்கூவில் சுட்டுகிறார் . 

குஞ்சுகள் மிதித்து 
கோழிகள் காயம் 
முதியோர் இல்லம் !

என்ற ஹைக்கூவில்,பெற்று வளர்த்து ,பேணிக் காத்த பெற்றோர்கள் மகன்களால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படும்  அவலத்தை உரைக்கிறார் .

வீடு மாறியபோது 
உணர்ந்தேன் 
புலம் பெயர்ந்தோர் வலி !

என்ற ஹைக்கூவில்,வீட்டை விட்டு ,ஒரு இடத்தை விட்டு ,மாறும் போது  ஏற்படுகின்ற துன்பத்தினை நினைத்துப் பார்க்கின்ற போதுதான் நாட்டை விட்டு நாடு இடம் மாறும்போது ஏற்படுகின்ற துன்பத்தின் வலியை அறிந்து கொள்ள முடிகிறது என்ற கருத்து ஈழத்தமிழர்  நிலையைச் சுட்டுவதாக அமைகிறது .

ஆயிரம் கோடியில் 
அரசியல் திருவிழா 
பொதுத் தேர்தல் !

ஐந்தாண்டுகட் கொருமுறை நிகழும் அரசியல் திருவிழா ,கூட்டணி சேர்ந்து நாட்டைக் கொள்ளையடிக்கும் பெருவிழா என ,போலி ஜனநாயகத்  தேர்தலைச் சாடும் இவர் .

விரலில்  கரு மை 
வாழ்வில் வறுமை 
தேர்தல் மை !

மக்களின் விரலில் ஏற்றப்படும் தேர்தல் கரு மை மக்களை வறுமையில் தள்ளியும் வெறுமை உணர்வைத் தோற்றுவிப்பதாகவும் உள்ளது என நடைமுறை யதார்த்தத்தைச்  சுட்டுகிறார்   

வானத்தை வருணிக்காத புலவர்களே கிடையாது .ஏனெனில் வானம் ஆயிரம் சேதி சொல்லும் .நம் கவிஞர் .

யார் தருவது 
தினமும் ஒரு சேலை 
வானம் !

என்ற ஹைக்கூவில், வெண்மையும் ,கருமையும் , நீலமுமாய்த் தோன்றும் வானத்தின் அழகை எடுத்து இயம்புகின்றார்.வளமையைப் பற்றிப்  பாடிய   கவிஞர் வறுமையைப் பற்றியும் தரும் ஹைக்கூ இதோ !

கிழிசல் துணி
வானத்திலும் வறுமை 
நட்சத்திரங்கள் !

மரமானதற்கு  
வருந்தியது 
சிலுவை  மரம் !

என்ற ஹைக்கூவில், மரம் மனிதனுக்குப் பல வகைகளில்  உதவினாலும் ,இயேசுவை அறைதற்கு  உரிய சிலுவை மரமாய் இருத்தியமைக்கு மரம் வருந்தியதாகக்  கூறுவது சிறப்பு மிக்கது .

வீணையும் 
விறகுதான்
அருமை தெரியாதவன் !

மிக நல்ல வீணை இசை மனதிற்கு இன்பமாயினும் ,அதனை முறையாக மீட்டத் தெரியாதவனுக்கு வெறும் விறகுதான் எனத் தெளிவுறுத்கின்றார்  .

மதத்தை வென்றது பாசம் 
பள்ளிவாசலில்  குழந்தையை 
மந்திரித்த  இந்து தாய் !

எந்தத் தாயாயினும் பாசம் ஒன்றுதான் .எந்தக் கடவுளாயினும் அருள் ஒன்றுதான் எனத் தாய் பாசத்தையும் , மத சமரசத்தையும் வலிவுறுத்கின்றார் .

இதுபோல் மேலும் பல ஹைக்கூ நூல்கள் இயற்றிப் பல்லாண்டு வாழ வேண்டுமென்று வாழ்த்துகின்றேன் .

கருத்துகள்