இனிய நண்பர் ,ஹைக்கூ முன்னோடி ,கவிஞர் மு .முருகேஷ் அவர்கள் ஆயிரம் ஹைக்கூ நூலிற்கு எழுதியுள்ள விமர்சனம் .


இனிய நண்பர் ,ஹைக்கூ முன்னோடி ,கவிஞர் மு .முருகேஷ் அவர்கள் ஆயிரம் ஹைக்கூ  நூலிற்கு எழுதியுள்ள விமர்சனம் .

.மனக் கிரீடத்திலொரு மலர்க்கிரீடம்
    
  ”எமக்குத் தொழில் கவிதை” என்று நெஞ்சு நிமிர்த்திப் பாடிய மகாகவி பாரதியின் வழி வந்த தமிழ்க் கவிதையில் பரப்பில், இன்று ஆயிரம் ஆயிரமாய்க் கவிதைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன, கவிதை மணம் பரப்புகின்றன.

    தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணிலிருந்து கவிதைக் கரம் நீட்டி,என்னோடு நட்புக் கொணடவர்களில் நண்பர் இரா.இரவி முக்கியமானவர் மட்டுமல்ல, முதன்மையானவருங்கூட.

    தமிழ்க் கவிதைப் பரப்பில் அவ்வப்போது நிகழும்,  குடுமிப் பிடி சண்டைகள் பற்றி கவலை கொள்ளாமல் தன்போக்கில் எழுதிவரும் அன்புக் கவிஞர் இரா.இரவியின் எளிமை நிறைந்த, வாசித்ததும் மனதைச் சுருக்கெனத் தைக்கும் தமிழ் ஹைக்கூ கவிதைகளை தமிழகத்திலிருந்து வெளியாகும் அனைத்து இதழ்களும் வாஞ்சையோடு தமது பக்கங்களில் பதிவு செய்துள்ளன.

   இதுவரை ஏழு ஹைக்கூத் தொகுப்புகளும், ஒரு ஹைக்கூ நூல்கள் பற்றிய விமர்சனத் தொகுப்புமாக, தனது தொடர் பயணத்தைக் கவிப் பயணமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் கவிஞர் இரா.இரவியின் மனக் கிரீடத்தில் ஒரு மலர்க்கிரீடமாய் மலர்ந்திருக்கிறது...கவிஞரின் ஆயிரம் ஹைக்கூ கவிதைகளால் கோர்க்கப்பட்டிருக்கும் “ ஆயிரம் ஹைக்கூ” நூல். 
    
   தமிழில் பேரியக்கமாய் பரந்து விரிந்திருக்கும் ஹைக்கூ கவிதை இயக்கத்தில், பல்லாண்டுகளுக்கு முன்னே ஆயிரம் கவிதைகளைத் தொகுத்து நூலாக்கும் முயற்சிக்கு அடியெடுத்துத் தர முன்வந்தார் அன்புக் கவிஞர் செய்யாறு மகா.மதிவாணன். ஏனோ காலம் அவரைத் திருடிக் கொள்ள, அம்முயற்சி கனியாமலேயே போனது.

    தமிழில் கவிஞர் அக்கா முனைவர் மித்ரா அவர்களைத் தொடர்ந்து, இரண்டாவது கவிஞராக ஆயிரம் பாமாலைச் சூடி வருகிறார் கவிஞர் இரா.இரவி.

    முன்பே படித்து, ரசித்து, ருசித்த- பகிர்ந்து கொண்ட பல நூறு கவிதைகளோடு, சில நூறு புதிய பூக்களும் நறுமணம் வீசி நம்மை ஈர்க்கின்றன.

   ஹைக்கூப் பூக்களை அப்படியே அள்ளிக் குவிக்காமல், 20 தலைப்புகளின் கீழ்த் தொகுத்திருப்பது நல்ல முயற்சி. அதுவும், பலருக்கும் வாய்க்காத பேருள்ளம் கொண்ட எங்கள் கவிவிளக்கு அய்யா.முனைவர் இரா.மோகன் அவர்களின் தேர்ந்த வாசிப்பில் தலைப்பூச் சூடி, தேர்வு செய்யப்பட்ட கவிதைகளல்லவா... மோதிரக் கைகளால் அல்ல, கவி அன்னையின் அன்புக் கரங்களால் முன்மொழியப்பட்ட கவிமுத்துக்கள் வாசிப்பாளனின் மனசையும் வசப்படுத்தி விடுகின்றன.

       “ தமிழ் வாழ்கிறது
         அடையாளமாய்
         புலம் பெயர்ந்த தமிழர்கள்.”
                        -எவ்வளவு பெரிய சமூக உண்மையை மூன்றே வரிகளில் சொல்லிப் போகிறார்.
 
       “ ஏங்கியது குழந்தை
          கதை கேட்க...
          முதியோர் இல்லத்தில் பாட்டி.”
                        - மனசை ஈரங் கசிய வைத்த வரிகள்.

        நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரணமான காட்சியும் இரவியின் கவிப் பார்வையில் அழகான ஓவியமாகிறது. 
சாலையெங்கும் தண்ணீரை வீணாய்க் கொட்டிக் கொண்டு போகும் தண்ணீர் லாரிகளைக் கண்டு நாம் வெறுமனே திட்டியிருக்கின்றோம். இதோ... அதையே அழகான கவிதையாக இரவி தீட்டியிருக்கிறார்.

         “ கோலமிட்டுச் சென்றது
            வறண்ட சாலையில்
            தண்ணீர் லாரி.”
                        -  ‘நீர்த் தெளித்துச் சென்றது’ என்றிருக்கலாமோ... ஆனாலும், லாரி தெளித்துச் செல்லும் நீர்க்கோலம் கூட நவீன ஓவியமாய்த் தானே தெரிகிறது.ஓவியந்தானே கோலம், கோலம்தானே அழகான ஓவியம்.

   ஆயிரங்கால் மண்டபத்தில் எந்தக் கால் அழகு என்று யாராவது சொல்ல முடியுமா...? “ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்கிற சொலவடையை விடுத்து, இனி இப்படிச் சொல்லலாம்... “ஆயிரம் ஹைக்கூவிற்கு மூன்று முத்துக்கள் பதம்” என்று.
  
    அழகான அட்டையை வடிவமைத்த மதுரை அரிமாமுத்து, நூலழகுக்கு வடம் பிடித்த கவிஞர் கன்னிக்கோயில் இராஜா,184 பக்கங்கள் கொண்ட நூலை ரூ.100-க்கே மலிவாய்த் தந்திருக்கும் வானதி பதிப்பகம் என அனைவரையும் பாராட்டணும்.

    இளைய படைப்பாளர்களின் புதிய கவிக் குஞ்சுகளை, வாஞ்சையோடு வாரியணைத்து தான் பேசும், எழுதும் எல்லாத் திசைகளிலும் கொண்டு போய் பெருமைப்படுத்துகிற என் பாசத்திற்கினிய அய்யா முனைவர் இரா.மோகன் அவர்கள்,  ”கணினி யுகத்திற்கான கற்கண்டுக் கவிதைகள்” என முன்மொழிந்துள்ளார், அய்யாவின் அடியொற்றி வழிமொழிவதில் நானும் பெருமை கொள்கிறேன்.

    இத்தொகுப்பின் வ்ழியே பல பெருமைகளும், பரிசுகளும் கவிஞர் இரா.இரவியின் வாசலுக்கு வரவாக, என் வசந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

                                                         - என்றும் உங்கள் தோழன்...
                haiku.mumu@gmail.com                                                  மு.முருகேஷ்,
                                                                         வந்தவாசி- 604 408.
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100. 


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்