நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ! நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை !
நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .
மின் அஞ்சல் mathamotharan@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

வெளியீடு யாழினி .30/8 கன்னிக்கோயில் முதல் தெரு ,அபிராம புரம்
.சென்னை .600018.
விலை ரூபாய் 50.மின் அஞ்சல் minminihaiku@gmail.com 

நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் அவர்கள் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபோதும் இலக்கியப் பணியில் இருந்து என்றும் ய்வு  பெறாதவர் .தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .கவிதை எழுதும் எல்லோருக்கும் முதலில் வருவது காதல் கவிதைதான் .பிறகுதான் சமுதாயக் கவிதைகள் எழுத வரும் .

கவிஞர் மா .தாமோதரன் அவர்களும் முதல் மூன்று நூல்களில் முத்தாய்ப்பாக காதல் கவிதைகள் எழுதி விட்டு .நான்காவது நூலான இந்த நூலில் சமுதாயத்தை உற்று நோக்கி சமுதாயக் கவிதைகளை எளிதில் புரியும்   புதுக்கவிதைகளாக  வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .இலக்கியத்திற்கு எத்தனையோ வடிவம் இருந்தாலும் கவிதை வடிவம் ஒன்றுதான் நிலைத்து நிற்கும் என்பது என் கருத்து .நிலைத்து நிற்பதற்கு எடுத்துக்காட்டு திருக்குறள் .

அரசுத்துறையில் வட்டாட்சியராக பணிபுரிந்துக் கொண்டே இலக்கியப்பணியும் திறம்பட செய்துவரும் கவிஞர் பே .ராஜேந்திரன் அவர்களின் அணிந்துரை மிக நன்று .நூல் வடிவமைப்பில் பல புதுமைகள் செய்து வரும் இனிய நண்பர்  ,மின்மினி ஆசிரியர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் பதிப்புரை நன்று ..அட்டைப்படம் , அச்சு ,வடிவமைப்பு ,கவிதைகளுக்கு ஏற்ற புகைப்படங்கள் யாவும் மிக நன்று .

உள்ளத்தில் உள்ளது கவிதை .உணர்வின் வெளிப்பாடு கவிதை .உண்மையை உரைப்பது கவிதை .துணிந்து  எழுதுவது கவிதை .எளிமையானது கவிதை .இனிமையானது கவிதை .இப்படி கவிதைக்கான அத்தனை விளக்கத்திற்கும் பொருந்துவதாக உள்ளன கவிதைகள் .கதை , கட்டுரை வாசிப்பதை விட கவிதை வாசிப்பது சுகமோ சுகம் .

திருவள்ளுவரை யாரும் கண்டதில்லை .அவர் இப்படி இருந்திருப்பார் என்று கற்பனையாக சர்மா என்ற  ஓவியர் வரைந்த ஓவியம்தான் நாம் காணும் திருவள்ளுவர் .அந்த ஓவியத்தை ஒட்டி எழுந்தவைதான் திருவள்ளுவர் சிலைகள் .அதில் உள்ள யாரும் உணராத முரண்பாட்டை உணர்த்துகின்றார் .

முரண்பாடு !
மழித்தலும்  
நீட்டலும் 
வேண்டாம் என்ற 
வள்ளுவனுக்கு 
நாம் கொடுத்த 
அடையாளம் 
நீண்ட தாடி !

இக்கவிதையைப் படித்ததும் படித்த வாசகனை சிந்திக்க வைத்து வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் .

'வரும் முன் காக்க' என்று பொன்மொழி உண்டு .ஆனால் நாம் வரும் முன் காக்க மறந்து விடுகிறோம் .கவனக்குறைவை உணர்த்தும் கவிதை நன்று .

சரி செய்தல் !
சாலையின் குழி 
சரி செய்யப்பட்டது !
நேற்றைய செய்தி 
பள்ளத்தில் சைக்கிள் விழ 
மாணவி பேருந்து 
மோதி மரணம் !

நாட்டு மக்களுக்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்த ஒப்பற்ற , மாசற்ற தலைவர்களை எல்லாம் சாதி என்ற சகதிக்குள் அடைத்து மகிழும் மடமையைச் சாடும் கவிதை .

சுதந்திரத் தலைவர்கள் !
சுதந்திரப்  போராட்டத்  தியாகிகள் 
சிலைகளாக நிற்கிறார்கள் இப்போது!
அவர்களெல்லாம் 
பதவி கேட்காத 
சாதிக்கொரு தலைவர்கள் 
சிலைகளாகியும் 
சிறைப்படுத்தப் பட்டுள்ளார்கள் !
சாத்தியப்படுமா ? இங்கு 
சாதிகளிலிருந்து 
சுதந்திரம் என்ற 
ஏக்கத்தில் 
சிலைகளாக நிற்கிறார்கள் !

ஒழுக்கத்தை உயிர்க்கு மேலாக உரைத்தார் திருவள்ளுவர் .அவர் வழியில் நின்று ஒழுக்கத்தின் மேன்மை உணர்த்தும் கவிதை .

பிறன் மனை 
நோக்குங்கால் 
பிறன் கண்கள் 
பிழையாய்ப் பார்க்கும் .

இயற்கையை ரசிக்க வேண்டும் .ரசிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் கவிதை எழுதும் ஆற்றல் வரும் .அந்த வகையில் அவர்களும் நூல் ஆசிரியரும் இயற்கையை ரசித்து உள்ளார் .

குளித்து ஒரு குளம் !
நீரோடை உருட்டியது 
உருண்டன கூழாங்கற்கள் !

இரவெல்லாம் 
முகம் பார்த்த நிலவின் 
ஒளியில் குளித்தது  குளம் !

மிக வித்தியாசமாக் சிந்தித்து கவிதை வடித்து உள்ளார் .பாருங்கள் .

நினைவு கூர்கிறோம் !
மலர்களை மலர்களோடு கோர்க்கிறோம் !
நலவர்களை நல்லவர்களோடு 
நினைவு கூர்கிறோம் !
இயற்கையும் அவ்வாறே 
ஞாபகப்படுத்திக் கொள்கிறது ! 
அதனால் 
அக்டோபர் இரண்டு காந்தி ஜெயந்தி 
காமராஜர் நினைவு நாளானது !
டிசம்பர் 24 பெரியார் , எம் ஜி .ஆர் 
நினைவு நாட்களானது ! 

தன்னம்பிக்கை விதைக்கும் கவிதை மிக நன்று .

தன்னம்பிக்கை !
பட்டை தீட்டாதவரை 
வைரங்களும் கூழாங்கற்களே !

வெளிப்படாதவரை முத்துக்களும் 
சிப்பிகளே !

பொழியாதவரை மழையும் 
வானில் மேகங்களே !

ஓடு திறக்காதவரை 
பறவைகளும் முட்டைகளே !

செதுக்கப்படாதவரை சிற்பங்களும் 
பாறைகளே !

வலிகள் இல்லாத வலிமை இல்லை !
பயணங்கள் இல்லாத பாதை இல்லை !

'நட்பின் முகவ்ரிகள் தொலைவதில்லை ' என்ற நூலின் தலைப்பை ஒட்டி நட்பை மேன்மைப் படுத்தி எழுதியுள்ள கவிதை நன்று .

எதிர்வரும் மரங்கள் புதர்கள் 
மின் கம்பங்கள் கட்டிடங்கள் 
பின்நோக்கிச் செல்கின்றன !
முன்னே செல்லச் செல்ல 
நல்ல நட்பு மட்டும் பின் தொடர்கிறது !
நிழலாக அல்ல நமக்குள் உயிராக !

இப்படி நூல் முழுவதும் நல்ல கவிதைகள் நம்மை   சிந்திக்க வைக்கின்றன .நல்ல சிந்தனைகளை விதைக்கின்றன .நூல் ஆசிரியர் கவிஞர் மா .தாமோதரன் .அவர்களுக்குப் பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் 

-- 

-- 

கருத்துகள்