எண்ணங்களே கவிதைகளாய் ... நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

எண்ணங்களே கவிதைகளாய் ...
நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி !
viji.masi@gmail.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தென்றல் .100.அன்னை தெரசா நகர் ,மடிப்பாக்கம் ,சென்னை .91. விலை ரூபாய் 30.

நூல் ஆசிரியர்  கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களின் எண்ணங்களே கவிதைகளாய் " எண்ணங்களே கவிதைகளாய் " நூலாக மலர்ந்துள்ளது .நூலின் அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று ."மகன் தாயுக்கு ஆற்றும் உதவியாக " நூல் ஆசிரியரின் மகன் திரு .திருஞானசமந்தன் வடிவமைத்து உள்ளார் .முகப்பு அட்டையில் அற்புத அருவி ,பசுமை இலைகள் ,மலர்கள் இயற்கைக் காட்சி மிக நன்று .பாராட்டுக்கள் .அம்மாவின் இலக்கிய ஆர்வத்தை வளர்க்கும் விதமாக குழந்தைகள் இருப்பதே ஆச்சரியமான ஒன்று .

புலவர் இரா .குடந்தையான் அவர்களின் அணிந்துரை மிக நன்று .நூலின் சாரத்தை எடுத்து இயம்புவதாக உள்ளது .நூல் ஆசிரியரின் என்னுரை மிக வித்தியாசமாக உள்ளது .

" படித்துப் பாருங்கள் ;பக்குவமாய்ச் சொல்லுங்கள் ;பயன்படுத்திக் கொள்கிறேன் ;செல்லமாய்க் குட்டுங்கள் ; 
செவி சாய்துச் செம்மையடைகிறேன்; பாராட்டுக்கள் ;பரவசமடைந்து மகிழ்கிறேன் ."  
நூல் ஆசிரியர் என்னுரையில் மிகவும் தன்னடக்கமாக குட்டுங்கள் என்று எழுதி உள்ளதால் கூர்நது கவனித்து வாசித்துப் பார்த்தேன் .குட்டும்படியாக  குறை ஒன்றும் இல்லை .பாராட்டும் படியாக வைர வரிகள் நிறைய உள்ளன .எனவே பாராட்டி உள்ளேன் .
.
நூல் படிப்பது சுகம் .கவிதை நூல் படிப்பது சுகமோ சுகம் .ஒரு வாசகன் கதை ,கட்டுரை படிப்பதை விட கவிதை படிப்பது மனதில் நிலைக்கும் .பசுவைப் போல அசை போ வைக்கும் .கவிதை எழுதும் போது கவிஞர்அடைந்த உணர்வை , கவிதைப் படிக்கும் வாசகரும் அடைவார் .என்பது உண்மை .கவிதைக்கு ஆற்றல் அதிகம் .
 எண்ணங்களே கவிதைகளாய் ...நூலில் கவிதை தொடங்கும் முன் உள்ள வசனம் .கவிதையின் தன்மை பறைசாற்றுகின்றது .

" பலப்பல நேரங்களில் மனசு சொல்லி நெஞ்சு நிறைந்து வழிந்த கருத்துக்களை வார்த்தைகளில் பிடித்திருக்கிறேன் ."

ஆணவம் அகற்றி வா என்ற முதல் கவிதையே .ஆணாதிக்க சிந்தனையை அகற்றும் விதமாக உள்ளது .சின்னச் சின்ன கவிதைகளிலும் சிந்திக்க வைக்கிறார் .

தேடிக் கொண்டேயிரு ...

தேடிக் கொண்டே
வாழ்க்கையில் ஓடிக் கொண்டேயிரு;
நீ எந்த இடத்தில நின்றாலும் 
அது உன் வெற்றிப்படியாக இருக்கும் !

அன்பை விதை !

வாழ்க்கைத்  தோட்டத்தில் 
அன்பை விதைத்தேன் !
இன்று -
பரிவும் ,பாசமும் 
பூக்களாய் என்னைச் சுற்றி ...!

முதலில் நம்மை நாமே நேசிக்க வேண்டும் .கவிதையின் மூலம் நேசிக்கக் கற்றுத் தருகின்றார் ."என்னையே எனக்குப் பிடிக்கவில்லை". என்று சொல்லும் மனிதர்கள் நம்மில் பலர் உள்ளனர் .அவர்களை மாற்றும் வரிகள் .நன்று .

காதலி .. காதலித்துப் பார் !
காதலித்துப் பார்
பதினாறு வயதில் மட்டுமல்ல 
பதினாறுக்குப் பின்னும் 
காதலித்துப் பழகு !
காதலி... உன்னைக் காதலி 
உனக்குள் உற்சாகம் பிறக்கும் !
உன் வயது குறையும் !
உன் முகம் பார்க்க உனக்கே பிடிக்கும் !
துள்ளல் உன்னை உயர்த்தும் !
உலகமே உன் கையில் என்றுணர்வாய் !

கிராமிய மொழியில் "ஆத்தாளுக்கு இணை ஆத்தாதாண்டா" என்ற கவிதை மிக நன்று .பண்பாடு பயிற்று  விக்கும் விதமாக உள்ளது .

ஆத்தாளுக்கு இணை ஆத்தாதாண்டா !

ஆசையாக் கேட்டா ,அன்பாக் கேட்டா !
அசராமக் கொடுப்பா இந்த ஆத்தா !
ஆத்தாளுக்கு இணை ஆத்தாதாண்டா !
புரிஞ்சுக்கடா மகனே புரிஞ்சுக்க !

நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி கவிதையில் , மனைவியின் வருமானம் பெறும் ஒட்டுமொத்த ஆண் இனத்தையேப்  பார்த்துக் கேட்கும் கேள்வியாக நம்மைச் சிந்திக்க வைக்கின்றது .பாராட்டுக்கள் .

சிந்திக்க !
மனைவியின் மாதச் சம்பளம் 
முழுசாய் வேண்டும் !
உன் குடும்பம் காக்க !
அக்காளுக்கு ,தம்பிக்கு 
ஊர் போற்றச் சீர் செய்ய 
மனைவியைப் பெற்ற குடும்பம்வாழ 
மனதாரக் கொடுப்பாயா 
மாதத் தொகையில் ஒரு பகுதி ?

கையெழுத்தை காதலிக்கச் சொல்லும் விதம் இதம் .

கையெழுத்து !
காதலுக்கு இத்தனை சக்தியா ?
ஆசையெனும் ஓட்டத்தில் 
காதலிக்கத் தொடங்கினேன் .
யாரையென்றா கேட்கிறீர் ?
கையெழுத்தைதான் !

கவிதையை ரசித்தால்தான் கவிதை எழுதும் ஆற்றல் வரும் .நூல் ஆசிரியர் கவிதை ரசிகை என்பதை , ஒப்புதல் வாக்கு மூலம் போல எழுதியுள்ள வரிகள் நன்று .

நானொரு ரசிகை !

நான் ஒரு ரசிகையாகவே ..
ஆம் ....
ரசிகை என்று சொல்லிக் கொள்ளுவதிலும் 
கர்வம் இருக்கிறதே !
மனமாரச் சொல்கிறேன் -
நானொரு ரசிகை !
கவிதைக்கு !

மாற்றுத்திறனாளிகள் பற்றிய கவிதை மிக நன்று .

ஊனமல்ல நீ ஊக்குவிக்கப்படும்போது !

ஊனம் உன் குறையல்ல ;
ஊன்றுகோல் இல்லாமையே உன்குறை ,
ஊன்றுகோல் ஒன்று உனக்குக் கிட்டிட்டால் 
ஊதுபத்தியாய் மனம் வீசுவாய் நீ !

இன்றும் பல மாற்றுத்திறனாளிகள் ஊக்குவிக்க ஆள் இல்லாத காரணத்தால்தான் வாடி இருக்கிறார்கள் .இந்தக் கவிதை படித்தபோது " ஊக்குவிக்க ஆள் இருந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் ." என்ற வரிகள் நினைவிற்கு வந்தது .

ஹைக்கூ கவிதைகளும் நூலில் உள்ளன .

உயிருள்ளவரை உன்னையும் என்னையும் 
மதிக்கும் அளவுகோல் 
பணம் !

உயிர் போனபின்பு உன்னையும் என்னையும் 
திறனாய்வு செய்யும் 
குணம் !

நூல் விமர்சனத்தில் எல்லாக் கவிதைகளையும் எழுதி விட முடியாது என்பதால் இத்துடன் முடிக்கிறேன் .அன்பின் ஆத்திச்சூடி கவிதை மிக நன்று .
இந்த நூல் வெளிவந்த ஆண்டு 2002. வெளிவந்து 11 ஆண்டுகள் ஆனபின்பும் ,கவிதைகள் இன்றும் பொருந்துவதாக உள்ளன .இதுதான் நூல் ஆசிரியரின் வெற்றி .இந்த நூலில் மரபுக்கவிதை ,புதுக்கவிதை ,ஹைக்கூ கவிதை மூன்றும் உள்ளன . பல்சுவை விருந்தாக உள்ளது. பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர் கதை ,கட்டுரை  மட்டுமன்றி கவிதை எழுதுவதிலும் வல்லவர் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக நூல் உள்ளது .சென்னையில் இருந்து சவூதி அரேபியா புலம் பெயர்ந்த பரபரப்பு வாழ்விலும் கவிதை ,கதை ,கட்டுரை எழுதி வரும் ஆற்றல் வியப்பைத் தருகின்றது .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .



கருத்துகள்