குகன் பக்கங்கள் சுட்டும் விழி : கவிஞர் இரா.ரவி

குகன் பக்கங்கள்

சுட்டும் விழி : கவிஞர் இரா.ரவி

கவிதை விரும்பாத வாசகன் கூட தன்னையும் அறியாமல் வாசிக்கும் கவிதை ஹைக்கூ கவிதையாக தான் இருக்கும். ஐந்து நோடிக்கு மேல் எடுத்துக் கொள்ளாத வாசிப்பு. ஒரு பக்க கட்டுரை ஏற்ப்படுத்தும் பாதிப்பு, நருக்கென்று கருத்து என்ற போன்ற பெருமை ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு. இன்று, ட்விட்டரில் பலர் 140 எழுத்துக்களில் தங்கள் கருத்தை சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் திருக்குறளிள் இரண்டடியில் சொல்லியிருக்கிறார். ஜப்பானில் மூன்றடியில் கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.



ஜப்பானில் தோன்றிய 'ஹைக்கூ' தமிழ் கவிதை சூழலில் பலர் முயற்சித்து வருகிறார்கள். தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் என்று பட்டியலிட்டால் அதில் கவிஞர் இரா.ரவி அவர்கள் பெயர் கண்டிப்பாக இருக்கும். அவர் எழுதிய எல்லா புத்தகங்களும் ஹைக்கூ கவிதையாக இருக்கும். அல்லது ஹைக்கூ பற்றிய கட்டுரை, விமர்சன நூலாக இருக்கும். ஹைக்கூ கவிதையில் தன் முழு கவனத்தை செலுத்தி வருபவர். அவர் எழுதிய 11வது நூல் தான் “சுட்டும் விழி”.

போதுவாக, நான் நூல் விமர்சனம் செலுத்தினால் அந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த வரிகளை குறிப்பிடுவேன். ஆனால், இந்த நூலில் எனக்கு பிடித்த கவிதையை குறிப்பிட சொன்னால் 64 பக்கங்கள் கொண்ட கவிதையில் 40 பக்கங்களுக்கான கவிதையை குறிப்பிட வேண்டியதாக இருக்கும். அந்த அளவுக்கு பல கவிதைகளில் நருக்கென்ற கருத்தோடு முடித்திருக்கிறார்.


உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மார்க்
*
பன்னாட்டு நிறுவனங்களால்
கொள்ளை போனது
பச்சை வயல்
*
வேகமாக விற்கின்றது
நோய்பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்.
*
இயற்கையை அழித்து
செயற்கை மரங்கள்
நகரங்கள்


மேல் குறிப்பிட்ட கவிதைகளில், மூன்றாவது வரியில் இதயத்தை துழைக்கும் அம்பை ஒழித்து வைத்திருக்கிறதா அல்லது நம்மை குத்தும் குற்றவுணர்வா என்ற யோசிக்க வைக்கும் வரிகள்.

சமக்கால அரசியலை கேலி செய்யும் நாவலோ, சிறுகதையோ வருவது மிகவும் குறைவு. ஆனால், சமக்கால அரசியலை பகடி செய்யும் கவிதைகள் ஏராளமாக வந்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக கீழ் காணும் கவிதைகளை படித்து பாருங்கள்.

எண்ணங்களால் அன்று
எண்ணிக்கையால் இன்று
கூட்டனி !
*
திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை
*
காவிரி போல்
அரசியலானது
சமச்சீர் கல்வி
*
உயராத கூலி
உயரும் விலைவாசி
வேதனையில் ஏழைகள்.
**

இந்த புத்தகத்திற்கு “சுட்டும் விழி” என்ற தலைப்பு மிக பொருத்தாமாத அமைந்திருக்கிறது. காரணம், ஒவ்வொரு கவிதையும் நாம் படித்த முடித்த பின் நம்மை சுடாமல் இருப்பதில்லை.

மருத்துவ குறிப்பு சொல்லும் கவிதை,
மூளைச்சாவு
பயன்பட்டது
உறுப்புதானம்


ஈழ தமிழர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்கும் கவிதை,
அணையப்போகும் விளக்கு
சுடர்விட்டெரியும்
இலங்கைக் கொடூரன்.


வரலாற்றை பதிய வைக்கும் கவிதை,
மூடநம்பிக்கை
முற்றுப்புள்ளியாக்கியது
ஈரோட்டு மை.


ஒரு கவிதை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் இன்னொரு கவிதை நம்மை தாக்க தயாராக உள்ளது.

ஹைக்கூ கவிதைகளுக்கு தலைப்பு தேவையில்லை என்ற மரபில் இந்த புத்தகமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று கவிதைகள் சமூகத்தைப் பற்றியதாக இருந்தால், அடுத்த கவிதை 'ஈழம்' பற்றியதாக உள்ளது. இல்லை என்றால் 'காதல்' பற்றியதாக உள்ளது. சமூகம், அரசியல், காதல் என்று வகைப்படுத்தி கவிதைகளை வரிசைப்படுத்தியிருக்கலாம்.


கவிதை வாசிப்பு ஆர்வம் இல்லாத வாசகர்கள் வாசிக்க வைக்கும் கவிதை நூலாக இருக்கிறது "சுட்டும் விழி".


கருத்துகள்